ஓவியனின் மேசை
மற்றும்
காவேரிப்பூம்பட்டணம்
 
 
 
ட்ராட்ஸ்கி மருது
 
 

படம் 1

நவீன ஓவியமோ என்று பயந்து விடாதீர்கள்! 80களில் “Weavers Service Centre” என்கிற மத்திய அரசு நிறுவனத்தில் கைத்தறிகளுக்கான டிசைன்களைச் செய்வதும் பழைய பாரம்பரிய டிசைன்களை திரும்ப மக்களுக்கு அளிப்பதும் அவற்றைப் பாதுகாப்பதுமான பணிகளைச் செய்கிற வேலையில் இருந்தேன். மறைந்த ஓவியர் ஆதிமூலமும் இன்னும் மூத்த சில ஓவியர்களும் அங்குதான் இருந்தார்கள். நீங்கள் பார்க்கும் இப்புகைப்படம் நான்கு தோற்றத்தில் இருக்கும் எனது அன்றைய ஓவிய மேசையின் மேல்பரப்பு தான். அலுவலகத்தில் முழுநேரமும் ஓவியம் தீட்டுவது தான் வேலை என்றாலும் ஒரேவற்றைச் செய்யும் நிலையில் உள்ள அழுத்தம் என்னை என் மேசையெல்லாம் தீட்டவைத்திருக்கிறது. செய்வது பிடித்ததாக இருந்தாலும் இன்னும் விரும்பிய, வேறு பக்க சுதந்திரத்தை நோக்கிய தேடலும், வேகமும், Restlessம் தான் இது. இந்தக் கிறுக்கல்களில் இருந்து பல விரிந்திருக்கிறது. இதைக் கண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலையுணர்வாளர்கள் பாராட்டுச் சொற்களோடு எடுத்துச் செல்லக் கேட்ட போது இவற்றை என்னிடமே வைத்திருக்க விரும்பி என்னிடமே வைத்திருக்கிறேன். மரியாதைக்குரிய வேலை, நல்ல சம்பளம், நிம்மதியான வாழ்வு என்று இருந்த எனது சக ஓவியர்கள் மத்தியில் அதைத் தூக்கி எறிந்துவிட்டு பொதுவெளியில் தனியாக நின்று நான் விரும்பியதைச் செய்கிற, சுதந்திரமான துணிவோடு செயல்பட வந்ததை நினைத்து இப்போதும் இறுமாப்போடு மகிழ்கிறேன். அந்த Restlessம் மகிழ்வை அளிக்கிறது.

 
 
 

படம் 2

ஜுனியர் விகடனில் தோழர் சி. மகேந்திரன் எழுதிய தொடருக்கு வரைந்த ஓவியம் தான் இது. காவிரிப்பூம்பட்டணத்தையும், இந்திர விழா பற்றியும் வந்த கட்டுரைக்கான படம். காவிரிப்பூம்பட்டணத்தைப் பற்றி புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’ சிறுகதையை படித்த போது சிறுவயதில் அது எனக்கு மிக அற்புதமான பிம்பத்தை என் கண் முன் விரித்தது. மனதில் அது அப்படியே உறைந்து இருந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான் அந்த சிங்கம் அமர்ந்த தூணில் விழும் மாலைநேர வெய்யில்.