பூ மரம்
 
 
 
 
லாவண்யா சுந்தரராஜன்
லாவண்யா சுந்தரராஜன்
ஓவியம் : அனந்த பத்மநாபன்
 
 

இன்று அவருடைய மாமா மகள் ராதாவுக்கு திருமணம். நானும் அம்மாவும் போயிருந்தோம். அவருக்கு அவசர அலுவலக வேலை இருந்ததால் வரவில்லை. நானே எங்கள் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்திருந்தேன், பட்டுப்புடவை, நகை சகிதம் சீட் பெல்ட் போடுவது கொஞ்சம் சிரமாக இருந்தது. அவர் சொன்னபடி டிரைவர் வைத்துக் கொண்டு வந்திருக்கலாம். இந்த அம்மாதான் நாம இரண்டு பேரும் தனியா போறோம், டிரைவர் எல்லாம் நம்பி இவ்வளவு நகை எல்லாம் போட்டுக் கொண்டு என்று குழப்பி விட்டார்கள். அவரும் சரி நீயே வண்டியை ஒட்டிக் கொண்டு போ என்றார். அவர் போக முடிந்திருந்தால் நான் போகக் கூட தேவையில்லை. கிளம்பும் போது நன்றாக உடுத்தி நகைகளை எல்லாம் அணிந்து கொள்ள நேரம் மிகவும் எடுத்துக் கொண்டபோதே அம்மா சலித்துக் கொண்டார்கள்.

"இன்னும் சின்ன பொண்ணாட்டாம், ஏதோ இப்படியே இருக்க, இல்லைன்னா இவ்வளவு நேரம் எடுத்து மேக்கப் எல்லாம் போட முடியுமா"

"ஆரம்பிச்சிட்டிங்களா அம்மா, அடுத்த லைனுக்கு போக வேண்டாம், இன்னும் பத்தே நிமிசம்"

ஒரு வழியாக கிளம்பி வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வேகமாக வந்து சேர்ந்தாயிற்று, அந்த ஊரை அடைந்ததும் தான் மண்டபத்தின் விலாசம் குறித்துக் கொள்ளாமல் வந்தது நினைவுக்கு வந்தது. கிளம்பும் போது ஏதேனும் பேசினால் இப்படித்தான் என்று அம்மாவிடம் குறைபட்டுக் கொண்டேன். அவருக்கு போன் செய்து விலாசம் குறித்துக் கொண்டு, வழியையும் கேட்டுத் தெரிந்து வண்டியை அவர் சொன்ன வழியில் ஓட்டிச் செல்லச் செல்ல வழி நீண்டது. என்ன மாதிரி இடக்கு முடக்கான இடத்தில் மண்டபத்தை பார்த்திருக்கிறார் இவர் மாமா. மண்டபத்தை அடையும் முன்பே அந்த குறுகிய பாதையில் வண்டியோட்டும் பதட்டத்தில் உடல் முழுதும் எல்லாம் வியர்த்துக் கொட்டி விட்டது. ஒரே கசகசவென்று இருந்தது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டுமென்று வண்டியை நிறுத்தும் போதே நினைத்தேன். மண்டபம் ஏதோ முடக்கு சந்தில் இருந்தாலும் மிக அழகாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. புதிதாகக் கட்டப்பட்ட மண்டபம் போலும். கார் பார்க்கிங் கூட அடித்தளத்தில் இருந்தது. கஞ்சத்தனத்தால் அவர் மாமா இங்கே முடக்கு சந்தில் மண்டபம் பார்த்திருப்பார் என்று நினைத்தது எவ்வளவு தவறு? மிக சிறப்பாக அழகாக அலங்காரம் செய்து இருந்தார்கள். வாசல் முதல் உள் மண்டபம் வரை பூத்தோரணங்களால் அலங்கரித்திருந்தார்கள். உள்ளே மண மேடையும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அடேயப்பா! நிறைய செலவு ஆகி இருக்கும். மலைக்காமல் செய்திருக்கிறார். அவரிடம் கூட கல்யாணத்திற்கு கடன் வாங்கி இருந்தார். ஒரே பெண் சிறப்பாக செய்யணும் என்று நினைத்திருப்பார்.

மேளச்சத்தம் மனதை துள்ளச் செய்து கொண்டிருந்தது. நாதஸ்வரம் "என்னைக் கொஞ்ச கொஞ்ச வா மழையே" என்று கொஞ்சிக் கொண்டிருந்தது. "இப்போலாம் கல்யாண கச்சேரின்னாலும் சினிமா பாட்டுதான், தாலி கட்டற நேரத்துக்கானும் கெட்டி மேளம் வாசிக்கிறாங்க அதுவரை சந்தோசம்" என்று அம்மா சொன்னது சரி தான். அம்மாவுக்கு நாதஸ்வரம் கேட்கப் பிடிக்கும். எனக்கு இசை என்றால் என்ன புரியாத பருவத்தில் நாதஸ்வரத்தில் "என்னம்மா இருக்கு. பீ.. பீன்னு சத்தம் தானே வருது? இதுல பாட்டு வித்தியாசம் எப்படி கண்டுபிடிக்க முடியும்" என்று எல்லாம் தெரிந்த ஏழீஸ்வரி போல கேட்டது நினைவுக்கு வந்து போனது. பாதாம் பால் பருகியது போக மீதி இன்னும் தரையெங்கும் மஞ்சளாக சிந்தி பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. சமையல் மணம் மேலே திருமணக்கூடம் வரை பரவி இருந்தது. அவருடைய மாமாவின் மகளுக்கு நீண்ட நாள் திருமணம் தள்ளிப் போய் தற்சமயம் குதிர்ந்துள்ளது. அந்த பெண்ணுக்கு கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாகவே தெத்துப்பல். மேலும் தெத்துப்பல் கொண்ட எல்லோரையும் போல, பார்க்க சுமாராகத்தான் இருப்பாள். அவளுடைய ஒன்று விட்ட தங்கைக்கு திருமணமாகி ஐந்து வயதில் மகனிருக்கிறான். இவளை திருமணம் செய்ய இவருடைய மாமா சில கன்டிஷன்ஸ் வேறு வைத்திருந்தார். மாப்பிள்ளை படித்து அரசு வேலைக்கு போகக் கூடியவனாக இருக்க வேண்டும். பார்க்க களையாக இருக்க வேண்டும். இந்த மாப்பிள்ளையும் கொஞ்சம் கருப்புதான். பார்க்கவும் பரவாயில்லை ரகம் தான். ஏதோ நாலைந்து நண்பர்களோடு சேர்ந்து சொந்தமாக பள்ளிக்கூடம் வைத்திருக்கிறாராம் அதிலேயே வாத்தியார் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக ஒரு வழியாக திருமணம் குதிர்ந்தது, இவர் மாமா தான் "பையன் கொஞ்சம் கருப்பு தான் இருந்தாலும் வயசாயிட்டே போகுதுன்னு முடிவு பண்ணியாச்சு" என்று ஆயாசப்பட்டார்.

மண்டபத்தில் நுழைந்ததும் முதலில் எதிர்பட்டாள் கலை. மணப்பெண்ணின் சித்தி மகள். "அய் அத்தை வாங்க வாங்க என்றாள். புடவை சூப்பர். நகை எல்லாம் கூட சூப்பரோ சூப்பர் என்றாள். மேட்சிங்கா இருக்கு. உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே உங்க டிரெஸ் சென்ஸ் தான். லைட்டா மேக்கப் போட்டு அழகா இருக்கீங்க. மாமா வரலையா? எப்படி வந்தீங்க? நீங்களே கார் ஓட்டிட்டு வந்தீங்களா கிரேட் லவ் யூ அத்தை"

"என்னடி ஓவரா ஐஸ் வைக்கிற? கொஞ்சர உன் மாப்பிள்ளையை நான் ஒன்றும் பெத்து வச்சிருக்கலயே"

"போங்க அத்தை உங்களுக்கு எப்போ பாரு இதே பேச்சு தான். ராதாவுக்கு மேக்கப் கொஞ்சம் சரி செய்யனும் வாங்க"

"வெக்கத்த பாரு. இரண்டே நிமிசம், கசகசன்னு இருக்கு முகத்தை கொஞ்சம் கழுவிகிட்டு வரேன்"

அவசரமாக ஒப்பனை அறையுள் நுழைந்து என்னுடைய அலங்காரத்தை சற்றே சரி செய்து கொண்டு மணப்பெண் அறையில் நுழைந்தேன். அறையின் மங்கிய வெளிச்சம் மேலும் வியர்வையை கூட்டி கொண்டிருந்து. "வவ'" என்று ஊதிக் கொண்டும், கையாலேயே விசிறிக் கொண்டும் ராதாவிற்கு மேக்கப் சரி செய்து கொண்டிருந்தேன்.

"வாம்மா வச்சி, புதிய மண்டபம் அதனால் ஏசி எல்லாம் வேலை செய்யும் என்று தான் நினைத்தோம், ஆனால் சொதப்பல் ஆயிடுச்சி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க எதுவும் விசேசமா?"

"ராதாவின் அம்மா அவசரமாக பேசி விட்டு மணப்பெண் அறையிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டு போகிற போக்கில் ஒரு ஓலை வெடியை வீசி விட்டு ஓடினார், ஒரு நொடி கிடைத்தாலும் யாரும் எதையும் தவற விடுவதில்லை. சட்டென என் முகம் சுண்டி போனதைப்பார்த்த என் நாத்தனார் மகள் வேணி

"மேக்கப் எல்லாம் நல்லா போடறீங்க அத்த, பியூட்டிசியனே வேண்டாம்ன்னு சொல்லி இருக்கலாம் போல"

"சரிடி உன் கல்யாணத்துக்கு அப்படியே பண்ணிடலாம்"

என் கையில் லிப்ஸ்டிக்கை துடைத்துக் கொண்டிருந்த கர்சீப் கொஞ்சம் கொடி போல் வளைந்திருந்தது. இன்னும் ராதாவின் உதட்டில், பல்லில் அப்பி இருந்த லிப்ஸ்டிக்கை முழுதாகத் துடைத்து முடிக்கவில்லை. அதற்குள் வேகமாக வந்த ஒருத்தி "ராதா வா" என்று மிக உரிமையானவளைப் போல் தோளோடு அணைத்து அவளை மேடைக்குக் கூட்டிக் கொண்டு போனாள். யார் அந்தப் பெண்மணி? பார்க்க சுமாராகத்தான் இருந்தாள். கருப்பில்லை, வார்த்தையில் கொண்டு வரமுடியாத ஒருவண்ணமாக இருந்தாள். முகம் மட்டும் நல்ல வண்ணமாக இருந்தது. கை கால் எல்லாம் கொஞ்சம் கருப்பு ஆங்... மாநிறமென்று சொல்லலாம். நேர்த்தியாக உடுத்தி இருந்தாள். பளிச் என்று இருந்தாள். ஒரு வித புதிரான அழகோடு இருந்தாள். மிக எளிமையான நகை அணிந்திருந்தாள். புடவைத் தலைப்பை என் போலோ பிறர் போலோவன்றி பறக்க விட்டிருந்தாள். நானும் என் அக்கா மகன்களின் திருமணத்தில் அப்படி பறக்க விட்டு நேர்த்தியாக, உடுத்தி இருந்த சமயம் இவளை பார்த்து யாரிவள் என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதை போல என்னையும் "யார் இந்த பெண்" என்று மற்றவர்களும் நினைத்திருப்பார்களா? மனதுக்குள் முகிழ்த்த சிரிப்பு முகத்திலும் தெரிந்திருக்க வேண்டும் வேணி ஒரு மாதிரி பார்த்தாள்.

ராதாவோடு நானொன்றும் அவ்வளவு நெருக்கமில்லை. அவருடைய சொந்தத்தோடு நான் யாருடனும் அதிகம் நெருக்கம் காட்டுபவளில்லை. இருந்தாலும் கல்யாண மண்டபத்தில் எழுமிச்சை மஞ்சளாக படித்த செருக்கோடு ஒருத்தி இருப்பது அவர்களுக்கு பெருமைதானே என்று் நினைத்துதான் அங்கு வந்து இருந்தேன். திருமண மண்டபத்தில் காரில் வந்து இறங்கினாலும், பெண்ணுக்கு மேக்கப் போட அனுமதிக்கப்பட்டாலும், அங்கே வந்து பெண்ணை அழைத்துப் போனாளே அவளின் மிடுக்கும், உரிமையும் எனக்கு ஏன் வரவில்லை? யாராக இருக்கும்? மீண்டும் மண்டைக்குள் அதே கேள்வி வந்து போனது. இப்படி சரளமாய் மேடைவரை நடமாடுகிறாள் என்றாள் மாப்பிள்ளையின் மிக நெருங்கிய உறவினள் ஆக இருக்க வேண்டும். மேடை மீது கூட இருந்தாள். மாப்பிள்ளை இருக்கும் லட்சணத்துக்கு அவள் கொஞ்சம் அதிகமாகவே அழகாவும் தோன்றினாள். பெண்ணோடு ஒப்பிட்டு அவள் என்னை இப்படி நினைப்பாளோ?

கல்யாண மண்டபத்திலிருந்து பொழுது போகாமல் பராக்கு பார்க்கலாம் என்று சற்று நேரம் பால்கனிக்கு வந்து வெளியில் பார்வையை வீசினேன். காற்று இதமாக வீசியது. சற்று தொலைவில் இரண்டு மரங்கள் தெரிந்தது, ஒரு மரம், விரல்களை விரித்தது போல இலைகள். அங்கங்கே நட்சத்திரம் பொதிந்தது போல் சிறு வெள்ளை மலர்கள், கிளை பரவி, இலை விரவி. பூ உதிர்த்து அழகாக தன் இருப்பை அடையாளப்படுத்திக் கொண்டு இருந்தது. கூடவே இன்னொரு மரம். இலைகளே இல்லாமல் வெறும் கிளைகளையும் குச்சிகளையும் நீட்டிக் கொண்டு ஒரு கோட்டோவியம் போல இருந்தது. அம்மரம் தீப்பிடித்து எரியும் கொள்ளியை நீர் ஊற்றி அணைத்தது போல இருந்தது. அந்த மரமும் அழகாகவே இருந்தது. ஒரு மரம் பசும் அழகு. இன்னொன்று கரும் அழகு.. இதில் பசுமை நிறைந்த மரம் கவனத்திற்குரியதா அல்லது அந்த கருமரமே அழகானதா? இந்தப் பெண்ணை அந்தக் கருமரம் போலிருக்கிறாளோ? அடச்சை.. நான் ஏன் இவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று மண்டபத்துள் வந்தேன்.

மண்டபத்தில் அனைவரும் ஒரு கொடியில் தொங்கும் க்ளிப்புகள் போல பல்வேறு நிற பட்டுப்புடவைகளில் அமர்ந்திருந்தனர். நான் மணப்பெண் அறையை விட்டு வெளியே வந்து அம்மாவுடன் அமர்ந்து கொண்டேன். மேடையின் மீது மங்கலப் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டு வருபவர் போவர்க்கு புன்னகையை சிந்திக் கொண்டு இருக்கும் போது அழகாக இருக்கிறாள். என்னோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவள் சுமார் அழகு தான். ஆயினும் பிறர் கவனிக்கும் படி இருக்கிறாள். ஆனால் அந்தச் சிரிப்பில் ஏதோ ஒன்று குறைகிறதே. நன்கு படித்தவளாக இருப்பாளா? "ஹூக்கூம்.. என்னளவு படித்திருக்க முடியாது. நல்ல வேலையில் இருப்பாளா? கண்டிப்பாக என்னை போல் சம்பாதிக்க முடியாது. என்னை போல விடா முயற்சி இருக்குமா அவளுக்கு. என் போல் பிறரிடம் பழகும் நற்குணம், எளிதில் எவருடனும் ஒட்டிக் கொள்ளும் பண்பு இருக்க முடியுமா? கண்டிப்பாக இருக்க முடியாது. இவளுக்கு ஒரளவுக்கேனும் இலக்கியம் தெரியுமா வாய்ப்பில்லை. ஏதோ மிக நெருக்கிய சொந்தத்தின் கல்யாணத்தில் இவ்வாறு மிடுக்கு காட்டினால் போதுமானதா? வேறிடத்தில் பிறர் மனதில் என்ன இடம் இருக்கக் கூடும் இவளுக்கு? அவள் பையன் அம்மாவின் காதில் ஏதோ சொன்னாள்.

"சரியான மரியாதை கெட்ட குடும்பமா இல்ல இருக்கு. இவ்வளவு நாள் கழிச்சி பொண்ணுக்கு கல்யாணம் பண்றோம்ன்னு பதைப்பு இருக்கா? உப்பு சீதேவியாச்சே கேட்டா வீட்டில இருக்குன்னு சொல்றாங்க. அங்க என்ன முளைக்கவா போட்டு இருக்காங்க"

மண்டபத்தில் வரிசைக்கு வைக்க வேண்டிய சீர் உப்பு இன்னும் வரவில்லை என்று பெருங்குரலெடுத்து மாப்பிள்ளையின் தாய் கத்திக் கொண்டிருந்தாள். ராதாவின் அம்மாவும், சித்தியும் மிகவும் பயந்து போய் இருந்தார்கள். என்ன செய்வது என்று புரியாதது போல மிகவும் பதட்டத்திலிருந்தார்கள்.

"வச்சி.. அவர் எங்கன்னு கொஞ்சம் பாரு. உடனே போய் உப்பு போவணியை எடுத்துட்டு வர சொல்லனும், உன் கார்ல தான் போகனும், நீயே போயிட்டு வந்துடு, அவங்க வீட்டுக்கு கொடுத்துவிட்டா போதும்ன்னு நினைச்சி இருந்தோம்"

"அக்கா பதற வேண்டாம் இருங்க பேசிப் பாக்கறேன் இல்லன்னா போய் எடுத்துட்டு வந்துடலாம்"

மாப்பிள்ளையின் அன்னையின் அருகில் சென்று "அண்ணி ஏன் இவ்வளவு பதட்டப்படறீங்க, இதோ 5 நிமிசத்தில போய் போவணிய எடுத்துட்டு வர சொல்றேன். உப்பு போவணி இவ்வளவு பெருசான்னா கண்ணு பட்டுறக் கூடாதுன்னு எங்க சைட் எல்லாம் வீட்டுக்கு தான் கொடுத்து அனுப்புவோம், இங்க கண்ட கண்ணு இருக்கும் பாருங்க" என்றேன். என்னை போல அழகான பெண் அண்ணி என்று கூப்பிட்டதுமே அந்த அம்மா கொஞ்சம் கூல் ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுவும் கண்ணுபடும் என்று சொன்னதும் சரியாக வேலை செய்தது.

"ஆனா சீதேவிங்க மேடையில இருக்கனும்"

"அவ்வளவு தானே, இதோ சமையல் அறையில இருந்து படியில எடுத்துட்டு வர சொல்றேன், பாலும் பழம் சாப்பிட ராதாவும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வருவாங்கல அப்ப உங்க வீட்டு சீதேவியோட சீதேவி அனுப்பறோம் அது ரொம்ப விசேசங்க அண்ணி"

மாப்பிள்ளையின் அன்னைக்கு வாய் மலர்ந்து போனது. "சரி சரி ஏதோ செய்யுங்க, எனக்கு ஒரே பையன்ங்க எல்லாம் அவன் நல்லா இருக்கனும்ன்னு தான்"

"முகூர்த்த நேரம் நெருக்கிடுச்சி, பெரிய பிரச்சனையாயிருக்கும் வச்சி, சுலோச்சனா அத்தை எப்பவும் இப்படி தான் கூறு கேட்டது. அவங்க கிட்ட முன்னமே எது எது மண்டபத்துக்கு சீர்க்கு வேணும்ன்னு கேட்டு வைக்கிறது இல்ல. நேத்து கூட பொண்ணு கிளம்பனும்.. கார்ல அழைச்சிட்டு மண்டபத்துக்கு வர மாப்பிள்ளை வீட்டல வந்துட்டாங்க. வீட்டான வீட்டுல 4 எலும்பிச்சம் பழம் இல்ல தெரியுமா. கார் சக்கரத்துக்கு வைக்கனும், கடைசியில் என் வீட்டுக்காரர் தான் ஓடிப்போய் கடையிலிருந்து வாங்கிட்டு வந்தாரு. மாப்பிள்ளை வீட்டுல வேற சரியா ராவுகாலத்துக்கு 10 நிமிசம் முன்ன தான் வந்து இருந்தாங்க. ஒரே டென்சன் போ. சமத்து நீ சமாளிச்சிட்ட" என்று நாத்தனார் புகழ்ந்து தள்ளினார். அவங்க குடும்பமே இப்படித் தான் நான் துரும்பை அசைச்சாலும் தலையில் தூக்கிவைச்சி கொண்டாடுவாங்க".

மாப்பிள்ளையின் அம்மா அவளிடம் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்லிக் கொண்டிந்தார்கள். நான் அவளைப் பார்த்தேன். இந்தக் கலாட்டாவை தொடங்கி வைத்ததே அவள் தானோ? ஆனால் எதுவும் தெரியாதவள் போல ஏதோ முக்கியமான வேலை செய்யும் பாவனையில் இருக்கிறாள். இத்தனை கலாட்டா நடந்தும், நான் சாதுர்யமாக அதைக் கையாண்டும் அவள் ஏன் என்னை கண்டு கொள்ளவில்லை? ஒருவேளை அவள் ராதைவை கூட்டிக் கொண்டு போன போது என்னை அங்கே கவனித்திருக்க மாட்டாளோ? அங்கே இருந்தவள் தான் இங்கே இந்த பிரச்சனையை சரி செய்தது என்று தெரியாது இருக்கலாம். இருக்கலாம் இருக்கலாம் நான் தான் அவளை விட சிவப்பாக இருக்கிறேனே, இவ்வளவு திறமையாக பேசுகிறேனே, பின்னர் கவனிக்காது எப்படி இருக்க முடியும்? பிரசன்ன வதனி என்னை பார்த்தால் யாருக்கும் பேச ஆசைவரும் எங்கள் சொந்தத்தத்தில் நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன். இவளால் மட்டும் என்னை எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடிகிறது? தலையை உதறி எண்ணங்களை விலக்க முயன்றேன். என்றாலும் என்னை அறியாமலே அவளோடு ஒரு போட்டியில் இறங்கிவிட்டிருக்கிறேன் போலும். என் பார்வை அவளையே பின் தொடர்ந்தது.

வேண்டுமென்ற அவள் கண்ணில் படும்படி மணமேடை அருகே நடந்தேன். அங்கிருந்தோரிடம் வலுக்கட்டாயமாக புன்னகை செய்தேன். ராதாவின் அம்மாவும் சித்தியும் மிகவும் பிஸியாக இன்னும் என்ன என்ன பிரச்சனைகள் வருமோ என்று பயத்தோடு சுற்றி கொண்டிருந்தார்கள். அங்கே இருந்தவர்கள் பலரையும் எனக்கு யாரென்றே தெரியவில்லை. அம்மா சொல்வது போல அடிக்கடி ஏதேனும் விசேசங்களுக்கு வந்து போனால் தானே யாரென்று தெரியும். தெரியாதவர்கள் எப்படி என்னிடம் பேச முடியும். அப்படியே வெறுமனே அங்கேயே எத்தனை நேரம் உலாத்தி கொண்டிருப்பது என்று நான் முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து அமர்ந்தேன். அம்மா நாங்கள் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் இல்லை. நான் எப்போது எழுந்து வேறு எங்காவது போவேன் என்று நினைத்திருப்பார்கள் போலும், தொலைவில் ஒரு கூட்டத்தில் அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அம்மாவிற்கு எப்போதும் இது போன்ற பிரச்சனைகள் இல்லை. நான் தான் யாரிடமும் போய் பேச மாட்டேன். ஊருக்கு வந்திருக்கும் சமயமும் சரி வீட்டிலிருக்கும் சமயமும் சரி யார் வீட்டுக்கும் நான் போக மாட்டேன். அம்மா எங்கிருந்தாலும் பக்கத்து வீடு, உறவினர் வீடு என்று அடிக்கடி செல்வார். போய் பேசிக் கொண்டே இருப்பார்கள். என்ன தான் அப்படி பேசுவார்கள் என்றே தெரியாது. எனக்கென்னவோ அப்படி பேசுவது நம் மீதான மரியாதையை குறைக்கும் என்றே நினைப்பேன். இன்றும் திருமணத்தில் தன்னுடைய பழைய தோழிகள், அவர் காலத்து உறவினர்கள் என்று பெரும் படையோடு பேசிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய நாத்தனார். அவள் பிள்ளைகள். மாமியார், மாமனார் என்று எல்லோரும் அவரவர் குழுவோடு மிகவும் ஒன்றிப் போய் நேரம் கழிவது தெரியாமல் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

திருமண நிகழ்வில் மணமக்களை அட்சதை அரிசி போட்டு வாழ்த்த மேடைக்கு அழைக்கப்பட்டேன். அந்த நேரம் சரியாக அவள் அங்கிருக்கவில்லை. வேண்டுமென்றேதான் அவள் அந்த நேரத்தில் மேடையை விட்டு போயிருக்க வேண்டும். நான் முன்பே நினைத்தது போல அவள் அகம்பாவியாகத்தான் இருக்க வேண்டும். என்னை பற்றி யாரென்று முன்னமே கேட்டு தெரிந்திருப்பாள். என்னை பார்த்தால் புன்னகைக்க வேண்டும் அல்லது ஏதேனும் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துதான் எங்கேனும் போய் இருப்பாள். என்னைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பாள். கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கலாம் அல்லது கர்வம் பிடித்தவளாக இருக்க வேண்டும். இருக்கட்டும் ஒரு முறை நேரில் எதிர்படாமலா போய்விடுவாளா. அப்போது பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே மேடையிறங்கினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தேன் மீண்டும் மேடையிலிருந்தாள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இழைந்து இழைந்து பாலும் பழமும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சமையல் மணமே, உணவு நன்றாக இருக்கும் என்ற உணர்வை தந்தது. அதுவும் இவர் குடும்பம் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடும்பம். கல்யாண சமையல் வேறு கேட்கவா வேண்டும், மிகவும் நன்றாகவே இருக்கும். வித விதமாய் பொறியல், கூட்டு என்று இலையை நிறைத்து வைத்திருந்தார்கள். நாலு விதமாய் சிற்றன்னங்களும் இருந்தது. தேங்காய் உப்பட்டும் இருந்தது. சாம்பார் மணம் இல்லாத பசியைக் கூட கிளறிவிடும்படி இருந்தது. எனக்கு நன்றாக பசித்தது. ஆனாலும் என்னால் உணவில் எந்த கவனமும் செலுத்த முடியவில்லை. எப்படியாவது அவளுக்கு என்னைப் பற்றி தெரிய வைக்க வேண்டும். அதற்கு பிறகு அவள் திமிர் முகம் சிவப்பதை பார்த்து ரசிக்க வேண்டும். இப்போதைக்கு இது நடந்தால் போதுமானது. தன்னுடைய பெண்ணுக்கு என் பெயரை வைத்திருப்பதாக சொன்னவர் எதிர் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எதேசையாக திரும்பிய போது புன்னகத்தைத்தார். அவசரமாக சாப்பிட்டுவிட்டு பாதி உணவுவகைகளோடு இலையை மூடி வைத்துவிட்டு மாடி ஏறி மண மேடை அருகே வந்து அமர்ந்தேன்.

மேடையை விட்டு பெண்ணும் மாப்பிள்ளையும் இறங்கி வந்து உணவருந்த செல்லும் வழியில் அவளும் உடன் வந்து கொண்டிருந்தாள், நான் குறுக்கே சென்று "திருமண வாழ்த்துகள் ராதா, மாப்பிள்ளை எங்க வீட்டு பெண்ணுக்கு எதுவும் தெரியாது, மென்மையானவள், கவனமா பார்த்துக்கோங்க, எங்க ஊருக்கு வாங்க, எனக்கு விடுமுறை இருக்கும் போது வாங்க, ஆபீஸ் நாளிலில் வந்தாலும் வொர்க் ப்ரம் ஹோம் போடலாம், வீடெல்லாம் சொந்த வீடு தான், த்ரீ பெட்ரூம் தனி வீடு, நல்ல வசதியா தான் இருக்கும், ஏன் சொல்றேன்னா வாடகை வீடுன்னா தண்ணி பிரச்சனை, வீட்டுல விருந்தினர் வந்தாலே வீட்டுச் சொந்தக்காரர்கள் பிரச்சனை பண்ணுவாங்க. ஆனா இங்கே அது பிரச்சனை இல்லை. நீங்க அவசியம் விருந்துக்கு ராதாவோட வரணும், எங்க காரிலேயே பக்கத்தில் எங்கேனும் போய் சுத்தி காட்டிடறேன், நானே கூட கார்ல கடைக்கெல்லாம் கூட்டிட்டு போயிட்டு வந்துடுவேன். மைசூர் வேணுமென்றால் கூட போகலாம். வார இறுதியில கூட இருக்கற மாதிரி திட்டமிட்டு வாங்க" என்று அவள் காதில் விழும்படி குரல் உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தேன். அவளின் முகபாவங்களை நோட்டமிட்டவாறே அவள் ஆணவத்தை குலைத்து் எறிய ஒரு சிறு தருணத்தை எதிர்நோக்கியிருந்தேன். ஆனால் அதற்குள் ஒரு குட்டிப் பெண் வந்து "அம்மா பாவாடையை பாரேன், அண்ணன் காப்பியை கொட்டிட்டான்" என்றாள். அவளை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டவள், அப்போது தான் என்னை அவள் முதல் முறையாக என்னைப் பார்த்தாள். அது முன்பு ஒரு முறை எங்கிருந்தோ வந்து எங்கள் வீட்டில் நான்கு குட்டிகளை ஈன்ற தாய்ப் பூனையொன்று உணவிட வந்த என்னை, பார்த்த பார்வையைப் போலவே இருந்தது. நான் கண்களை தாழ்த்திக் கொண்டேன்.

 
லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன் என்ற பெயரில் கவிதை எழுதி வரும் இவர் லாவண்யா மனோகரன் என்ற பெயரில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிறந்தது திருச்சி மாவட்டம் முசிறியில். பெங்களூரில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணி புரிகிறார். சுற்றுபுறச் சுழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வமுடைய இவர் "Waste to wealth" என்ற ஒரு அமைப்பினை நிறுவும் முயற்சியில் இருக்கிறார்.