தலித்
பிரச்னையை
முன்னிருத்திய
சிறார் நாவல்
 
 
 
விஷ்ணுபுரம் சரவணன்
 

இலக்கியத்தில், சமகால நிகழ்வுகள் எந்தளவு பதிவாகின்றன என்பது விவாதத்து உரிய கேள்வி. பாரதியின் எழுத்துகளே தன் ஆதர்சம் அல்லது தனது வாசிப்பு மற்றும் படைப்பின் தொடக்கப் புள்ளி என்று கொண்டாடும் பல எழுத்தாளர்களின் படைப்புகளில், பாரதியின் சமகால நோக்கு இருப்பதில்லை. இன்னும் சிலர் அரசியல் பார்வை, கலை மனத்தைப் பின்னுக்கிழுத்துவிடும் எனும் 'அரிய'ச் சிந்தனையுடையவர்களாக இருக்கின்றனர். அரசியல் தவிர்த்த பிரதிகள் கொண்டாடப்படும் சூழலில் சிறார் இலக்கியத்தில் அதை எதிர்பார்ப்பது நேரவிரயம்தான். சிறாருக்கு எழுதுதல் என்றதுமே அவர்களை நன்னெறிப் படுத்தும் செய்தியை கதை/பாடல்/நாடகம் போன்ற வடிவங்களில் தருவது என்று வரையறை செய்யப்பட்டே எழுதப்பட்டு வருகிறது. இருபது, முப்பது நன்னெறிகளே மீண்டும் கருவாகி சிறார் படைப்புகளில் சுழன்று வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் மொழி பெயர்ப்பின் வழியே நான் வாசித்த வெளிநாட்டு சிறார் இலக்கியங்களில் பலவும் அரசியலைத் தொட்டு பல ஆக்கங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஜப்பானைச் சீரழித்த ஹிரோஷிமா, நாகசாகி அணு குண்டு வீச்சினை மையமாக வைத்து தோசி மாருகி எழுதிய 'மாயிசான்' எனும் குறுநாவல் கொ.ம.கோ. இளங்கோவால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆலிஸின் அற்புத உலகம் நாவலிலும் அரசதிகாரத்தினைக் கேலிச் செய்யப்படும் பகுதிகள் இடம்பெற்றிருக்கும்.

சமீபத்தில், சிறார் எழுத்தாளர் பூவண்ணனின் குறிப்பொன்றில் எழுத்தாளர் ரேவதி எழுதிய 'கொடி காட்ட வந்தவன்' எனும் சிறார் நாவல் அரசியல் நிகழ்வொன்றை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். நாவலைத் தேடினால் எளிதில் கிடைக்கவில்லை. நாவலாசிரியரிடமே கேட்டபோது, தன்னிடமிருந்த பிரதி செதில் செதிலாக உதிர்ந்துவிட்டது என்றார். எல்லாரையும் இணைக்க வல்லது என்று நம்பப்படும் முகநூலில் பதிவிட்டும் கிடைக்கவில்லை. இறுதியில் ரோஜா முத்தையா நூலகத்தில் கண்டுபிடித்துவிட்டேன். நூலை அகலமாகப் பிரித்தால் தையல் அறுந்துவிடும் எனும் நிலையில் இருந்ததால் நகலெடுக்க அனுமதிக்க வில்லை.

1934 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக எழுதப்பட்டிருக்கும் 'கொடி காட்ட வந்தவன்' நாவலின் கதை இதுதான்:

குருசாமி, மதுரையில் தொழில் செய்யும் வணிகர். துணிக்கடை மற்றும் கள்ளுக்கடை மூலம் நல்ல வருமானம் சம்பாதித்து ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருப்பவர். 12 வயதான பேரன் மோகனை அரசியல் செய்திகள் ஏதும் தெரிந்துகொள்ளவிடாமல், ஆங்கிலேயர்களின் பிள்ளைகள் படிக்கும் வெலிங்டன் பள்ளியில் படிக்க வைக்கிறார். அதற்கு காரணம் மோகனின் தந்தை பூபதி இந்திய விடுதலைபோராட்டத்தில் (ஈரோடு கள்ளுக்கடை மறியல்) கலந்துகொண்டு உயிரைப் பலிகொடுத்துவிடுகிறார். மோகனின் தாய் பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். மகனின் புத்தி, பேரனுக்கும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கிறார். அவ்வப்போது காந்தியைப் பற்றி மோசமாக கூறிவருகிறார். மோகனை மதுரைக்கே வரவிடாமல், அவனின் விடுமுறைக்கு குருசாமியும், அவரது மனைவியும் சென்று மோகனைச் சுற்றுலாவுக்கு வெளியூர் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு குருசாமியை, மருத்துவர் பயணம் செய்யக் கூடாது எனச் சொன்னதும், பள்ளி விடுமுறைக்கு, மோகன் மதுரைக்கு வரவழக்கைப்படுகிறான். குருசாமியின் துணிக்கடைக்கு எதிரே அந்நியத் துணியைப் பயன்படுத்தாதே என்று சுதேசி கோஷம்போட்டு அடிபட்டு, ரத்தம் வழியே சிறைக்குச் செல்பவர்களைப் பார்த்ததும் மோகனின் மனத்தில் சின்ன மாற்றம் வருகிறது.

திருவிழாவில் கள் குடித்துவிட்டு சாமியைத் தூக்கினால் சுமைத் தெரியாது என்று பெரியவர் சொன்னதைக் கேட்டு, கள் நல்லதுதானே ஏன் அதை காந்தி எதிர்க்கிறார் எனக் கோபப்படுகிறான். தன் வீட்டில் வேலைச் செய்யும் தேவகியின் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க, தாத்தாவுக்கு தெரியாமல் 20 ரூபாயைத் தருகிறான் மோகன். ஆனால் தேவகியின் கணவன் அந்தப் பணத்தில் கள் குடித்துவிட, சிகிச்சை அளிக்க முடியாமல் தேவகியின் குழந்தை இறப்பதைப் பார்த்து கள் பற்றி தான் என்ன முடிவெடுப்பது எனக் குழம்புகிறான். வேட்டைக்குச் செல்லும் மோகன் தாழ்த்தப்பட்டவர் வீட்டு வாளியால் பொதுக்கிணற்றில் நீரை எடுத்துவிட, அது பெரிய சண்டையாகி விடுகிறது. நோய் உள்ளவர் வீட்டில் இதை நீங்கள் சொன்னாலும் வாதத்திற்காக சரி. ஆரோக்கியமாக இருப்பவரின் வீட்டிலிருந்துதானே வாளியை எடுத்துவந்தேன் என்று விவாதிக்கிறான் மோகன். கார் டிரைவர் ஊர்க்காரர்களிடம் கிணற்றைச் சுத்தப்படுத்தும் சடங்குகள் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து மோகனை மீட்கிறார். பேரனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்ட, குருசாமி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து, குற்றாலம் அனுப்பி வைக்கிறார். அங்கு மோகனின் உதவிக்கு வரும் பழனி, பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் குளிக்கக் கூடாது என்று தடுக்கின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் குளிக்கும்போது, நமது நாட்டில் பிறந்த பழனி குளிக்கக்கூடாதா என்று வாதாடுகிறான் மோகன். பழனி, தான் இன்னும் இரண்டு நாட்களில் இந்த அருவில் குளிப்பேன் என்றுக் கூறி, கிறிஸ்துவ மதம் மாறுகிறார். பழனி, ஜான் செல்லையாவாக மாறி, குற்றால அருவியில் குளிக்கிறார். அருவியில் குளிக்கும் சாதாரண செயலுக்கு ஒருவர் மதம் மாறினால்தான் முடியுமா என்று அதிர்ச்சியுடன் மதுரைக்குத் திரும்புகிறான் மோகன். மீண்டும் பள்ளிக்குச் சென்று அடுத்த விடுமுறையில் ஊருக்குத் திரும்பும் மோகன், எதிர்பாராத விதத்தில் இரண்டு ஆங்கிலேயர்களைச் சந்திக்கிறான். அவர்கள் இருவரும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள். காந்தியைப் பற்றி விரிவாக ஆய்வு செய்ய வந்தவர்கள். அவர்கள் சேகரித்து வைத்திருந்த, நூல்கள், பத்திரிகை செய்திகள் மூலம் காந்தியைப் பற்றி தெரிந்துகொண்டு, காந்தியின் பக்தராகி விடுகிறான். வீட்டில் ராட்டை மூலம் நூல் நெய்கிறான். இதையெல்லாம் பார்த்த குருசாமி பதறி போய், இதையெல்லாம் விடுமாறு மன்றாடுகிறார். மோகன் தெளிவாக தான் காந்தியின் தொண்டனாகி விட்டதைக் கூறுகிறான். மேலும் தாத்தா நடத்தும் கள்ளு கடையை மூடிவிட்டு, கதர் மட்டும் விற்கும் துணிக்கடையை நடத்துமாறு சொல்கிறான்.

நிலைமை தலைக்கு மேல் போய்விட்டதை உணர்கிறார் குருசாமி. பேரனை எப்படி காந்திக்கு எதிரான சிந்தனைக்கு கொண்டு வருவது என யோசித்துக்கொண்டிருந்தவர் கண்களில் பளிச்செனத் தென்படுகிறது ஒரு செய்தி. அடுத்த நாள் குற்றாலத்தில் காந்தி அருவியில் நீராடுகிறார் என்பதே அது. "எல்லோருக்கும் பொது எனச் சொல்லும் காந்தி எப்படி தாழ்த்தப்பட்டவர் குளிக்கத் தடையாக இருக்கும் அருவியில் குளித்து மகிழ்கிறார்" என்று மோகனிடம் கேட்க, குருசாமியின் பேச்சை நம்பாமல் செய்தித்தாளில் பார்த்து உறுதி செய்துகொள்கிறான். இப்போது தாத்தாவும் பேரனும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றனர். காந்தி குற்றால அருவியில் குளித்தால், காந்திக்கு கருப்பு கொடி காட்டிவிட்டு, அன்றிலிருந்து தாத்தா சொல்வதைக் கேட்பது, காந்தி குளிக்காமல் சென்றுவிட்டால் தாத்தா பேரன் சொல்வதைக் கேடக வேண்டும். கருப்பு கொடியுடன் குற்றாலம் செல்கின்றனர் இருவரும். தாழ்த்தப்பட்டவர்கள் என்றைக்கு அருவியில் எல்லோருடனும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனரோ அப்போதே நானும் குளிப்பேன் என்று காந்தி குளிக்காமல் செல்ல, ஒப்பந்தத்தில் பேரன் வெற்றிப் பெற்றுவிடுவதோடு முடிவடைகிறது நாவல்.

24.1.1934 ஆம் ஆண்டு குற்றாலத்தில் குளிக்க வரும் காந்தி, தலித்துகள் குளிக்கத் தடை இருப்பதை அறிந்து திரும்பிச் செல்கிறார். இந்த உண்மைச் சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதை ஒட்டிய புனைவை உருவாக்கியிருக்கிறார் ரேவதி. இதை மோலோட்டமாக பார்த்தால், ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சிறுவர்களுக்கு எளிமையாகத் தரும் உத்திபோல, காந்தியின் புகழை, கொள்கையை விளக்கும் கதை என்பதுபோல இருக்கும். ஆனால் இதில் தலித்கள் தொட்டப் பொருளை மற்றவர்கள் தொடுவதில்லை, தலித்துகளைப் பார்க்கவே கூடாது, இந்த நாட்டில் பிறந்திருந்தாலும் தலித்கள் அருவியில் குளிக்கக்கூடாது போன்ற விஷயங்களை கதையின் போக்கில் மிக அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார் ரேவதி. தீண்டாமை பிரச்சினையைப் போகிற போக்கில் தொட்டுக்கொள்ளாமல், நாவலின் மைய விஷயமாகவே அதை கையாண்டிருக்கிறார். இந்த நாவலைப் படிக்கும் ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு இதுகுறித்து கேள்விகள் ஏராளம் எழும். அந்தக் கேள்விகளைத் தன் வீட்டிலும் ஊரிலும் கேட்கும்போது அவன்/ள் அறிந்துவைத்திருக்கும் ஊர் பற்றிய இன்னொரு முகம் தெரியவரும்.

”கொடி காட்ட வந்தவன்” எழுதப்பட்ட ஆண்டான 1978 ஐ வைத்துப் பார்த்தாலும் தனித்து தெரிகிறது. காமராஜரின் முயற்சிகளினால் தமிழ்நாட்டில் பரவலாக பள்ளிகள் திறக்கப்பட்டு, முதன்முதலாக கல்வி கற்கச் சென்றிருக்கின்றனர். அந்தக் கால கட்டத்தில் இந்த நாவல் பரவலாக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் மாணவர்களிடையே தீண்டாமைக் குறித்த கருத்துநிலை தோன்றியிருக்கும். அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகே தலித் இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் கூர்மைப்படுத்தப்பட்ட தமிழ் சூழலில், காந்தியின் பார்வையோடேயே தீண்டாமை பற்றி, சிறாருக்கு எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் முக்கியாமனதே. (நாவலில் ஓர் இடத்தில், இப்படியே தீண்டாமை தொடர்ந்தால் இந்து மதம் எப்படி இருக்கும்? என்று வருகிறது) இதுபோன்று அல்லது இதை விமர்சனப்படுத்தி, முரண்படும் இடங்களில் உரையாடல் நிகழ்த்தி, இதன் போக்கு தொடர்ந்திருந்தால் தமிழில் சிறார் இலக்கியம் பொற்காலமாக திகழ்ந்திருக்கக்கூடும். இதன் நீட்சியாக பெரியவர்கள் இலக்கியமும் மாறுதல் அடைந்திருக்கக்கூடும். ரேவதியும் இது போன்றவற்றை படைப்புகளில் கொண்டு வந்திருக்கிறாரா என்று முழுமையாக தெரியவில்லை.

தமிழில் பலரும் இலக்கிய வரலாறு / விமர்சன நூல்களை எழுதியுள்ளனர். அதில் ஒன்றிலும் இந்நாவல் குறித்து எதிலும் குறிப்பிட்டிருப்பதாக நான் அறியவில்லை. இந்த நாவல் 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அங்கு இதற்கு கிடைத்த விமர்சனங்கள் என்னவென்றும் அறியமுடியவில்லை. இந்த நாவல் இப்போது எங்கும் கிடைப்பதில்லை. இப்படியான சிறார் இலக்கிய ஒவ்வாமையை இன்னும் தொடரத்தான் போகிறோமா? (ஒவ்வாமை எனும் சொல்லுக்குப் பதில் தீண்டாமை என்று குறிப்பிடத் தான் நினைத்தேன். ஆனால் சாதாரணமாக எதற்கேனும் உவமையாக்கும் சொல் அல்லவே அது. அந்தச் சொல்லே வலிதானே)

குறிப்பு: ரேவதி எனும் ஈ.எஸ். ஹரிஹரன், சிறார் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர், 2013 ஆம் ஆண்டு "பவளம் தந்த பரிசு" எனும் நூலுக்காக பால புரஸ்கர் விருது பெற்றவர். 90க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியவர். அழ. வள்ளியப்பாவுக்கு குழந்தைகள் எழுத்தாளர் சங்கப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். பூந்தளிர், கோகுலம் உள்ளிட்ட சிறுவர் இதழ்களில் பணியாற்றியவர். இந்த நாவல் முதல் பதிப்பில் 2000 பிரதிகள் அச்சிட்டிருப்பதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. 3 பதிப்புகள் வெளிவந்ததாக நாவலாசிரியர் கூறுகிறார்.

நூல் வெளியீடு: தமிழ்நாடு நினைவு நிதி, மதுரை 6245 020 , நவம்பர் 1978