பிரதி பலன்
கணியன் பூங்குன்றன்
 
 

அப்பால் ஒரு நிலம் - குணா கவியழகன்
தமிழினி - 63, நாச்சியம்மை நகர்,
சேலவாயல், சென்னை.
பக்கம்:270,
விலை ரூ.240/-

 
 
அப்பால் ஒரு நிலம்
குணா கவியழகன்
 
 

இரு தலைமுறைகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினால் ஈழத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை வெறும், வெற்றி தோல்வி கணக்காக மட்டுமே பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்க முனைவதைக் காட்டிலும் பெரிய அபத்தம் எதுவுமில்லை. புலிகள் பிற இயக்கத்தினர், ராணுவம், அரசு, தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்கள் என எல்லாத் தரப்பினருக்கும் அது சேர்த்திருப்பது வெவ்வேறு வகையிலான இழப்புகளையே. போர்நிலம் என்பது மரபார்ந்த திணைவகைகள் எதனுள்ளும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. அதன் வாழ்முறையும், நிச்சயமற்ற தன்மையும், கொந்தளிப்பும், வெறுமையும், கைப்பும் பிறரால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாதவை. அவ்வாறான போர்நிலத்து நிகழ்வுகளை புறவயமாக விவரிப்பதோடு மட்டுமல்லாது, அதனூடாக வாழ விதிக்கப்பட்ட மனிதர்களின் அகவயமான நெருக்குதல்களை, உணர்வுகளின் தெறிப்புகளை அவற்றின் நுட்பத்துடன் சித்தரிக்க முனைவதாலேயே ‘அப்பால் ஒரு நிலம்’ முக்கியமான நாவலாகிறது. ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் தவிர்க்க இயலாமையை , விடுதலையை , இயக்கத்தின் பங்களிப்பை, அவற்றின் நடைமுறை செயல்பாடுகளை ஒருவித இலட்சியவாத நோக்குடன், நேர்மறையாக அணுகும் தன்மையே இந்நாவலில் வெளிப்படுகிறது. இறுதிச் சமருக்கு முந்தையவொரு காலகட்டத்தில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை ஒட்டி இலங்கை ராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டிருந்தது. வலுவான அரண்களோடு இருந்த அதை தாக்கி அழிக்கத் திட்டமிடுவதற்கு ஏதுவாக , அதற்குள்ளாக ஊடுருவிச் சென்று வேவு பார்த்துத் திரும்ப கட்டளையிடப்பட்ட இயக்கத்தை சார்ந்த இரு வீரர்களின் சாகசப் பயணமே இந்நாவலின் களம். அதை மாத்திரமே விவரித்திருந்தால் இந்நூல் போர்த்தந்திரம் குறித்த ஒரு ஆவணப் பதிவாகவோ சாகச வகையின்பாற்பட்ட விறுவிறுப்பானதொரு புதினமாகவோ அறியப்பட்டிருக்கும். ஆனால் இந்நாவல் போர்க்களத்து நிலவரங்களை விரித்து எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல் அவற்றை பின்புலமாகக் கொண்டு மனித மனதின் இருத்தல் சிக்கல்களை , வாழ்தலுக்கான அதன் ஆழமான தவிப்புகளை உணர்ச்சிகரமான ஒரு நாடகமாக கட்டமைத்து காட்டிய விதத்தில்தான் அசலானதொரு இலக்கியப்பிரதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது.

 
 
 

லண்டன்காரர் - சேனன்
கட்டுமரம் பதிப்பகம் - 05, ஹாமில்டன் அவென்யூ,
லண்டன்
பக்கம்:102,
விலை ரூ.125/-

 
 
லண்டன்காரர்
சேனன்
 
 

சொல்ல வந்த விஷயமளவிற்கே, சொல்லுகிற விதமும் முக்கியம். எடுத்துரைப்பு முறை தான் ஒரு இலக்கியப் பிரதியின் அர்த்தப் பரப்பைச் செறிவாக்குகிறது. அதன் சாத்தியங்களைக் கூடுதலாக்குகிறது என்னும் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் நீங்கள்தவறவிடாது வாசிக்க வேண்டிய சிறுநூல் ‘லண்டன்காரர்’. நாமெல்லோரும் செய்தித்தாளிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வாசித்து கண்ணுற்று விவாதித்துப் பிறகு மற்றுமொரு சம்பவமாக மறந்துவிட்ட லண்டன் மாநாகர கலவரத்தை பின்புலமாகக் கொண்டு, அதன் தோற்றுவாய் என ஒரு பொறியைக் கற்பிதம் செய்தபடி அதை ஊதி உலைத் தீயாக்கி எரியவிட்டு நாவலென விரித்திருக்கிறார் சேனன். நிகழ்வுகளை காலவரிசைப்படி நேர்க்கோட்டில் அடுக்கிவைத்து செய்தித்தாள் விவரணையாக்காமல், காலியாக இருக்கும் புதிர்வரிசை ஒன்றின் கட்டங்களை முன்னும் பின்னுமாக நிரப்பிச் சேர்த்து இறுதியாக சித்திரமொன்றை பூர்த்தியாக்குவது போல நாவலை கொண்டு செலுத்தியிருக்கிறார் ஆசிரியர். ‘சட்டியை நோக்கிய சரவணபவனாரின் மகன் சுகனுக்குப் பத்திக் கொண்டு வரும்’ எனத் தொடங்கும் முதல் வரியிலிருந்து உருவாகும் எள்ளலும் , துள்ளலுமான நடை இந்நாவலின் கடைசிவரியான ‘ இது ஒரு விசரணைப் பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை’ என்பது வரைக்கும் உங்களைப் பற்றி, ஒரே மூச்சாக இழுத்துச் செல்லுமாறு அமைந்திருப்பது இதன் பலம். மேலெழுந்த வாரியான ஒரு பார்வைக்கு இது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ நேரிடும் அகதி மக்களின் வாழ்வை ஒரு கேலிச்சித்திரம் போல வரைந்து காட்டுவது போலத் தோன்றலாம் என்றாலும் அதற்குமப்பால் அதன் உள்ளுரையாக அமைந்திருக்கும் சமூக இயங்கியலின் விநோதத்தை , அதன் வர்க்கப் பிளவுகளை , அரசியல் அபத்தத்தை , தனி மனிதர்களின் சுயநல வேட்கையை , பாலியல் முறைமை குறித்த குழப்பங்களை ஈர்ப்புகளை அதன் காரணமாக உளவியல் அழுத்தத்தை எனப் பலவற்றையும் குறித்த அவதானிப்புகளை ஒரு சேர சுட்டிச் செல்வதாகவும் , விவாதிப்பதான உரையாடல் போலவும் இந்நாவல் அமைந்திருக்கிறது. நகையுறுத்தும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் இதன் உட்கிடையாக விரிவது, நாம் காணாதது போல முகந்திருப்பிக் கொண்டு போகும் ஒரு அவலத்தின் தலைகீழாக்கப்பட்ட வடிவம் தான்

 
 
 

தாய்வீடு - ராஜசுந்தரராஜன்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78
பக்கம்:206,
விலை ரூ.170/-

 
 
தாய் வீடு
ராஜசுந்தர ராஜன்
 
 

மொழியால் மாத்திரமே எட்டித் தொட முடிகிற சில மடிப்புகள் நமது மனதில் (அ) மூளையில் உண்டு. அரிதாகவேத் தீண்டப்படும் அம்மடிப்புகளின் வழியே நாம் அடையப்பெறுகின்ற கிறக்க உணர்வும், நெகிழ்ச்சியும் அலாதியானது. ராஜசுந்தரராஜனின் இத்தொகுப்பு நெடுகிலும் பலதருணங்களில் அத்தகைய தொடுகைகளை வெகு இயல்பாக நாம் உணர முடிகிறது. நெடிய மரபுடைய மொழியின் வாரிசு நான் என்கிற பெருமிதம் இவருடைய பதப்பிரயோகங்கள், சொல்லிணைவுகள் ஒவ்வொன்றிலும் வெளிப்படையாகவே மிளர்வதைக் காணலாம்.

இதை ஒரு சிறப்பு எனக் கொண்டால், சமயங்களில் கவிதையின் தருணத்தையும் மீறிய மொழியின் முன்னிருப்பு என்பதே தடங்கலாகவும் அமைந்து விடுகிறது. தொடக்க காலத்திய ‘உயிர் மீட்சி’ கவிதைகளும் பிறகு இடைவெளிவிட்டு மீண்டும் வந்த போது எழுதிய ‘முகவீதி’ கவிதைகளும் சமீபமாக எழுதிய பிந்தையக் கவிதைகளும் சேர்த்து மொத்தமாக ‘தாய்வீடு’ என்ற தொகுப்பாக வந்திருக்கிறது. ஆரம்பத்தில் வாழ்வின் அனுபவங்களை எட்டநின்று புறவயமாக பார்த்தவர், அப்போதைய தனது கறாரான மொழியினின்றும் நகர்ந்து, நிகழ்வின் புதிர்களை அகவயமாக அவிழ்க்க முயலும் இப்பொழுதில் நெகிழ்வானதொரு மொழிதல் முறைக்கு வந்து சேர்ந்திருப்பதை அறிய முடிகிறது. போதையிலும் போகத்திலுமாக உழலும் உடலை விட்டு, மனதை மட்டும் மொழிவழியாக கடைதேற்ற முனைவதாக அமையும் சித்திரங்கள் சில திரும்பத் திரும்ப இவர் எழுத்துகளில் தென்படுகின்றன. இது இவரை உடல், மனம் என்கிற பிளவை இயல்பாக ஏற்றுக்கொண்டு, அதன் நீட்சியாக பாவத்திலிருந்து மீட்பு என்கிற நம்பிக்கையை நோக்கி நகர்பவராகவும் தோற்றப்படுத்துகிறது. புதிய புலங்களைத் தேடி, பழையதாகிவிடாத ஒரு மொழியுடன் பயணப்பட்டவர், தாய்வீட்டிற்கே திரும்ப வந்திருப்பது எதன் பொருட்டு என்பதை இக்கவிதைகளை வாசிக்கும் போது நீங்கள் உணரலாம் அல்லாது போனால் அதற்காக காத்திருக்கலாம்.