கலையும் கலகமும்
 
பகுதி -1
 
 
மோனிகா
 

உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.


என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.


- செல்வி சிவரமணி, 1990

 

கலை கலைக்காக என்றும் கலை சமூகத்திற்காக என்றும் இரு தரப்பு வாதங்கள் என்றுமே நிலவி வருகின்றன. சமூக நடப்புகளை தன்னகத்தே உள்வாங்கி ஒரு மொழியாக ஒரு வெளிப்பாடாக வெளிவருவதே கலையின் இயல்பு. ஒவ்வொரு கால கட்டத்திலும் கலை தனது உட்ச பட்சமான நிலையை அடைவதென்பது காலகட்டத்தில் நடந்தேறிய ஒரு நிகழ்வின் பின்னணியில் அமைந்ததாகவே உள்ளது. மேற்கண்ட செல்வி சிவரமணியின் கவிதை என்னை மிகவும் பாதித்த ஒன்று.

இலங்கையின் போரும் அவலமும், அதனால் அவர்களுக்கேற்பட்ட வலிகளும் வலுவான ஒரு இலக்கியத்தை படைக்கத் தூண்டின.

ஓவியம் மற்றும் சிற்பக்கலை என்பது நம்மைப் பொறுத்தவரை கோயில்களின் சிற்பங்கள் மூலமாகவும் சுவரோவியங்கள் மூலமாகவும் பிற்காலத்தில் மினியேச்சர் மூலமாகவும் நாம் அறிந்து கொண்டவையே. மன்னர்கள் தங்களது வெற்றியைப் பறை சாற்றுவதற்கும் தங்களது பெருமைகளைப்பற்றி உலகார் அறிவதற்குமாக படைக்கப்பட்ட கோயில்களும் சிற்பங்களும் அவர்களது ஆட்சியின் சின்னமாகவும் பிற்காலத்தில் பிரித்தானியரால் எடுத்தாளப்பட்ட இந்தோ சாரசானிக் எனப்படும் இசுலாமிய மற்றும் பிரித்தானியரின் கலப்பான கட்டிடங்களும் (எடுத்துக் காட்டாக சென்னை எழும்பூர் அருங்காட்சியகக் கட்டிடம்) ஆங்கிலேயர் ஆட்சியின் தடையங்களாவும் பரிணமித்தன.

இக்கலையை உருவாக்குவதற்கு ஒரு நீடித்த செல்வாக்கான அரசாட்சியும் அதிகாரம் சார்ந்த பின்னணியும் தேவைப்பட்டது. அதற்கு நேர்மாறான கலை உருவாக்கங்கள் பதினேழாம் நூற்றாண்டுக்கு பின்னரே ஐரோப்பிய தொழிற்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஐரோப்பாவின் தொழிற் புரட்சியின் எதிரொலியாகவும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பாகவும் உருவான நவீனத்துவத்தை கலை எதிர்கொண்டதன் விளைவாக தாதாயிசம், ப்யூச்சரிசம், பாவிஸம், க்யூபிஸம் போன்ற புதிய கலை இயக்கங்கள் பல புதிய போக்குகளையும் பரிமாணங்களையும் கலை உலகுக்கு கொண்டுவந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மனிதார்த்த கொடுமைகளும், போரின் அவலமும், அர்த்தமற்ற தேசியக் கட்டமைப்புகளும் கலையை செவ்வியல் தளங்களிலிருந்து நகர்த்தி கலாச்சார மதிப்பீடுகளையும் முதலாளித்துவத்தையும் ஏளனம் செய்வனவாக உருமாற்றின. அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிசம், மினிமலிசம் போன்றவை எளிமையான அதே சமயத்தில் ஆழமான உணர்வுகளையும் புரியச் செய்வனவாக இருந்தன.

அதே இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் 1970ம் ஆண்டுக்குப் பிறகு கணினிகளையும், மின்னணு அறிவியலையும் பயன்படுத்திய கலை வடிவங்களும் இன்ஸ்டலேஷன் ஆர்ட் எனப்படும் நிர்மாண ஓவியமும் பிரசித்தி பெறத் தொடங்கின. நியூ மீடியா என்று சொல்லப்படுகின்ற நவீன ஊடகம் கலையை தூரிகையையும் கான்வாஸ் துணியையும் விட்டகற்றி வெகு தூரம் எடுத்துச் சென்றுவிட்டது. கருத்தமைப்பைப் (conceptual art) பெறுவதற்காக பல்வேறு ஊடகங்களை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சூழலையும் உணர்வையும் பார்வையாளனின் மனதில் ஏற்படுத்துவதற்கான முயற்சிதான் நிர்மாணக் கலை.

நிர்மாணக் கலைஞர்கள் கலைக்கூடத்தின் வெளியை நேரடியாக உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் எளிதில் ஒரு சூழலை உருவாக்குவதில் வெற்றி பெறுகின்றனர். இதனை முதன் முறையாக வழக்கத்துக்கு கொண்டு வந்தவர் மார்ஷல் டுஷாம்ப் என்னும் பிரஞ்சு/அமெரிக்க கலைஞர் ஆவார்.

இறையாண்மைக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களும் அதிகாரத்திற்கு எதிரான கூக்குரலும் மக்களின் ஒருங்கிணைப்பால் சக்திவாய்ந்த போராட்டங்களாக உருவெடுத்தன. இப்போராட்டங்களில் மேற்கு உலக நாடுகளில் நடந்த போராட்டங்கள் மட்டுமே உலகளவில் அதிக அளவில் அறியப்பட்டுவந்தன. மெக்ஸிகோ, மேற்கிந்தியத் தீவுகள், சீனா, ஹெயிட்டி போன்ற இடங்களில் நடந்த போராட்டங்கள் புரட்சிகரமான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைக்கக் காரணமாயின. இத் தொடரின் நோக்கம் இத்தகைய கலை இயக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது.

இந்தியாவில் இத்தகைய இயக்கங்களாக தில்லி ஷில்பி சக்ரா, மும்பையின் முற்போக்கு ஓவியர் குழுமம், பரோடாவின் முற்போக்கு குழுமம் மற்றும் சப்தார் ஹஷ்மியின் கொலையைக் கண்டிக்கும் வகையில் எழுந்த சஹ்மத் போன்ற இயக்கங்களைக் கூறலாம். மும்பை முற்போக்கு குழுமத்தை சார்ந்த எம்-எப்.ஹுசைன் எமர்ஜென்ஸி சமயத்தில் இந்திரா காந்தியை காளி அவதாரமாக படம் வரைந்தார். அப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. எனினும் முதல் இரண்டு இயக்கங்களும் தேசிய விடுதலை கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதால் தேசியம் என்னும் கருத்தாக்கத்திற்கு வழிவகுக்கும் வகையிலேயே அவை அமைந்திருந்தன. இக்குழுமங்களைப் போன்று ஒருங்கிணைக்கப்படாமல் தமது உரிமைக் குரல்களை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைத்தவர்கள், சோம்நாத் ஹோர், சிட்டோ பிரசாத் மற்றும் ஜைனுல் அபீதின் போன்றோர்.

1943ம் ஆண்டு பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழிருந்த மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் முப்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப் போர் சமயத்திலிருந்தே உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருந்தது. இத்துடன் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, கடல் பூமிக்குள் நுழைதல் போன்ற நிகழ்வுகளினால் மிகப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மனிதர்கள் மட்டுமல்லாது இப்புயல் வெள்ளம் ஏற்படுத்திய வெள்ளத்தில் ஒரு வகை வைரஸ் பரவத் தொடங்கி ஆடு மாடுகள் நெற்பயிர்கள் என எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கின.

இப்பஞ்சத்தின்போது கல்கத்தாவின் ஒவியக் கல்லூரியில் பயின்று வந்த மூவரும் நகரை வலம் வந்தது அவர்களது மனதில் ஆழப்பதிந்துவிடவே தனது வாழ்நாள் முழுவதும் இவர்கள் அதனைப் பற்றியும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களைப் பற்றியுமே தமது ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வெளிப்படுத்தினர். இக்கலைஞர்கள் IPTA (Indian peoples Theater Group) என்னும் அமைப்பிலும் உருப்பினர்களாக இருந்தனர்..

கம்யூனிஸ்டு கட்சியின் கலாச்சார அமைப்பாக செயல்பட்டுவந்த இவ்வமைப்பு கல்கத்தாவின் பஞ்சத்தை முன் நிறுத்தியே 1942ல் தொடங்கப்பட்டது. இதில் சத்யஜித் ரேயின் படங்களில் நடித்த உத்பால் தத், சலீல் செளத்ரி, ரித்விக் கட்டக் மற்றும் பால்ராஜ் சஹானி போன்றோரும் அடங்குவர். 1961ம் ஆண்டு ரித்விக் கட்டக்கினால் எடுக்கப்பட்ட கோமல் கந்தார் என்ற படம் இப்டாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.

மற்றொரு அமைப்பான சஹ்மத் 1989ல் தொடங்கப்பட்டது. இந்திய அரசியலை தட்டிக் கேட்கும் ஒரு அமைப்பாக 1973ம் ஆண்டு ஜன நாட்டிய மன்ச் என்னும் அமைப்பு சஃப்தார் ஹஷ்மியால் தொடங்கப்பட்டது.

1989 ஜனவரி ஒன்றாம் தேதியன்று தனது “ஹல்லா போல்” என்னும் வீதி நாடகத்தை தில்லிக்கு அருகே இருக்கும் ஜந்தாபூரில் சஃப்தார் ஹஷ்மி நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த முகேஷ் சர்மா என்பவரால் தாக்கிக் கொல்லப்பட்டார்.

அவர் இறந்த இரு நாட்களுக்குப் பின் அதே இடத்திற்குச் சென்று அந்நாடகத்தை முடித்துவைக்கிறார் அவரது மனைவி மொலொயாஸ்ரீ. ஜனநாட்டி மன்ச் இப்டாவின் ஒரு அங்காமாக விளங்கியபோதும் ஹஷ்மியின் நினைவாக தொடங்கப்பட்ட சஹ்மத் (ஒப்புதல்) என்ற அமைப்பு கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட்து. பல்வேறு ஓவியர்களையும் புகைப்பட மற்றும் நாடகக் கலைஞர்களையும் கொண்டு ஹஷ்மி இறந்த 1989 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு இன்று வரை இயங்கிவருகிறது.

சஹ்மத் இயக்கத்தின் உறுப்பினரும் ஓவியருமான நளினி மலானி சதத் ஹசன் மண்டோவின் 'டோபா டேக் சிங்' (Toba Teksigh) என்னும் கதையைத் தழுவி ஒரு கலையைப் படைக்கிறார். 1946ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த நளினி மலானி மும்பையிலுள்ள ஜே.ஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் ஓவியம் பயின்றார். இவர் பிறந்த முதல் வருடம் தேசப் பிரிவினை நடந்தது. பிறகு இந்தியாவில் தொடர்ந்து இருந்து கொண்டுவரும் மதவாதக் கலவரங்கள், படுகொலைகள் என்ற சூழலில் வரையத் தொடங்கிய நளினி தன்னை துயரத்திற்கு இட்டுச் செல்கின்ற அச்சம்பவங்களை தனது படைப்புகளில் கொண்டு வருகிறார். தோபா தேக் சிங்கின் நினைவாக (Remembering Toba Tek Singh).

1998-99ல் நளினி உருவாக்கிய இந்த நிர்மாணக் கலை வடிவம் (Installation art) சதத் ஹாஸன் மான்டோவின் கதையை ஒட்டி அமைந்தது. 1947ம் ஆண்டின் இந்தியா பாகிஸ்தான் பிரிவு பனிரெண்டு பதினாலு மில்லியன் மக்களின் இடமாற்றத்துக்கும் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்களை பலி கொடுப்பதற்கும் துணை போனது. இதற்குப் பின் தம்மிடமுள்ள பைத்தியக்காரர்களையும், குற்றவாளிகளையும் மாற்றிக் கொள்வது என இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. பாகிஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. நாம் எங்கே இருந்தோம், எங்கே இருக்கப் போகிறோம் என்பதே அறியாத இந்த பேதைகளின் கதை பிறப்பிடம், அடையாளம், தேசியம் எல்லாவற்றையும் ஒரு முட்டாள்தனமெனக் கூறி அதன் மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. சிறையின் நாலு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்கும் இவர்களுக்கு பிறப்பிடம் என்பது அர்த்தமற்ற வார்த்தையாகவும் சிதைக்கப்பட்ட தங்கள் அடையாளங்கள் மாற்றி வைக்கப்பட்ட தேசங்களின் பெயர்களில் சிக்கித் தவிப்பனவாகவும்தான் இருக்க முடியும்.

“இப்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூருக்கு என்ன நேரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அது எந்த நேரத்திலும் இந்தியாவிற்குள் புகுந்து விடலாம். தீபகற்பமான இந்தியாவும் எந்நேரமும் பாகிஸ்தான் ஆகியிருக்கலாம். ஒரு நாள் இந்தியாவும் பாகிஸ்தானுமே கூட வரைபடத்தை விட்டு காணாமல் போகலாம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?”

என்ற வாக்கியங்களை காட்சியாக்கிய முயற்சி தோபா தேக் சிங். தோபா தேக் சிங் என்பது ஒரு நபரின் பெயர் மட்டுமல்லாமல் பிரிவினைக்குட்பட்ட ஒரு ஊரின் பெயரும்கூட.

மற்றொரு கலைப்படைப்பில் ரவிவர்மாவின் “காலக்ஸி” என்னும் ஓவியத்தில் இந்திய தேசியத்தின் முகமாக நாட்டின் அனைத்து இனத்தைச் சார்ந்த பெண்களும் ஒன்றாக உட்கார்ந்து இசைக் கருவிகளை இசைக்குமாறு வரைந்திருப்பார்.

“வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity)” என்னும் அவரது வீடியோ படம் “ஆறு வயதுக் குழந்தை.... வாயில் பெட்ரோலை ஊற்றி, நெருப்புக் கொழுத்தி போட்டுவிட்டார்கள்” என்று குஜராத் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் அழு குரலுடன் ஆரம்பிக்கிறது.

ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு மேல் இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை நிழற்பெறச் செய்து (super impose) பிறகு தன்னுடைய உருவத்தையும் அதனுடன் இருத்திக் கொள்வதன் மூலம் பெண்மைக்கு மதம், இனம் போன்ற அடையாளங்கள் கிடையாது என்று உணர்த்துகிறார். மற்றும் ஒவ்வொருவரும் துயரகரமான சந்தர்பங்களில் மற்றவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதுதான் மனித இயல்பு என்பதையும் வர்ணித்திருக்கிறார்.

இவ்வாறு “தேசம்” தேசியம் என்னும் அமைப்புகளைக் கேள்வி கேட்கும் குரல்கள் நாடகம் மட்டுமல்லாது ஓவியங்களிலும் காட்சிப்புல (visual) ஊடகங்கள் வழியாகவும் வெளிப்படமுடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

இக்கட்டுரையின் பயணத்தை இந்தியாவிலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்காகவே இவ்வியக்கங்களைப் பற்றி கோடிட்டுக் காட்டியுள்ளேன். மேலும் பல்வேறு கலை இயக்கங்கள் இனி வரும் கட்டுரைகளில்.

Image courtesy: Smart museum Uchicago

Nalini malani .com

The Safdar Hazmi Trust