பாளையத்தார் வீடு
 
 
காலபைரவன்
ஓவியம் : அனந்த பத்மநாபன்
 

கடன் சுமை தாங்காமல் தன் பூர்வீகமான செங்கல்வராயநாயக்கன்பாளையத்தை விட்டு தன் குடும்பத்தோடு எங்குசெல்கிறோம் என்றே தெரியாமல் புறப்பட்ட போது கிருஷ்ணமுதலியாரின் மனதில் "நம்பிக்கை என்பது ஒரு நீர்க்குமிழி. அது உடைவதை பார்க்கலாமே தவிர வேறெதுவும் செய்யமுடியாது" எனும் தங்கேஸ்வரன் வாத்தியாரின் வார்த்தைகள் தோன்றி தொண்டையை அடைத்துநின்றன.

"தன் எதிரில் பரவிக் கிடந்த இருளை விலக்கிக் கொண்டு அவர் நடந்த போது இரட்டைப் பிள்ளையார் கோவில் ஆலமரத்திலிருந்து கோட்டான் கூவியது. அவர் நின்று திரும்பி தனக்கு முன்பாக கவிந்திருந்த இருளினூடாக ஊடுருவிப் பார்த்தார். மச்சு வீடுகள் நிழலுருக் கொண்டிருந்தன. பார்க்க பயமாக இருந்தது. ஐயனாரப்பன் கோவில் பழந்தின்னிகள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தன. தூரத்து இலுப்பை வாசனை அவர் நாசியில் மோதி ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தின."

"வாங்கன கடனைக் கொடுக்க துப்பில்ல; உனக்கெதுக்கியா பொண்டாட்டி" என்று காரித்துப்பிக்கொண்டே சுப்புக்கோனார் கேட்ட வார்த்தைகள் நெஞ்சுக்கூட்டில் மீண்டும் ஒன்று திரண்டன. அந்நிகழ்வு என்ன செய்தும் அகலாமல் ஒரு சர்ப்பம்போல அவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. திரும்பவும் அவரின் ஞாபக அடுக்குகளை கீழே தள்ளி அவ்வார்த்தைகள் மேலெழும்பிக் கொண்டிருந்தன."

மகாலிங்கத்திற்கு வளை வேலையை முடிக்க பணம் தேவைப்பட்ட போது அவர் நேராக அக்கா வீட்டிற்கு வந்தார். வழக்கமாக நடப்பதுதான். கிருஷ்ண முதலியார் தன் மனைவி அம்சவேணியை கரம் பிடித்த நாளில் அழுது கொண்டு அவளுடன் வந்தவன் தான். அங்கேயே தங்கிவிட்டான். அவனுக்கு எல்லாமே அவள் தான். லஷ்மி கடாட்சமான முகம். எளிமையான அழகு. சாந்தமான பார்வை. பெரிய அளவிலான குங்குமப் பொட்டு. இதுதான் அவள் அடையாளம். கிருஷ்ண முதலியாருக்கு அவள் தான் வலிமையே. உபசரிப்பதில் மகாராணி. தன் தம்பிக்கு சொம்பு நிறைய நீர்த்த மோரை கொண்டுவந்து குடிக்கக் கொடுத்தாள். அவன் திண்னையில் அமர்ந்தபடியே சொம்பை வாங்கிக் கொண்டான். இவர் கிணற்றடியில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்தார். ஆலும் வேலும் தான் அவருக்கு எப்போதும். கிணற்றடியில் நின்றுகொண்டிருந்த மாமாவையே உற்று ஆராய்ந்து கொண்டிருந்தார். திரும்பவும் அக்கா வெளியில் வந்து "என்னடா யோசனை, எடுத்துக் குடி" என்றாள். "இவ்ளோ காலையில வந்திருக்க. என்ன விஷயம் டா" என்றும் கேட்டாள். அவன் மோரை எடுத்து ஒருமிடறு அருந்தினான். "மாமா எப்படி இருக்கார்" என்று கேட்டான். அவளுக்கு புரிந்துபோனது. "பண மொடையாடா" என்று கேட்டாள். குரலில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது. "மேல மேல கடன் வாங்கிட்டே போகாத டா மகா. அப்புறம் சுமக்க முடியாதபடி ஆயிடப்போவுது" என்றாள். "எப்ப பாரு இதே புலம்பல் தான் உனக்கு" என்று சொல்லிக்கொண்டே மோரைக் குடித்து முடித்து சொம்பை கீழே வைத்தான். பல்குச்சியை இரண்டாக பிளந்து நாக்கில் படிந்திருந்த மாவை வழித்தெடுத்து காரித்துப்பினார். கைலியை அவிழ்த்து உதறி மீண்டும் கட்டினார்.

தயாராக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் வைத்திருந்தாள். எடுத்து இரண்டு மிடர் வாயில் ஊற்றி கொப்பளித்து காரித்துப்பினார். தன் மாமா காரித்துப்பும் தண்ணீர் எங்கு விழுகிறது என்பதை திண்னையில் இருந்தே கவனித்தான். சிறு வயது முதலே தொடரும் பழக்கம் அது. பழைய நினைவுகள் ஒருமுறை அவர் மனதில் வந்து சென்றது. சிரித்துக் கொண்டார். முகத்தைக் கழுவித் துண்டால் துடைத்தப்படியே திண்னையில் வந்து அமர்ந்தார். "அக்காவும் தம்பியும் என்ன திட்டம் போடறீங்க?" என்று சிரித்துகொண்டே கேட்டார். "இத்தன வருஷம் போடாம இப்பதான் பொல்லாத திட்டம் போடறோம்.." என்று சிரித்துக் கொண்டே அவள் சொன்னாள். தலையை சொரிந்து கொண்டே "பணம் தேவைப்படுது மாமா" என்றான். "திடீர்னு அவ்ளோ பணமொடை ஏண்டா வந்தது?". "வளை வேலைக்கு பணம் போதல. அதான்" என்று பேச்சை இழுத்தான். அப்படி பேசுவது இவருக்கு எரிச்சலாக இருக்கும். எத்தனையோ முறை அவனை திட்டியும் இருக்கிறார். அந்தப் பழக்கத்தை மட்டும் அவனால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. "முன்ன பின்ன யோசிக்காம தொடங்கிட வேண்டியது. அப்புறம் இங்க வந்து தலைய சொரிய வேண்டியது. எப்பதான் மாறப்போறியோ" என்று அலுத்துக்கொண்டார். தன் கணவருக்குக் குடிக்க மோர் கொண்டுவந்து கொடுத்தாள். பார்வையாலேயே தன் கணவரிடம் தன் தம்பிக்காக கெஞ்சினாள். ஒருநாளும் அப்பார்வையை அவரால் தட்ட முடிந்ததில்லை.

"எவ்ளோ தொகை வேணும்?"

"இருபதனாயிரம் இருந்தா போதும்"

"சுப்புக்கோனார் வீட்டுக்கு போனயா?"

ஆமாம் என்பது போல தலையாட்டினார்.

"என்ன சொன்னார்?"

"உன் மாமன வந்து ஒரு வார்த்தை சொல்ல சொல்லுனு சொன்னார்"

"கொடுக்கறதுனா கொடுக்க வேண்டியதுதான...." அசிங்கமான வார்த்தைகள் அவர் வாயில் இருந்து புறப்பட்டன. அடக்கிக் கொண்டார்.

"இப்ப அந்த ஆளு வீட்ல இருக்க மாட்டார். நாளைக்கு காலம்பொற போகலாம்"

இவரை மறுத்து ஒருநாளும் பேசியதில்லை. சரி எனத் தலையாட்டினார். அக்காவும் மாமாவும் தான் எல்லாமே அவருக்கு. அம்சவேணி வாழ்க்கைப்பட்டு வந்தநாளில் அவள் சேலைத்தலைப்பை பிடித்துக் கொண்டு உடன் வந்துவிட்டான். அவனைப் பிரிந்து இருக்க முடியாத நிலை அவளுக்கும். "கொஞ்ச நாள் கழிந்தால் சரியாகிடும்" என்று எல்லோரும் கூறினர். அவன் முதல் பிள்ளையாக அவளிடமே வளர்ந்தான். "சுத்தமாகப் படிப்பு ஏறவில்லை அவனுக்கு. ஒருகட்டத்தில் அவரிடம், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "எனக்கு படிப்பே வரலமாமா. நா உங்க கூட கழனிக்கே வறேன்" என்று சொன்னான். அன்று முதல் கழனியே அவன் உலகமாகிப்போனது. வேளா வேளைக்கு வந்து வீட்டில் சாப்பிடுவதோடு சரி. எஞ்சிய நேரங்களில் மோட்டார்க் கொட்டகையே கதியென்று கிடந்தான்.

சொந்தத்திலேயே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த கையோடு அவனுக்கு வேறு வீடு பார்த்துத் தனிக்குடித்தனம் வைத்தார். சுலபத்தில் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. "இப்ப என்ன அதுக்கு அவசரம்" என்று தன் அக்காவிடம் வெடித்தான். முதன் முதலாக அவன் கோபத்தை இருவரும் பார்த்தனர். தன் அக்காவிடம் திரும்பத் திரும்ப முறையிட்டான். இவர் அவளிடம் கறாராக சொல்லிவிடார். "தனிக்குடித்தனம் போனாதான் அவனுக்கு பொறுப்பும் புத்தியும் வரும். நீயே அவனை கெடுத்துடாத வேணி." அவ்வார்த்தைகளில் ஒருவித உறுதி தொனித்தது. "அவருக்கு ஏன் புத்தி இப்படி வேலை செய்து" என்று தன் அக்காவிடம் கேட்டான். புதுமணப் பெண் என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்க விழித்தாள்.

"அவர் கொணம் தான் தெரிஞ்சதாச்சேடா கொஞ்சநாள் இருந்து பார்டா" என்று அவனை தேற்றினாள். அதற்குமேல் அவர்களை எதிர்த்து பேசமுடியாமல் அமைதியானான். தனக்கு நல்லதுதான் செய்வார்கள் என்று மனதை தேற்றிக்கொண்டு ஒருவழியாக சம்மதித்தான். "சந்தோஷமா இருக்கும்போதே குடும்பம் வச்சிட்டா நல்லதுடா" என்று இவனை கூப்பிட்டு சொன்னார்.

தனிக்குடித்தனம் போவதற்கு முன்பாக கணவனும் மனைவியும் இருவர் காலிலும் விழுந்து வணங்கினர். ஆசிர்வதித்து தொட்டுத் தூக்கும்போது அம்சவேணி குலுங்கி குலுங்கி அழுதாள். "நீயே அழுதா எப்படி வேணி?" என்று மெல்லிய குரலில் கேட்டார். அவள் சேலைத்தலைப்பால் தன் முகத்தை துடைத்துக் கொண்டு விபூதியை எடுத்து அவர்கள் நெற்றியில் பூசினாள். "எல்லாம் கொஞ்சநாள் ஆனா சரியாகிடும். அவன் எங்க கடல் கடந்தா போறான்.அடுத்த தெரு தள்ளி இருக்க போறான்" என்று சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.

"என்னடா யோசனை; நாளைக்கி காலம்பற போலாமா" என்று அவர் திரும்பவும் கேட்டார். பழைய நினைவில் இருந்து மீண்டவனாக சரி என்று தலையாட்டினான். "மோட்டார் விடற நேரமாயிட்டுது. நா கௌம்பறேன். நீ இருந்து சாப்பிட்டு போடா" என்று சொல்லிக்கொன்டே அவர் படியிறங்கி தெருவில் நடக்கத் தொடங்கினார்.

திண்னையில் இருந்த இரண்டு சொம்புகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அக்கா சமையல் கட்டில் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். "நா வந்து எடுத்துக்க மாட்டனா?" என்று கேட்டாள். "கட்டிகினு வந்த நாள்ல இருந்து வேலை வேலைனு கெடக்கிறயே உனக்கு அலுக்கவே இல்லையா கா?" என்று அவளிடம் கேட்டான். "பொம்பளைங்க எல்லாருக்கும் தானே டா இந்த நிலை. அலுப்பா இருக்குன்னு சொல்லி தப்பிச்சுட முடியுமா என்ன?" என்று அவள் திரும்பக் கேட்டாள். இவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவள் குழம்பு கூட்டிக் கொண்டிருந்தாள். முருங்கைக்காய் சாம்பார் வாசம் மூக்கைத் துளைத்தது. துவையலுக்கு வதக்கி வைத்திருந்த பிரண்டை ஒருவித மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. சிறுவயதில் தன் அக்காவுடன் பிரண்டை பறித்த நினைவுகள் அவன் மனதில் முகிழ்ந்தன. அவன் அப்படியே வாயற் படிமேல் உட்கார்ந்தான். வறுத்து வைத்திருந்த மணிலா பயிரை எடுத்து அவனுக்கு தின்பதற்கு கொடுத்தாள். "கடன் மேல கடன் வாங்கிகினே இருந்தா எப்படிடா அடைக்க முடியும்?" என்று அவனைப் பார்த்து கேட்டாள். "செங்கல்லை வித்து வர பணத்தை கொண்டு அடைச்சிடலாம் கா" என்று நிதானமாக சொன்னான். "ஒவ்வொரு தடவையும் இப்படியே தாண்டா சொல்ற" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பூஜை அறைக்குச் சென்றாள். அவன் மணிலா பயிரின் தோலை உரித்து கொறித்துக் கொண்டிருந்தான். உள்ளே இரும்பு அலமாரி திறக்கும் சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள். "இந்தாடா இத வச்சிக்கோ" என்று கையை அவனை நோக்கி நீட்டினாள். ஐந்து சவரன் இரட்டை வடம் சங்கலி அது. ஜொலித்துக்கொண்டிருந்தது. "வேணாம் கா" என்று அவன் மறுத்தான். "ரொம்ப வட்டிக்கு பணம் வாங்காதடா; அப்புறம் நிமிர செரமமா இருக்கப் போவுது" என்று அவனிடம் நகையை திணித்தாள். "இத வச்சி வேலைய பாரு. முடியும் போது திருப்பிக்கொடுடா" என்று சொன்னாள். அவள் கண்களில் படிந்திருந்த சாந்தத்தை அவன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அப்பார்வை அவனுக்குள் முழுமையாக இறங்கியது. ஒருவித திருப்தியை மனம் அடைந்ததாக உணர்ந்தான். ஒரு எவர்சில்வர் தட்டில் சாதத்தை போட்டு முருங்கைக்காய் சாம்பாரை மொண்டு ஊற்றினாள். சாதமும் குழம்பும் கொதித்துக் கொண்டிருந்தன. மெதுவாகப் பிசைந்து மென்று சாப்பிட்டு முடித்தான். குடிக்கத் தண்ணீர் குடுத்தாள். "சரிக் கா நா கிளம்பறேன்" என்று சொல்லி திரும்பியவன் எரவானத்தில் நன்றாக இடித்துக் கொண்டான். அம்மா என்று வலிதாங்காமல் கத்தினான். அவள் பதறி அடித்து ஓடிவந்து அவன் தலையை நன்றாக தேய்த்து விட்டாள். "எங்கதான் கவனத்த வச்சிருக்கயோ" என்று அவனைத் திட்டினாள். ஓடிச் சென்று ஒரு தம்ளரில் குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்தாள். "செத்த உக்கார்ந்துட்டு போடா" என்றாள். "ஆவூன்னா உனக்கு சாஸ்தரம் சம்பரதாயம் தாங்கா" என அலுத்துக்கொண்டான். அவள் கேட்டுக்கொண்டதற்காக சிறிது நேரம் கலவோட்டின் மீது உட்கார்ந்து எழுந்தான். தோட்டத்துப் பட்டியில் கட்டியிருந்த பசுங்கன்று பசியால் சப்தமாக கத்தியது. இவன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

 
காலபைரவன்

இயற்பெயர் விஜயகுமார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கும் இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இதுவரை “புலிப்பானி ஜோதிடர்”, “விலகிச் செல்லும் நதி”, “கடக்க முடியாத இரவு” மற்றும் “பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்” ஆகிய சிறுகதை தொகுப்புகளையும் “ஆதிராவின் அம்மாவை ஏன் தான் நான் காதலித்தேனோ?” எனும் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். தற்போது “பாளையத்தார் வீடு” எனும் நாவலை எழுதிக்கொண்டிருக்கும் இவர் புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியோடும் டாக்டர் ஷிபு கொட்டாரத்தின் ஆப்டிஸ்ட் நாடகக் குழுவிலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 2010 ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ் சங்க விருது இவர் எழுதிய “கடக்க முடியாத இரவு” எனும் சிறுகதைத்தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.