...
 
 
நேர்காணல்
 
 
 
 
 
ரிச்சர்ட் ஃப்ளாநகன்
"ஒரு பனிப்பாறையை திடீரென்று செதுக்கி முன்நிறுத்தும் ஒரு நகரும் உறைபனிப் படலம் போல் அது இருக்கிறது."
 
...
- ரிச்சர்ட் ஃப்ளாநகனுடன் (Richard Flanagan)
ஒரு நேர்காணல்
 
ஆங்கில மூலத்திலிருந்து
தமிழில்: எதிராஜ் அகிலன்
வடகோடிக்கு இட்டுச் செல்லும் குறுகல் பாதை” (The Narrow Road to the Deep North) எனும் தன்னுடைய புதினத்துக்காக 2014 ஆம் ஆண்டுக்கான புக்கர் வென்றவர் ரிச்சர்ட் ஃப்ளாநகன். 1961 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆஸ்திரேலிய நாட்டின் டாஸ்மானியா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்தத் தலைமுறையின் ஆகச் சிறந்த ஆஸ்திரேலிய புதின எழுத்தாளர் என்று கருதப்படுகிற இவருடைய ஒவ்வொரு படைப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. “வடகோடிக்கு இட்டுச் செல்லும் குறுகல் பாதை” எனும் புதினம் பர்மிய-தாய்லாந்து மரண இருப்புப்பாதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு காதல் காவியம். இரண்டாம் உலகப் போர்க்கைதிகளுக்கான முகாமின் பொறுப்பாளர் டாரிகோ ஈவான்ஸ் எனும் ஆஸ்திரேலிய அறுவை சிகிச்சை நிபுணரை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துப் பின்னப்பட்ட துயரக் கதை. The monthly இதழின் மாதநூல் எனும் பகுதிக்காக ரமோனா கோவால் ரிச்சர்ட் ஃப்ளாநாகனுடன் நடத்திய இந்த நேர்காணலின் ஆங்கில மூலம் https://www.themonthly.com.au/transcript-richard-flanagan-conversation-ramona-koval எனும் இணைப்பில் காணக் கிடைக்கிறது. மலேசிய எழுத்தாளர் சண்முகம் எழுதி தமிழோசை பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் சயாம் மரண ரயில் பாதை எனும் புதினத்தை “வடகோடிக்கு இட்டுச் செல்லும் குறுகல் பாதை” நினைவூட்டுகிறது.
 
...
 
ரமோனா கோவால் (Ramona Koval)
 
ரமோனா கோவால் : இந்த மாதநூல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் ரிச்சர்ட் ஃப்ளாநகன் . எங்களோடு நீங்கள் இங்கே உடனிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : எனக்குமே அது சந்தோஷமாகத்தான் இருக்கிறது ரமோனா.
ரமோனா கோவால் : ரிச்சர்ட், இந்த நூல் போர், தியாகம், துணிச்சல் என்று பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், ஒரு காதல் கதையாகத்தானே இது தொடங்குகிறது. இந்த நூலுக்கான கரு எங்கிருந்து கிடைத்தது? இந்த நாவலை எழுதத் தூண்டியது எது? இதைப் பற்றியெல்லாம் நீங்கள் விவரித்தால் நன்றாக இருக்கும்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : டாஸ்மேனியாவில் இருக்கும் லாங்ஃபர்ட்தான் என் சொந்த ஊர். அந்த நகரில் வாழ்ந்த ஒரு லாட்விய நாட்டவனைப் பற்றிய கதையை என் பெற்றோர் அடிக்கடிக் கூறுவார்கள். போர்க்கால (இரண்டாம் உலகப் போர்) கட்டத்தில் அவன் ஆஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்து வந்திருந்தான். ஆனால் போர் முடிந்த பிறகு அவன் லாட்வியாவிலுள்ள தன்னுடைய சொந்த கிராமத்துக்குத் திரும்பிச் சென்றான். அந்த கிராமம் முற்றாக அழிந்து விட்டிருந்தது. அவன் மனைவியும் அத்தோடு அழிந்து விட்டாள் என்று அவனிடம் எல்லோரும் சொன்னார்கள். ஒருவர் விடாமல் எல்லோருமே அவள் இறந்து விட்டாள் என்றே கூறினார்கள். ஆனாலும் கூட அவன் விடாமல் அவளை அங்கே தேடி அலைந்தான். நரகத்துக்கு நிகரான பாழ்நிலமாகி இருந்த ஐரோப்பா முழுவதும், போர் முடிந்த கையோடு, இரண்டாண்டுக் காலம் அவன் அவளைத் தேடி அலைந்தான். பல்வேறு தொண்டு நிறுவனங்களும் வீடிழந்த மக்களுக்கென்று அமைத்துக் கொடுத்திருந்த அகதி முகாம்களில் எல்லாம் அவளைத் தேடி அலைந்தான். கடைசியில் அவள் இறந்து விட்டாள் என்ற முடிவை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. அதன் பிறகு அவன் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினான். இங்கேயே ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவளுக்குக் குழந்தைகளையும் கொடுத்தான். பிறகு 1957 ஆம் ஆண்டு அவன் ஸிட்னி நகருக்குச் சென்றான். அங்கே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவனுடைய லாட்வியா நாட்டு மனைவி இரண்டு கைகளிலும் இரண்டு குழந்தைகளை ஏந்திய வண்ணம் அவனுக்கு எதிரில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மிக முக்கியமான முடிவை எடுக்க அவனுக்குச் சில நொடி அவகாசமே இருந்தது. அவளைத் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு, நின்று அவளோடு பேசுவது. அப்படிப் பேசுவதின் மூலம் அவர்கள் இருவருடைய வாழ்க்கையையும் மீண்டும் திரும்பிவர இயலாத வேறு பாதைக்கு இட்டுச் செல்வது. அல்லது அவளைக் கண்டு கொள்ளாமல் நடந்து போய் விடுவது. அவள் மீது அவன் கொண்டிருந்த காதலின் தீவிரம் முன்பு எந்த அளவுக்கு இருந்தது, இப்பொழுது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவன் எடை போட்டுப் பார்க்க வேண்டி இருந்தது. அதன் விளைவு என்ன என்பதையும் எண்ணிப் பார்த்து ஒரு முடிவை அவன் எட்ட வேண்டியிருந்தது. என்னவொரு அசாதாரணமான, பனிச் சரிவைப் போன்ற உணர்வுகளை அவன் அனுபவித்திருப்பான் என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். காதல் கதைகளிலேயே மிக அழகானது இதுதான் என்று எனக்குப் பட்டது. ஏனென்றால் இது காதலைப் பல வகைகளில் எடுத்துச் சொல்லியது. இதை ஒரு அற்புதமான படிமமாகப் பார்த்தேன். இந்தக் கதையை மையப்படுத்தியே இந்த நாவல் முழுவதையும் கட்டமைக்க எண்ணினேன். ஸிட்னி நகருக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஸிட்னி துறைமுகப் பாலத்தைக் கடந்து செல்வது என்பது எனக்குப் பிடித்தமான காரியம். அதனால் அந்தத் தம்பதியரும் அந்தப் பாலத்தின் மீது எதிரும் புதிருமாக நடந்து வருவதைப் போலக் கற்பனை செய்து கொள்வேன். ஸிட்னி நகரை ரசிப்பதற்கு இதுதான் மிக ரம்யமான முறை. அந்தப் பாலத்தின் நெஞ்சுக்கூடு போன்ற பெரும் உத்திரங்கள் மீது, குறிப்பாக மதிய வேளையில், ஒளியும் நிழலும் விழுந்து உண்டாகும் காட்சி மிகவும் வனப்புள்ளதாகத் திகழும். ஆக, இதுதான் படிமம். இறந்து விட்டதாகத் தன்னால் நம்பப்பட்ட பெண் தன்னை அணுகுவதைப் பார்க்கும் மனிதன். அதுவும் கையில் இரண்டு குழந்தைகளோடு. அந்தக் கணத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் ஒரு புள்ளியில் மையம் கொள்வதை அவன் உணர்கின்ற அந்தத் தருணம்.
ரமோனா கோவால் : ஆக, இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உள்பட, மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் இதுபோன்ற அதிமுக்கிய முடிவுகளாகவே இருக்கின்றன, இல்லையா? திடீரென்று ஏதோ ஒரு சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டி வந்து விடுகிறது. எந்தப் பக்கம் செல்வது? இந்தப் புறமோ, அந்தப் புறமோ, ஏதோ ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான மனத் துணிச்சலை எப்படி வரவழைத்துக் கொள்வது? அதிலும், நாம் இப்படித் தேர்ந்தெடுக்கும் முடிவு வாழ்நாள் முழுக்க நம்மை ஆட்டிப் படைக்கப் போகிறது என்கின்ற நிலையில்!
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : ஆமாம். வாழ்க்கையே இப்படி இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ரமோனா? வாழ்க்கையே ஒருவிதமான உறைநிலையில்தான் முன் நகர்கிறது. பிறகு எதிர்பாராத விதமாக ஒரு சில திடீர் சந்தர்ப்பங்கள். அந்தக் கணங்களுக்காக மட்டுமே உயிர் வாழ்ந்திருந்தோம் என்று நாம் உணரும் சந்தர்ப்பங்கள். அந்தக் கணங்களில் நம் ஒட்டு மொத்த வாழ்வும் நிகழ்ந்து விடுகிறது. நாம் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை மட்டுமே எதிர்கொள்ள வேண்டி ஆகிறது. நமக்கு இது ஒன்றும் அசாதாரணமான நிகழ்வல்ல. உலகம் எப்படி முன்நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையில் விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஒரு ட்ராம் வண்டியின் தண்டவாளப் பாதை போன்ற மாயையுடன். நாம் எல்லோரும் எல்லா நிறுத்தங்களிலும் ஒரே நேரத்தில் இறங்கிக் கொள்வதைப் போல. ஆனால், அது அவ்வாறு இருப்பதில்லை. மாறாக, ஒரு பனிப்பாறையை திடீரென்று செதுக்கி முன்நிறுத்தும் ஒரு நகரும் உறைபனிப் படலம் போல் அது இருக்கிறது.
...
ரமோனா கோவால் : உங்களுடைய இதர பல நாவல்களிலும் இதே போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். ஒரு மனிதன், ஒரு வில்லன், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம். அந்த மாதிரியான ஒரு காட்சிக்கு உறைவிடமாக இருக்கும் விதத்தில் இந்த நாவலில் என்ன இருக்கிறது?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : தெரியவில்லை. உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த விஷயங்களெல்லாம் என் மனதில் உருக்கொண்டு விட்டன என்று எனக்குத் தெரியும். எனக்கு வேண்டியிருந்ததெல்லாம் ஒரு காதல் கதை. அது போர்க்கைதிகளையோ அல்லது போர்க்கைதி அனுபவத்தையோ மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக நான் ஸிட்னி நகருக்குப் போனேன். என் தந்தை இருந்த அதே போர்க்கைதி முகாமில் அடைபட்டிருந்த டாம் யூரெனுடன் சுற்றித் திரிந்து ஒரு சில நாட்களைக் கழித்தேன். அந்த நேரத்தில்தான் இந்த நாவலுக்கான உந்துதல் என் எண்ணத்தில் முழுதாக உதித்தது என்று எண்ணுகிறேன். ஆனால் இந்த நாவல் எழுதுவதற்கான முழுத் தகவல்களும், விவரணைகளும் அப்பொழுது என்னிடம் இல்லை. அவை எனக்குக் கிடைத்து அவற்றைக் கோர்வையான வடிவத்தில் ஒழுங்கமைக்க எனக்குப் பத்தாண்டுகள் ஆயின. இதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்பாக ஐந்து வித்தியாசமான வடிவங்களல்ல, ஐந்து வேறுபட்ட நாவல்களையே எழுதி அவற்றைக் கைவிடும் நிலைக்கு இது என்னை இட்டுச் சென்றது. ஒரு ஹைக்கூ கவிதையோடு இணைந்த ஒரு நாவல் ஒன்று உருவாகி இருந்தது. ஆங்காங்கே ஹைக்கூ கவிதைகள் தென்பட, உரைநடையில் எழுதப்படும் ஜப்பானிய இயற்கைச் சஞ்சிகை வடிவமான ஹைபன் போலவும் ஒரு நாவல் உருவானது. நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான ருஷ்ய போர்க் காவியத்தைக் கூட நான் எழுதினேன். ஒரு குடும்பக் காவியத்தையும் எழுதினேன். ஒவ்வொன்றையும் முழுமையாக எழுதி முடித்தேன். பிறகு அவை சரியாக வரவில்லை என்று அவற்றை எல்லாம் கை கழுவினேன். என்றாலும் இந்த நாவலை இறுதியில் எழுதி முடிக்க அவை எல்லாவற்றையும் எழுத வேண்டி இருந்தது. இந்த நாவலில் வேறு பெரிய ஆக்கக் கூறுகள் இருக்கின்றன. ஹைக்கூ கவிதை இணைந்த நாவலின் கூறுகளைக் கூடக் காணலாம். ஆக, இந்த நாவலை எழுதி முடிக்க நான் ஒவ்வொன்றையும் தெளிவாக எழுத வேண்டி இருந்தது. எது எப்படி இருந்தாலும், இதை வெகு சீக்கிரமே எழுதி முடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ரமோனா கோவால் : பர்மா இருப்புப்பாதை திட்டத்தில் பணி புரிந்திருந்த உங்கள் தந்தையிடமிருந்து ஒரு சில கதைகளைக் கேட்டு நீங்கள் வளர்ந்திருந்தீர்கள் இல்லையா? என்ன மாதிரியான கதைகளை அவர் உங்களுக்குக் கூறியிருந்தார்? இந்தப் புத்தகத்தைக் கூட நீங்கள் அர்ப்பணித்திருக்கிறீர்கள் ... ஒரு கைதி எண்ணைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : ஆமாம். கைதி ஸான் பையாக்கு ஸான் ஜூ கோ, கைதி எண் 335. போர்க்கைதி முகாம்களில் என் அப்பாவுக்குத் தரப்பட்ட எண் அதுதான். நாங்கள் சிறுவர்களாக இருந்த போதிலிருந்தே அப்பா அதை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார். அவர் ஒரு போர்க்கைதியாக இருந்தார் என்கிற உணர்வுடனே நாங்கள் வளர்ந்திருந்தோம். ஆனால் அந்த உணர்வை அவர் எங்கள் மீது சுமத்தியிருக்கவில்லை. நாங்களாகவே அந்த உணர்வை உள்ளீர்த்துக் கொண்டிருந்தோம். எப்படிப் பார்த்தாலுமே, எந்நேரமும் அந்த விஷயத்தைப் பற்றியே அவர் பேசிக் கொண்டிருந்ததில்லை. அதே சமயம், அவர் அதைப் பற்றிப் பேசாமலும் இருந்ததில்லை. இந்தக் கதைகளையெல்லாம் ஒரு விசாரிக்கும் தொனியில்தான் அவர் எங்களிடம் விவரித்திருக்கிறார். அவை எல்லாமே மிக மென்மையான, அதிகமும் வேடிக்கையான கதைகள். அக்கதைகளில் மனித நேயமும், அவலமும், காதலும் பெருமளவில் கலந்திருக்கும். அல்லல்களைப் பற்றி அவர் பேசவே மாட்டார். அவற்றைப் பற்றிப் பேசுவதை அவர் விரும்பியதில்லை. அந்தக் கதைகளைச் சொல்லி விட்டு உரக்க அவற்றைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார். தான் மிகவும் யோகம் மிகுந்தவன் என்று கூட அவர் ஒருமுறை கூறிக் கொண்டிருந்ததாக எனக்கு ஞாபகம். அதாவது இந்தப் போர்க்கைதி முகாம்களில் சிக்கிக் கொண்டது தான் தனக்கு நேர்ந்த நல்ல செயல், ஏனென்றால் அங்கே கஷ்டத்தை அனுபவிப்பதோடு போனது. பெரும்பாலோரைப் பொறுத்த அளவில், ஒரு போர் வீரனாக நீங்கள் போர்முனைக்குச் செல்வதென்பது நீங்கள் அடுத்தவருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவே. பிறகு, நீங்கள் அங்கிருந்து உயிர் தப்பினால், தீமையின் முகவராய் நீங்கள் செயல்பட்டீர்கள் என்ற உணர்வுடனே வாழ்வைக் கழிக்க வேண்டி இருக்கும். போர்முனையில் மனிதர்கள் தங்களின் மிக மோசமான சுயத்தையல்ல, தங்களின் மிகச் சிறந்த சுயத்தைக் கண்டடையும் சூழலில் இருப்பார்கள் என்று அவர் நினைத்தார். விட்மனின் அந்தக் கவிதை வரி என்ன? “மாந்தர் திரளை என்னுள் நான் கொண்டிருக்கிறேன்.” தன்னுள் ஒரு மானுடத்திரளை உள்ளடக்கி வைத்திருந்ததாக அப்பாவுமே மெல்ல, மெல்ல நம்பத் தொடங்கினார் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அந்த அனுபவம். நிர்வாணமாகவோ, அல்லது கிட்டத்தட்ட நிர்வாணமாகவோ, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கருவிகளைக் கொண்டு, ஒரு ஊர்பேர் தெரியாத காட்டினூடே இந்த இருப்புப் பாதை என்ற அபாரமான அறிவீனத்தை இரண்டரை லட்சம் மக்கள் கட்டி எழுப்பிக் கொண்டிருந்த அனுபவம்.
ரமோனா கோவால் : உங்கள் தந்தை ஒரு மானுடத்திரளைத் தன்னுள் கொண்டிருந்தது குறித்தும், பிற மனிதர்கள் மீது தண்டனையையோ அல்லது வேதனையோ சுமத்தாததைக் குறித்து நன்றியுணர்வோடு இருந்தது குறித்தும் கூறினீர்கள். அந்தக் கால கட்டத்தில் இருந்த மானுடத்திரள் மீது உங்களுக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக (போர்க்கைதி முகாம்களின்) ஜப்பானிய மெய்க்காவலர்களின் பார்வைக் கோணத்திலிருந்தும் இந்த நூலில் எழுதுகிறீர்கள். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக ஆய்வின் அடிப்படையில் நீங்கள் சந்தித்துப் பேசிய போர்க்கைதிகள் முகாமில் பணியாற்றிய ஜப்பானியர்களைப் பற்றி சொல்லுங்களேன்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : போர்க்கைதி முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மனம் போன போக்கிலும், கண்மூடித்தனமாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டதுதான் தாளமுடியாத துன்பங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நாட்டுப் போர்க் கைதிகளுக்கு இருந்தது. அதில் எந்த விதமான வரைமுறையையும் அவர்களால் காண முடியவில்லை. அது ஏன் திடீரென்று வெடிக்கிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இது எந்த மானுடப் பிறவியையும் உளவியல் ரீதியாகவும், ஆன்ம ரீதியாகவும் நிலைகுலைய வைக்கும் சமாச்சாரம். ஜெஸுவிட் எனும் கிருஸ்துவ மதப்பிரிவைச் சார்ந்த சால்வடார் நாட்டு உளவியல் நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெகுகாலம் முன்பு படித்த நினைவிருக்கிறது. உண்மையில் இந்த ஆய்வறிஞர்கள் இறுதியில் ஒரு படுகொலைப்படையால் கொல்லப்பட்டார்கள். ஷிலே நாட்டில் ஜெனெரல் பினோஷே வன்முறையைப் பயன்படுத்திய விதங்களைப் பற்றிப் அவர்கள் பெருமளவில் ஆய்வுகள் நடத்தியிருந்தார்கள். தொடக்கத்தில் பினோஷே ஒரு வரைமுறையைப் பின்பற்றித்தான் வன்முறையைப் பிரயோகித்து வந்தார். அதாவது, ஆட்சியாளர்களுடைய அரசியலிலிருந்து மாறுபடுகின்ற அறிவுஜீவியாகவோ அல்லது யாராகவோ நீங்கள் இருப்பீர்களென்றால், உங்களைத் தேர்ந்தெடுத்து சித்ரவதை செய்வார்கள்; அல்லது கொன்று விடுவார்கள். உளவியல் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பினோஷே புரிந்து கொண்டது - இது பல விஷயங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது - என்னவென்றால், இது போன்ற வரைமுறைக்குட்பட்ட வன்முறை மக்களை எவ்விதத்திலும் கலவரப்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்கள் மௌனமாக இருந்து விடும் பட்சத்தில், தலை நிமிர்ந்து எதிர்க்காத பட்சத்தில், அவர்கள் ஆபத்தின்றி, பாதுகாப்பாக இருப்பார்கள். தங்களுக்குரிய காலம் வரட்டும் என்று பொறுத்திருப்பார்கள். அவர்களுடைய இதயத்தின் ரகசியக் குரல் அடங்கி விட்டதென்று இதற்கு அர்த்தமில்லை. இரண்டொரு ஆண்டுகளுக்குப் பிறகு, உளவியல் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், பினோஷேவின் ஆட்சி மனம்போன போக்கிலான, ஒழுங்கோ, வரைமுறையோ இல்லாத தன்னிச்சையான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. எந்த முகாந்திரமும் இல்லாமலேயே ஒரு மூதாட்டி, அங்காடி மையத்திலிருக்கும் ஒரு சில குழந்தைகள், ஏதோ ஒரு காருக்குள்ளிருந்து யாரோ ஒருவர் என்று தேர்ந்தெடுத்து இழுத்துச் சென்று விடுவார்கள். அவ்வளவும் மனம் போன போக்கில் நடக்கும். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து கொண்டு செல்லப்பட்டவர்களின் கருகிய சடலங்கள் தெருவோரச் சாக்கடைகளில் கண்டெடுக்கப்படும். புள்ளி விவர ரீதியில் இது போன்ற பயங்கரவாதம் உங்களுக்கு நிகழும் வாய்ப்பு இல்லையென்பது போல் தோன்றினாலும் கூட, மக்களைப் பெரும் பீதியில் இது உறைய வைத்திருந்தது. ஏனென்றால், எந்த நேரத்தில் இது உங்களுக்கே கூட நேரும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். போர்க்கைதி முகாம்களில் அடைபட்டுக் கிடந்த ஆஸ்திரேலியர்களுக்கு இது மனதை அரிக்கக் கூடிய மிகப்பெரும் விஷயங்களுள் ஒன்றாக இருந்தது. ஏனென்றால், வன்முறை என்பது முற்றாய் மனம் போன போக்கில் நிகழ்ந்தது. இருந்த போதிலும், ஜப்பானியர்களைப் பொறுத்த மட்டில் இந்த விதமாய் இது இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றியது. எனக்கு ஜப்பானிய இலக்கியத்தின் மீது ஆழ்ந்த அபிமானம் உண்டு. எனவே இந்த விஷயத்தை நான் ஜப்பானியர்களின் அகக்கண் வழியாகப் பார்க்க விரும்பினேன். எதற்காக அவர்கள் இப்படிச் சீரழித்திருக்கக் கூடும்? இந்த நாவலை எழுதி முடிக்கும் தருவாயில், இந்த மரண இருப்புப்பாதை திட்டத்தில் பணிபுரிந்திருந்த ஒரு சில முகாம் மெய்க்காவலர்களைச் சந்திப்பதற்காக நான் ஜப்பானுக்குச் சென்றேன். அவர்களை நான் எப்படிச் சந்திக்க முடியும் என்று கேட்க வருகிறீர்கள். நானே பதில் சொல்கிறேன். அப்பாவைப் பார்த்து அவரிடம் மன்னிப்புக் கோருவதற்காக ஒரு சில ஜப்பானியப் பெண்கள் கொஞ்ச வருடங்கள் முன்பாக அவருடைய இல்லம் தேடி வந்திருந்தார்கள். பள்ளிகளில் நடத்தப்படும் வரலாற்றுப் பாடத்திட்டத்தை ஜப்பானிய ராணுவப் படைத்துறைப் பண்பின் யதார்த்த நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைப்பதற்காகப் பெரும் பிரசார முயற்சி மேற்கொண்டிருந்த ஒரு பிணையத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள். அந்தக் குழுவினருள் 731 ஆம் அலகின் கொடூரச் செயல்களை வெளிப்படுத்துவதில் மிகவும் துணிச்சலாக ஓர் அசாதாரணப் பணியை ஆற்றியிருந்த பத்திரிகையாளரும் இருந்தார். மன்ச்சூரியாவிலிருந்த ஜப்பானிய சிறு படைதான் சீனத்தின் சாதாரண குடிமக்கள் மீதும், போர்க்கைதிகள் மீதும் மிகக் கொடூரமான உயிரினச் சோதனைகளை நிகழ்த்திப் பார்த்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். மிகவும் அசாதாரணமான, துணிச்சல் மிகுந்த இந்தப் பெண்களின் மூலமாகத்தான் இந்தப் மெய்க்காவலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை ஜப்பான் நாட்டுக்குப் போய்ப் பார்த்து வர முடிந்தது. “பல்லி” என்ற நிந்தைப்பெயரில் ஆஸ்திரேலியர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த, என் அப்பாவின் போர்க்கைதி முகாமில் ஒரு விதமான ‘அதிபயங்கர இவான்’ போல் செயல்பட்டிருந்த ஒருவரை நான் சந்தித்தேன். டோக்கியோ நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த ஒரு வாடகை மகிழுந்து நிறுவனத்துக்குள் செல்ல இருந்த ஐந்து நிமிடங்கள் முன்பு வரை நான் சந்திக்கச் செல்வது அந்தப் ‘பல்லி’ எனும் நபரைத்தான் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தச் செய்தி என்னைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவனுடைய குரூரம் மிகுந்த வன்முறைச் செயல்களுக்காக ஆஸ்திரேலியர்கள் அவன் மீது வெறுப்புக் கொண்டிருந்தார்கள். போர் முடிந்த பிறகு போர்க் குற்றங்களுக்காக அவனுக்கு மரண தண்டனை விதித்திருந்தார்கள். பிறகு ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டில் ஒரு பொது மன்னிப்பின் அடிப்படையில் அவன் விடுதலையாகியிருந்தான். ஆனால் நான் சந்தித்த இந்த நபர் பண்பு தெரிந்த, பரிவு மிகுந்த, தயாள குணம் மிகுந்த முதியவர். அவரோடு அறையில் நான் உட்கார்ந்திருந்த நேரத்தில் அமானுஷ்யமாக, டோக்யோ நகரை ஒரு பூகம்பம் தாக்கியது. அந்த அறை முழுதும் ஆர்ப்பரிக்கும் கடலில் தத்தளித்துத் தடுமாறும் தோணி போல ஆடிக் கொண்டிருந்தது. அவர் மிகுந்த கலவரத்துக்கு உள்ளாகியிருந்ததை நான் கவனித்தேன். தீமை என்பது எதுவாக இருந்த போதிலும் அந்த நேரத்தில் அந்த அறையில் அது எங்களோடு தங்கியிருக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அவருடைய பால்ய காலத்தைப் பற்றி, அவர் எவ்வாறு தனது பதினைந்தாம் வயதிலேயே கும்பலோடு கும்பலாய் ஒரு சிறைக்காவலராகப் பணிபுரியும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் என்பது பற்றி, அந்தப் பயிற்சி முறை எந்த அளவுக்கு நம்ப முடியாத வன்முறையைக் கொண்டிருந்தது என்பது பற்றி, அதை அவர் எவ்வளவு வெறுத்தார் என்பது பற்றி, எப்படி அவர் அதை விட்டுத் தப்பி ஓட விரும்பினார் என்பது பற்றியெல்லாம் அவரோடு பேசினேன். ஆனால், தான் தப்பி ஓடினால், தன்னுடைய தந்தை அதற்காக ஜப்பானியர்களால் தண்டனைக்குள்ளாக வேண்டி இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆஸ்திரேலியர்கள் சீழ்க்கையடித்துக் கொண்டு, பாட்டுப் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்த விதம் தனக்கு எவ்வளவு வெறுப்பூட்டியது என்று அவர் என்னிடம் கூறினார்.
ரமோனா கோவால் : அவர் சந்தோஷமாக இல்லாததினாலா?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : அவர் அப்படிச் சொல்லவில்லை. அவர் சில நம்பவியலாத விஷயங்களைச் சொன்னார். தான் கொரிய நாட்டவனுமல்ல; அதே சமயம், ஜப்பானியனுமல்ல. தான் ஒரு குடியேறி என்றார். அவர் தன்னை அவ்வாறுதான் அடையாளப்படுத்தி வைத்திருந்தார். தன் முகம் சற்றே விகாரமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார். தான் ஒரு போதும் மன்னிக்கப்படப் போவதில்லை என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது. இது போன்ற எல்லா வித உணர்வுகளோடும்தான் வாழ்க்கையைத் தான் ஓட்டியாக வேண்டும் என்றும் அவர் உணர்ந்திருந்தார். இவர்களைப் போன்றவர்களை துரோகிகள் என்று கொரிய நாட்டவர் கருதுவதால், அவர்களாலும் இவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள். இவர்கள் கொரிய நாட்டவர் என்று இனம் காணப்படுவதால், ஜப்பானியர்களும் இவர்களை வெறுக்கிறார்கள். இவர்கள் கொரியாவோடும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. ஜப்பானோடும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களுடையது மிகுந்த கஷ்ட ஜீவனம். இத்தகைய மனிதர்களுக்கும் சகோதரிகள் இருந்தனர். அவர்கள் ஜப்பானியர்களுடைய ‘சுக நாயகியராக’ வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர்கள். மிகக் குரூரமான ஒரு வன்முறைக் கலாச்சாரத்துக்கு இந்த மனிதர்கள் பழக்கப்படுத்தப்பட்டார்கள். இதே விதமான வன்முறையை போர்க்கைதிகளின் மீது அவர்கள் பிரயோகிக்காமல் போனால், மிகுந்த இன்னல்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும். ஏனென்றால், போர்க்கைதிகள் மனிதப் பிறவிகளே அல்லர் என்று அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.
ரமோனா கோவால் : ஆனால் அவர் உங்கள் தந்தைக்கும் தந்தையின் நண்பர்களுக்கும் எதிராக அல்லவா செயல்பட்டிருந்தார்!
...

Story of survival Arch Flanagan (back row, second from right, in cap) with other Australian POWs soon after the Japanese surrender in 1945. Photo: Courtesy of Richard Flanagan

ரிச்சர்ட் ஃப்ளாநகன் : அவர் கொடூரமானவர். ஆனால் நான் அவரைக் குற்றம் சொல்லவோ, தீர்ப்புரை வழங்கவோ சென்றிருக்கவில்லை. அவருடைய கதையைக் கேட்கவே நான் அங்கே சென்றிருந்தேன். மரண தண்டனை என்று சபிக்கப்பட்ட பிறகு அவர் மனநிலை எப்படி இருந்திருக்கக் கூடும் என்று அறிந்து கொள்ளும் முயற்சியில்; தன்னுடைய பெற்றோர் பற்றி அவர் என்ன நினைத்தார் என்று உணர்ந்து கொள்ளும் முயற்சியில்தான் நான் அங்கே சென்றிருந்தேன். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இரண்டாம் உலகப் போர் என்று நாம் குறிப்பிடும் - மாபெரும் கிழக்காசியப் போர் என்று அவர்கள் குறிப்பிடும் - நிகழ்வுக்குப் பிறகு ஜப்பானுக்கு உண்மையில் என்ன நடந்ததென்றால், ஒரு வக்கிரம் மிகுந்த மரணவெறியீடுபாடு அந்தச் சமூகத்தையே ஒட்டு மொத்தமாகப் பீடித்திருந்தது என்று நினைக்கிறேன். வக்கிரம் மிகுந்த மரணவெறி என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கட்டப்பட வேண்டிய இருப்புப் பாதையின் ஒரு பிரிவுக்குப் பொறுப்பான ஜப்பானியப் படைத்தளபதி அந்தப் பிரிவைக் கட்டி முடிக்காமல் போனால் அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பான். இதைப் போன்ற ஒரு வக்கிரம் மிகுந்த மரணவெறியால் எல்லோருமே அல்லல்பட்டுக் கொண்டிருந்தார்கள். யாருடைய உயிருக்கும் எந்த மதிப்புமே இல்லாமல் இருந்தது. ஆஸ்திரேலியரின் உயிருக்கு மதிப்பில்லைதான். ஆனால் கொரியனுடைய உயிருக்கும் அப்படியேதான். ஏன், அந்தப் படைத்தளபதியின் உயிருக்கும் அதே நிலைமைதான். மனிதத்துவத்தின் ஒட்டுமொத்த வக்கிரமாக அந்த நிலை இருந்தது. இருந்த அனைவரும் அதில் சிக்கிக் கொண்டிருந்தனர். இந்தப் புத்தகத்தில் காணப்படும் சொற்களைக் காட்டிலும் அந்த இருப்புப்பாதையில் உயிர் விட்டிருந்த மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை இன்னமும் என்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஹிரோஷிமாவில் உயிர்விட்டவர்களை விடவும் அதிகமானோர் அந்த இருப்புப்பாதையில் மாண்டிருக்கின்றனர். என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் இருக்கும் உலகம் இதை மறந்து விட்டது. அங்கேயே இருந்த மலேசியத் தமிழர்கள், பர்மியர்கள், தாய்லாந்து நாட்டவர் என எல்லோருமே இதை மறந்து விட்டனர். சமீப காலத்தில் நிகழ்ந்த விளக்கம் சொல்ல முடியாத ஒரு சம்பவம் இது.
ரமோனா கோவால் : டாம் யுரென்னுடன் ஸிட்னி நகருக்குச் சென்ற மாதிரியே உங்கள் சகோதரருடன் அந்த இருப்புப்பாதைக்கும் நீங்கள் சென்று பார்த்து விட்டு வந்தீர்கள் என நினைக்கிறேன். இது போன்ற பயணங்களில் குறிப்பிடும்படி ஏதாவது நடக்கும் அல்லது எதையாவது நீங்கள் கவனிக்க நேரிடும் என்பதால் பெரும்பாலும் இவற்றை நீங்கள் விரும்பி மேற்கொள்கிறீர்கள் போல் தோன்றுகிறது. பர்மா இருப்புப்பாதை போடப்பட்ட இடத்துக்குச் சென்ற பொழுது உங்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் அலையடித்தன? அந்த இடமெல்லாம் இப்பொழுது வனாந்தரமாகி விட்டதா?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : அந்த இடமெல்லாம் இப்பொழுது முற்றாகவே மாறி விட்டதென்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த மட்டில், அந்தச் சமயத்தில் அந்த இடம் பெரும்பான்மையும் தேக்குமரக் காடாகவே இருந்திருக்கிறது. தாய்லாந்து நாட்டின் மக்கள்தொகையும் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு மக்கள்தொகை பன்மடங்காய்ப் பெருத்து விட்டது. அந்த இடத்தில் இப்பொழுது எண்ணற்ற மக்கள் வசிக்கிறார்கள். தாய்லாந்து நாட்டவருக்கும், பர்மியர்களுக்கும் கூட அந்தக் காலத்தில் அது ஒரு தொலைதூர வனாந்தரமாகவே இருந்தது. எது எப்படியிருந்தாலும், இப்பொழுதும் கூட அங்கே காட்டை நினைவுபடுத்தும் வகையான புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காக சுத்தம் செய்யப்பட்டு இருக்கும் பகுதிகளைத் தவிர இருப்புப்பாதையின் பெரும்பகுதியுமே புதர் மண்டிக் கிடக்கிறது. என்றாலும் என் தந்தை அடைபட்டிருந்த போர்க்கைதி முகாமை நாங்கள் பார்க்க முடிந்தது. அங்கிருந்து இருப்புப் பாதைக்கு இட்டுச் செல்லும் வழித்தடத்தின் ஊடாக நாங்கள் நடந்து செல்லவும் முடிந்தது. கொள்ளை நோய் பரவிய பகுதியின் சுற்றுச் சுவர் எங்கே இருந்திருக்கும் என்பதை நாங்கள் அனுமானித்தோம். முகாமுக்குள் கொள்ளை நோய் பரவக் காரணமாக இருந்த நீரோடையையும் நாங்கள் அடையாளம் காண முடிந்தது. சிந்தனையில் அது தொற்றிக் கொண்டு விட்ட பிறகு ஒவ்வொரு விவரத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. நான் அங்கே போனது பரபரப்புக்காகவோ அல்லது வாந்தி பேதி பற்றித் தெரிந்து கொள்ளவோ இல்லை. அந்த இடத்தின் ஈரப்பதச் சூழல், அந்த ஈரப்பதத்தில் புழங்குவது, முள்மூங்கில் மரங்களைக் கைகளால் பற்றும் போது ஏற்படும் உணர்வு, செங்குத்தான சுண்ணாம்புப் பாறைகளின் சரிவு, அந்தப் புழுதி, என இவற்றையெல்லாம் நேரடியாய் அனுபவித்துப் புரிந்து கொள்ளவும், இவற்றின் ஊடாக வெறுங்காலுடன் நடந்து செல்வது எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளவும்தான் நான் அங்கே போனேன். அங்கே இருந்த மண்மேடுகள், இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வுகள் மற்றும் போடப்பட்ட பாதைகள் ஆகியவற்றைப் பார்க்கவும், வெறும் கையால் பயன்படுத்தும் உபகரணங்களையும், கருவிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு எப்படி இவற்றை உருவாக்க முடியும் என்று பார்க்கவுமே நான் அங்கே போனேன். அந்த உஷ்ணத்தில் பாறைகளைத் தூக்கிச் செல்வது எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அவற்றைச் சுமந்து பார்த்தேன். அந்தப் புலன் சார்ந்த புவிப்பகுதியில் எவ்வளவுக்கெவ்வளவு என்னை நானே சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு இந்தப் புத்தகத்தை எழுதும் பொழுது அந்த அனுபவங்களிலிருந்து நான் வேண்டியதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நான் அங்கே உணர்ந்தேன். என்ன மாதிரியான உணர்வு அது என்று புரிந்து கொள்வதால் மட்டுமே அந்த அனுபவத்தை மீளவும் வாழ்ந்து விட முடியும் என்று பாசாங்கு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். இருந்த போதிலும், அந்த உலகின் பௌதிக நிலைக்கு நீங்கள் மீண்டும் உங்களைத் தயார்படுத்திக் கொள்வது சாத்தியம்தான். அது எனக்கு அதி முக்கியமான ஒரு உபகரணம் ஏனென்றால், மனிதர் பற்றிய உண்மைகளைத்தானே நான் எழுதுகிறேன். ஆனாலும் கூட அவற்றை அசலான, புலன் சார்ந்த விவரங்களுக்குள் நான் பொதிந்து கொடுக்க வேண்டும் இல்லையா?
...

Australian and allied POWs labouring at Hellfire pass to build the Siam-Burma railway during World War II.

ரமோனா கோவால் : இந்தப் புத்தகத்தை நீங்கள் எழுத மேற்கொண்ட முயற்சிகள் பற்றி நான் பேச ஆசைப்பட்டதற்குக் காரணம், இந்த நாவலின் ஒரு சில பகுதிகளையோ, அதில் விவரிக்கப்படும் போர்க்கைதி முகாமையோ, அல்லது போர் நடவடிக்கைகளையோ நினைவு கூர நேரும் பொழுதெல்லாம், அதற்கு முன்பாகவே மரணத்தை, பட்டினியை, அதீத வெப்பத்தை, சீழ் கட்டிய ரணத்தை, அருவருப்பூட்டும் அழுக்கை, நரகலை, வியர்வைக் கசகசப்பை, நினைக்காமல் இருக்க முடிவதில்லை. நாவலை வாசிக்கும் பொழுது நீங்கள் அந்த இடத்தில் நேரடியாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு வாசகியாக நானும் அங்கே நேரடியாக இருக்கிறேன். அதே வேளையில் மொழி ரீதியாக ஒரு சில சொற்கள் திரும்பத் திரும்ப வருவதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு ‘மரணம்’. ஆனாலும் அது எனக்கு அலுப்பூட்டவில்லை. உங்களோடு இணைந்து நானுமே பயணிக்கிறேன். அது ஒரு விதமான எதுகை போல இசைத்தன்மையுடன் இருக்கிறது. அது ஒரு விதமான கவிதைதான். அந்த நபர்கள் அங்கே இருக்கும் வரை என்னையும் நீங்கள் கட்டிப் போட்டு விடுகிறீர்கள். அது மாதிரியான காட்சிச் சித்திரிப்பையும் அதற்குத் தோதான மொழியைப் பயன்படுத்துவது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன். நீங்கள் பயன்படுத்தும் விதமான மொழி என்று பார்க்கும் பொழுது அதற்கு என்று ஒரு சில எல்லைகளும் கட்டுப்பாடுகளும் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : விஷயத்தை மிகச் சரளமாக வாசிக்கும்படித் தருவதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வம் இருக்கிறது. பயன்படுத்திய சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மிக மோசமான எழுத்தாற்றலாக நவீன இலக்கியத்தில் மதிக்கப்படுகிறது. உங்களுடைய பனுவல் மன்றத்தின் அபிமானிகளுக்கு இது ஒன்றும் தெரியாத செய்தியாக இருக்க வாய்ப்பில்லை. நவீன இலக்கியம் இந்த அம்சத்தை ஒரு முகச் சுளிப்புடன்தான் பார்க்கிறது. எழுத்தைச் செப்பனிடுவோர் இவை போன்ற திருத்தங்களைச் செய்யப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றார்கள். நவீன சொற்பதனி நிரல்கள் வாயிலாக இவை போன்ற திருத்தங்களைச் செய்வதை, அதாவது ஒரு முறை பயன்படுத்திய சொல் மீண்டும் வருவதைத் தவிர்க்கும் செயலைக் கணினி மொழியில் ‘உலகளாவிய’ (global) என்று கூறுகின்றார்கள். ஆனால், சந்தங்களை, வடிவங்களை, குறிப்பாக இசைத்தன்மையைக் கட்டமைப்பதற்காக, பயன்படுத்திய சொல்லை மீண்டும் பயன்படுத்தப் பேரிலக்கியங்கள் எப்பொழுதுமே தவறியது இல்லை. அது போன்ற இசை வடிவங்களுக்கு நாம் மிகவும் பழகி இருக்கிறோம். வேறெதையும் விடவும், கதாபாத்திரப் படைப்பை விடவும், கதைக்களனை விடவும்,கூட, இதுதான் ஒரு வாசகனை நாவலுக்குள் நுழைந்து பார்க்க அனுமதித்து அதன் மூலமாக அவனுடைய அந்தரங்கங்களைத் திறந்து பார்க்க உதவுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பத்தியில் ஒரு வினையடையை நீங்கள் மீண்டும் மீண்டும் மூன்று முறை பயன்படுத்தலாம். ஆனால் அப்படி மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது கலை நயத்தோடு வாசகனை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவது உரையாடலுக்கு மிக அணுக்கமான தொனியைக் கொடுக்கும். உரையாடலின் போது நாம் பயன்படுத்திய சொற்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம். என்றாலும் நாம் அதைக் கவனிப்பதில்லை. நீங்கள் மரணத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். நாவலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ‘மரணம்’ மற்றும் ‘மாண்ட’ எனும் சொற்கள் ஒரு ராணுவ அணிவகுப்பின் முரசம் போலக் கட்டமையும். அந்தப் பகுதி மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவகையில் பார்த்தால் இது கொஞ்சம் மாலி ப்ளூம்மின் தனி மொழியைத் தலைகீழாக்கிப் பார்ப்பதைப் போன்றதுதான். ஆனால் பௌல் செல்லானுடைய கவிதையின் ஆற்றலால், மொழியைக் கொண்டு சந்தங்களை அவர் உருவாக்கும் விதத்தால் நான் மிகவும் வசீகரிக்கப்பட்டிருந்தேன். அணுப்பேரழிவைப் பற்றிய அனுபவங்களைப் பேசும் மனதைப் பிசையும் அவரது கவிதை.
ரமோனா கோவால் : அவர் ஒன்றையே மீண்டும் சொல்கிறார்: “உன் கேசம், மார்கரெட், உன் கேசம்.”
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : ஆமாம். அதே கவிதைதான். அதே புகழ்பெற்ற கவிதைதான். ஒரே மாதிரியான மூன்று நான்கு வரிகளை அது திருப்பித் திருப்பிச் சொல்கிறதில்லையா? அங்கங்கே மாறுபட்ட சொல்லமைப்புகளோடு. பயங்கரம் எனும் இப்பிரபஞ்சம் மெல்ல, மெல்லத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதற்குக் காரணம் ஒரு ராணுவத் தீமை முரசறைந்து வரும் உணர்வை அவர் வாசகனுக்குள் ஏற்படுத்துகிறார். உங்களுடைய அழிவு மட்டுமில்லாமல், நீங்கள் நேசிக்கும் ஒவ்வொன்றின் அழிவும் அதற்குள் பொதிந்திருக்கிறது. அந்த முரசொலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் அமெரிக்க படைப்பிலக்கிய பயிற்சிப் பள்ளியில் பயின்று வந்திருக்கும் எழுத்தாளர்கள் பொதுவாகக் கையாளும் உரைநடையில் இது போன்ற கவிதாலயங்கள் மற்றும் சொல்லணிகளின் முக்கியத்துவத்தை மிக உயரிய நவீன உரைநடை எழுத்து இழந்து விட்டது போல் தோன்றுகிறது.
ரமோனா கோவால் : ஆரம்பத்தில் நீங்கள் பௌல் செல்லானின் “அன்னை” யிலிருந்து மேற்கோள்கள் காட்டினீர்கள்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : ஆம். ருமேனிய மொழியில் பேசி எழுதி வந்த செல்லான் ஒரு ஜெர்மானியர். தன்னுடைய பெற்றோர் இருவரையுமே, அணுப்பேரழிவில் பறி கொடுத்தவர். ஜெர்மன் மொழியிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். ஜெர்மானியர்கள் செய்த ஆகக் கொடூரமான தீங்குகளைப் பற்றிய ஆகச் சிறந்த ஜெர்மானியக் கவிதைகளை அவர் எழுதினார். இந்த நாவல் ஒரு விதத்தில் நான் எதிர்கொண்ட சவாலைப் பேசுகிறது என்றும் நினைக்கிறேன். இதே பெரும் தீங்குக்குப் பொறுப்பான ஜப்பானிய மக்களைப் பற்றியும் எழுத முயன்றேன் அதே நேரத்தில் அவர்களுடைய கலாச்சாரத்தில் இருக்கும் மேன்மையையும் அழகிய அம்சங்களையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவர்களுடைய இலக்கியம் கூட உண்மையில் மேன்மையும் அழகும் கூடியதுதான். இதனால்தான் என்னுடைய நாவலுக்கு “வடகோடிக்கு இட்டுச் செல்லும் குறுகல் பாதை” என்று தலைப்பிட்டேன். இந்தத் தலைப்புமே கூட பாஷோ எனும் பெரும் ஹைக்கூ கவிஞரின் ஹைபான் வடிவத்தில் புனையப்பட்ட மிகப் பிரபலமான ஜப்பானிய இலக்கியப் படைப்பின் தலைப்புதான்.
ரமோனா கோவால் : இருப்புப்பாதையும் கூட ஒரு குறுகல் பாதைதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
...
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : இந்த நாவல் நெடுகிலும், மிகப் பிரபலமான ஹைக்கூ கவிதைகள் நேர்மாறாகத் தூவப்பட்டுள்ளன. எனவேதான் பாஷோவின் மிகப் பிரபலமான ஹைக்கூவான ‘அடி மேல் அடி, ஓர் அரக்கனின் வதனத்தின் மீது, ஓர் அரக்க வதனத்திரையின் மீது’ மற்றும் ‘ஒவ்வொரு நாளும், வானர வதனத்தின் மீது, வானர வதனத்திரை மீது’ போன்ற வரிகள் ஊடாடுகின்றன. இதைப் போன்ற பலப்பல ஹைக்கூ கவிதைகளின் எதிர்மாறான பயன்பாட்டை இந்த நாவல் நெடுக நீங்கள் பார்க்கலாம். இந்த நாவலில் கையாளப்படுவது என்ன என்பதை ஜப்பானிய இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டவர்கள் துல்லியமாகக் கணித்து விடுவார்கள்.
ரமோனா கோவால் : இந்த நாவல் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டில் உங்கள் தந்தை காலமாகி விட்டார் அல்லவா? இந்த நாவலை நீங்கள் எழுதுவதைப் பற்றி அவர் என்ன கருத்துக் கொண்டிருந்தார்? இந்த நாவலை நீங்கள் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என்பது அவருக்குத் தெரியும். அவருடைய அனுபவங்கள் குறித்த விளக்கங்களை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஜப்பான் நாட்டுக்குப் போய் வந்ததும் அவருக்குத் தெரியும். நீங்கள் அங்கே செல்வதைப் பற்றி அவர் கவலை கூடப் பட்டுக் கொண்டிருந்தார்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : நான் ஜப்பான் சென்று ஒரு சில போர்க்கைதி முகாம் மெய்க்காவலர்களை சந்திக்கப் போகிறேன் என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால், என்னுடையது மிகப் பிரம்மாண்டமான ஒரு திட்டம். நான் சந்திக்கும் நபர்களில் அவருடைய முகாமில் இருந்த ஒரு நபர் கூட இருக்க மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். அப்படி ஒரு எண்ணம் அரை வினாடி கூட என் மனதில் தோன்றவில்லை. நான் ஜப்பானிலிருந்து திரும்பி வந்த பிறகு, அவருடைய முகாமில் இருந்த, அல்லது மரண இருப்புப்பாதையில் பணியாற்றிய, அல்லது இறுதியாக ஜப்பானில், ஹிரோஷிமா நகரின் தென்புறத்தே அமைந்திருந்த கொத்தடிமை முகாமில் அவர் வைக்கப்பட்டிருந்த போது பணியில் இருந்த ஒரு சில மெய்க்காப்பாளர்களை, நான் சந்திக்க நேர்ந்தது என்று சொல்ல வேண்டி வந்தது. ‘பல்லியை’க் கூட நான் சந்தித்தேன் என்பதையும், அவர்கள் அனைவருமே வருத்தப்பட்டதாகவே தோன்றியது என்பதையும் நான் அவரிடம் சொல்ல முடிந்தது. அவர்கள் அனைவருமே வருத்தத்தையும் அவமானத்தையும் ஒருங்கே சுமந்து கொண்டிருந்தார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் ஒரேயடியாக நேர்மையுடன் இல்லாதிருந்த போதும், நடந்தவைகளோடு அவர்கள் நேர்மையான முறையில் ஆன்ம ரீதியாகச் சமரசம் செய்து கொள்வது முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்த போதும் கூட, இது எல்லாவற்றிலும் ஒரு நம்பகத்தன்மை இருந்ததை நான் உணர்ந்தேன். நிச்சயமாக அவர்களிடத்தில் வருத்தம் தென்பட்டது. இதையெல்லாம் நான் விவரித்தவுடன் அப்பா பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டார். அது அவர் இயல்புக்கு மாறானது. அவருடைய நினைவு இன்னமும் துல்லியமாகவே இருந்தது. இந்த விஷயங்களில் அவருக்கு ஆர்வமும் இருந்தது. என்றாலும், அன்று நாளின் பிற்பகுதியில் போர்க்கைதி முகாம்கள் பற்றிய நினைவுகளை அவர் அடியோடு இழந்தார். வேறொன்றும் அவருக்கு நடந்து விடவில்லை. மற்ற எல்லா விதத்திலும் அவருடைய நினைவு கூர்மையாகவும், விழிப்புணர்வோடும் இருந்தது. ஒரு கருவறைக்குள் இருந்த உணர்வு போல இந்த அனுபவங்கள் அவருக்குள் இருந்தன என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆனால் அந்த அனுபவத்தின் எந்த ஒரு விவரத்தையும் அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. ஒரு வழியாக அவற்றிடமிருந்து அவர் விடுதலை பெற்று விட்டதைப் போலத் தோன்றியது.
ரமோனா கோவால் : ஒரு மகனாகவும், ஓர் எழுத்தாளராகவும் இதை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : அதைச் சொல்வது மிகவும் கடினம். இது உண்மையில் அன்பைப் பற்றிய ஒரு நாவல். என் தந்தையின் மரணத்தின் நிழலில் எழுதப்பட்ட நாவல். அவர் இறந்த அன்றுதான் இந்த நாவலின் இறுதிப் படிவத்தை நான் எழுதி முடித்தேன். எங்களுக்குள் நிகழ்ந்த இறுதி உரையாடலின் போது இந்த நாவல் எந்த அளவில் இருக்கிறது என்று அவர் என்னிடம் கேட்டார். அது முடிந்து விட்டது என்று நான் அவரிடம் கூறினேன். இந்தச் சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை. என்றாலும் கூட இப்படி நடப்பது சற்றே விசித்திரமாகத்தான் இருந்தது. இப்படி ஒரு நாவலை நான் எழுதி முடிக்கிறேன். அதற்காகவே காத்திருந்தது போல் என் தந்தை காலமாகி விடுகிறார். படைப்பு என்று வரும் பொழுது, அதிலும் குறிப்பாக இது போன்ற அளவிற் பெரிய நாவல்களைப் பிழை நீக்கம் செய்து முடித்த பிறகும் கூட மறுதிருத்தங்கள் செய்ய வேண்டி வரும். அந்த அனுபவம் எனக்கும் உண்டு. நானும் அதே போல் பிழை நீக்கத்துக்குப் பிறகும் இந்த நாவலைச் செப்பனிட்டிருக்கிறேன். ஆனால், புத்தகம் முடிந்தவுடன் அவர் இறந்து விட்டார். அவ்வளவுதான். என் வாழ்க்கையின் பெரும் பகுதி ஒரு அலாதியான முடிவை எட்டியது என்று நினைக்கிறேன்.
ரமோனா கோவால் : இந்த நாவலில் காதல் பாலுணர்வு கேளிக்கை ஆகியவற்றைப் பேசும் பகுதிகள் இருக்கின்றன. இது ஏதோ மனதைக் கலக்கும் ஒரு படைப்பு மட்டுமே என்று வாசகர்கள் நினைத்து விடக் கூடாது. இந்த நாவலுக்காக அழுக்கிற்குள் கால் பதித்து, புழுதிக்குள் புரண்டு வந்த அனுபவங்கள் உங்களுக்குப் பெரும் போராட்டமானவையாக இருந்தனவா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். இந்த அனுபவங்களைப் பற்றி எழுதிய ஒவ்வொரு நாளையும் நீங்கள் எவ்வாறு சமாளித்தீர்கள்? நாளின் இறுதியில் எழுதியவற்றை அப்படியே விலக்கி விட்டு உங்களுடைய அன்றாட சராசரி வாழ்க்கையை வாழ முடிந்ததா? அல்லது, “ஐயோ, இந்த அதி பயங்கரமான மனக்காட்சிகளோடு அந்த அறைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறதே” என்று கவலைப் பட்டிருக்கிறீர்களா? உண்மையில் அவை எல்லாமுமே காட்சிகள்தான், படிமங்கள்தான், இல்லையா? அவை எல்லாமுமே போர்க்கைதி முகாம் வாழ்க்கையைப் பற்றிய, கொடூரங்களைப் பற்றிய கோட்டோவியங்கள்தானே? உங்கள் நாவலிலும் கோட்டோவியம் வரையும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறதே! இது தொடர்பான உணர்ச்சிகளையும் எழுத்தில் கொண்டு வந்து, பிறகு ரிச்சர்ட் ஃப்ளாநகனாகவும் வாழ்ந்தது உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : இந்தப் புத்தகம் வாழ்க்கையின் சந்தோஷங்களை உறுதி செய்கிற ஒரு நாவல். இது கொஞ்சம் விநோதமானதுதான். என்றாலும் இதை நான் முதலில் தெளிவுபடுத்தியாக வேண்டும். அது ஒரு இருண்ட பகுதியின் ஊடே உங்களை இட்டுச் சென்ற போதிலும், அது உங்களை மேம்படுத்தவே செய்கிறது என்று நான் நம்புகிறேன். இதைப் படித்துப் பார்த்த வாசகர்களும் இக்கருத்தை என்னிடம் ஆமோதித்துப் பேசியிருக்கிறார்கள். ஏனென்றால் மிக மிக அசாதாரணமான சூழ்நிலைகளில் மனிதன் வாழ்ந்து விடும் அழகைப் பற்றியது இந்த நாவல். இதை நான் எப்படி எழுதினேன்? ஜப்பானிலிருந்து நான் திரும்பி வந்த பிறகு, இந்த நாவலின் இறுதிக் கட்டங்களில் ஆளரவம் அதிகமில்லாத ப்ரூநி தீவு எனுமிடத்தில் எனக்கு ஒரு சிறிய குடில் இருக்கிறது. நான் அங்கே சென்று விட்டேன். அங்கே நான் தன்னந்தனியாக வாழ்ந்தேன். வார இறுதி நாட்களில் என் மனைவி என்னை வந்து பார்ப்பார். எப்பொழுதாவது ஒரு சில நண்பர்களும் அங்கே எட்டிப் பார்ப்பதுண்டு. கடலை ஒட்டிய இந்த இடத்தில் கிட்டத்தட்ட ஒரு தனியனாக, புதர் மண்டிய குடிலில் ஐந்து மாதங்களை நான் முழுதாய்க் கழித்தேன். இந்த நாவலை முதலிலிருந்து கடைசி வரை முழுசாய் மீண்டும் உருவாக்கினேன். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஆறு மணி வாக்கில் எழுத ஆரம்பித்து விடுவேன். இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்குப் படுக்கப் போகும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். தினமும் கடலில் நீந்தப் போய் விடுவேன். சில நேரம் துடுப்புக் காலணி அணிந்து முகக்கவசங்களோடு ஆழ்கடல் நீச்சலில் மூழ்குவேன். பிறகு நாவலை எழுதத் தொடங்குவேன். இதையெல்லாம் நான் செய்ய வேண்டி இருந்தது. அதற்குக் காரணம் இவை தவிர எனக்குள் எதுவுமே இல்லாமல் இருந்தது. எனக்குள் இருந்த அவ்வளவும் இந்தப் படைப்புக்குள் வந்தாக வேண்டி இருந்தது. தன்னுடைய வாழ்நாள் ஒவ்வொன்றிலும் ஒரு மணி நேரத்தை மட்டுமே வாழ்க்கைக்கென்று தர முடிந்ததாக பால்ஸாக் ஒருமுறை கூறினார். மீதமிருந்த நேரம் பூராவும் நாவல் எழுதவென்றே அவர் செலவிட்டாராம். எனக்கு அந்த ஒரு மணி நேரம் கூடக் கிடைக்கவில்லை. எல்லா நேரமும் இந்த நாவலுக்காக மட்டுமே தேவையாக இருந்தது. பெரும்பான்மையான எழுத்தாளர்களுக்கு இது போன்ற விஷயங்கள் அசாதாரணமான வேலைப்பளு இதிலிருந்து தப்பித்தல் என்பது முடியாது. மெல்ல மெல்ல வாக்கியங்களைப் பதனிட வேண்டியிருக்கும். இது அளவு கடந்த நேரத்தை விழுங்கும் காரியம். மிக நிதானமாக ஒவ்வொரு சொல்லாகச் செதுக்கி செப்பம் செய்ய வேண்டி இருக்கும்.
ரமோனா கோவால் : வாக்கியச் செப்பம். நீங்கள் எழுதிக் கொண்டிருந்த விஷயத்தின் உணர்ச்சிபூர்வ தொனி இதிலிருந்து மாறுபட்டதா?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : அது உணர்ச்சியை விவரிக்கும் விஷயமில்லை. அது துல்லியத்துக்கான தேடல். உண்மையில், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க நீங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். வாசகன் துயரத்தை உணர வேண்டுமென்றால் புத்தகத்தின் பக்கத்தில் ஒரு துளி கண்ணீர் கூடத் தென்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சொன்னது செக்காவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுடைய கதைமாந்தர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை எல்லாம் மிகத் துல்லியமாக விவரிக்க நீங்கள் முயல வேண்டும். அதுதான் எழுத்து கேட்கிற உழைப்பு. நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையையோ, கிளர்ச்சியான மனநிலையையோ அல்லது அவலமான மனநிலையையோ அடைந்து, அதன் பிறகு அந்த மனநிலையிலிருந்து எழுதத் தொடங்கும் வேலையில்லை இது. ஒரே நேரத்தில் எளிமையாகவும் கடினமாகவும் தோன்றும் பணி அது. குறிப்பிட்ட ஓர் உணர்ச்சியை எப்படி விவரிப்பது, அதை மிகச் சரியான விதத்தில் எப்படி எழுதுவது என்று நீங்கள் ஓயாது சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ரமோனா கோவால் : இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு சில நினைவுக் குறிப்புகள் எழுதப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இவற்றுள் எந்தெந்த நினைவுக் குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன?
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : அவற்றை வாசித்து வளர்ந்தவன் நான். ரே பார்கின்ஸுடையதுதான் ஆஸ்திரேலிய நாடு உருவாக்கிய நினைவுக் குறிப்புகளுள் மிகவும் அபாரமானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அளவுக்கதிகமாக அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டாம் என்று நான் முயன்றிருக்கிறேன். வளரும் பருவத்தில் அப்பாவிடம் நான் கேட்டு வளர்ந்த கதைகள்தான். ஆனால் எந்தெந்த வகைகளில் அவை பிய்த்தெடுக்கப்பட்டு, மீண்டும் விசித்திரமான வடிவத்தில் ஒன்று திரட்டப்பட்டு இருக்கின்றன என்பதை என் குடும்பத்தினர் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இந்த விந்தையான கலவை எப்படியிருந்தாலும் அப்பாவின் கதையை ஓரளவுக்காவது சொல்லி இருக்கும். என்றாலும் இது முற்றிலும் வேறான கதை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாவலின் மையக் கதாபாத்திரம் முற்றாக அப்பாவிடமிருந்து வேறுபட்டதாக அமைந்திருக்கிறது.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : மையக் கதாபாத்திரம் வியரி டன்லப் போன்ற ஒரு நபர்; அல்லது, வியரி டன்லப் ஆற்றிய பணியைச் செய்த ஒரு நபர் என்று நினைக்கிறேன். கதைக்களனில் இருந்த பல மருத்துவர்களுள் வியரி டன்லப்பும் ஒருவர். இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், மருத்துவர்கள்தான் முகாம்களில் தலைவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஏனையோரும் அவர்களைத்தான் ஆராதித்திருக்கிரார்கள். அவர்களுள் மிகவும் பிரபலமானவர் வியரி டன்லப்தான். ஆனால், வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். ரௌலி ரிச்சர்ட்ஸ், ஆர்தர் மூன், கெவின் ஃபேகன் என்று ஒரு சிலரைச் சொல்ல முடியும். இவர்கள் எல்லோருமே அங்கிருந்தவர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர்கள். வியரி டன்லப்புக்கு நிகரான அசாத்தியமான சாதனைகளைப் புரிந்தவர்கள். அதனால்தான் இப்படி ஒரு பாத்திரப்படைப்பில் பொருந்திப் போகிற தலைவனைக் கதைமாந்தராக்க நான் ஆர்வம் காட்டினேன். அந்தப் பாத்திரப்படைப்போடு பொருந்திப் போவதோடு கூட, காரியங்களை, அதிலும் அசாத்தியமான காரியங்களைச் செய்கிறவனாக, ஆனால், அப்படிச் செய்யத் தனக்குள் ஆற்றல் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்பவனாக, போலித்தனம் மிகுந்த மோசடிக்காரனாகத் தன்னை உணர்பவனாக, என்றாலும் இறுதியில் அசாத்தியமான செயல்களைச் செய்து முடிப்பவனாக, ஒரு விதத்தில் கூட இருக்கும் மனிதர்களால் உந்தப்பட்டு அவற்றைச் செய்பவனாக அவன் இருக்க வேண்டும் என்று நான் ஆர்வமாக இருந்தேன். அது மிகவும் தேவையான விஷயம். தோழமைத்தனம் என்பதை எப்படி ஒரு எளிய விஷயமாக ஆஸ்திரேலியர்கள் பேசுகிறார்களோ, அதே மாதிரிதான் இதுவும். அந்தத் தோழமைத்தனம் உண்மையிலேயே மனித வாழ்நிலையின் மிகவும் சிக்கலான வடிவம். அதிலும், போர்க்கைதி முகாம்களில் இந்த தோழமைத்தனம் நம்ப முடியாத அளவிலான மிக உறுதியான பந்தம். மற்றும் விசுவாசமும் கூட. இந்த பந்தம் உண்டாக உங்களுக்கு யாரையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. அவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்கள், எனவே நீங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற ஒரு கடமைச் சட்டகத்துக்குள் நீங்கள் சிறைப்பட்டு விடுகிறீர்கள் என்பதுதான் அதன் பொருள். இதில் உள்ளீடாக ஒரு பெரும் தியாக உணர்வு பொதிந்து கிடக்கிறது. இது மனித ஒழுக்கத்தின் மிக அசாதாரணமான சிந்தனை.
ரமோனா கோவால் : மாலிநோவ்ஸ்க்கி குலா மோதிரம் குறித்து எழுதியதை நினைவூட்டுகிற மாதிரி இது இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பாலினேஷியா மற்றும் மேலநேஷியா நாடுகளில் பழங்குடியினர் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால் கட்டமையும் கடமையுணர்வு புழக்கத்தில் இருப்பதை நினைவு படுத்துகின்றது. ஒரு மனிதரை நீங்கள் நேசிக்க வேண்டும் என்பதில்லை. என்றாலும் நீங்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். நீங்கள் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அவரும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : ஆமாம். இது பெருமளவில் அந்த முகாம்களில் இருந்தது என்று நினைக்கிறேன். எந்த அளவுக்கு மனக்கலக்கம் கொள்ள வைக்கும் துரோகக் கதைகளும், நெறிமுறை தவறுதல்களும், குறைபாடுகளும் அந்தப் போர்க்கைதிகளின் வாழ்வில் இருந்தனவோ, அதே அளவுக்குத் தன்னலமற்றுப் பிறர்க்கென வாழும் தகைமையைக் காட்டும் செயல்களும் மிகுந்திருந்தன என்றுதான் நான் நினைக்கிறேன்.
ரமோனா கோவால் : உங்களுடைய பேச்சில் முன்பு தீமை என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள். அந்த மெய்க்காவலாளியைச் சந்தித்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது "தீமை என்று ஒன்றிருந்தால் அது அந்த அறையில் இருக்கவில்லை" என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் தீமை என்று ஒன்று இருப்பதாக நம்புகிறீர்களா? அல்லது குடியேற்ற மனப்பான்மை காரணமாக மக்கள் அவ்வாறு நடந்து கொண்டார்களா? நிர்ப்பந்திக்கப்பட்டார்களா? அல்லது வரலாற்றின் ஊடே ஒரு விதப் புதிரான, மரண, அல்லது அவர்கள் இப்படியோ அல்லது அப்படியோ காரியங்களைச் செய்ய வெறியீடுபாடு உதயமாகிறதா? இதை நான் கேட்பதற்குக் காரணம் நீங்கள் ஒரு வரலாற்றாய்வாளர் என்பதால்.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : நான் 'தீமை' என்ற ஒன்று இருப்பதாகத்தான் நம்புகிறேன். 'நல்லது' என்பதையும் நான் நம்புகிறேன். அன்பின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மனித இனமும், மானுட வரலாறும் இவை போன்ற அறிவுக்கு முரணான எதிரெதிர் சக்திகளின் விளைவே என்று நான் நினைக்கின்றேன். இவற்றை மறுக்கவோ அல்லது ஒன்று திரட்டவோ நாம் முயல முயல இதே விஷயங்கள்தான் வாழ்க்கையில் நம்மை உந்தித் தள்ளுகிற விஷயங்களாகத் திகழ்கின்றன. இவை எல்லாவற்றையும் - மிக உன்னதமான விஷயங்களையும், மிகக் கேவலமான விஷயங்களையும்.- நாம் நமக்குள் சுமந்து கொண்டே இருக்கிறோம். "வன்முறைக்கு விளைவுகள் உண்டு" என்று சொன்னது கிளின்ட் ஈஸ்ட்வுட் என்று நினைக்கிறேன்
ரமோனா கோவால் : அந்தப் பெரும் கவிஞர்!
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : [சிரிக்கிறார்] அதற்கும் காரணங்களும் உண்டு. வன்முறை நிகழ்ந்த கணத்தின் மீது மட்டுமே கவனத்தைக் குவித்து, அதுவே எல்லாக் கதையையும் சொல்லி விடும் என்று நினைப்பது முறையாய் இருக்காது. எது அந்த வன்முறைக்கு இட்டுச் சென்றது, இப்பொழுது எது அந்த வன்முறைக்கு இட்டுச் செல்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜப்பானின் வரலாறு பற்றி எனக்குள்ள குறுகிய புரிதல் என்னவென்றால் ஓர் அரை நூற்றாண்டுக் கலாச்சாரமானது கொஞ்சம் கொஞ்சமாக ராணுவமயமாக்குதல், தேசியவாதம், இனவாதம், ஜென் புத்த மதக் கோட்பாடுகளிலிருந்து பிறந்து வந்து இன்று நஞ்சாகிக் கொண்டிருக்கும் மத அம்சங்கள் ஆகியவற்றால் சீரழிந்து கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவும் கிருஸ்துவ மதமும் என்ன கதிக்கு ஆளாயினவோ அதே போன்றுதான் இதுவும். கொளரமும், தீமையும் அவற்றை ஆதரித்தவர்களிடமே - இந்தக் கருத்துகளை மெல்ல மனதில் செலுத்தி, பலவந்தப்படுத்தி, இறுதியாக இந்தக் கருத்துகளின் வடிவத்துக்கேற்ற முறையில் சமுதாயத்தை உருவமைக்க முயல்பவர்களிடமே - மீண்டு செல்கின்றன. எந்த சமுதாயமுமே இந்தப் பாதையில் கீழிறங்கி விடக் கூடும். அப்படியான ஒரு நிலையில் நாம் அனைவருமே தீமையின் முகவர்களாகிப் போவோம். எனவே இது போன்ற விஷயங்கள் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கப்பட வேண்டும். ஆரம்ப நிலையில் அவை என்னவாக இருக்கின்றனவோ அதற்காகவே எதிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அந்த நிலையில் நீங்கள் அவற்றை ஏதாவது செய்து விட முடியும். ஒரு வனத்தின் ஊடே இரண்டரை லட்சம் கொத்தடிமைகளைக் கொண்டு ஒரு இருப்புப்பாதையை அமைக்கின்ற நேரத்தில் சிறைக் காவலர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது காலம் கடந்த செயலாகி விடுகிறது. அது காலத்தை மீறிச் சென்று விட்டது. என்றாலும் இந்த நிலைக்கு அதை இட்டுச் சென்றது எது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு தேடல் வேண்டும். நான் வரலாற்றாய்வாளனும் இல்லை. இது வரலாற்றுப் புத்தகமும் இல்லை. இது மானுட வம்சத்தைப் பற்றிய உண்மைகளைக் கூறும் நூல் என்றுதான் நான் நம்புகிறேன்.
ரமோனா கோவால் : எது எப்படியிருந்தாலும், இது ஒரு அற்புதமான நாவல்தான் ரிச்சர்ட். அதே போல உங்களோடு உரையாடிக் கொண்டிருப்பதும் எப்பொழுதுமே மிக அற்புதமான அனுபவம்தான். மாதநூல் நிகழ்ச்சிக்காக இங்கே வந்திருந்து எங்களோடு உரையாடியதற்கு மிக்க நன்றி.
ரிச்சர்ட் ஃப்ளாநகன் : மிக்க நன்றி ரமோனா. எல்லாவற்றுக்கும் நன்றி.
 
 
அதிபயங்கர இவான்: 1547 ஆம் ஆண்டிலிருந்து 1584 ஆம் ஆண்டு வரை ரஷ்ய நாட்டின் ஜார் மன்னனாக ஆட்சி புரிந்தவன். நோவ்கராட் நகரைத் தாக்கி மிருகத்தனமாக அதன் குடிமக்களைக் கொன்றதால் அதிபயங்கர இவான் என்று வரலாற்றில் பெயர் பெற்றவன்.
மாலி ப்லூம்: பிரபல நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸின் படைப்பான யுலிஸிஸ் நாவலில் வரும் கதாபாத்திரம்.
பௌல் செல்லான்: ருமேனிய நாட்டில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நாட்களில் ஜெர்மன் மொழிக் கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பெயர் பெற்றவர்.
அணுப்பேரழிவு: ஆங்கிலத்தில் Holocaust என்றழைக்கப்படும் ஜப்பான் மீதான அணுக்குண்டு வீச்சு.
உன் கேசம் மார்கரெட்: ஜெர்மன் கவிஞர் பௌல் செல்லான் எழுதிய Death Fugue என்ற கவிதையில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள். உன்னுடைய பொன்னிறக் கேசம், உன்னுடைய சாம்பல் நிறக் கேசம்.
அன்னை’: பௌல் செல்லானின் wolfsbane எனும் கவிதையில் அன்னையைப் பற்றி வரும் வரிகள்.
பாஷோ: ஜப்பானியக் கவிஞர் மாட்ஸு ஒ பாஷோ. காலம்: 1644 - 1694
ஹைபான்: ஜப்பானிய உரைநடைக் கவிதை வடிவ இலக்கியம்.
வியரி டன்லப்: ஆஸ்திரேலிய நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர். 1943 ஆம் ஆண்டு பர்மிய-தாய்லாந்து இருப்புப்பாதை திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கைதிகளுக்குத் தலைமைக் காவலராக நியமிக்கப்பட்டவர்.
தோழமைத்தனம்: ஆஸ்திரேலிய நாட்டின் கலாசார சொல்.
மாலிநோவ்ஸ்க்கி: ப்ரோநிஸ்லா காஸ்பர் மாலிநோவ்ஸ்க்கி - போலந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியல் அறிஞர். ஆஸ்திரேலிய நாட்டுப் பழங்குடிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பேர் போனவர்.
குலா மோதிரம்: ட்ராப்ரையன்ட் தீவுகளின் ஆதிகுடியினரிடையே புழக்கத்தில் இருக்கும் பரிசுப் பொருள் பகிர்வு முறை. மானுடவியல் அறிஞர் மாலிநோவ்ஸ்க்கியின் ‘மேற்கு பசிஃபிக்கின் ஆர்கநாட்கள்’ என்ற நூலில் இது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
பாலினேஷியா: ஓஷியானியா பகுதியின் துணைப் பகுதி. கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள் கூடிய, ஆயிரக்கணக்கான தீவுகளால் ஆன பகுதி.
மேலநேஷியா: ஓஷியானியா பகுதியின் மற்றொரு துணைப் பகுதி. பசிஃபிக் பெருங்கடலின் மேற்குப்புறத் தீவுகளை உள்ளடக்கிய பகுதி.
கிளின்ட் ஈஸ்ட்வுட்: பிரபல ஹாலிவுட் நடிகர். இவருடைய கொரில்லாவின் இசைப்பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

-------------------------------------------

எதிராஜ் அகிலன்

ஆங்கிலப் பயிற்றுனர், விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், முதல்வர் என முப்பத்தாறு ஆண்டுகள் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் பணியாற்றி 2012 ஆம் ஆண்டு ஒய்வு பெற்ற பிறகு கடந்த மூன்றாண்டுகளாக அவ்வப்பொழுது மொழிபெயர்ப்பில் அக்கறை காட்டி வருகிறார். துருக்கிய நாவலாசிரியர் அஹ்மெட் ஹம்டி தன்பினாரின் “நேர நெறிமுறை நிலையம்” எனும் நாவல் இவருடைய மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.