ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஷங்கர்ராமசுப்ரமணியன்
 
 
மிளிரும் ஒளித்துண்டுகள்
ஷங்கர்ராமசுப்ரமணியனின் 'ஞாபக சீதா'
 
 
- ந.பெரியசாமி
 

உணர்வுகளின் வேறுபட்ட தன்மைகள் கவிதையில் காட்சிபடுத்தப்பட்டிருந்த போதிலும் அதில் வெளிப்படும் ஏதேனும் ஒரு அனுபவத்துடன் தன் அனுபவங்களை கண்டுகொள்ளும் வாசகன் அதனோடு பொருத்தி வேறான உணர்வு நிலையை அடைவான். பெரும்பாலான கவிதை தொகுப்புகளோடு இப்படித்தான் பயணிப்பேன். வாழ்வின் வெவ்வேறான நிறங்களை, பொழுதுகளை உணர்வுகளை ஒற்றைத் தன்மையற்று கலவையான மன உணர்வின் தொகுப்பாக வந்திருக்க்கும் ஷங்கர்ராமசுப்ரமணியனின் சமீபத்திய தொகுப்பான 'ஞாபக சீதா' கவிதைகளுடனான பயணமும் அத்தகையதே.

தென்னங்குறும்பைப் பார்க்க சிறுவனாக, குயில் ஆட பறவையாக, மழைக் காலத்தில் குளிராகவென தன்னை வேறொன்றாக பொருத்திப் பார்க்கும் நோக்கு இருப்பினும், பிரபஞ்சத்தின் மையம் தான்தான் எனும் அகந்தை இல்லாமல் நான் ஈ என 'நானை' அழித்து வாழும் சூழலையும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ஒதுங்கி, ஒடுங்கி இருந்துவிடமல் எறும்புக் கவிதையாகி பக்கங்களில் ஊர்வதையும், ஈ கவிதையாகி ரிங்காரமிட்டு அருவருப்புக் கொள்ளச் செய்வதும், உன் மனநிலையை தொந்தரவிற்கு உள்ளாக்குவதுமாக கவிதையில் ஷங்கர் எடுக்கும், வேவ்வெறான பிறப்புகளினூடாக அவரது ஆளுமை துலங்குகிறது. இதன் பிரதிபலிப்பை 'ஆயிரம் சந்தோஷ இலைகள்" கவிதையிலும் காணமுடியும். அரசமரத்தில் பிரம்மன், திருமால், ஈசன் என மும்மூர்த்திகளும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனாலேயே அரசமரம் ராஜவிருட்சம் எனவும் அழைக்கப்படுகிறது. கீதையில் கண்ணணும் அரசமரமாகவே இருக்க விரும்புகிறேன் என்கிறார். காற்றின் ஒளியிலே ஆடும் ஆயிரம் சந்தோஷ இலைகளாக மனதை வைத்துக்கொள்ள தன்னை ஒரு அரசமரமாக உணர்ந்து பரவசம் கொள்ளும் ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஆளுமையை மேலும் நாம் உணர முடிகிறது.

நான் ஈ
இந்த உலகிலிருந்து
நீங்க விரும்பாத
ஆசையில்
குட்டி உடலுக்குள்
சிறைப்பட்ட
நான் ஈ.


மரம் செடி கொடி ஈ பறவையென இயற்கையின் நுட்பங்களை அதன் மேன்மையோடு தன் படைப்புகளில் தொடர்ந்து காட்சிபடுத்தி வந்த ந.பிச்சமூர்த்தியை ஷங்கரின் கவிதைகள் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது.

நம் கட்டுப்பாட்டிற்கு உட்படாது திடுமென வெளிப்பட்டுவிடக் கூடிய தும்மல்போல் மறைத்து வைக்க இயலாதது காம நோய்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு இன்றித்

தும்மல்போல் தோன்றிவிடும்.

எனும் திருக்குறளில் வரும் தலைவியின் காமநோய் இத்தொகுப்பின் 'புதியவள்' கவிதையில் வரும் நாயகன் பழங்கவிதைகளை படித்திருக்காவிட்டாலும் காமம் ஒரு கடும் நோய்தான் என தலையணையிடம் புலம்புகிறான். உணர்வுநிலை எல்லோருக்குமானதுதானே.

கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பில் வரும் ஞானப்பூங்கோதையை நினைவூட்டும் 'இவள் அவள் அல்ல' கவிதையில் வரும் ஜெயலட்சுமி. தன் சேலையை நீவி விடுதலில் கடவுளையும் கணநேரம் தடுமாறச் செய்தவள். இருட்டையும், மூச்சை முட்டும் புழுக்கத்தையும் தன் இருப்பற்ற பொழுதுகளில் ஏற்படுத்துபவள் வாழும் 'அவள் வீடு'. பள்ளிக் காலத்தில் வண்ணமாறிலி என நான் கொண்டாடியவளை நினைவூட்டி, வேறொருவன்களின் சந்தோசத்திற்காக தன்னை அவர்களின் விருப்பத்திற்கேற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியாது வாழும் 'மஞ்சள் ரோஸ்'. வீட்டினுள் இருக்கும் சுடர் இல்லாதிருக்க கடவுளும் வருந்திக் கிடக்கும் காட்சியை காட்டும் 'ஆப்பிள் பாபா வாணி'. பிழைப்புக்காக அம்பத்னர் தொழிற்பேட்டைக்கு லாவக மான்களாக ஓடும் முத்துச்செல்வி. நல்ல கதை கேட்ட திருப்தியைத் தந்து இனி சொல்வதற்கும் ஒரு கதையாகவும் நினைவில் நிற்கும் 'அழகு சுந்தரம் திரிபுர சுந்தரி' என சில மாந்தர்களை காட்சிபடுத்தி அவர்களின் என்றும் மாறாத துயர்தோய்ந்த வாழ்வை ஷங்கர் 'ஆம் இவர்கள்' கவிதையில் சித்திரமாக்கியுள்ளார்.

என்போக்கில் எனை இருக்க விடுங்கள். எனை மகிழ்விக்க கூழாங்கற்களும், சிறகுகளும் நிறைய்யவே உள்ளன மைதானத்தில் 'நான் அனுமன்' என பரவசம்கொள்ளும் ஷங்கர் தொகுப்பில் அதற்கான கூறுகளையும் வைத்துள்ளார். ஏதேனும் ஒரு வஸ்து மனிதர்களை கிளர்த்தக்கூடியதாக இருக்கும். அவ் வஸ்துவிடமான அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் 'எனக்கான மதுக்குப்பிகள்' கவிதையில் இவரின் குனகலத்தை ரசிக்க முடிகிறது. காதலர்களை மஞ்சள் மற்றும் சிவப்பு பூக்களாக பார்த்து குளிரும் 'பாலத்தின் மீது காதலர்கள்'. எவரும் கண்டுகொள்ளப்படாத எளிய விசயங்களே போதும் என அரச மரத்தடியில் இருக்கம் தன் இருப்புக்கான மகிழ்வு, சின்னஞ்சிறிய பொருட்களின் சேமிப்பில் அவயம் வைத்திருக்கும் பெரும் நினைவில் காலத்தை நகர்த்தல் என அவரின் ஆனந்தம் கொள்ளும் தருணங்களில் நாமும் லயித்திருக்க முடிகிறது.

தொலைத்தவற்றின் நினைவைப் பதுக்கி வைத்திருக்கின்றன
ஒரு போதும் என்னால்
விட்டுச் செல்ல இயலாத
சிறிய பொருட்களே
சின்னஞ்சிறிய பொருட்களே.

இருப்பின் மாற்றத்தை ஏற்கத் தயங்கும் உளவியலை கேலி செய்யும் ஷங்கர் தான் இடம் பெயர்ந்த நகரின் தன்மைகளை பதிவு செய்யத் தவறிடவில்லை. ''்கோத்தா, தாயோளி' எனும் வார்த்தைகளில் தனக்கான அடையாளத்தை தக்க வைத்திருக்கும் நகரின் காட்சியை பிரதிபலிக்கிறது 'ஒன்று மற்றதை அறியத் தொடங்குகிறது' கவிதை.

சமநிலையே வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். பாவனை சமநிலையால் எப்பபிரயோஜனமும் இருக்கப்போவதில்லை. ஆனால் நம் அரசுகள் வளர்ச்சி அடைந்துவிட்டோம் என கூசாது பொய் உரைத்தபடியே இருக்கிறார்கள். நீர் கொடுக்காது தூய்மை இல்லாது இருக்கிறீர்களே என கூறும் புகார்களை எப்படி கணக்கில்கொள்ள முடியும். உங்களின் ஆடம்பர தவறுகளுக்கு உடனடி பலியாவதும் அவர்கள்தானே. 'அந்த மனிதர்கள்' கவிதை நம் சூழலுக்கு எப்பொழுது வாசித்தாலும் பொருத்தமான கவிதையாகவே நமை கேலி செய்யும்.

நீங்குதல் நியதி. வெற்றிடம் நீங்குதலில்தான் ஏற்படும். வெற்றிடமே மீண்டும் புதியனவற்றிற்கு வழிவகுக்கும். இச்சுழற்சியை மகிழ்வோடு எதிர்கொள்ள வேண்டுமெனும் 'இங்கிருந்து நீங்கத்தான் வேண்டும்'. நம் இருக்கைகளில் மட்டுமல்லாது இருப்பிலும் விரிவு கொண்டபடி இருக்கும் வன்மம் மிக்க வர்ணங்களின் வரலாற்றை கூறும் 'ஆதியில் வன்மம் இருந்தது'. குழந்தைகளின் அழுகைக்கான காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டிருக்கையில் தானும் குழந்தையாக மாற்றம் கொள்ளும் வழலை உருவாக்கும் 'ஏன் குழந்தைகள் அழுகின்றன'. பறவையோ மனிதர்களோ அவர்களுக்கு பாகுபாடெல்லாம் கிடையாது, அவர்களுக்குத் தேவை நல்ல விலைபோகும் இலட்சினையே, வியபார புத்தியின் நுட்பத்தோடு விளையாட்டு வீரர்களை ஏலம் எடுத்து தன் உற்பத்தியின் இலட்சினையாக மாற்றம் செய்யும் தந்திரம் கூறும் 'சேப்பாக்கம்'. கிங்பிஷர் கவிதையை வாசித்து பின் சேப்பாக்கம் கவிதையை வாசிக்க இரு கவிதைகளிலும் வெளிப்பட்டிருக்கும் நுட்பம் நமை பிரமிக்கச் செய்யும். உடலின் ஒரு உறுப்பாகிப்போன இணையத்துடனான நமது இருப்பை கேலி செய்யும் 'வணக்கம் தமிழகம்' போன்ற கவிதைகளில் ஷங்கரின் தனித்துவத்தை அறிய முடிகிறது.

ஞாபக சீதா
இலைகளின் நுனியில்
பாம்பின் வாலில்
நூலென ஆடும் கூர்மை
ஞாபக சீதா
உன் அழகு
உன் அகங்காரம்
அந்தரத்தில் வானில்
ஆடும் வாலின் நுனி
ஊசிக்கூர்மை.

காவியத்தில் கம்பர் பொன்மான் மீது ஏக்கம்கொண்டோடச் செய்த சீதையின் நினைவில் இராமயண கதைச் சூழலை நினைவூட்டுகிறது. ஒளியேற்றும் ஆளுமையின் கூர்மையோடு படைக்கப்பட்டிருக்கும் ஷங்கரின் ஞாபக சீதா.

பார்க்கும் பறவைகளிலெல்லாம் நவகுஞ்சரத்தின் சாயலைக் காணச்செய்த இத் தொகுப்பு நாட்களோடு பயணித்தபடி வளையல் உடைப்புகளை சேமிக்கும் சிறுமியின் கண்ணாடி சீசாவுள் மிளிரும் ஒளித்துண்டுகளை நினைவூட்டுகிறது.

--------------------------------

ந.பெரியசாமி:

ஓவரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி என மூன்று கவிதை தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. தோட்டாக்கள் பாயும் வெளி கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ்.அருணாச்சலம் நினைவு விருதும், கலகம் விருதும் கிடைத்துள்ளன. புதுவிசை காலாண்டிதழின் நிர்வாக பொறுப்பிலும்.

ஞாபக சீதா- கவிதை தொகுப்பு- ஷங்கர்ராமசுப்ரமணியன்-விலை.ரூ.70/-- புது எழுத்து - 2/205 , அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் - 635112.