க.மோகனரங்கன்
 
 
 
'மீகாமம்'
 
 
 
- கண்டராதித்தன்
 

எழுதுகோலைப் பிடிப்போரில் பெரும்பங்கினர் ஏன் கவிதை வடிவத்தை நோக்கியே மையல் கொள்கின்றனர். வசத்திற்கு வரும் எளிமையா அல்லது பன்னெடுங்காலமான நமது மரபா என்றெல்லாம் யோசித்தால் பல்வேறு விதமான பதில்கள் வரக்கூடும். ஆனால் கவிதை எழுத வருபவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். பல்வேறு பக்கங்களிலிருந்தும், பல்வேறு துறைகளிலிருந்தும் வேறுபட்ட மனநிலைகள், மொழித்தன்மைகளோடு கவிஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அன்னைத்தமிழ் அவ்வளவு கவிஞர்களையும் வாஞ்சையோடு ஏற்றுக்கொள்கிறது. எனில் மாற்று வடிவங்களை நோக்கி யாரும் செல்வதில்லயா எனக் கேள்வியெழலாம். கடந்த இருபதாண்டுகளில் கவிஞர்கள் பெருத்த அளவிற்கு சிறுகதை ஆசிரியர்களோ, நாவலாசியர்களோ, விமர்சகர்களோ, மொழியின் மாற்று வடிவத்தை கைக்கொள்பவர்களோ, வந்திருக்கின்றார்களா என்றெல்லாம் கணக்கிட்டால் அவர்களை சொற்ப எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். எழுத்தின் மீதான தனிப்பட்ட ஈடுபாடென அவற்றைக் கருதினாலும், கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பும், உடனடி சிறுபுகழும் அதனால் எற்படும் மனக்கிலேசமும் என்றே பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது.

அப்படியெல்லாம் இந்தப்புகழை வைத்துக்கொண்டு நாங்கள் எதுவும் செய்வதிற்கில்லை, எழுத்தால் எவ்வித பலன்களையும் பெற்றிராத போதும் அதன் தீவிரத்தன்மைக்கு தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள், இந்த பரபரப்பிற்கு மத்தியிலும் அமைதியாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். க.மோகனரங்கன் அவர்களுள் ஒருவர். அவருடைய முதல் தொகுப்பு ‘நெடுவழித்தனிமை’ கவனம் பெற்ற கவிதைத்தொகுப்பு. கவிஞாராகவும், விமர்சகராகவும், இலக்கியம் குறித்த ஆழ்ந்த உரையாடல் நிகழ்த்துபவராகவும் மோகனரங்கன் அவர்களை நான் அறிகிறேன். கச்சிதமான அவரது உரையாடல்களைப் போலவே மீகாமம் தொகுப்பில் உள்ள கவிதைகளும் காணப்படுகின்றன.

இத்தொகுப்பிலுள்ள மிகப்பெரும்பான்மையான கவிதைகள் காமத்தைப் பற்றி பேசுபவையாக உள்ளன. அவை காதல்,அன்பு,களவொழுக்கம் என பல தளங்களில் சரளமான நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. தொகுப்பின் ஏறக்குறைய அனைத்து கவிதைகளும் நறுக்குத் தெறித்தாற் போன்ற ஒரு ஒழுங்கைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மொழி பலமா என்றால் பல சமயங்களில் மறுக்கவேத் தோன்றும், ஆனால் மோகனரங்கன் தொன்மையான சொல்லாடல்களுடன் காதலை மலர்த்தும்போது அங்கே வறட்டுத்தன்மையற்ற, செம்மையான காமக்கூறுகளாக இக்கவிதைகள் பொலிவடைகின்றன.

'என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய்ச் சிறுநீர்
இம்முத்தம்'

என்ற கவிதையாகட்டும் பெருந்திணை என்ற

'வேலி மீறிய
கிளையொன்றில்
இலை மறைவாகக்
கனிந்த
சிறுகோட்டுப் பெரும் பழத்தின்
சுவை
அறிந்த
கிளி
பின்
சுரம் கூட்டிப் பாடவுமில்லை
மரம்விட்டு பறக்கவுமில்லை'''

மேலிரண்டு கவிதைகளைப் போல பல கவிதைகள் தொகுப்பில் உண்டு.


இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின்பால் நான் ஈடுபாடு கொள்ளவும், மறுவாசிப்பிற்குட்படுத்தவும் உள்ள காரணங்களில் ஒன்று பெரும்பாலான கவிதைகள் காமத்தைப் பற்றியது. காலநேரமின்றி மனதை கவ்வும் மாகா காரணியது, மற்றொன்று பழந்தமிழ்க் கூறுகளோடு சமகாலத்தையும்,நவீன மனதையும் இணைக்கும் மொழிச்செழுமை ஆகியவைதான்.

முத்தம் குறித்த சில கவிதைகள் கவிதைகள் குறிப்பாக

'நவில்தொறும்
நல்கப் பெறும்
நன்னூல் ஒன்றின்
நயம்போல
உண்ணும்தோறும்
உண்ணும் தோறும்
ஒன்றெனத்தீராது
ஓரோர் சுவைகாட்டும்
இப்
பண்புடையாள் மாட்டு
பகிர்ந்துகொள்ளும்
முத்தங்கள்.'


'ஒரு
முத்ததத்தின்
ஈரம் போதும்
பிறகெப்போதும்
களையவியலாப்
பித்தின்
வித்துக்கள்
நம்
மூளை மடிப்புகளினின்றும்
முளைத்தெழும்.'


'என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய்ச் சிறுநீர்
இம்முத்தம்'


நாற்பது வயதைத்தாண்டிய பின் காமத்தின் மீது ஒரு மனத் தெளிவு ஏற்படும், காமத்தைப்பற்றிய தீராத வேட்கை, அதன் மீதான புரிதல், அதுபற்றிய ஆவல் பின்னர் அதையே சரண்டைதல் என மத்திய வயதின் காமம் மீகாமத்தில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.பல கவிதைகளில் எனக்கு மன நெருக்கமாயிருக்கிறது இத்தொகுப்பு. 'தொழுகை' கவிதை பேசுகிறது இப்படி;

தொழுகை

சுரிகுழல் நெளிவு
தோடுடை செவி;
தொய்யாவிள முளைகள்;
திருவிறக்கத்தின்
பாற்பட்ட அரிவரித்தடம்;
இறுகிய
இடைபற்றித்
திரண்டொடுங்கி
மெலிந்திறங்கிடும்
மென்கால்கள்;
மேற்செல்ல
பொய்யா மலரெனப்
பூத்த சேவடிகள்;
திருக்காணவல்ல
தெள்ளியருக்கு
தெய்வமே.

இம்மனத்தெளிவடைய வயதும் ஒரு காரணமாயிருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.


மழை பற்றிய கவிதைகள் பல சித்திரங்களை உருவாக்குகின்றன.

மருந்து

'பின்னிரவில்
பிந்திப்பெய்யும்
மழை
ஆறாது கசியும்
பழைய காயம்
ஒன்றைக் கழுவித்
துடைக்கிறது.'


என்பதில் ஞாபக சிடுக்குகளை அவிழ்ப்பது போலவும், திணைமயக்கம் கவிதையில் பெருதோய்ந்த பெருமழையில் பிறன்மனை முற்றத்தில் தேங்குகிறது செம்பலப்பெயல் நீர்.

பெருமழை-பிறன்மனை-செம்பலப்பெயல் நீர் என பெரிய வார்த்தை ஜாலங்களின்றி களவொழுக்கத்தைக் கூறுகிறார். நவீன கவிதைக்கான மொழிக்கூறுகளோடு,தனித்துவத்தோடு இருப்பதே இக்காலக் கவிஞனுக்கான கடமையாகக் கருதாமல் தமது மரபு குறித்த,மொழி மீதான ஈடுபாட்டுடன் எழுத முனைந்தால் இத்தகைய கவிதைகளை எழுதுவதும் சாத்தியம்தான்.

'அந்தி' எனும் கவிதையில்;

இன்னும்
ஏற்றவில்லை
என் விளக்கை
உலகத்து இருட்டு
உள்ளத்து இருட்டை
ஏற்றட்டுமெனக்
காத்திருக்கிறேன்.


எளிய சொல்லாடல்கள் மூலம் மிகப் பெரிய மனத்திறப்பை கொடுக்கும் இத்தகைய கவிதைகள் பலநேரங்களில் வெறும் வெற்றுக் குறிப்புகளாகக்கூட தங்கி விடும் சாத்தியம் உண்டு.

தனிப்பெருங்கருணை, அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று, அம்மா அறியான், வியாசம், சொல்லமுடிந்த கதை, மழையிடை தோய்தல், காணாமலாகும் யானை போன்ற பல கவிதைகள் எனக்கு திரும்பத் திரும்ப வாசிக்கப் பிடித்திருந்தன.

மோகனரங்கன் இத்தொகுப்பிற்காகவென தேர்ந்தெடுத்த மொழி பல வசீகரமான கவிதைகளைக் கொடுத்திருக்கிறது. பல சமயங்களில் நல்ல புத்தகங்கள் வருவதும் போவதும் கூடத் தெரிவதில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக மீகாமத்தை வாசிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். மீகாமம் என்ற அழகிய தலைப்பையுடைய, பல செம்மைக் கவிதைகளும்,தெறிப்புகளும் உள்ள இத்தொகுப்பின் அட்டைப்படம் பரிக்கல் ம.சி. தெய்வசிகாமணி எழுதிய கொக்குகளின் அந்தரங்க ரகசியம்(1980) என்ற நூலின் அட்டைப்படத் தரத்தில் வடிமத்திருக்கிறது தமிழினி.

'இரகசியம்' என்ற கவிதையின் வரிகளோடு இத்தொகுப்பை வாசித்து முடிக்கிறேன்.;

குன்றின் மீது ஒலிக்கும்
மணியோசை
அறுவடை முடிந்த
வயல்களின் குறுக்காகக்
கடக்கிறது
நான் மறந்தவொன்றை
திரும்ப நினைக்கிறேன்.


சிசிபஸ், வீணாக, பூனை கடாட்சம் போன்ற சில கவிதைகளை புரிந்துகொள்ள திரும்பத் திரும்ப படிக்க வேண்டுமோ என்னவோ, எனக்குப் பிடிபட வில்லை. நல்ல கவிதைகள் கவனம் பெற வேண்டும். மீகாமத்தில் பல கவிதைகள் அத்தகையன.

மீகாமம் - க.மோகனரங்கன் - தமிழினி பதிப்பகம், 63, நாச்சியம்மை நகர், சோலவாயல், சென்னை - 600 051