சயந்தன்
 
 
வரலாற்றின் ஓலம்
ஆதிரை - நாவல் விமர்சனம்
 
 
- கோகுல் பிரசாத்
 

டிம் ஓ ப்ரயனின் நாவல்கள் வியட்நாம் போரை மையமாகக் கொண்டவை. அவற்றில் போரின் இருதரப்பும் விவாதிக்கப்படும். அமெரிக்க வீரர்களின் பார்வையில் மட்டுமே அமைந்த படைப்புகளும் உண்டு. அவை பெரும்பாலும் போர்ச்சூழலில் அந்நிலத்து மனிதர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் பேரிடர்களை சொல்லி, அரசியல் சரிநிலைகளில் கால் நனைத்து தீர்க்கமான முடிவுகளை அல்லது முன்முடிவுகளை நோக்கி நகர்பவை. வாட் இஸ் த வாட் போன்ற ஆப்பிரிக்க அகதி நாவல்களும் இவ்வரையரைகளுக்கு உட்பட்டவையே. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், இருவேறு தரப்புகளின் மோதலால் ஏற்படும் முரண்களும் விளைவுகளும் பிரதானமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. சில படைப்புகள் இவ்வாறான சராசரி நிலைகளை கடந்து, முக்கியக் கதாபாத்திரங்களின் அகப்போராட்டங்களையும் உள எதிர்வினைகளையும் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கையடக்க நாவலாசிரியர்களே மானுட இயக்கத்தினுடைய பேராற்றலின் துளியை ருசித்தவர்கள். எத்தகைய கீழ்மைகளை கடந்து சரிந்த போதும் வாழ்வின் வேர் அவர்தம் படைப்புகளில் துளிர்த்துக் கொண்டே இருக்கிறது.

அதிகார வல்லமை கொண்ட கைகளுக்கு கொல்வதென்பது இரண்டாம் கட்டம்தான். நிலம் கையகப்படுத்துதலே தலையாய நோக்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து துரத்தப்படும் மனிதர்கள், அதன்பின் எந்நாளும் நிலமற்றவர்களே. கையூன்றி எழுந்து நிற்க அவர்கள் முற்படும் போதெல்லாம் சதிகாரர்களின் குரூரக் கைகளால் நிலக்கம்பளம் உருவப்பட்டுக் கொண்டே இருக்கும். வீடற்று போவதே பலவீனங்களின் உச்சம். மானுடர் எதிர்கொள்ளப் போகும் தொடர் துயரங்களின் முதற்கண்ணி. உயிராற்றலின் பெரும்பகுதி ஒரு காணி நிலத்திற்காக ஏங்கிக் கொண்டே இருந்தால் எங்ஙனம் வாழ்வது? ஜான் ஸ்டைன்பெக்கின் ‘த கிரேப்ஸ் ஆப் ராத்’ முதல் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ வரை பெருஞ்சுமைகளுடன் கூட்டங்கூட்டமாக நிலம் தேடி மக்கள் அலையும் சித்திரம், இலக்கியத்தின் கொடுங்கனவுகள்.

தனது முந்தைய படைப்பின் சாதனைகளையும் குறைபாடுகளையும் தாண்டிச் செல்வதே ஓர் எழுத்தாளன் முன் நிற்கும் சவால். ஓர் ஈழப்படைப்பில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்? பதுங்குக் குழிகள், கண்ணீர், சித்ரவதை, ஓயாத அவலம், குண்டுவீச்சு,.....இவை அனைத்தும் 'ஆதிரை'யில் உண்டு. அவ்வாறெனில் தமிழ் இலக்கியத்தில் இந்நாவலின் இடம் என்ன? இவ்வகைமையில் ஏற்கனவே வெளியாகியிருக்கும் படைப்புகளை விட இந்நாவல் எங்ஙனம் சிறந்தது? சயந்தனின் இரண்டாவது நாவலான ‘ஆதிரை’, சிங்கள வதை முகாமில் அடைபட்டுக் கிடக்கும் லெட்சுமணனில் தொடங்கி அவனது குலக்கதையாக விரிகிறது.

நாவலாசிரியனின் மனப்பக்குவமே இக்கதையை வழிநடத்திச் செல்கிறது. இந்நாவல் சரி தவறுகளுக்குள் நின்று தராசை தூக்கிப் பிடிப்பதில்லை. அதே சமயம், அவரவர்க்கு அவரவர் நியாயம் என்பதாக கூர் மழுங்கி தேங்கி விடவுமில்லை. துயர்மிகு உச்சகட்ட கணங்களிலும் பேணப்படும் சமநிலை வாசகனை திடுக்கிடச் செய்கிறது. அந்நிலத்து மக்கள் எத்தகைய கையறு நிலையிலும் பற்றிக் கொள்ளத் துடிக்கும் நூலிழை நம்பிக்கை நம்மை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இந்நாவல் நமது மனசாட்சியை நோக்கி எறியப்பட்ட கல்.

சிங்கள இராணுவத்தால் நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படும் நடராசன், ‘தான் சாவதற்கு முன் எல்லா சாவையும் கண்கொண்டு பாத்துடணும்’ என நினைக்கிறார். முதல் முறை மரணத்தை ஒரு விளையாட்டாக எதிர்நோக்கத் துணியும் ‘காட்டின்ற மகன்’ மயில்குஞ்சன், தனது அந்திமக் காலத்தில் ‘இந்தப் பயலுகளோட காலத்த ஒரு தடவ கண்குளிர பாத்துடணும்’ என்கிற தனது விருப்பம் நிறைவேறாமலேயே சாக அஞ்சுகிறார். ‘அய்யா நானும் இந்தியாவுல இருந்து வந்தவன் தான்’ என தன்னை துன்புறுத்தும் இந்திய இராணுவத்திடம் தனது கடைசி சொற்களை உதிர்க்கும் சிங்கமலை, லெட்சுமணனில் ஆறாத வடுவாகிறார். இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக பள்ளிக்கூடங்களில் பெண் புலிகள் பிரச்சாரம் செய்கையில், பிள்ளைகள் எந்தச் சலனமுமின்றி இணைந்து கொள்கிறார்கள். தனது பெரியப்பாவின் மகன் பரந்தாமனை, அவன் சடலமான பிறகே வெள்ளையன் பார்க்கிறான். அக்கணத்தில் பரந்தாமனின் தங்கையும் வேறொரு போர் முனையில் சாவுடன் விளையாடிக் கொண்டுதானிருக்கிறாள். ஓரிரு வரிகளில் கடந்து போகும் கதாபாத்திரங்கள் கூட அழுத்தமாக வேரூன்றி நிற்கிறார்கள். அவற்றின் சரடுகளை இணைத்து வளர்த்தெடுக்க வேண்டியது வாசகரின் பொறுப்பு.

மரணத்தை எதிர்கொள்ளும் கணமே மனித மனம் அதன் முழு உத்வேகத்துடன் இயங்கும் தருணமாக இருக்க முடியும். அம்மரணத்தை சாகசமாக பழக்கிக் கொள்ளும் போராளிகள், ‘பாத்து பத்திரமா போங்க’ என்றதற்கு வெடித்துச் சிரிக்கிறார்கள். ‘உலக வரலாற்றுல இவ்வளவு கட்டுக்கோப்பா ஒரு இயக்கம் இருந்ததில்ல’ என்பதை எழுதிய அதே கை தான், சிவராசன் வழியாக, ‘போராட்டத்த தொடங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடாத போராளிகள்ல நானும் ஒருத்தன்’ என கத்தியை சொருகுகிறது. கடைசிச் சண்டையும் முடிந்த பின் மக்களுக்கு ‘உதவ’ வரும் புலம் பெயர்ந்த தமிழர் ஒருவர் ‘புலிகள் இருந்திருந்தா இந்த மாதிரி உதவியெல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்குமா?’ என நக்கலாக கேட்கிறார். பத்து கோழிகளுக்காக வாயை அடக்கிக் கொண்டு இருக்கும் ஜெயந்தியால் ‘அவங்க இருந்தப்ப எங்கள பிச்சை எடுக்க விடல’ என நினைக்க மட்டுந்தான் முடிகிறது. ‘சனம் உத்தரிச்சு அலைஞ்ச நேரம் கள்ளத் தோணியில வெளிநாட்டுக்கு போனவவை, இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு ஒவ்வொருத்தனா வந்து விடுப்புக் கேக்கிறாங்கள்’ என்று ஆசிரியரே பகடிக்குள்ளாகிறார்.

முப்பது வருட வரலாற்றின் அத்தனை தரப்புகளும் இத்தனை கவனத்துடனும் துல்லியத்துடனும் பதிவு செய்யப்பட்ட ஈழப்படைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் . புறச்சூழலை சித்தரித்து அதற்கான எதிர்வினையாக மக்கள் திரள் செயலாற்றும் விதங்களில் மட்டுமே அதீத கவனம் குவிக்கும் படைப்புகளுக்கு மத்தியில், கதாபத்திரங்களின் உளவியலை இப்படைப்பு நுண்மையாக அணுகுகிறது. எத்தகைய கீழ்மைகளும் மனிதனின் இயல்பாகக் கருதப்படுகிறது. 'மனுசப்பய இப்படித்தான்' என்பதை வரலாற்றில் பொருத்திப் பார்க்கிறது. அகத்தின் விசை இழுத்துச் செல்லும் திசையெங்கும் கட்டுப்பாடின்றி பயணிக்கும் மேதைமையே 'ஆதிரை'யை மற்ற நாவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முதன்மை அம்சம்.

ட்ரக்கில் இருந்து இறங்கி நாமகள் வீட்டுக்குச் செல்வதை ஏக்கத்தோடு பார்க்கும் பெண் போராளிகளின் துயரம், நிச்சயமாகிவிட்ட தோல்வியினால் மட்டும் ஏற்பட்டதா என்ன? மரணத்தின் அத்தனை கோர முகங்களையும் கண்டுவிட்டு வீடு திரும்பிய நாமகளிடம், அவளது தாயின் மரணம் குறித்து தெரிவிக்கப்படுகையில், அச்செய்தி அவளிடம் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. 'கஞ்சி இருக்கா?' எனக் கேட்பதன் வழியாக அக்கணத்தை கடந்து செல்லத் தூண்டுவது, ஷெல்லடிகளின் ஊடாகவும் வாழ்ந்துவிடத் துடிக்கும் மனதின் அடிப்படை விழைவு அன்றி வேறென்ன? வாழ்வதையும் துன்புறுவதையும் வேறு வேறாக பிரித்தறியும் மாய வித்தையை போர் நிகழ்த்திக் காட்டுகிறது. விமான குண்டுவீச்சுகளுக்கிடையே ஜோடி ஒன்று பதுங்குக்குழியினுள் பிரக்ஞையின்றி முயங்கிக் கிடந்து காமத்தின்பாற் இளைப்பாறும் காட்சி, மானுட இச்சைகளின் பேராற்றலை சட்டென்று உணர்த்திவிட்டுக் கடக்கிறது. (இதே போன்றதொரு காட்சி மற்றொரு ஈழப்படைப்பான தமிழ்க்கவியின் 'ஊழிக்கால'த்திலும் உண்டு) அதைக் கண்டு முகம் சுளிக்கும் அத்தாரிடம், 'இப்ப இருக்கற ஒரே ஆறுதல் இதான். முறை தவறி நடந்தாக் கூட நான் தப்பு சொல்ல மாட்டேன்''என்கிறார் நந்தன்.

அகத்திலிருந்து கிளைக்கும் உண்மை முகங்களை நெருக்கமாக உணரச் செய்த ஈழப்புதினம் இதுவே. மேன்மைகளும் கசப்புகளும் கீழ்மைகளும் தொட்டு வெட்டி உறவாடி களைத்து விழுகின்றன. மனம் புரண்டு அழுது ஓய்ந்து பின்னர் உள்ளுணர்வின் நம்பவே முடியாத தடத்தில் பாய்ச்சலை நிகழ்த்தி, தத்தம் மனது குறித்து அவரவர் அதுவரை கொண்டிருந்த பிம்பங்களை எல்லாம் பழித்துக்காட்டுகிறது. தன்னை எக்கணமும் முற்போக்குவாதியாக கருதும் அத்தார், இத்திமரம் வீழ்ந்ததும் 'கெட்ட சகுனமாக' இருக்குமோ என விசனப்படுகிறார். ஒரு பேரழிவின் தொடக்கத்தை உணர்ந்ததுமே மனம் இயல்பாகவே காலங்காலமாக கற்பிக்கப்பட்டவனவற்றுள் தன்னை இடுக்கிக் கொள்வதையும் மரபின் சுமைகளை உதற முடியாமல் தவிப்பதையும் அறிந்து துணுக்குறுகிறார்.

தமிழீழ சமூகத்தின் வேரடிச் சிக்கல்கள் தீவிரமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை வலிந்து திணிக்கப்பட்டதாக அல்லாமல், கதாபாத்திரங்களின் இயல்புடன் பிரதிபலிக்கின்றன. செத்த பிறகும் 'வெள்ளாளப் பெட்டை' சந்திராவை மணம் முடித்தவராகவே அடையாளம் காட்டப்படும் அத்தார், எப்போதும் புலிகளின் தவறுகளையே பூதாகரமாக்கும் (அவை உண்மையாக இருப்பினும்) சந்திரா என ஏராளமான உதாரணங்கள் இப்பிரதியில் உண்டு. இந்திய அரசாங்கத்தால் ஈழத்தில் பணி அமர்த்தப்பட்ட மலையாள அதிகாரி ஒருவர், 'சாலைகள் போட்ருக்காங்க, பள்ளிக் கூடங்கள் இருக்கு. அப்புறம் உங்களுக்கு என்ன தான் பிரச்னை?' எனக் கேட்கிறார். 'எங்களுக்கு என்ன பிரச்சனைனே தெரியாம கிளம்பி வந்துட்டீங்களாடா?' என நினைக்கிறாள் மலர்.

பிரேத துண்டங்கள் சிதறி விழும் ஒவ்வொரு முறையும் தப்பித்தலுக்கான வேட்கை மட்டும் குறைவதேயில்லை. அழுகையும் ஓலமுமாக கடக்கும் பக்கங்கள் அநேகம் இருப்பினும், விருப்பங்களின் பேயாட்டம் தசையை உந்தித் தள்ளுகிறது. மெலோட்ராமாவாகி விடக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இப்படைப்பில் உண்டு. ஆனால், கூரானதும் எளிமையானதுமான கதை கூறல் மொழி இதனை ஒரு செவ்வியல் ஆக்கமாக மாற்றுகிறது. எந்தச் சூழலிலும் குடும்பத்தை காபந்து செய்ய நினைக்கும் ஆச்சிமுத்துக் கிழவியின் பாத்திர வார்ப்பு, மா ஜோடினை (The Grapes Of Wrath) நினைவுறுத்துகிறது. தனது மகன் பிணமாகிக் கிடக்கையிலும் கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு பிரசவம் பார்க்கத் தயாராகிறாள். தனது மகளுக்காக மளிகைப் பொருட்களை பாரம் சுமந்து கொண்டு பல மைல் தூரம் நடந்தே செல்கிறாள். 'கூடப் பொறந்த பொறப்ப மறந்துறாதப்பா' என தனது மகனிடம் ஆற்றாமையுடன் இறைஞ்சுகிறாள்.

மனதின் மகத்தான பக்கங்களையும் அதன் மறுபாதியான சரிவுகளையும் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனை போல, சயந்தன் பதிவு செய்தபடியே நகர்கிறார். தனது இரகசிய காதலனான மணிகண்டன் இறந்து கிடப்பதை கண்டு திகைத்து நிற்கும் ராணியிடம் அவளது மகள் ‘அழுது தீர்த்துடுமா’ என முதுகை வருடிக்கொடுக்கும் இடம் ஓர் உதாரணம். மலருக்கும் ராணிக்கும் இடையேயான நட்பும் உறவும் அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. இறுதி யுத்தத்தின் போது உண்டாகும் பிறழ்வுகளும் அகதி முகாம்களில் வாழ நேரிடும் அவலமும் மனிதம் மீது கட்டியெழுப்பப்பட்ட நம்முடைய நம்பிக்கைகளை கருணையுன்றி சிதைக்கின்றன.

ஓயாத சண்டைகளுக்கிடையே வாழ நேரிடும் சாமான்யர்களின் வாழ்க்கையை அவர்தம் எண்ணவோட்டங்களை துல்லியமாக பின்தொடர முடிந்த ஆசிரியரால், போராளிகளுக்கிடையேயான அதிகார மட்டங்களையும் உறவுச்சூழலையும் அதே நேர்த்தியுடன் கட்டமைக்க முடியவில்லை. கனவுக்காட்சிகளுடன் தொடங்கும் பிற்பகுதி அத்தியாயங்கள் சலிப்படையச் செய்கின்றன. அவை குறிப்பால் உணர்த்த விரும்புவனவற்றில் உன்னதமாக்கல் நிகழவில்லை. புலிகளுக்காக ஒரு முஸ்லிம் குடும்பத்திடம் உணவுப் பொட்டலங்கள் வாங்கிக் கொண்டு வருகையில், எதிர்ப்பட்ட ஆமிக்கும் வழி சொல்லிவிட்டு தப்பிக்கும் மயில்குஞ்சனில் வெளிப்படும் சுவாரஸ்யமும் பன்முக ஆளுமையும் ஏனைய ஆண் கதாபாத்திரங்களில் இல்லை. அவர்களின் பாத்திர அமைப்பு பெரும்பாலும் தட்டையாக/ஒற்றை படையாக அமைந்திருக்கிறது. நாவலின் இடைப்பகுதிகளில் சிங்கள அரசாங்கம் விமர்சிக்கப்பட்டவுடன் அடுத்த சில வரிகளுக்குள்ளாகவே புலிகளும் கடுமையாக சபிக்கப்படுகிறார்கள். அவ்விடங்கள் இயல்பாக பொருந்தி வரவில்லை. தராசின் முள்ளை சமன் செய்யும் நோக்கோடு அமைக்கப்பட்டவையாக துருத்திக் கொண்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்கையில் 'புலிகள் அனுதாபி' என தன்னை முத்திரையிட்டு விடுவார்களோ என்கிற தேவையற்ற பதற்றம் ஆசிரியருக்கு இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

ஆதிரை நம்மால் கைவிடப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி. அவளது தியாகமும் மேன்மையும் இந்நாவலில் உயிர்பெறுகிறது. காணாமற் போனவர்களை தேடி பெற்றோரும் உறவினரும் அலைவுறும் சித்திரம், மிகை உணர்ச்சிகளுக்கு சற்றும் இடமளிக்காமல் நேர்த்தியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஊடக செயல்பாடுகளை விவரிக்கையில் எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனத்தை கவனித்து தவிர்த்திருக்கலாம். பெருவலியின் உக்கிரமான கதறல்கள், உள்ளப்பெருக்கின் விழைவுகள், போருக்குப் பிந்தைய நகக் கீறல்கள். இரக்கமற்ற வாழ்வின் கோர முகங்கள் அத்தனையும் கண்ட பிறகும் பேராவல் மிச்சம் இருக்கிறது. எத்தனை முறைகள் வீழ்ந்தாலும் மனித குலம் மீண்டெழும். ஏனெனில் 'இவர்கள் மக்கள்' எனும் நம்பிக்கையை அத்தனை அவலங்களை கண்ட பிறகும் அழுத்தமாக விதைக்கும் இச்செவ்வியல் ஆக்கம், இருண்மையிடையே ஒளியை பாய்ச்சுகிறது. தமிழ் இலக்கியம் குறித்து பெருமிதம் கொள்ள மற்றுமொரு தருணம்.

ஆதிரை - சயந்தன் - நாவல்- விலை ரூ.580.00- தமிழினி பதிப்பகம், 63, நாச்சியம்மை நகர், சோலவாயல், சென்னை - 600 051.