கபாடபுரம் மின்னிதழ் படித்தேன். ஆரோக்கியமான முயற்சியின் காத்திரமான இதழ். ஒரு அச்சு இதழுக்குரிய கச்சிதத்துடன் இருக்கிறது. முதல் இதழ் பார்த்தபின் இரண்டாம் இதழ் பார்த்தபின் எழுதலாம் என காத்திருந்தேன். நிறைவாக உள்ளது. கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் நன்றாக வந்துள்ளன. ஆ.மாதவன் பற்றிய ஜெயமோகன் கட்டுரை - லீனா வின் கவிதை -எம்.கோபால கிருஷ்ணன் கட்டுரை அம்பை சிறுகதை நன்றாக உள்ளன. டைகர் பாம் மிக நல்லதொரு கதை. இசை நிதானமாக ஒரு கட்டுரை எழுத காத்திருப்போம் என்று தோன்றியது.

அன்புடன்
ரமேஷ் கல்யாண்
 
 

கபாடபுரத்தில் அம்பையின் சாம்பலிலிருந்து எழும் நகரம் படித்தேன்.இன்றைய நகர்மய சூழலில் அந்தக் கதை முக்கியமானது.

உயிர்த் துடிப்பான மனித ஓட்டங்களை எரித்த சாம்பல்களிலிருந்து நடைபிண மனிதர்கள் வாழும் நாகரிக நகரங்கள் கட்டமைக்கப்படுவதைக் கதை முன் வைத்த விதம் நன்றாக இருந்தது. ஊர்மிளா தன்னை மாய்த்துக்கொள்ள மாமியார் மட்டும் காரணமாக இல்லாமல் நகர் விரிவாதலின் நுட்பமானவைகளும் ,அழுத்தமானவைகளுமான சிக்கல்களையும் ஆழ்மன ஏக்கங்களையும் சேர்த்திருந்த விதம் கதைக்கு நல்ல டைமென்ஷன் தந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் அம்பையின் கதையைப் படித்தது நிறைவாக..மகிழ்ச்சியாக இருக்கிறது..

எம்.ஏ.சுசீலா
 
 

இதழ் 2 எல்லா பக்கங்களும் அருமை. கவிதைகளுக்கான தனி இடம் இருப்பினும் தமிழ்நதியின் "வாழ்வதற்க்கு ஒரு கவிதை போதும்" பதிவில் யோசனையிலாழ்ந்தபடி நடந்து செல்லுமொருவரின் பாதையைக் குறுக்கறுத்தோடும் குட்டி அணிலைப் போல, நெஞ்சினுள் கனிவூட்டி வாழ்வினை மலர்த்துவது எழுத்தே” என்னும் வரிகள் அற்புதமானதோர் கவிதை

இன்னும் சிறப்பாக இதழ் வெற்றிகரமாக எப்போதும் வந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
லோகமாதேவி
பொள்ளாச்சி
 
 

நான் சிற்றிதழ்களில் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறேன். கபாடபுரம் இணைய இதழ் படித்தேன். மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது வாழ்த்துகள். உலக இலக்கியங்களுக்கும் இந்திய இலக்கியங்களுக்கும் இன்று வரக்கூடிய சிற்றிதழ்களில் மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. அதனை தொடர்ந்து வெளியிட வேண்டும்.சினிமா கவர்ச்சி மட்டுமே இன்று பெரும்பாலான இதழை ஆக்கிரமத்துவிட்டிருக்கிறது.மற்ற இணைய இதழ்களிலிருந்து முற்றிலும் கபாடபுரம் மாறுபட்டிருக்கிறது...

இன்று நாம் இணையதள வலைகளுக்குள் சிக்குண்டு கிடப்பது என்றும் மாறப் போவதில்லை அது நாமே கட்டிக்கொண்டது தவிர்க்க முடியாததும் கூட நமது வாசிப்பை இப்படியாக வளர்க்க முயற்சிப்போம்...

தொடர்ந்து வாசிக்கிறேன். தொடர்ந்து வெளிவர வாழ்த்துகள்

அன்புடன்
மு.தூயன்
புதுக்கோட்டை.
 
 

பாரதியினுடைய முகப்புக்கட்டுரை சுவாரசியமாகயிருந்தது. இது போன்ற படிக்க அரிதாக கிடைக்கக்கூடிய கட்டுரை, பேட்டிகள் போன்றவற்றை கபாடபுரம் தொடர்ந்து வெளியிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவமாகயிருந்தது. அயல் இலக்கியம் கபாடபுரத்தின் மிகச்சிறந்த பகுதியென கருதுகிறேன். ஒரு சென்ட்டிமீட்டர் சிறுகதை அருமை.

பஷீரைப் பற்றிய கே.என். செந்திலின் கட்டுரை அவருடைய கதைகளை நுட்பமாகவும், அழகாகவும் பதிவு செய்துள்ளது. கட்டுரையைப் படித்த பிறகு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாவல்களை படிக்க ஆர்வமாகவுள்ளேன். காமிக்ஸ் தொடர் புதிய,வரவேற்கப்பட வேண்டிய தொடர்..

அவசியம் பாராட்டப்பட வேண்டிய 2 அம்சங்களாவன, கபாடபுரத்தில் இடம்பெறும் ஓவியங்களும், படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகமுமாகும் .இவ்விரண்டுக்கும் கபாடபுரம் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது..

இணைய இதழில் கபாடபுரம் தனித்த இடம்பெற்றுள்ளது. கபாடபுரத்தின் அனைத்துப்பகுதிகளும் தொடர்ந்து இதே தரத்தில் வெளியாக வாழ்த்துகள்.

சுகுணா
சென்னை.
 
 

கபாடபுரம் இணைய இதழ் படித்தேன். அம்பையின் சிறுகதையோடு எனதும் பிரசுரமானதில் சுயபெருமை உண்டாகுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ்நதி மற்றும் அனாரின் பெண் மொழி கட்டுரைகளும் நன்றாக வந்துள்ளன. உங்களது கட்டுரை, கவிதைகள், நாவல் பகுதி என்பனவும் படித்தேன். இம்மாத கபாடபுரம் இதழ் சிறப்பாக வந்துள்ளது. முகப்பு மிக அழகு.

அன்புடன்
ஸர்மிளா ஸெய்யித்
 
 

வணக்கம்

நல்ல முயற்சி நிறைவான அடர்த்தியான இதழ்.

வாழ்த்துகள்.

கோசின்ரா
கொல்கத்தா
 
 

வணக்கம்,

தங்களின் கபாடபுரம் - நிசப்தம் தளம் மூலமாக அறிந்து வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மிக மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

நன்றி

பொன்.கிருஷ்ணமூர்த்தி.
ஈரோடு.

இன்றுதான் கபாடபுரம் இணைய இதழை பார்த்தேன்..வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்...வடிவமைப்பு மற்ற இணைய இதழ்களை விட கவரும் படியாகவே உள்ளது.. புதிதாக எழுத வருபவர்களையும் ஊக்குவிக்கும் படியாக பக்கத்தை ஒதுக்கினால் நலமாக இருக்கும்..அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும். உங்கள் இதழை அவர்கள் மேலும் விரும்பி படிப்பார்கள். வரவிருக்கும் நாட்களில் வருடம் ஒரு முறையாவது சிறுகதை, கவிதை போட்டி வைத்து புதிய படைப்பாளிக்ளுக்கு வித்தாக அமையும்..

வாசகன்

என் பெயர் பிரசன்னா. முதலில் என்னை பற்றிய சிறு குறிப்பு. ஊர் ஸ்ரீரங்கம்.. பெங்களூருவில் வேலை. கல்லூரி காலத்திலிருந்தே இலக்கியம் வாசிக்கும் பழக்கம் உண்டு. ஜெயமோகன் மற்றும் வண்ணதாசன் என்றும் பிடித்த ஆளுமைகள். "கணையாழி" மற்றும் "புதுப்புனல்" இதழ்களில் என் சிறுகதைகள் வெளி வந்திருக்கின்றன.

"கபாடபுரம்" கண்ட உடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சுற்று சுற்றி வந்தேன்.. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமீபத்தில் என் எண்ணங்களை நச்சரித்து கொண்ட விஷயம் அது. ஆழ்ந்த விமரிசனம். இணையத்தில் ஒரு புத்தகத்தின் விமரிசனத்த தேடி கண்டுபிடித்தாலும், அதில் கதை சுருக்கமும் அதை ஏன் படிக்க வேண்டும் போன்ற எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன.. "காலச்சுவடு", "உயிர்மை", "உயிரெழுத்து" போன்ற இதழ்களில் வரும் விமரிசனங்கள் ஓரளவுக்கு ஆழத்திற்கு போயிருந்தாலும் அது ஒரு ஒற்றை படை பார்வையாகவே போய் விடுகிறது.. ஒரு நாவலோ, ஒரு சிறுகதையோ, ஏன் ஒரு கவிதையோ கூட நிறைய விவாதிக்கப்பட்டு அதன் பிறகு அதை பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம்.

கபாடபுரத்தில் "பிரதி பலன்" என்னை கவரவில்லை. அங்கு கொடுக்கபட்டிருக்கும் 10-15 வரிகள் இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கிறது. ஒரு விரிந்த விவாதம் எங்கும் அமைவதாக தெரிவதில்லை.. என் போன்ற சாதாரண வாசகர்கள் ஈடுபடும் இலக்கிய உரையாடல்கள் என்பது சொற்பம்.. ஆனால் தேர்ந்த சிலரின் சம்பாஷணைகளை கேட்க காத்துகொண்டிருப்போம்.. நான் பங்கு பெற்ற சில இலக்கிய கூட்டங்களிலிருந்து கற்றவை அதிகம்..

எனது தாழ்மையான வேண்டுகோள்/யோசனை, "பிரதி-பலன்" கட்டமைப்பை மாற்றினால் என்ன? அதை ஆழ்ந்த விவாத களமாக மாற்ற உங்களின் தேர்ந்த இலக்கிய நண்பர்களை வைத்து ஒரு கூட்டம் கூட்டி ஒரு நாவலையோ, சிறுகதை தொகுப்பையோ(அல்லது தேர்ந்தெடுக்க பட்ட சில சிறுகதைகள்) விவாதித்து அந்த விவாதத்தை பதிவு செய்தால் ஒரே கட்டுரையில் மிகவும் ஆழ்ந்த விமரிசனம் கைகூடும் என்று நினைக்கிறேன்.. இதற்கு ஏக்க சக்க உழைப்பு தேவை படும் என்று தெரிகிறது.. ஆனால் நீங்கள் நினைத்தால் சாத்தியமாகும்..

இன்னொரு வேண்டுகோள். இடைநிலை இதழ்கள் பலவற்றிற்கு என் சிறுகதைகள் அனுப்பி உள்ளேன்.. பதில் கூட வராது. எப்போதும் உள்ள புலம்பல் தான் இது.. பத்திரிகை நடத்துவதே கஷ்டம், இதில் ஆர்வ மிகுதியில் வரும் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை படித்து அவதிக்குள்ளாவது மிக பெரிய தொந்தரவு தான். இருந்தாலும், ஒரு தீவிர இதழுக்கு இப்படி ஒரு முகம்(புதிய எழுத்தாளர்கள் என்னும் முகம்) நாளடைவில் தேவை படும் என்று நினைக்கின்றேன். "புதிய எழுத்தாளர்கள்" என்ற பகுதியும் தேவை என்று நினைக்கின்றேன். தற்போது இருக்கும் 15 பகுதிகளுடன் அதையும் இணைத்து விட்டால், இதன் குறுகிய வட்டம் பெரிய வட்டம் ஆகலாம்.. இதுவும் ஒரு வாசகனின் பரிதுரை தான்.

கோகுல் பிரசாதின் சினிமா கட்டுரை அற்புதம்.. போலி விமர்சனங்கள் எவ்வளவு அபாயமானவை என்று என் நண்பர்களிடம் எப்போதும் உரையாடி கொண்டிருப்பேன்.. மற்றபடி சிறுகதைகள் படிக்க வேண்டும்.. வேலை பளுவில்லாத நாளில் படித்து விட்டு என்னுடைய நீண்ட விமரிசனத்தை அனுப்புகிறேன்.. நான் சாம்ராஜுடைய கவிதைகளுக்கு விசிறி.. "மின்மினி" படிக்க வேண்டும் விரைவில்.

அருமையான தொடக்கம் . வாழ்த்துக்கள் என்னால் முடிந்த உதவிகள் ஏதனும் செய்ய கூடுமானால் நான் செய்ய தயார்.

S.பிரசன்னா கிருஷ்ணன் .
பெங்களூரு.