வே.பாபு
 
 
 
 
 
Painting: Pablo Picaso
 
 

ஒரு பதற்றம்
இன்னொரு பதற்றத்தின்
சுண்டுவிரல் கோர்த்தபடி
பையன்
ஸ்கூலைவிட்டு வந்து விடுவான்
வந்துவிடுவான்
என்றபடியே இருக்கிறது


ஒரு பொழுதிற்கும் மேலாக
துடித்துக்கொண்டிருக்கும்
மலைப்பாம்பு வயிற்றின் காட்டுமுயலே
எப்போது அடங்குவாய்?

 
 

இந்தத் தாபா ஓட்டலின்
புளியமரங்களில் தொங்கும்
கிங் பிஷர் குழவிளக்குகள்
எரிவது
எத்தனை ரம்மியமாய்
இருக்கிறது தெரியுமா?
ஒரு பகலில்
பார்த்த போது
சிலந்தி
வலைபின்னியிருந்தது
குழல் விளக்குகளின் உட்புறத்தில்.

 
 

பசியாறிய
மலர்ந்த பேருடலை
தழுவிக்கேட்கிறாய்
இப்படியே சாகலாமாவென்று
உன்னோடு சாவதற்கு
இதெல்லாம்
ஒரு பொருட்டா?