ஸ்ரீநேசன்
 
 
 
 
 
Painting: Pablo Picaso
 
 
கவிதைக்காரன் பாட்டு

கவிதை மரத்தில் ஏறிய எனக்கு இறங்கத் தோன்றவில்லை
கற்பனை உதித்து கிளைகளில் குதிக்கும் ஆவல்
அடங்கவில்லை
அதனால் குரங்குமில்லை
துளிரைத் தின்பேன்
காயைக் கடிப்பேன்
பசியோ தீரவில்லை
பறித்தக் கனிகளைப் பிறர்க்கே அளிப்பேன்
போதாமையில் திளைப்பேன்
உச்சிக்குப்போவேன்
அடிமரம் சரிவேன்
இருப்பின் இயல்பெனப் புரிந்திருப்பேன்
இலைகளினூடே இடைவழித் தோன்ற பாய்ந்து மரம்
கடப்பேன்
அங்கே
மண் பற்றில்லாத உருவெளித் தோற்ற மரத்தின்
வேர் பிடிப்பேன்
அது பற்றிப் படர்ந்து
என்னைப் பருகத் தொடர்ந்து
வான்மரமடியமர்வேன்
அங்கு அமைதியில் அமிழ்வேன்
மாதம் வருடம் ஆயுள் காலக் கணக்குகளைத் துறப்பேன்
பின் சூரியன் சந்திரன் விண்மீன் என மின்னும்
இன்னும் கனிகளைப் பறிப்பேன்
அப்புறம் ஏன் மரிப்பேன்.


இந்த யிந்த கணத்தில்

இந்த கணத்தில் இந்த விஷயம்
கொஞ்சம் அதியமாகப் புரிகிறது
இந்தக் கணத்தில் இதைக் கூறிக் கொண்டிருப்பதைத் தவிர
வேறொன்றும் செய்து கொண்டிருக்க முடியாது என்று
ஒரு மலர்க்கொத்து எவ்வித தேவையுமின்றி
தன்னிச்சைப்போல அசைந்ததைக் கவனிக்கையிலோ
ஒரு கூன் விழுந்த கிழவி மதிய நேர சிமெண்ட் ரோட்டில்
கால் செருப்பும்கூட இல்லாமல்
நடந்து சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கூட
இதை அவ்வளவு முக்கியமில்லாமல் உணர்ந்தேன்
எங்கிருந்தோ ஒரு சொல்
ஏதோ வாத்தியத்தின் இசை
ஒரு சிறுமியின் அலறல்
இவை நிகழ்வதும் நம்மை வந்தடைவதும்
இதே விதியின் கீழ்தான் இயங்கக்கூடும்
அந்நேரத்தில் அவற்றிலிருந்து நாம்
எதையோ பெற வேண்டியிருக்கிறது
அதற்காகவே அவை நிகழவும் செய்கின்றன போலும்
ஒருவருக்கு மட்டுமல்ல பிற பலருக்கும் இதுவே ஒரு
மையமாக
ஒரு மருத்துவர் அறிமுகமாவது
அவரிடமிருந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது
நீண்ட நாளாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு புத்தகம்
தேடாமலேயே நம் கண்ணெதிரே தோன்றிவிடுவது
இந்த நடுத்தர வயதில்
கடந்து வந்த அத்தனையையும் ஒரு சேர
இணைத்து யோசித்துப் பார்க்கையில்
இது வியப்பூட்டும் வகையில் உறுதிபடுகிறது
மகிழ்வானவை துயரமானவை
தேவையானவை உபயோகமில்லாதவை
கிடைத்தவை கிடைக்காமல் நழுவியவை
என நிகழ்ந்த யாவற்ற்றுக்குள்ளும்
நிகழ்ந்ததுக்கும் அப்பாற்பட்டு அர்த்தம் இருப்பதை
வலியுறுத்த வேண்டியதில்லை
அர்த்தம் இல்லையென அலட்சியப் படுத்தவும் முடியாது
இந்தக் கவிதை வாசிப்பவருக்கு
உணரக் கிடைப்பதும் கிடைக்காததும் இதுபாற்பட்டதுதான்
இவ்வியற்கை சூத்திரச் சூட்சுமத்தை
உணர்ந்தவர்கள் உணராதவர்கள் எனும் ஒரு தொடர்பிலிருந்து
இக்கணத்தில் நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருப்பதைத்
தவிர
வேறொன்றையும் செய்து கொண்டிருக்க முடியாதல்லவா


உதயேந்திரமேரி

உனக்கும் எனக்கும் என்னதான் பந்தம்
என் முன்னோர்தாம் உனக்கு உருக்கொடுத்திருப்பார்கள்
உன் மடியில் பிறப்பெடுத்து உன் ஊற்றைப் பாலெனப்
பருகியவன்
எனில் நானுன் தத்துப்பிள்ளை
நீயுமென் செவிலித்தாய்
தனிமையுற்ற கடந்த கால வெளிப்படா நம் அழுகை
உன் தோற்றம் என் பிறப்பு ஏன் தன் தலமும்
எங்கு நிகழவேண்டுமெனத் தீர்மானித்த
நம் அம்மையும் அருகேதான் உறைந்திருக்கிறாள்
அதே தனிமையோடு
பிறகு
மானசரோவர் போன்றோ தால் ஆகவோ
நீ தகுதிப்பெற்றிருக்க வேண்டுமென நான் ஏன் ஏங்குவேன்
வியாசனாய் தாகூராய்
பாரதம் கடந்த புகழ் நான் எய்துவதை நீயும் விரும்பாய்
வீராணம் மதுராந்தகம் சேம்பரம்பாக்கம் புழல் என எல்லாம்
விதிப்பட்ட வறட்சியோடுதான் விரிந்திருக்கின்றன
கபிலன் கம்பன் பாரதி பிரமிள்
பெயர்பெற்ற அளவுக்கா படிக்கப்பெற்றார்கள்
நகுலன் நிறையத் தனித்து தோன்றியதை எழுதியவர்
அவரை அடக்கமாய் அனுஷ்டிக்கும்
வறண்ட எனக்குள் கவிதைச் செடி இன்னும்
துளிர்க்குமாவென


அழைப்பு

ஒரு நீதிபதியையும் ஒரு குற்றவாளியையும்
ஒரே சமயத்தில் அழைக்கிறேன்
ஒரு காவல்துறை அதிகாரியையும்
கொள்ளைகள் பலபுரிந்து தலைமறைவில் உள்ளவனையும்
ஒழுக்கச்சீலரான ஆசிரியரையும் நிகரான தந்தையையும்
கட்டுக்கடங்காத மாணவனையும் ஒத்த மகனையும்
ஓர் ஆணையும் அவனை எந்நாளும் மறுக்கிற பெண்ணையும்
வாருங்கள்
கடல் எழுந்து கரைவிழுங்க
வெடித்துப் புறப்பட்டுக் கொண்டிருக்கையில்
காற்று வாங்க கடற்கரையில் கூடுவோம்
நிற்கிற பூமி பிளந்திட அதிரும் பொழுதில்
அடுக்குமாடி தியேட்டரில் தமிழ் சினிமா பார்ப்போம்
உயிர்க்கொல்நோய் வேகமாய்ப் பரவி
ஆயிரக்கணக்கானோர் மாண்டு கொண்டிருக்கும்
ஒரு தீவுக்குச் சுற்றுலா செல்வோம்
அடுத்த நிமிடங்களில் சாவு
அதிலிருந்து தப்பிக்க ஒரே திசைதான் உண்டெனில்
எல்லோரும் அத்திசையையே தேர்ந்தெடுப்போம்
காலம் ஆவதன் முன்னால்
நீங்கள் அல்லது நாம்
வழக்காமன வேறு வேறல்லர்
அதனால் தான் அழைக்கிறேன்
மனம் களிப்படைந்து ஓயும்வரை
நமக்கு விருப்பமான ஒன்றில் ஈடுபடுவோம்
கவிதை
கடவுள்
கலவி
கள் போல
நானோ ஆளுக்கொரு மொந்தை கள் வழங்குவேன்
அதைப் பருகியவாறே கவிதையும் கடவுளையும்
பேசுவோம்
களவியோடும் ஒப்பிட்டுக்கொள்வோம்
பின்பு செல்வோம்
ஒரு மலையடிவார பெரும் பாறையின் உச்சிக்கு
அங்கிருந்து காண்போம்
தங்கக் குளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு மாபெரும் ஆரஞ்சுவை
அதன் சுளைகளை மானசீகமாகச் சுவைத்துக்கொண்டு
பின்பு அந்தக் கனி தீர்ந்து காணாமல் போக
நிகழும் அந்த நள்ளிருட்டில்
பரவசமாய் பேசிக்கொண்டே
பாறையிலிருந்து இறங்கித் திரும்புவோம்
தூரத்தே விளக்குகள் எரிகிறதே அங்கே
அந்த நோய்மை வெளியிலுள்ளோர்க்கு
ஒரு சொல்லுமில்லை நம்மிடம்
அதைத் தான் நாம் பாறையில் விட்டுவிட்டு வந்தோமே