மௌனன் யாத்ரீகா
மௌனன் யாத்ரீகா
 
 
 
 
 

தாஸ்தாவெஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' படித்தபோது ஏற்பட்ட உணர்வுகள் என்னை இக்கவிதைகளை எழுத வைத்தன.


தடைவிதிக்கப்பட்ட கடிதத்தைப் படித்தவன்

கடுங்குளிராயிருந்த அன்று அதிகாலையை
தாஸ்தாவெஸ்கியால் ஒருபோதும் மறந்திருக்க முடியாது
முகத்துக்கு முன் உயர்த்தப்பட்ட
துப்பாக்கியின் கருந்துளையினுள்
மூர்க்கத்தோடு பதுங்கியிருந்தது மரணம்
தடை விதிக்கப்பட்டக் கடிதத்தை
மீண்டும் ஒருமுறை
மனதுக்குள் வாசித்துப் பார்த்துக்கொண்டார்
வரம்பற்ற கொடுஞ்சோகங்களின்
பிரத்யேக இருதயத்துக்குரியவனான
தன்னிடமிருந்து
ஓர் ஆறுதலான சொல்லுக்காய் காத்திருக்கும்
இவ்வுலகின் முன்
புன்னகையோடு வெறித்திருந்தபோது
துப்பாக்கியை தாழ்த்தச் சொல்லி
ஒரு கடிதம் அங்கு வந்தது
யாருக்கும் கேட்கும்படி வாசிக்கப்பட்ட அக்கடிதம்
ரகசியமாகப் படிக்கப்பட்ட கடிதம்போல் இல்லை
படு மோசமான தோல்வியைப்போல்
உயிர்த்திருக்க நேர்ந்ததை ஏற்றுக்கொண்டார்
நெருங்கிப் பிறகு விலகிய மரணத்தை
ஒரு காதல் தோல்வியைப்போல் எடுத்துக்கொள்ள விரும்பினார்
அதைப்பற்றி நிறைய எழுதினார்
நாஸ்தென்காவைப்போல் அவரிடமிருந்து
ஆன்னா ஏன் கடைசிவரைப்
பிரியவில்லை என்பது
உங்களுக்குப் புரிகிறதா?


தனக்கென்று ஒரு கதையில்லாதவன் அவன்
எங்கோ தொலை தூரத்திலிருந்து
வந்தபடியிருக்கும் பட்சிகள்
அவனது புழங்குவெளியெங்கும் அமர்ந்து
பிரத்யேகமாக அவன்
அமைத்துக்கொண்ட கூட்டை
உற்று நோக்குவதும்
பறந்து இம்சிப்பதுமாக இருந்ததையே
தினசரி கனவுகளாக கண்டு கொண்டிருந்தான்
வாதை பெருகிய தூங்கா இரவுகள் பற்றி
அவன் விவரித்தபோது
நாஸ்தென்காவின் இரவுகளில்
அடர்ப்பனி பெய்யத் தொடங்கியது
மஞ்சள் நிற தலைக் கவிகையினுள்
மென் தேம்பலால் கதறிக்கொண்டிருந்த தன்னை
கடந்துச் சென்ற வழிப்போக்கன்
தன் கனவுலகின் தாழ்திறந்து
ஊற்றுபோல் ஊறிப்பெருகி
ஓடத்தொடங்கிய நீர்வழித்தடம்
தன் வனத்துக்குரியதென்பதை அறிந்துகொண்ட நாஸ்தென்கா
வற்றாதிருக்கும் குளிர்ச்சுனைக்காய்
தன் காடு திறந்து கொண்டதை
தன் பெண்மைத் திறந்துகொண்டதாய் பாவித்தாள்.


கனவுலகவாசியின் மன்றாடல்

தனிமை தாளாமல் ஓர் ஆண் மடிவதை
உரையாடிப் பார்ப்பதின் வழி
திசை திருப்பக்கூடியவர்கள் பெண்கள்.
நீரில் வளையங்களை உருவாக்குவதற்காக
இலைகள் உதிர்வதைப்போல்
அவர்கள் ஆண்களிடம் பேசவேண்டிய
கடமைக்குரியவர்கள்.
வளையங்கள் ஒருபோதும் சலனங்களாவதில்லை.
சதா சலனத்தில் இருப்பதைப்
புதிதாக சலனப்படுத்த வேண்டியதில்லை.
வளையங்கள் நீரின் ஆகிருதிகள்.
அதற்காகத்தான் மன்றாடுகிறேன்.
கனவுலகவாசியின் மன்றாடல் குறித்த கதையைக்
கேட்ட மாத்திரத்திலிருந்து
நாஸ்தென்கா இப்படித்தான் நினைத்தாள்.
இவனுக்காக வருந்துவதற்குரிய இதயத்தை
எனக்களித்தமைக்கு நன்றிகள் இறைவா.


நாஸ்தென்காவின் கடைசி முத்தம்

அந்த ஒருவன் கடந்து செல்வதற்கு
முன்பு வரை
தெருவிளக்கைப்போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது அவள் காதல்
பீட்டர்ஸ்பெர்க்கின் இரவை
பருகித் திளைத்திருந்தோம்
உன்னதமான ஒரு பிரியத்தால்
பனியை சுவாசித்து வெளியிடுவதுபோல்
பெருமூச்செறிந்தபடி நின்றிருந்தேன்
இமைகள் விரிகையில் உள்ளொளிரும்
விழிகளின் துடிப்பில்
என் பெருமயக்கம் கூடிற்று
எங்களுக்கிடையில் படர்ந்திருந்த பனி
கொதிப்படைந்த சுவாசத்தால்
கலைந்தபடியிருந்தது
தூரத்தில் ஒளிரும் வெண்ணிலவின்
சாயையுடைய அவள் முகத்தின்
தீட்சண்யம் கண்டு உறைந்திருந்த கணம்
துயருற்றவனாய் அவன் கடந்தான்
தேவாலயத்திலிருந்து பறக்கும் புறாவைப்போல்
என்னிடமிருந்து அவள்
அவனிடம் ஓடினாள்
மன்னிக்கும்படி இறைஞ்சும்
அவளது பார்வையை
எவ்வளவு முயன்றும் வெடித்தழுத இதயத்தால்
சமாதானம் செய்து புன்னகைத்தேன்
என் பழைய இரவுகளுக்குள்
திரும்பிச் செல்ல நேர்வதை எண்ணி
தேம்பல் வெளித்தெரியாமல் அழுது நிற்கையில்
காதலை பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லி
அணைத்துத் தேற்றிய அவள்
கடைசியாய் கொடுத்துச் சென்ற முத்தம்
அந்த நான்கு வெண்ணிற இரவுகளிலும்
அடர்ந்துப் பெய்த பனியைப் போலிருந்தது.


பிடிபட்ட குருவியின் நிலையிலிருப்பவன்

இரண்டே இரண்டு வார்த்தைகள்
ஒரு பெண்ணிடம் பேசமுடியாதா என்ற
கனவுலகவாசியின் ஏக்கத்தைத்
திருப்தியாய் பூர்த்தி செய்தாள் நாஸ்தென்கா.
அன்றைய கனவுக்குரிய தேவதையைப்
பரிசளித்த முன்னிரவுக்கு
நன்றிக்குரியவனானான் கனவுலகவாசி.
பூரண நிலவால் ஒளி பெற்றிருந்த வானில்
தன்னிலும் தனித்ததாய்ப் பறந்த
அந்த ஒற்றைப் பறவையின் மேல்
பாவமென இரக்கமுறும்
நிலையுயர்ந்த தன் இதயத்தை வணக்கமுற்றான்.
கால்வாயில் ஓடிய நீரில்
மிதந்துபோன நிலவின் சாயலை
அழுதபடி நின்றிருந்த அவளின்
நனைந்த கண்களில் கண்ணுற்றதை
நினைவு கூர்ந்தான்.
அவளுடனான சந்திப்பின் நிறைவாக
அமையவிருக்கும் கடைசி வெண்ணிரவில்
தன் கண்களில் அது பிரதிபலிக்குமென்று
அப்போது அவன் நினைத்திருக்கவில்லை.