கீதா சுகுமாரன்
 
 
 
 
 
 
 
Painting: Pablo Picaso
 
 
புறநகர் காட்சி I

ஊதாவும் இளஞ்சிவப்புமாய்
நத்தைகளூரும்
ஈரலித்த நிலம்


வயற்கிணற்றில்
சிதறும் ஒளியில் அசையும்
தங்கமீன்களின் முதுகில்
பச்சை வீசும் கதிர்


நெல்வாசம் தேடும் எலிகளை
சிவப்பு மணலோடையில்
தாவும் தவளைகளை
உண்டயர்ந்த நாகனும் சாரையும்
சீறிப்புணரும் ஆளுயரக் காற்றில்
சாயும் காலமொன்றை
நினைத்தழுந்தும் மனம்


தளும்பும் கண்களில்
அவிழும் ஏரியில்
புகைந்தது பனி
இன்று.

புறநகர் காட்சி II

காலப் பட்சமின்றி
நீர்சுமக்கும் ஏரியை நாடும்
தென் அமெரிக்கக் குருகு
கோடையின் மாறாக் காட்சி


பிறகு
கடற்பாலை மணக்கும்
செங்குறுமணல் தாரை
தார்சாலையாய் வழிந்தோட
ஏரிக்குள் எழும் கடைக்கால்


கிணறும் வயலும் தூர்ந்து
'அன்னகாமாட்சி பொறியியற் கல்லூரி'
தன் பேய்க்கரங்களை
நீட்டும் மேல்தளத்தில்
பழங்கனவின் சுகத்தில்
தென் அமெரிக்கக் குருகும் மறைய


முயல் தேடி
மாடுமேய்க்கும் சிறுவர்கள்
கல்லோசை உண்டிவில்
ஒலி இழக்க


கழங்காடும் சிறுமியர் குரல்கள்
அரசமர நிழலின்
புதைவிலிருந்தெழுந்து மறுபடி
புதைவுறும் ஒரு கணம்


'நாலை வெச்சு நாலெடு
நாலெடு நாலெடு
நாராயணன் பேரெடு
பேரெடு பேரெடு
பேரெடுத்துப் பிச்சையெடு
பிச்சையெடு பிச்சையெடு

பிச்சையெடுத்து..'

ஏக்கம்

கழுத்துக்குழைவில் மெலிதாய்
இறங்கிய முத்தம்
மேலேறிப் படர்ந்து இறுகி
சுக்கும் பச்சைக் கற்பூரமும்
கலந்திட்ட பானகமாய்
இதழ்கடையில் வழிந்திட
நடுமுதுகில் மினுங்கியது
வியர்வையின் ஈரம்


'கட்டுண்டு கிடப்போமே மாயவா'
நப்பின்னை கண்விழித்தாள்
பதிலற்ற தனிமைக்குள்


ஜன்னலுக்கு வெளியே
வெண்பனிப்பரப்பில்
எதையோ தேடி களைத்திருந்தது
சிறு கறுப்பு அணில்.