போகன் சங்கர்
 
 
 
 
 
Painting: Pablo Picaso
 
 
1

பாலைவனத்துக்குள் செல்லும் புட்டம் நீண்ட ஒரு பழைய கார்
நீல கார்
பின் இருக்கையில் மெல்லிய முகத்தட்டம் அணிந்த ஒரு பெண்

காரோட்டி தொப்பி அணிந்திருக்கிறான்
துவளும் தோல்த்தொப்பி

தேங்கி நிற்கும் பழுப்பு விழிகள்
கண்களோரம் சருமச் சுருக்கம்
கசிந்தோடும் காக்கையின் சிறகு

இமையா பார்வை தூரமிலியில் நிலைத்த
பெண்ணின் மடியில்
மடிந்து உறங்கும் ஒரு குழந்தை

அழுக்குப் பூக்கள் மலரும் அதன் ஆடை
கால்களை முத்தும் புழுதி முயல்கள்

சரியான நேரத்தில் எழும் சாபமென
எழும்பும் ஒரு மணல்புயல்

ஒரு கண்ணை உருவாக்கியது
அவர்களைக் காண

பிறகு ஒரு வாயைத் திறந்தது
அவர்களை விழுங்க

விதியின்
கட்டக் கடைசிக்கணத்தில் அவர்களை எழுத முயலும் என்னை
பார்த்தபடி பறக்கிறது
ஒரு கழுகு குறுக்காக
நகங்களை நீட்டியபடி

 
2

ஆயிரம் முத்தங்களின் ஆழம்
கடைசிப் பூ மகிழ்ந்து சொட்டும் மகரந்தம்

சிறுமியின் கடைவாய் க்ரீம்
கழுத்தின் பின்னால் சலூனில் தடவும் நறுமணம்

நெடுநாள் எடுக்கப்படாத நினைவினைப் போல
மகிழ்ச்சியை ஊட்டும் துணையின் யோனிப்புதர் நாற்றம்

ஒரு வாய் இப்லிசுக்கு
மறுவாயும் அதற்கே

3

முதலில் நாம் வாயில் காப்போர்கள் போல
வாது செய்யும் உன் கால்களை வெல்வோம்
அவர்களது கழுத்துச் சங்கிலியை

பிறகு கைவிடப்பட்ட இரண்டு சிறுமிகளைப் போலிருக்கும்
உனது இதழ்களை வெல்வோம்
நல் வார்த்தை கொண்டும்
நல் தொடுகை கொண்டும்

பின்பு நகர்த்த முடிகிற மலைகள் போலிருக்கும்
உனது முலைகளை வெல்வோம்
இன்னும் கொஞ்சம் ஈரமளித்து
கைவிரித்து முழங்காலிட்டு
ஒரு நீண்ட பிரார்த்தனையுடன்

அப்புறம்
நன்கு நிலைபெற்று நின்றுவிட்ட அமைப்புகளின்
அதிகாரத்தின் அசையாத் திமிர்
அத்தனையயும் பாவிக்கும்
உன் தொடைகளை வெல்வோம்

கடும் எதிர்ப்புக்குப் பிறகு
நிறைய ரத்தம் சிந்தி

பின்பு மெல்ல மெல்ல நகர்வோம்
உன் தலைநகர் நோக்கி

பனித் துகள்கள் சிதற
கனத்த காலணிகளோடு

நீண்டு உயர்கிற
ஒரு பாபேல் கோபுரத்துக்கான வரைபடத்துடன்

முதன் முறையாக
ஒரு காட்டை அணுகுகிறவர் போல

 
4

பெரிய மிருகங்கள்
உலவுகிற வனத்தை
சிறிய எலியும்
ஒரு நாள் அறிந்தது

Rattus Sapiens
என்ற இனம்
உருவான கதை
நீங்கள் நினைத்ததைப் போல அல்லாமல்
இவ்வளவுதான்
இவ்வளவேதான்
ஒரு எலியைப் போலவே