பேய் - நரி - நாய் - நீ!
 
 
இசை
 
முன்குறிப்பு

சங்கத்திலிருந்து சமகாலம் வரைக்கும் கவிதைக்குள் "விளையாட்டு" எப்படி இயங்கி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பேராசையில் நான் ஒரு நூல் எழுத முயன்றேன். கவிதைக்குள் எது விளையாட்டு என்பதை வரையறுத்துக் கொள்வதே சிரமமான காரியமாக இருந்தது. ஏனெனில் 'இரசம்' மனத்துக்கு தக்க மாறும் என்பதே அறிஞர் கூற்று. எனவே நான் எனக்கான வரையறை ஒன்றை உருவாக்கிக் கொண்டேன். நகைச்சுவை, கேலி, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் "பரிட்சார்த்த முயற்சி" என்கிற ஒன்றையும் சேர்த்து நான் "விளையாட்டு" என்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் "துடுக்குத்தனமும்" சேர்ந்திருக்க வேண்டியது அவசியம் . இதுவே விளையாட்டு பற்றிய எனது வரையறையாகும்.

நூலில் சிற்றிலக்கியங்கள் மற்றும் தனிப்பாடல்களைப் பற்றி எழுதியிருக்கும் பகுதி இங்கு கட்டுரை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் சொல்லும் எண்வகை பெய்ப்பாடுகளுள் "நகை" முதலில் வைத்து சொல்லப்பட்டிருந்தாலும் நமது சங்கப்பாடல்களில் "நகைச்சுவை" அரிதினும் அரிதே. வேறு "விளையாட்டுக்கள்" உண்டெனினும் அதுவும் அளவில் குறைவுதான். பக்தி இலக்கியங்களில் நகையை எதிர்பார்க்க முடியாதுதான் எனினும் அதில் கொஞ்சமாக "பழித்தல் பாவனைகள்" உண்டு. நீதிநூல்கள் சிரிக்குமா? நீதியுடன் விளையாட முடியுமா என்ன ?

தன் "சிற்றிலக்கியங்கள்" நூலில் சிற்றிலக்கியங்கள் மொத்தம் ஆயிரம் தேறும் என்று சொல்கிறார் நாஞ்சில்நாடன். சுமார் 80 நூல்களை மட்டுமே தான் பார்வையிட்டிருப்பதாக சொல்கிறார். சிற்றிலக்கியங்களில் கூட வாய்விட்டு சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவை இருக்குமா என்பது சந்தேகமே. சிங்கன்- சிங்கி, பள்ளன்- பள்ளி ஆகியோர் இடம் பெற்றிருக்கும் போதிலும், இங்கும் பாட்டுடைத் தலைவனாக இருப்பது கடவுளோ, அரசோதான். குற்றால குறவஞ்சி, முக்கூடற் பள்ளு போன்றவற்றில் கொஞ்சமாக கேலிப்பேச்சுககள் உண்டு. சுமார் 80 சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நாஞ்சிலாரின் நூலில் கூட ரசமான பகுதிகள் உண்டே ஒழிய நகைச்சுவை உணர்ச்சி வெளிப்பட்டிருக்கும் இடங்கள் குறைவே. அந்த நூல்களிலேயே நகைச்சுவை கிடையாதா அல்லது நாஞ்சிலார் எடுத்தியம்பும் பகுதிகளில் அது இல்லாமல் போய்விட்டதா என்பது தெரியவில்லை. "மேக விடு தூது", "அன்ன விடு தூது", "நெஞ்சு விடு தூது" போல "புகையிலை விடு தூது", "பணம் விடு தூது" ஆகியவற்றையும் அறிமுகம் செய்திறது நாஞ்சிலின் புத்தகம். இது போன்ற குசும்புகளில் "நகை" உண்டா என்பது மூலத்தை பார்த்தால் தான் தெரியும்.

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம் / மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி” என்று ஆறுமுக வாத்தியார் பாடும் ‘ராகத்தில்’ மயங்கித்தான் “நந்திக்கலம்பகத்தை” வாசித்தேன். இது நந்திவர்மன் இறந்த போது பாடப்பட்ட கையறு நிலைப்பாடல். விளக்கவுரை அவசியமில்லாதது.

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!”

(தேனுறு மலராள் - திருமகள்)

நந்திக்கலம்பகத்திலிருந்து ஒரு சுவையான கேலிப்பாடல் நினைவில் எழுகிறது.

தலைவன் பரத்தையிடம் சென்று இல்லம் திரும்புகையில் தலைவியின் கோபம் தணிப்பதற்காக பாணனை தூது விடுகிறான். அப்படி தூது வந்த பாணனிடம் சொன்ன தலைவியின் கூற்று இப்பாடல்..

"ஈட்டுபுகழ் நந்திபாண நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவுங்- காட்டில் வாழும்
பேய் என்றாள் அன்னை/ பிறர் நரி என்றார் /தோழி
நாய் என்றாள்/ நீ என்றேன் நான்."


“நந்திவர்மனின் பாணா, நீ எம் தங்கையான பரத்தையின் வீட்டில் இருந்தபடி விடிவளவும் பாடிய பாடல்களை கேட்டோம். அதைக் கேட்டு காட்டில் வாழும் பேய் என்றாள் அன்னை. பிறர் நரி என்றார். தோழி நாய் என்றாள். நீ என்றேன் நான்.”

வித்வான்கள் “கலிங்கத்துப்பரணியை” வியப்புச்சுவையும், நகைச்சுவையும் கொண்டது என விளக்குகிறார்கள். வியப்புச்சுவை நூல் முழுக்கவே உண்டு . அதில் மாற்றுக்கருத்தில்லை. நகைச்சுவை என்று உரையாசிரியர்கள் சொல்வது இதில் இடம் பெற்றிருக்கிற பேய்கள் அடிக்கும் கூத்தைத்தான் என்று நினைக்கிறேன். பேய்களின் உருவம் பற்றிய அதீத அச்சமூட்டும் வர்ணனைகளும், களத்தில் அவை நிணக்கூழடுக்கும் காட்சிகளும் இதில் பேசப்படுகின்றன. இந்த வர்ணனைகளிலும், கூழடுத்தலிலும் நகைச்சுவையும் விரவி இருப்பதைக் காண்கிறோம். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பேய்களை இவ்வளவு விரிவாக சித்தரித்திருப்பது ஆச்சர்யமளிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இன்று இவை ”விட்டலாச்சார்யா” நகைச்சுவைகள்தான். விட்டலாச்சார்யார் படங்களைப் பார்த்தால் யார்யாருக்கு சிரிப்பு வருமோ அவர்கள் இங்கேயும் சிரிக்கலாம். ஜெயங்கொண்டாராவது களத்தில் கிடக்கும் அம்பு, வில், தடி முதலியவற்றை விறகாக்கி பேய்கள் அடுப்பு மூட்டியதாக சொல்கிறார். விட்டலாச்சார்யா பேய்களின் கால்களையே விறகாக்கி அதிசயிக்கவைத்தார். கூடவே சிரிக்கவும் வைத்தார். க.பரணி வாசிப்பில் என் இதழ்கள் லேசாகத்தான் முறுவலிக்கின்றன. கண்களே அகல விரிகின்றன.

க.பரணி - பேய்களைப் பாடியது

“பாந்தள் நால்வன போலும் உடல் மயிர்
பாசி பட்ட பழந்தொளை மூக்கின
ஆந்தை பாந்தியிருப்ப, துரிஞ்சில் புக்கு
அங்குமிங்கும் உலாவு செவியன.

(பாந்தள் நால்வன போல- பாம்புகள் தொங்குவது போன்ற, துரிஞ்சில்- வெளவால் வகை)

க.பரணி - களம்பாடியது - நிணக்கூழ் அடுதல்

பேய்கள் பல் விளக்கி, நகம் திருத்தி, எண்ணெய் முழுகி , அணிகலன் புனைந்து கூழ் சமைக்க துவங்குவது முதல், சாப்பிட்டு முடித்து வெற்றிலை பாக்கு போடுவது வரை விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. யானைத் தந்ததால் பல் துலக்கி அதன் விலா எலும்பால் நாக்கை வழித்துக் கொண்டு, வெண்மூளையை எடுத்து எண்ணெய்யாக தேய்த்துக் கொள்கின்றனவாம்.

“பறிந்த மருப்பின் வெண்கோலால்
பல்லை விளக்கிக் கொள்ளீரே
மறிந்த களிற்றின் பழுஎலும்பை
வாங்கி நாக்கை வழியீரே !”

(மருப்பு- யானை தந்தம், பறிந்த மருப்பு - போர்க்களத்தில் உடைந்து கிடக்கிற தந்தம், மறிந்த- மரித்த, பழுஎலும்பு- விலா எழும்பு)

"வாயம்புகளாம் உகிர்கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே

பாயும் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாராரே!"

(உகிர்- நகம், உகிர்கொள்ளி - நகம்களையும் கருவி, வாய் அம்பு - அம்பின் வாய் அதாவது முனை, மதத்தயிலம்- யானையின் மதநீர், அதை எண்ணெயாக பூசிக்கொள்வீராக)

“எண்ணெய்போக வெண்மூளை
என்னுங் களியான் மயிர் குழம்பிப்
பண்ணையாகக் குருதிமடுப்
பாய்ந்து நீந்தி யாடீரே !”

பூசிக்கொண்ட மதநீர் எண்ணெய் போகுமாறு வெண்மூளை என்னும் களி மண்ணால் மயிர் குழப்பி கூட்டமாக குருதிமடுவில் குதித்து ஆடீரே!

(பண்ணையாக - கூட்டமாக)

பேய்கள் உண்ணுதல்

மென்குடர் வெள்ளை குதட்டீரே
மெல்விரல் இஞ்சி அதுக்கீரே
முன்கை எலும்பினை மெல்லீரே
மூளையை வாரி விழுங்கீரே
வெற்றிலை பாக்கிடுதல்
பண்ணும் இவுளிச் செவிச்சுருளும்
பரட்டிற் பிளவும்
படுகலிங்கர் கண்ணின் மணியிற் சுண்ணாம்பும்
கலந்து மடித்துத் தின்னீரே!
(இவுளி - குதிரை, பரடு - கால் குளம்பு)

(குதிரைகளின் செவிச்சுருளை வெற்றிலையாக்கி, அதன் குளம்பு துண்டங்களை பாக்காக்கி , களத்தில் இறந்துகிடக்கும் வீரர்களின் கண்ணின் மணியை சுண்ணாம்பாக்கி தின்னுங்கள்)

"பிள்ளைத்தமிழ்" என்பது ஒரு விதத்தில் தூது இலக்கியமும் கூட. இதில் பாடும் புலவன் பாடப்படும் தலைவனிடம் தன் நெஞ்சை தூது விடுகிறான். "ஐயா பார்த்து ஏதாவது செய்யுங்கள்" என்பதுதான் இதன் துறைவிளக்கம். சிற்றிலக்கியங்களில் காக்காய் பிடிக்க ஏதுவான பிள்ளைத்தமிழ், உலா போன்றவை மட்டுமே சமகாலத்திலும் எழுதப்படுவதாக சொல்லும் பெருமாள்முருகன் தன் "வான்குருவியின் கூடு" நூலில் "சிட்டநாதன் பிள்ளைதமிழ்" என்கிற நூல் ஒன்றை அறிமுகம் செய்கிறார். புகழ்ந்துரைத்துப் பாடுவதே பிள்ளைத்தமிழின் பொது இலக்கணம். இது விதிவிலக்காக பழித்துப் பாடிய பிள்ளைத்தமிழாக இருக்கிறது. எனினும் இதன் வரிகளை ரசிக்க இயலவில்லை. இவை கேலி என்பதைத் தாண்டி முற்றியவன்மத்தின் சொற்களாக இருக்கின்றன.

தமிழ்க்கவிதையின் பெருவிளையாட்டுகள் நிகழ்ந்தேறிய இடம் என்று “தனிப்பாடல்களை” சொல்லலாம். இவை அது வரையுமான கவிதைகளின் இறுக்கத்தை தளர்த்திய போதும், கவிதையை “வெற்றுச் சுவைப்பண்டங்களாக” ஆக்கி விடவும் பார்த்தன. தனிப்பாடல் திரட்டை பிரமாதமான கவிதைகளின் தொகுதியென்றும் , சொற்சிலம்பாட்டத்தின் தொகுதியென்றும் வாசிப்பு வசதிக்காக இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் வகையையே நான் பொருட்படுத்த விரும்புகிறேன். இரண்டாவது வகையினம் சமத்காரமானது. சிலேடை, இரட்டுற மொழிதல் போன்ற இலக்கணங்களை வைத்துக் கொண்டு கிளுகிளுப்பூட்டியவை இதன் பாடல்கள். இவைகளுக்கு இன்று ”கவிதை அந்தஸ்து” கிடையாது. ” காளமேகம்” இவ்விளையாட்டுக்களின் நாயகன். தென்னை-வேசி, வெற்றிலை-வேசி, பூசணிக்காய்- சிவபெருமான், ஓடம்-அல்குல் என அவர் போட்ட சிலேடைகள் விபரீதமானவை.

ஓடம்- அல்குல்

பலகையிடுமுள்ளே பருமாணி தைக்கும்
சலம் இறைக்கும் ஆள் ஏறித்தள்ளும் - உலகு அறிய
ஓடமும் ஒன்றே உலகநாதன் பெண்டீர்
மாடமும் ஒன்று என்றே மதி.

"நல்ல குடும்பத்தில்" பிறந்த வளர்ந்த நான் இப்பாடலுக்கு பொருள் சொல்ல விரும்பவில்லை.

இராசிகளை செய்யுளிள் அமைத்து பாடியது, மாதங்களை செய்யுளில் அமைத்து பாடியது, 'செருப்பு' எனத் தொடங்கி 'விளக்குமாறு' என்று முடிப்பது போன்ற விளையாட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு சுவாரஸ்யமானவை. ஒரு தீவிர கவிதை வாசகன் முன் இவை என்ன பொருள்படுகின்றன என்பது சிக்கலான ஒரு கேள்வி. அப்படியான ஒரு பாடல்..

பூநக்கி ஆறுகால்: புள்இனத்துக்கு ஒன்பதுகால்:

ஆனைக்குக் கால் பதினேழானதே _ மானே கேள்

பூநக்கி என்பது வண்டு. அதற்கு ஆறு கால்கள் தானே? புள்ளினத்துக்கு ஏது ஒன்பது கால் என்றால், 9 ஐ 1/4 ஆல் பெருக்கினால் கிடைப்பது இரண்டு . எனவே புள்ளினத்துக்கு இரண்டு கால்கள் . அதெப்படி 8 ஐ 1/4 உடன் பெருக்கினால் தானே இரண்டு வரும்? நான் 10-ஆம் வகுப்பு கணக்கு தேர்வில் 39 மதிப்பெண் பெற்று கடைத்தேறியவன். கணக்கின் முகத்திலேயே விழிக்க கூடாது என்பதற்காகவே “pure science” படிப்பைத் தேர்ந்தெடுத்தவன். இந்த “கணக்கிற்கு” விடை காணும் முன் தலை கிறுகிறுத்து விட்டது. அதாவது இரண்டு கால்கள் இல்லையாம். இரண்டே காலாம். அதாவது இரண்டும் ஒரு காலும். ( 2+ 1/4). இது போலவே யானையின் நாலு காலும். (4+ 1/4). உங்களுக்கு கோபம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நான் “விளையாட்டு” என்கிற பதத்தால் விளிப்பது இது போன்ற அற்ப சொல்லாட்டங்களையல்ல. அதாவது செய்யுளின் சப்த கணக்காட்டங்களையல்ல. கவிதையின் ஆன்மாவுள் நிகழும் விளையாட்டை தரிசிப்பதே என் ஆசை.

பக்தியிலக்கியங்களைப் போல் நயமான கேலிகளாக இல்லை காளமேகத்தின் கேலிகள். அவை மூர்க்கம் கொண்டவை. சாதாரண மனிதர்களையும் சர்வவல்லைமை பொருந்திய கடவுளர்களையும் ஒரே தட்டில் வைத்து நோக்குபவை. ஒரு தாசிக்கு எத்தொனியோ அத்தொனிதான் தசரதன் மைந்தனுக்கும். நமது இறையியலாளர்கள் ”நிந்தாஷ்துதி“ என்கிற ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அதாவது நிந்தனையில் துதிப்பதாம். காளமேகம் ”நிந்தாஷ்துதி” பாடியவர் என்பதே அவர்கள் தரப்பு. இது குறித்து பெருமாள் முருகன் சொல்லும் ஒரு கருத்து முக்கியமானது.

“எப்பேர்பட்டவர்களையும் தன்னுடைய வரம்புக்குள் கொண்டுவந்து நிறுத்துவிடும் சாகச குணமுடையது நம்சமூகம். அதுவும் மீறல்களைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை திட்டமிட்டே கையாளக்கூடியது. காளமேகத்தின் ஏளனத்திற்கும் கேலிக்கும் அதிகமும் ஆளானவர்கள் மனிதர்கள் அல்லர்: கடவுளர்கள் தான். கடவுள் பற்றிய சிறு அச்சமும் அற்ற மனம்தான் இப்படிப் பாடமுடியும். அவனது இந்த இயல்பை “நிந்தாஷ்துதி” என்கிற கோட்பாட்டை கொண்டுவந்து நிறுத்தி உள்ளிழுத்துக்கொண்டிருக்கிறது நம் மரபு”.

இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம். நிந்தாஷ்துதி காளமேகத்திடமிருந்து தப்பிக்க கடவுள்களுக்கு உதவியதா? அல்லது அடியார்களிடமிருந்து தப்பிக்க காளமேகத்திற்கு உதவியதா? ஒரு வேளை 15 -ம் நூற்றாண்டு அடியார்கள் நிஜமாலுமே சாதுக்கள் போல ?

இன்றைய வழலில் காளமேகத்தின் நான்கு பாடல்களை ஒரு பொது இடத்தில் வாய்விட்டு வாசிப்போமெனில் ஊர் போய் சேர்வது சிரமம்.

பரமசிவன் இரந்துண்ணும் ஏழையாக இருப்பதால் என்னென்ன நடக்கின்றன என்று பாருங்கள்.

“தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ - மீண்டொருவன்
வையானோ வில்முறிய மாட்டானோ / தென்புலியூர்
ஐயா ! நீ ஏழையானால்.”
(முதல் வரியில் உள்ளது கங்கா, இரண்டாவது வரியில் இருப்பது கண்ணப்பன், மூன்றாம் வரி அர்ச்சுணனுக்கானது)

தன் வினை தீர்க்க முடியாதவர் நம் வினை தீர்ப்பாரோ?

“வாதக்காலாம் தமக்கு ; மைத்துனர்க்கு நீரிழிவாம் ;
பேதப் பெருவயிராம் பிள்ளை தனக்கு - ஓதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்தவினை தீர்ப்பா ரிவர்.”

(அம்பலத்தரசைத் தான் வாதக்கால் நோயாளி ஆக்கிவிட்டார் காளமேகம். வாதக்கால் கண்டவர்களால் தானே ஒழுங்காக ஓரிடத்தில் நிற்க முடியாது. திருமால் பாற்கடலில் நீர்மிசை கிடப்பதால் அவருக்கு நீர் இழிவாம்)

சத்திரங்களில் உண்டுறங்கி நாடோடியாக அலைந்து திரிந்த அவர் ஒரு சத்திரத்தைப் பற்றிப் பாடியது. இது நாகப்பட்டினத்து ”காத்தான்” என்பவனின் சத்திரம்.

"கத்துகடல் வழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்: ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்."

இது நாகப்பட்டினத்து தாசியை இகழ்ந்தது

"வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள்- நேற்றுக்
கழுதை கெட்ட வண்ணான், கண்டேன் ! கண்டேன் என்று
பழுதை எடுத் தோடி வந்தான் பார்

(கழுதை கெட்ட- கழுதையை தொலைத்த, பழுதை-கயிறு)

என்னதான் காளை வாகனனாக இருந்தாலும் “அக்காளை ஏறினாராம்”
என்றெழுதுவாயோ காளமேகா?


காளமேகம் தனிப்பட்ட முறையில் எப்பவும் எனக்கொரு தலையிடி. அவரை கவியென்று ஏற்பதா வேண்டாமா என்கிற குழப்பதிலிருந்து உருவாவது இந்த தலைநோவு. ஆனால் உறுதியாக புரட்சிக்காரன் என்று ஏற்றுக்கொள்வேன். அவரை கவிஞராக்க அதிகமும் மெனக்கெட வேண்டி இருக்கிறது. “மும்மதத்து வாரணத்தை, ஐயோ எலி இழுத்துப் போகிறது ஏன்?” என்கிற வரி” எல்லாம் வல்லவன் என்று ஏத்தப்படும் கடவுளை, அற்ப சுண்டெலி ஒன்று இழுத்துப் போகிறதைப் பார்” என்று சொல்கிறது. இவ்வரிக்கு இன்று கவிதை மதிப்பு இருப்பதாக நான் நம்பவில்லை. இருப்பது கலகமதிப்பு தான். அதுவும் காலம் சார்ந்தது தான். இவ்வரியை இன்றைய ”விநாயகர் சதுர்த்தி” ஊர்வலங்களின் பதட்டங்களுக்கு எதிராக வைத்து வாசிக்கலாம். அதைக் காளமேகத்தின் காதலர்கள் செய்யலாம்.

தனிப்பாடல்களில் நெஞ்சோடள்ளிக் கொள்ளவும் நிறைய கவிதைகள் உண்டு. சில கவிதைகளில் பிரமாதமான விளையாட்டுகளும் உண்டு. அதில் சிலவற்றை பார்க்கலாம். “ஒப்பிலா மணிப்புலவரின்” இரண்டு பாடல்கள். இரண்டும் தோள்தோய் காதலர் பிரிந்திருக்கும் ராத்திரியின் நீளம் குறித்து சினந்து உரைக்கும் தலைவியின் கூற்றுக்கள். தாளாவொண்ணா பிரிவுத்துயர்தான் ஆனாலும் அதை வெளிப்படுத்தி இருக்கும் விதத்தில் ஒரு துடுக்குத்தனம் வெளிப்படுகிறது. இரவி வந்து தொலைய மாட்டேன் என்கிறான். இராத்திரி விடிந்து தொலைய மாட்டேன் என்கிறது.

“ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த
கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி
திரண்டதோ/ கங்குல் தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத்துள்.”

(ஆழிவாய் என்கிற அசாதாரணத்தையும், கோழி வாய் என்கிற சாதாரணத்தையும் அருகருகே வைத்திருப்பது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. “ எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.” என்கிற சொற்றொடரை நமது கல்விப்புலம் சார்ந்த புத்தகங்களில் அடிக்கடி கண்டிருக்கிறேன். “நல்லா இருக்குன்னு சொல்றார்.” என்று புரிந்துகொண்டு கடந்து விடுவேன். ஆனால் “எண்ணி எண்ணி இன்புறத்தக்கது என்றால் என்ன என்பது இப்பாடலைப் படிக்கையில் புரிகிறது).

(ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ - கடல் போல் கொந்தளிக்கிற இரவாம், கங்குல் - இரவு, தேர்- வரியத்தேர்)

அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான்
செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி, எனக்கு
எத்தால் விடியும் இரா
(அரவம் கரந்தது வரியனை, அச்சுமரம் வரியத்தேரினுடையது)

மதுரை கண்ணனாரின் ஒரு சங்கப்பாடலில், தலைவனுடன் களித்திருக்கும் இராத்திரியை கூவியதன் மூலம் சீக்கிரமே விடிய வைத்து விட்டதற்காக , அச்சேவலை பூனைக்கு பிடித்துதரப்போவதாக மிரட்டுகிறாள் ஒரு தலைவி. இங்கோ சீக்கிரம் கூவித்தொலைக்காமல் அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. என்று மிரட்டுகிறாள் இன்னொரு தலைவி. தலைவிகளுக்கும் சேவல்களுக்கும் ஜென்மப்பகை போலும்?

ஊடலை ஆற்றமாட்டாத ஒரு தலைவன் பாடியது

"உனக்கின்று யான் செய்த குற்றமொன்று இல்லை
உனைப் பிரிந்தால்
வனக்குன்றிலேறி விழ அறியேன்; வண்மை சேர் மயிலே
எனக்கென்று வட்டமிட்டு அண்ணாந்து விம்மி யிருக்கும் உந்தன்
தனக்குன்றில் ஏறி விழுவேன் நின் அல்குல் தடாகத்திலே"
(பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்)

"நங்கை ஒருத்தியையும் நாமிருவர் மூவரையும்
பொங்கு அமளி பொறுக்குமோ
சங்கம் குலைய விரால் பாயும் குருநாடர் கோவே
பழையவரால் என்ன பயன்."
(சொக்கநாதப்புலவர்)

படுக்கையில் இருக்கும் தலைவனுக்கு பரத்தையின் மேல் நினைப்பு போகிறது. இதை அறிந்து கொண்ட தலைவி பாடியது மேற்கண்ட பாடல். நான், நீ , அவள் மூன்று பேரையும் இந்தக் கட்டில் தாங்குமோ? என்று கேட்கிறாள். "சங்கம் குலைய விரால் பாயும்" என்பதை "நான் குலைய பரத்தை பாய" என்றும் வாசிக்கலாம். அம்மணி, இப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் பூதலத்தில் கால்வாசி கட்டில்கள் கூட மிஞ்சாது?

என் உள்ளம் கவர் பாடல் ஒன்று. புலவன், காளத்தி என்கிற வள்ளலைக் காணப்போகிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் வறுமை இவரை விட்டு ஓடிவிடுமாம். இத்தனை நாளும் உடனிருந்த வறுமையை அப்படி சட்டென பிரியக்கூடுமோ?

நீளத்திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றாக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு
-மதுரகவிராயர்
(நல்குரவு-வறுமை)


இதற்குப் பெயர்தான் “ஏழைக்குசும்பு” போலும்? “பட்டினிக்கொழுப்பு” போலும்?