மாமணி
 
 
ஆ. இரா. வேங்கடாசலபதி
 

1981ஆம் ஆண்டின் தொடக்கம். ஒவ்வொரு மாதப் பிறப்பையும் ஒட்டிச் சில நாள்களுக்குக் கலைஞர் கருணாநிதி நகரின் சில விளக்குக் கம்பங்களை ஒரு தட்டி அணி செய்யும். இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் மாதக் கூட்டத்திற்கான அறிவிப்பு அது. கட்டையான பேனா கொண்டு ரப்பர் முத்திரையிடும் ஊதா மையால் அறிவிப்பு எழுதப்பட்டிருக்கும். கூட்டம் நடக்கும் இடம் இராமசாமி சாலையிலிருந்த மாரா நர்சரி பள்ளி. உவமைக் கவிஞர் சுரதா என்ற பெயர் மட்டும் நினைவிருக்கிறது. பிற பேச்சாளர் பெயர்கள் மனதில் பதியவில்லை. மாணவர்க்கான வினாடி வினா போட்டி என்பதே என்னை ஈர்த்தது. அப்போது எனக்கு வயது பதிமூன்றும் சில மாதங்களும்.

பிப்ரவரி 1981 நடந்த போட்டியில் கலந்துகொண்டேன். பரிசு பெறவில்லை. மஞ்சள் காமாலை வந்ததால் மார்ச் கூட்டத்திற்குச் செல்ல இயலவில்லை. ஏப்ரல் கூட்டத்தில் பாரதி வினா-விடை போட்டி. இந்த முறை இரண்டாம் பரிசு. பரிசுப் பொருள்: ‘வள்ளுவர் உள்ளம்’. ஆசிரியர்: கி.ஆ.பெ. விசுவநாதம். வெளியீடு: பாரி நிலையம். விலை:ஒன்றே முக்கால் ரூபாய். கேட்கப்பட்ட கேள்விகளில் இரண்டு இன்னும் நினைவிலுள்ளது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்திலுள்ள சிலை யாருடையது?தமிழ்நாட்டின் மிக உயரமான மலைச் சிகரம் என்ன? ஜவகர் வித்யாலயாவில் ஆங்கில வழியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த எனக்கு லண்டன் டிராஃபால்கர் சதுக்கத்திலுள்ள சிலை பற்றித் தெரியும். ஆல்ப்ஸ் மலைச் சிகரம் தெரியும். தியாகராயரா?தொட்டபெட்டாவா?

இந்தப் போட்டியை நடத்திய உருவம் அப்போதே என்னை விடவும் குள்ளம். வழுக்கைத் தலை. வேட்டி. முகத்தில் ஒரு பொலிவு. தெளிவான குரலில் பேச்சு. நான் ஈர்க்கப்பட்டேன். விட்டுவிட்டு இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டதும் சிக்கெனப் பிடித்துக்கொண்டார். அவர்தான் மா.மணி. அப்போது வெறும் முதலெழுத்தாக இருந்த ‘மா’ பின்னர் முன்னொட்டாக மாறிச் சிறப்படையாக நிலைத்துவிட்டது. பின்னர் ‘முகம்’ என்ற அடைமொழியும் புணர்ந்தது. பூர்வாசிரமத்தில் ‘சி’ என்ற முதலெழுத்தும் இருந்து மெல்ல உதிர்ந்துவிட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

மா.மணி என்ற பெயரில் எளிய மனிதராக உலவிய ஒருவர் ‘முகம்’ மாமணி என்று தமிழுலகில் நன்கு அறியப்பட்ட பிரமுகராக உருமாறியது ஒரு வரலாறு. அதனூடே வளர்ந்தவனாதலால் அதன் சில படலங்களை நான் நன்கு அறிவேன்.

மாமணி ஒரு பகுத்தறிவாளர் என்று எல்லாரும் அறிவோம். தெருமுனையில் நின்று கூவுவது மட்டுமல்ல, தன் கருத்தை மெல்ல எடுத்தூட்டித் தம் பக்கம் ஈர்ப்பதும் மதப் பிரசாரம்தான் என்று பொருள்கொண்டால் அவரை ஒரு மதப் பிரசாரகர் என்றே கொள்ள வேண்டும். கையில் மிட்டாயும் அக்குளில் கோணிப்பையுமான ஒரு சித்திரம் மனத்தில் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மாமணியின் ஆளுமை வலையில் விழுவதற்கேற்ற புறச் சூழலும் அமைந்தது. பத்தாம் வகுப்பு படிக்க ஜவகர் வித்தியாலயா பள்ளியிலிருந்து கோடம்பாக்கம் அரசு பள்ளிக்கு மாறிய தருணம். ‘ஷிப்ட்’ முறைப் பள்ளி. படிப்பதற்கும் நூல்களைத் தேடி அலைவதற்கும் தாராளமாக நேரம் வாய்த்தது. நல்ல தமிழாசிரியர் அமைந்தார் (இ. கோமதிநாயகம்). வ.உ.சி.என்ற ஆளுமை என்னை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தார். பாரதி நூற்றாண்டுச் சூழல் என்னைப் பற்றிய தமிழ்ப் பேய்க்கு உடுக்கடித்துக்கொண்டிருந்தது.

மாமணி இலக்கிய வட்டத்தில் என்னை இழுத்துப்போட்டார். செயற்குழு உறுப்பினர் என்ற மகுடத்தை அரைக்கால் சட்டையோடு போட்டுக்கொண்டேன். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் இலக்கியக் கூட்டம். கு.ராஜவேலு, பூவண்ணன், ‘தீபம்’ நா.பார்த்தசாரதி, அவ்வை நடராசன், ஜெயகாந்தன், பெ.நா.அப்புஸ்வாமி, என்.ஆர்.தாசன் என்று ஒவ்வொருவராய் வந்து சிறப்புரையாற்றிச் சென்றனர். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் தொ.மு.சி.ரகுநாதனும் த. கோவேந்தனும் என்பதை இன்று நினைத்தாலும் வியப்பும் பெருமிதமும் மீதுறுகின்றன. ரகுநாதன் காட்டிய புதுமைப்பித்தன் இன்னும் என்னைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறார். கோவேந்தன் திறந்து காட்டிய புலமை உலகம் புடவி போல் விரிந்து கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளர் வருமுன்னும் அவர் பேசும் பொருள் தொடர்பான நூல் ஒன்றை மாமணி கொடுப்பார். பெரும்பாலும், அவர் சிறுவயதில் காலணாகாலணாவாகச் சேர்த்து வாங்கிய நூற்பிரதியாக அது இருக்கும். கூட்டம் நடக்கு முன் அதைப் படித்து முடிப்பதோடு, ஒரு சிறு கட்டுரையும் எழுதிக் கூட்டத்தில் படிக்க வேண்டும். இந்த அரைவேக்காட்டு முயற்சிகளே எனக்கு நாற்றாங்காலாய் அமைந்தன.

ஞாயிறு மதியங்களுக்காக ஆர்வத்தோடு காத்திருப்பேன். காதலியைச் சந்திப்பதற்குக்கூட அவ்வளவு ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது. வெயிலானாலும் மழையானாலும் 2 மணிக்கு என் வீட்டைவிட்டு புறப்பட்டுவிடுவேன். முற்பகலில் இராயபுரம் சென்றுதிரும்பி மதிய உணவை அவசர அவசரமாக முடித்துவிட்டு மாமணி காத்திருப்பார். இரண்டு மணிநேரம் அவர் பேச்சை அகன்ற விழிகளோடு கேட்டுக்கொண்டிருப்பேன். தமிழகத்தின் சமூக, அரசியல், இலக்கிய வரலாறுகளின் பாலபாடங்களை அவர் போதிப்பார். தனக்குத் தெரிந்ததை எடுத்துரைப்பதில் அவர் சலித்ததேயில்லை.

22-9-1982 ஞாயிறு மாலை. தியாகராய நகர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் மு.பரமசிவம் தொகுத்த ‘விந்தனும் விமரிசனமும்’ நூல் (சேகர் பதிப்பகம்)வெளியீட்டு விழா. கூட்டம் முடிந்து வெளியே வந்தால் என் மிதிவண்டி பஞ்சர். மிதிவண்டியை உருட்டியவாறே வீடு திரும்பினோம். அப்போதுதான் ‘முகம்’ இதழ் தொடங்குவதைப் பற்றி முதன்முதலாகப் பேச்செடுத்தார் மாமணி. ‘எழுத்து’ சி.சு.செல்லப்பாவை முன்னோடி எனச் சொன்னதும் நினைவிருக்கிறது.

இந்த ஆண்டுகள் மிக உக்கிரமான ஆண்டுகள். ஒரு தீவிர நிலையில் காத்திரமான் நூல்களைக் கற்றும் விவாதித்தும் வந்தேன். தன்னிடமிருந்த நூல்களையெல்லாம் இரவல் கொடுத்து முடித்ததும், எல்.ஐ.சி.ஊழியர் சங்கத்திலிருந்தும் நூல்கள் எடுத்து வந்து தருவார் மாமணி. ஆனைத்தீ என்ற உருவகம் தான் நினைவுக்கு வருகிறது.

எனக்குப் பதிநான்கு வயது என்றால் மாமணிக்கு ஐம்பது. ஆனால் ஒரு நாளும் அவர் என்னை ஒருமையில் விளித்ததில்லை. வாரம் தவறாமல் பால் பொடியின் மணத்தோடு தேநீர் பரிமாறிய மாமணியின் மனைவியாரோ சிறுவனாக இருந்த காலம் முதல் இன்று வரை ஒருமைதான். இரண்டு விளிப்புகளுமே ஒரே அன்பின் வெளிப்பாடுகளே. சக மனிதனை மதித்தல் என்பது மாமணியிடம் ஊறிய பண்பு. இதற்கு மேலும் சிறந்த பண்புகள் அவரிடம் உண்டு. அதில் ஒன்று தம்மின் தம் மக்கள்.

தீட்டிய மரத்தையே கூர் பார்ப்பதுபோல் சின்ன வயதிலேயே அவரோடு கடுமையாக விவாதித்திருக்கிறேன். ஒரு முறைகூட வயது என்ற காரணத்தை முன்னிட்டு என்னை அவர் அடக்கியதில்லை. நா.பா.வும் அகிலனும் சராசரியான எழுத்தாளர்கள் என்று புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டு அவர்களைப் புறந்தள்ளியபோது மட்டும் அவர் பொறுமையிழந்து யாரையும் புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டுவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

உவமை என்பது மாமணிக்குப் மிகவும் பிடித்தமான புலப்பாட்டுக் கருவி. அறிவுகாண் முறைகளில் அதற்குக் கடைசி இடம் என்பது என் நிலைப்பாடு. இதைப் பற்றியும் நாங்கள் விவாதித்திருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் விவாதத்தைத் தொடரமாட்டார். ஒரு சிரிப்போடு நிறுத்திக்கொள்வார். நான் அவரிடம் கற்றுக்கொள்ளாத பாடங்களில் ஒன்று இது.

படித்த நூல்களைக் கலந்துபேசி விவாதிப்போம். சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ நாவலை 1983 கோடையில் வாசித்தேன். என்னைக் கவர்ந்த நூல்களை எல்லாம் வாசிக்கக் கொடுத்து அவர் கருத்தை அறிய ஆவல் கொள்வேன். மிக ஆர்வமாக ‘ஜே.ஜே.’ பற்றிய அவர் கருத்தை அறிய முயன்றேன். ‘எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்று அவர் நூலைப் படித்து முடிக்க முடியாமல் திருப்பித்தந்தது அதிர்ச்சியாக இருந்தது. தன்னால் வளர்க்கப்பட்ட ஒருவரிடம் இவ்வளவு வெளிப்படையாகத் தயக்கமின்றிச் சொல்லும் துணிவு எளிதில் ஒருவருக்கு வாய்ப்பதில்லை.

எனது அறிவு வேட்கை வேறுவேறு ஆளுமைகளைத் தேடிச் செல்ல உந்தியது. த. கோவேந்தன், ம. இலெ. தங்கப்பா, ஆ. சிவசுப்பிரமணியன், சுந்தர ராமசாமி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன் என்று வெவ்வேறு திசைகளில் கிளை பரப்பியபோதும் மாமணி அதற்குத் தடை போடவில்லை. தன் சீடர்கள் வேறு குருநாதரை நாடும்போது சில குருநாதர்கள் எவ்வளவு குரூரமாக நடந்துகொள்ள முடியும் என்பதை வரலாறு சொல்லும்.

என் ஒவ்வொரு முயற்சியையும் மாமணி ஊக்குவித்திருக்கிறார். வ.உ.சி.கடிதங்களைத் தொகுத்து அதன் கையெழுத்துப்படியை அவருக்குக் கொடுத்தபோது, ‘வ.உ.சி.யின் / நெஞ்சுருக்கும் கடிதங்களைப் / பிஞ்சுக் கரமொன்று / பூப்போல் தொடுத்துளது./ செல்வ! / நின் / சீரிய முயற்சி / சிறந்து ஓங்குக!/ கீர்த்தி பெறுவாய் இத்தரையில் / இது சத்தியம்!’என்று அவர் வாழ்த்தியதை ஒருபோதும் மறவேன்.

வ.உ.சி. ஆராய்ச்சிக்காக முதல்முறையாகப் புதுதில்லிக்குப் பதினெட்டு வயதில் தனியாகப் புறப்பட்டபொழுது கொட்டும் மழையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உடன்வந்து வழியனுப்பிய பின் ஏறத்தாழ வீட்டுக்கு நீந்திச் சென்றதைப் பின்னர் அறிந்தேன். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்றபொழுது அவர் வீட்டில் ஒரு சிறு விருந்து ஏற்பாடு செய்தார்.

தமிழ்/திராவிட இயக்கத்தில் இரு மரபுகள் உண்டு. ஒன்று புலமைப் போக்கு. மற்றொன்று செயல் தளம். மாமணி இரண்டிலும் கால்கொண்டிருக்கிறார். முதற்கட்டம் முழுவதும் வெறும் படிப்பாக இருந்தது. இரண்டாம் கட்டத்தில் படிப்புப் பின்னகர்ந்தது. இன்று செயல் களம் முதன்மை பெற்றுவிட்டது.

அவருடைய அறிவுத் தேட்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன். 1980களின் இடையில் ஒரு முறை கம்பராமாயணத்தை முழுவதும் படிப்பதென அவர் முடிவு செய்தார். கம்பன் கழகப் பதிப்பை உரையே இல்லாமல் தாமாகப் படிக்கலானார். பாரதியின் மீதும் வெ.சாமிநாத சர்மா மீதும் அளப்பரிய மதிப்பு கொண்டவர்.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவர் நடத்திவரும் ‘முகம்’ இதழும் கே.கே.நகர் இலக்கிய வட்டமும் அவருடைய நேர்ப்பேச்சுகளும் பலரைப் பாதித்துள்ளன. மறந்துபோய்விட்ட கா.அப்பாத்துரை, நாரண.துரைக்கண்ணன் ஆகியோரை மீட்டெடுத்துத் தமிழ் மக்களுக்குக் காட்டியதும் மாமணியின் சாதனைகளுள் ஒன்று.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுபத்திரிகை நண்பரைப் பேருந்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘முகம்’ என்ன பெரிதாகச் சாதித்துவிட்டது என்று ஏளனமாகக் குறிப்பிட்டார். ‘சலபதி ஒருவனை உருவாக்கியது போதாதா?’ என்று கோபமாகவும் திமிரோடும் சொன்னேன். இன்று அந்த நண்பரின் பெயரைத்தானும் யாரும் அறியமாட்டார்கள்.

மாமணியோடு உறவாடிய எவரும் அவரது நற்பண்புகளால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. அவரை அறிந்தவர்கள் சுட்டமண்ணாக இல்லாதவரையில் தம் வாழ்வை ஓர் அங்குலமேனும் உயர்த்திக் கொண்டிருப்பார்கள். அவர் இருக்கும் இடத்தில் அவர் இருப்பு சார்ந்து சூழலில் ஒரு மாற்றம் ஏற்படாமல் இராது. ஒழுங்கும் நெறியும் அவரது ஆதார சுருதி. அவர் வீட்டருகிலுள்ள பூங்கா பிறவற்றைவிடப் பசுமையாக இருப்பது தற்செயலானதல்ல. எல்லாரையும் அணைத்துச் செல்ல முயல்வார். ஆனால் எவர் ஒருவரையும் சார்ந்திராமல் தன்னை மட்டுமே நம்பி வினையாற்றுவார். எறும்பு, தேனீ என்ற தேய்ந்துபோன உவமைகளே நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. பொற்கால உலகத்தின் ஆதர்சக் குடிமகனாக அவரைக் கொள்வது பொருந்தும்.

மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாமல் பீடி சுற்றும் வேலை, தையல் வேலை, கருமார் வேலை, சுருட்டு சிப்பம் கட்டும் வேலை, எண்ணெய்க் கிடங்கில் பாரம் சுமக்கும் வேலை, மளிகைக்கடை வேலை, அச்சுத் தொழிலாளி என்று தொடங்கித் தன் முயற்சியால் படித்து, பட்டதாரியாகி, நல்ல பணிக்கு உயர்ந்து இன்று தமிழுலகில் பலரின் மதிப்புக்கு உரியவராக விளங்கும் மாமணியின் வாழ்க்கை அசாதாரணமானது. உயிரோடு கலந்து அவரை இயக்குவது ஈரோடு என்பதையும் சொல்ல வேண்டும்.

(உங்களில் ஒருவன் (தன் வரலாறு) - மாமணி- மணிவாசகர் பதிப்பகம் - (2014) நூலுக்கு எழுதிய முன்னுரை).