...
 
 
கடித இலக்கியம்
நாஞ்சில் நாடன்
 
 
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
28.01.1994

அன்புள்ள நாஞ்சில் நாடன்,

என் முன் கடிதம் கிடைத்திருக்கும். நேற்றிரவுதான் இரண்டாவது தடவையாக (உண்மையில் இரண்டரைத் தடவைகள்) சதுரங்கக் குதிரையைப் படித்து முடித்தேன். இரண்டாவது தடவை படிக்கும்போதும் அலுப்பு இல்லை. கடமை உணர்ச்சியோடு படிக்கவில்லை. பெரும்பகுதி ஈர்ப்புடன் சென்றது. தன்னளவில் உங்கள் உலகம் படைப்பு நோக்கில் எனக்கு எந்த அளவுக்கு விருப்பமானது என்பது ஒரு கேள்வி. புறத்திலிருந்து அகத்திற்கும் பொருளிலிருந்து அதன் சாரத்திற்கும் லௌகீகத்திலிருந்து ஆத்மீகத்திற்கும் பாயும் மனத்தை (அல்லது பறக்கும் மனத்தை) போற்றும் மனம் எனக்கு. ஆத்மீகம் என்பது எனக்கு ஆழமும் அகலமும்தான் (திருப்பதி வெங்கடாசலபதியின் பட்டை நாமம் அல்ல). ஆழத்திற்கும் அகலத்திற்கும் எதற்கு ஆத்மீகம் என்ற பெயர் என்றால் ஜீவன்களுக்கு இடையே உள்ள பேதங்களைத் தாண்டி உணர்வில் ஒருமையை உணர்த்தத் துணை போகும் வார்த்தையில் தூசி இருக்கக்கூடாது என்பதால்தான். அப்படிப் பார்க்கும்போது என் கனவுப் பயணத்தின் முதல் கட்டம்தான் உங்கள் உலகம். அது எனக்கு எந்த அளவுக்குப் போதாமை உணர்வைத் தரும் என்று நான் கற்பனை செய்துகொள்வேனோ அந்த அளவுக்குப் போதாமை உணர்வைத் தரவில்லை என்பதைத்தான் இங்கு சொல்ல வருகிறேன். உங்கள் உலகத்தின் மீது நீங்கள் எனக்கு ஒரு சுவாரசியத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். சுவாரசியம் மட்டுமல்ல ஈடுபாடுகூட. இதில் வரும் ஜீவன்கள் மீதும் இவர்கள் பின்னணி மீதும் உங்கள் மீதும் கூட எனக்கு ஒரு தனியான பிரியம் தோன்றிற்று. எழுத்தில் உங்கள் நேர்மையைப் பாராட்ட வேண்டும். அது முக்கியம். உங்கள் உலகத்தைக் கூச்சமோ பெருமிதமோ இன்றிப் பகிர்ந்துகொள்ளும் விதத்திற்காக.

உடலுக்கும் பொருளுக்குமான உறவுதான் இங்கு ஆசை சார்ந்து இருக்கிறது. உணவின் நுட்ப வகைகளின் விவரங்களின்றி ஒரு தடவைகூட உணவு மொட்டையாகக் குறிப்பிடப்படுவதில்லை என்பது ஒரு உதாரணம். இதுபோல் பல. பசியைவிட ருசி முக்கியம் பெறுவதும் மனிதக் கூறு முக்கியத்துவம் பெறுவதுதான். பெரும்பான்மையான ஜீவன்கள் வாழும் (முன்பென்றால் ‘உழலும்’ என்ற வார்த்தையைப் போட்டிருப்பேன்) உலகம் இங்குத் தன்னை ஸ்தாபித்துக்கொள்கிறது. அன்றாட வாழ்க்கையிலுள்ள கசப்பு காரணமாக இந்தப் பொருள் சார்ந்த உலகத்தின் மீது நான் எப்போதும் கொள்ளும் இடைவெளியை உங்கள் படைப்பு மறுப்பதை இப்போது சற்று விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்.

அதிக சுதந்திரம் கொள்கிறீர்கள் என்பது தெளிவானது. அந்தச் சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கும் அனுபவங்களையும் உணர முடிகிறது. இதில் விச்ராந்தியும் கூடும் அழகுகளும் இருக்கின்றன. மேல்சட்டை இல்லாமல் ஒற்றை வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள். உள்ளாடை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அந்த ஒற்றை வேட்டியையும் வீசிவிட்டால் மேலதிக சுதந்திரத்தின் மூலம் இன்னும் புதியவை என்ன கூடும் என்ற கேள்வி வந்தது. படைப்பாளி தன்னையும் அம்மணமாக்கிக்கொண்டு பிறரையும் அம்மணமாகப் பார்க்க முனைந்தால் படைப்பு எங்கு போய் நிற்கும்? அதிலும் தமிழ்ப் படைப்பு? நடுச் சந்தியில் இழுத்து அடிப்பார்கள். நாம் பெற வேண்டிய நோபல் பரிசு அது.

முதல் ஆறு அத்தியாயங்களில் - கல்யாணியை நாராயணன் சந்திக்கும் பகுதிதான் எனக்கு மிக விருப்பமானது - நாராயணனின் பிரச்சினை - பெண் தேடலும் ஊசலாட்டமும் - உறுதிப்பட்டு மையம் கொள்கிறது. முதல் நூறு பக்கங்களில் வேறு கவனங்களின்றி ஒருமுகமாக இழை முறுகியதில் மையம் கொண்ட பிரச்சினை இது. இது வரையிலும் நாவலுக்கு உரிய கிளை விரிப்பின்றிச் சிறுகதைக்குரிய மையம் குவிதல். இதற்குப் பின்னால் தொடரும் உடனடிப் பகுதிகளில் நாராயணனின் வேறு அனுபவங்கள் இடம்பெறுகின்றன என்றாலும் -முக்கியமாக யாத்திரைகள் - அந்த விவரிப்புகள் மையத்திற்குச் செழுமை தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால் அர்த்தம் கொள்ளவில்லை. காரணம், முதல் பகுதிகள் உருவாக்கிவிட்ட மையம் சார்ந்த அழுத்தம். மீண்டும் பின் பகுதிகளில் மையம் சார்ந்த பிரச்சினை எட்டிப்பார்த்துத் தன்னை மீண்டும் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது உண்மைதான். ஆனால் மையம் இங்கு விரிவு கொள்ளத் தவறுகிறது. பக்கங்களின் போக்கில் மையத்தின் விரிவு என்பது நாவலில் தவிர்க்க முடியாதது. தேடுதலின் அகலம் கேட்கும் பக்கங்கள் தரப்படவில்லை. முடிவுக்கு வரமுடியாத சஞ்சலத்தின் துக்கமும் ஆழங்கொள்ள வேறு வகையான பக்கங்கள் கேட்கிறது. உண்மையில் லோகாயத தளம் என்று நான் - அந்தத் தளத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்துடனேயே - சற்று எதிர்மறையாகச் சொல்வது மையங்கள் விரிவு கொள்ள மறுத்துச் சுழல்வதைத்தான். விரிவு கொள்ளவில்லை என்றால் கூறியது கூறலாகிவிடுகிறது. அதே வார்த்தைகள் இல்லாமலேயே. பின்பகுதியில் சிலசில அர்த்தங்கள் கூடிவரத்தான் செய்கின்றன. உதாரணமாகக் குட்டினோ - கிளாரா முதுமை அன்புப் பிணைப்பு. நாவலுக்குரிய கிளை விரிப்பில் நாராயணனுடைய தேடுதலும் சஞ்சலமும் - தேடுதலும் சஞ்சலமும் என்ற வார்த்தைகளுக்குரிய ஆழமும் - அவற்றின் இணைப்புக்குரிய அழகுகளும் நாராயணனின் பிரச்சினையைத் தாண்டி நம் வாழ்வின் குறியீடாகவே மாறியிருந்தால் கூடிவரும் ஆழம் என்ன? இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மட்டும் நான் சொல்வேன்.

முடிவு கலைப்பூர்வமானது. மனத்தைத் தொட்டது. கவிதை மீது நீங்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த ஆசை (அது படைப்பாக அதிகம் மலரவில்லை என்றாலும்கூட) உங்கள் படைப்பு மீது உறவு கொள்ளத் துணைநிற்கிறது. இதனால் எடுத்துக்கொண்டுள்ள சுதந்திரம், விரிப்பதில் சீரழியாமல் குறுக்கலில் வலுப்பெறுகிறது.

மேலும் நம்பிக்கையோடு, மேலும் சவால்களோடு நீங்கள் தொடர வேண்டும். உங்கள் கலைப்பூர்வமான வெற்றிகள் எனக்குப் பெருமிதம் தரும்.

28.01.1994
என் அன்பான வாழ்த்துகளுடன்
சு.ரா.

குறிப்பு : இக்கடிதம் சுந்தர ராமசாமியின் மொத்தக் கட்டுரைகளின் தொகை நூலான ’மனக்குகை ஓவியங்கள்’ (காலச்சுவடு பதிப்பகம்) நூலில் மதிப்புரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. -ஆசிரியர்.