...
 
 
கடித இலக்கியம்
நாஞ்சில் நாடன்
 
 
புவியரசு
கோவை
20.09.1978

அன்பு நண்பருக்கு

வணக்கம். தந்தி கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. தமிழ்ச் சங்கத்திலிருந்து இடம் இல்லை என்று கடிதம் வந்தது. தாங்கள் எப்படியோ ஏற்பாடு செய்துவிட்டீர்கள். நன்றி.

ஞாயிறன்று காலை, 'மனோஜ்' என்ற கேரள எழுத்தாளர் வீட்டுக்கு வந்திருந்தார். 'மின்னாமினுங்ஙிகளும், மெழுகுதிரிகளும்' என்ற ரயில்வே போராட்ட நாவலை எழுதி பரிசு பெற்றவர் அவர். சிறுகதை எழுத்தாளர்கள் திலீப் குமார், சி.ஆர். ரவீந்திரன், ராஜேந்திரா ஜேம்ஸ், கவிஞர். வின்கோ ஜேகப்,முதலிய நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு உங்களைப் பற்றித் திரும்பியது. நண்பர்கள் உங்கள் சிறுகதைகளைப் படித்திருந்ததால் தடங்கலில்லாமல் விவாதித்தார்கள். நீண்ட நாட்களாக நான் ’தீபம்’ பார்க்காததால் கேட்டுக் கொண்டிருந்தேன். விமர்சனம் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. 'அவரிடம் சொல்லிவிடுங்கள்..இதிலென்ன மூடிமறைப்பது' என்றார் ஒருவர். 'வேண்டாம்..இவ்வளவு னரம் போய் இப்படிக் கடுமையாகவா சொல்வது?' என்றார் இன்னொருவர். 'புவி, நீங்கள் அவரைக் கெடுத்து விடாதீர்கள், அதற்குச் சுற்றி சுற்றி நிறையப் பேர் இருக்கிறார்கள்.. அவர் நிறைய எழுதுகிறார். கெட்டுப் போவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது..வடக்கே உள்ள குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் அவர்..அபூர்வமாக இலக்கிய உலகிற்குக் கிடைக்கும் ஓரிருவரையும், உண்மைகளை மறைத்து, முகஸ்துதி செய்து, கெடுத்து நாம் இழந்துவிடக் கூடாது' என்றார் முன்னவர்.

'உங்கள் கருத்துகள் இருக்கட்டும். நான் நேரடியாகப் புரிந்து கொள்ள வேண்டாமா? கதைகளைக் கொடுங்கள்..படிக்கிறேன்.' என்று சொன்னேன். தருவதாகச் சொன்னார்கள்.

ஆக, இலக்கிய வட்டத்தில் ஒரு பாதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.. இது போதாது.! அதிர்ச்சிகளை உண்டாக்க வேண்டும் நீங்கள்.! நம்மவர்க்குத் தோல் அவ்வளவு தடிப்பேறிவிட்டது.

எப்சுபா ஜேசுதாசன், ஐசக் அருமைராசன், வண்ண நிலவன் மாதிரி ஒரே படைப்பில் நின்று விட வேண்டும், கம்பீரமாக..

'தலைகீழ் விகிதங்கள்' யாரும் இங்கே படித்திருக்கவில்லை, கிடைக்கவில்லை என்பது எவ்வளவு கொடுமை.! இந்தச் சின்ன இலக்கிய வட்டத்திற்குள் கூட, ஒரு புதிய தோணி பயணம் செய்ய முடியாமல், வியாபார அலைகள் தடுக்கின்றன என்பது அநியாயம் இல்லையா?

இங்கே இப்போது சில நல்ல பத்திரிகைகள் தொடங்கப்பட்டுள்ளன.

'சாதனா', 'விழிப்பு', 'மகாநதி' , 'சுவடு' - இப்படி. உங்கள் கதைகள் இவற்றில் வர வேண்டும். இவை இலக்கிய உலகின் எல்லாப் பகுதிகளையும் தொடக்கூடியவை. 'தீபம்' எப்போதே இலக்கியவாதிகளால் கைகழுவி விடப்பட்டு விட்டது. புதிய ஏடுகள் அற்பு ஆயுளில் மறைந்தாலும் வீரியம் மிக்கவை..

பம்பாயில் 'கேட்வே ஆப் இண்டியா' பகுதியில் 'தெரு நாடகம்' நடப்பதாகப் படித்தேன். இப்போதும் நாடகம் நடக்கிறதா என்று விசாரித்து வையுங்கள்..வேறு ஏதாவது நாடகம்(மேடையில்) இருந்தாலும் பார்க்க வேண்டும் நாடகத்துறையில் ஏராளமாகக் குப்பைகளை எழுதி அரங்கேற்றி 'தங்கப்பதக்கம்', 'நாடக கலாரத்தனம்' என்ற பட்டம் எல்லாம் வாங்கினேன்..தண்டம்.! புதிய முயற்சிகள் செய்து வருகிறேன் அண்மையில் திருப்பூரில் நான் நடத்திய, மாநில கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில், ஜெயந்தனின் நாடகத்தில் நடித்தேன். பேராசியர் ராமானுஜம் உருவாக்கிய 'மைமிங்' நாடகத்தில் நானும் ஜெயந்தனும் நடித்தோம். விரைவில் ஜெயந்தனின் நாடகத்தைக் கோவையில் அரங்கேற்றப் போகிறேன். அப்புறம் பிரெஷ்டின் நாடகங்கள் ('காகேசியன் சாக் சர்க்கிள்', 'மதர்') அரங்கேற்ற யோசனை.. சுஜாதா இதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்.

நாடகங்கள் நடத்திக் கொண்டே, கலைப்படங்கள் 16mm ல் தயாரிப்பது (தொடர்ந்து) ஒரு நீண்ட திட்டம்..கமலஹாசன் நம்முடன் உற்சாகமாக இருக்கிறார் ஒரு 16mmல் கேமரா கிடைக்காமல் காரியம் தடைப்பட்டு நிற்கிறது. கமலிடம் 8mm ல் இரண்டு இருக்கிறது. 16mmல் வேண்டும்.

சரி..பிற பின்..

26 செவ்வாய் காலை சுமார் 5 மணிக்கு வந்துசேரும்.

திருவனந்தபுரம்-பம்பாய் மெயிலில் வந்து சேர்வோம்.

புவியரசு