...
 
 
கடித இலக்கியம்
நாஞ்சில் நாடன்
 
 
ந.முத்துசாமி
48,வாலாஜா ரோடு, சென்னை-600002
06.02.1978

அன்புள்ள திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு

வணக்கம். நேற்று இரவு 8 மணி சுமாருக்கு உங்கள் நாவல் ’தலைகீழ் விகிதங்கள்’ படித்து முடித்தேன்.

சபாஷ்.! நாஞ்சில்நாடன் சபாஷ்.! மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மிக அற்புதமான முடிவு. உணர்ச்சிபூர்வமான, அறிவு பூர்வமான மிக சந்தோஷமான முடிவு. நாவலைப் படித்து முடித்து விட்டு உடனே என் மனைவியிடம் போய் அடுப்பங்கரையில் இருந்தவளிடம் ‘நாவலை மிக நன்றாக எழுதியிருக்கிறார் இல்லை’ என்றேன். ’ஆமாம்’ என்றாள் அவள். இரண்டு தினங்களுக்கு முன்பே அவள் நாவலை படித்து முடித்து விட்டாள். மிக நன்றாக இருக்கிறது என்றும் சொன்னாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு வெங்கட் சாமிநாதன் இங்கு வந்திருந்த போது இந்த நாவல் மிக நன்றாக இருக்கிறது என்று சொல்லி படிக்கச் சொல்லி விட்டுப் போனார். இன்று நான் உங்களுக்குப் பாராட்டி எழுதப்போவதாகச் சொன்னேன். தானே பாராட்டி எழுத வேண்டுமென்று நினைத்தாகச் சொன்னாள் என் மனைவி. இந்தப் பாராட்டு எங்கள் இருவருடைய பாராட்டு.

நாவலை முடித்து விட்டு என் மனைவியிடம் இது பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நான் சமீபத்தில் எதையும் பாராட்டியே தான் கேட்கவில்லை என்றாள் என் மனைவி. காரணம், பாராட்ட ஏதும் இல்லாததே.

9.15க்கு S.பாலசந்தரின் வீணை ரேடியோவில். கேட்டுக்கொண்டிருந்தவன் 10.00 மணிக்குப் படுத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன். 10.30 வரையிலும் வீணை. பிறகு உடனே தொடர்ந்தது. பாலச்சந்தரின் வீணைக்கு நான் ரசிகன். எனக்கு இடையில் உங்கள் நாவல் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தது. அதன் முடிவு திரும்பத் திரும்ப வந்தது. இரவில் தூக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத அமைதியான ஒரு வித பிரக்ஞை நிலையில் நாவல் முடிவு திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. காலையில் எழுகிறபோதும் அதே நினைவோடு எழுதுகிறேன். என்ன அற்புதம் இது. நீங்கள் நாவலை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சபாஷ்.,!

நீங்கள் என் அருகில் இருந்தால் சபாஷ்..சபாஷ்.. என்று உங்களைத் தட்டிக் கொடுப்பேன். உங்கள் குணவிஷேசங்களைக் கூட என் கருத்தில் கொள்ளாது என்னைப்பற்றி என்ன நினைப்பீர்கள் என்ற கவலையற்று உங்களைத் தட்டிக் கொடுப்பேன். சபாஷ்.!

வெற்றுப்பாஷை மட்டும் சொல்லிப் பயன் இல்லையென்பதால் சில காரணங்களை இங்கு சொல்கிறேன். மற்றவற்றை நான் எழுத எண்ணியிருப்பதில் சொல்வேன். பாத்திரங்களின் மனோதத்துவம் நன்றாக உருவாகியிருக்கிறது. வேண்டிதைச் சொல்லி வாசகக் கற்பனையில் உருவாக வேண்டியதை உருவாகும் விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள். சந்தர்ப்பங்கள் வெகு அற்புதமாக உருவாகியிருக்கின்றன. நல்ல சமூகப் பிரக்ஞையிருக்கிறது. நல்ல நியாயம் இருக்கிறது. வாசகனுக்கு நல்ல மனவிளைப்பு உண்டாகின்றது. அறிவு ஏற்றுக் கொள்கிறது. உணர்வும் பங்கு கொள்கிறது. நல்லது.

உங்களுடையது வேறு எதுவும் நான் படித்ததில்லை.

இனி உங்கள் எழுத்துக்கள் என் கவனத்துக்கு வரும் போது அதைப் படிக்க எனக்கு ஆர்வம் இருக்கும்.

இப்புத்தகத்தை சென்னை நூல்நிலையங்களுக்கு விற்க ஏற்பாடு உண்டா உங்களுக்கு. சென்னை நூல் நிலையங்களுக்காக 600 பிரதிகள் வாங்குகிறார்களாம். இதன் மூலம் உங்கள் தயாரிப்புச் செலவை நீங்கள் திரும்பப் பெற்று விடலாம். உங்கள் அடுத்த முயற்சிக்கு இது உதவும். உங்கள் அடுத்த புத்தகமும் இன்னும் பிரமாதமாக வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான திறமையிருக்கிறது உங்களிடம். இன்னும் ஆழத்துக்குப் போக முடியும் உங்களால் என்றே நினைக்கிறேன். இன்னும் ஆழமாக இன்னும் ஆழமாக ஊடுருவிக் கொண்டு போக வேண்டும் நீங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

திரு.ஞானராஜசேகரனை இம்மாதம் 14ஆம் தேதி மீண்டும் சந்திக்கிறேன். இந்தப் புத்தகச் சிறப்பை கண்டவரிடமெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் ரொம்ப சந்தோஷமாக இருங்கள்.

அன்புள்ள,
முத்துசாமி.