...
 
 
கடித இலக்கியம்
நாஞ்சில் நாடன்
 
 
ம.இல.தங்கப்பா
09.11.2010

அன்புக்குரிய நாஞ்சில் நாடன் அவர்கட்கு

வணக்கம். என் அஞ்சல் அட்டை கிடைத்திருக்கும். அதன் பிறகு உங்களுக்கு எழுத இப்பொழுது தான் நேரம் வாய்த்தது.

நீங்கள் விடுத்திருந்த உங்கள் எல்லாக் கட்டுரைகளையுமே படித்து விட்டேன். சில கட்டுரைகளை என் மனைவியும் நானும் சேர்ந்து படித்தோம். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலர் நன்றாக எழுதினாலும், ஆங்கில இலக்கியத்தைப் படித்து விட்டு அதனை அடியொற்றிப் புலமை செய்பவராகவே இருக்கின்றனர். நனவோடை (Dream of Consciousness) பின் நவீனத்துவம் (Post Modernism) என்றெல்லாம் பேசுகிறார்கள்.

(பின் நவீனத்துவம் என்பது சரியான தொடர் அன்று. நவீனத்துவம் என்பதைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பது என் குறை. அதை ஏற்றுக் கொண்டாலும் நவீனத்துவத்துக்குப் பின் என்று தொடர் அமைந்தால் தான் சரியாக இருக்கும். அது கிடக்கட்டும்)

ஆயினும் ஒரு மொழியில் எழுதுபவர்கள் அம்மொழி பேசும் மண்ணிலும், அதன் மரபிலும் ஆழ வேரூன்றியவர்களாக இருக்க வேண்டும். கிளை மேலே பரவலாம். ஆனால் வேர் மண்ணில் இருக்க வேண்டும். மண்ணிலும் மரபிலும் வேரூன்றியிருப்பவராக உங்களை நான் காண்கிறேன்.

தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட ஏதேனும் ஒரு நோக்கங்கருதி மொழியையும் இலக்கியத்தையும் பயில்பவர்களாக இருக்கின்றார்களே தவிரக் குளத்தில் குதித்து நீந்தும் சிறுபிள்ளைகளின் மகிழ்ச்சியோடு தமிழிலக்கியத்தில் முங்கித் திளைப்பவராக இல்லை.

ஆக்க வழியில் எதையும் செய்யாமல், ஆக்க வழியில் எண்ணியும் பாராமல் வெற்றுப் புகழ்பாடுபவர்களே மிகுதி.

தமிழ்ச் சொற்களிலும் பழைய இலக்கியங்களிலும் உங்கட்குள்ள ஈடுபாடும் அறிவும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன.

நீங்கள் சொல்வது போல் மக்கள் வழக்கிலிருந்தும் தமிழ்க் குடும்ப மொழிகளிலிருந்தும் உயிர்ப்புமிக்க தமிழ்ச் சொற்கள் தொகுக்கப் பட வேண்டும். அகராதிகள் உருவாக்கப் படவேண்டும்.

படித்தவர்கள் அறிவுச் சோம்பல் (Intellectual Laziness) கொண்டவர்களாகவும் தன்னலங்கருதி அதிகாரத்திலிருப்பவர்களின் புகழ் பாடுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். மொழியின் உயிர்த்துடிப்பான வளர்ச்சி பற்றிய அக்கறை அவர்கட்கில்லை. இத்தகையவர்களைத் தோல் உரித்துக் காட்டிச் சாடியிருக்கின்றீர்கள்.

'ஆழிப்பேரலை' என்ற சொல்பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது ஒரு மறு கண்டுபிடிப்புத்தான். நீர் வீழ்ச்சி போல. அருவி இயல்பான தமிழ்ச்சொல். அது போல் ஆழிப்பேரலைக்குக் கடல்கோள் என்ற அருமையான தமிழ்ச் சொல் இருக்கிறது.

சொற்களில் திளைக்கும் மனம் இருக்கிறதே- அதுவே ஒர் அழகு. மொழியை வெறும் ஊடகமாகப் பார்க்காமல் பண்பாட்டுத் தடயமாகப் பார்க்க வேண்டும் என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சொற்களின் மீது உங்களுக்கிருக்கும் ஈடுபாடு மணமாலையும் மலர்வளையமும் என்ற கட்டுரையிலும் நன்கு புலப்படுகின்றது.

செம்மொழி என்று சொல்லி மக்களை ஏமாற்றும் வெற்று நடிப்பாளர்களை அடையாளம் கண்டிருப்பது முதல் மகிழ்ச்சி. சொற்களை அவர்கள் மக்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றார்கள். சொற்களைத் தொகுக்கும் வேலை எவ்வளவு இன்றியமையாதது !

நாஞ்சில் நாட்டுச் சொற்கள் சிலவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றீர்கள். மொழியின் அழகை எடுத்துக்காட்டுபவை இத்தகைய சொற்களே. சூடு என்ற சொல்லுக்கு நெல்லரி என்பதும் ஒரு பொருள். சூடடித்தல் என்ற தொடரை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அத்தொடர் எங்கள் ஊர்ப்பக்கமும் வழங்குகின்றது. (எங்கள் ஊர் நெல்லை மாவட்டம் - தென்காசி அருகில்)

'பொல்லாம் பொத்துதல்' என்ற சொல் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? எங்கள் ஊரில் வழங்கும் சொல் அது. ஒருவேளை நாஞ்சில் நாட்டிலும் அது வழங்கக் கூடும். கிழிந்த துணியை மூட்டித் தைப்பது தான் அது Darning என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை என்று இச்சொல் பெரும்பாணாற்றுப்படையில் வருகிறது., அக்காலமுதல் இக்காலம் வரை தொடர்ந்து வழக்கிலிருப்பது நினைக்க மகிழ்ச்சியாயிருக்கின்றது. அம்பலம், மன்றம் என்ற சங்க இலக்கியச் சொற்கள் கேரளத்தில் இன்றும் வழக்கில் உள்ளன. மன்றம்-மன்னம் என மருவி வழங்குகின்றது.

கரிசனம், உரித்து என்ற எங்களூர் வழக்குச் சொற்கள் பொருள் பொதிந்த அழகான சொற்கள். கரிசனம் - Caring, Interest உரித்து - கிழமை என்ற இலக்கியச் சொல்லின் வழக்கு வடிவம் எனலாம்.

‘நாவாய்’- கப்பலைக் குறிக்கும் தமிழ்ச் சொல். நாவி [கொழித்துச்- (அலைகளை இருபுறம் ஒதுக்கு) ] செல்வது நாவாய்.

சுளகு அல்லது முறத்தைக் கொண்டு கல்நிறைந்த நெல் அரிசி அல்லது பயறு முதலியவற்றை நாவுவது (கல்லைக் கொழித்து ஒதுக்குவது) உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அலைகளை நாவிச் செல்வது நாவாய்- இது தான் கிரேக்க மொழியில் Navos என்றாகின்றது. அதனடியாய் பிறந்த ஆங்கிலச் சொல்லே கப்பற்படையைக் குறிக்கும். Navy ஆகும்.

நரந்தம் (நாரத்தை) தமிழ்ச் சொல். வடமொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் Naranj என்றாகி ஆங்கிலத்தில் Orange என வருகிறது. எவ்வளவு சுவையான செய்திகள் !

மால்பு என்ற சொல் புறநானூற்றில் வருகிறது. கண் ஏணி அதன் பொருளாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. 1969 ஆம் ஆண்டு குடும்பத்துடன் பத்து நாட்கள் கல்ராயன் மலையில் வாழைப்பாடி என்ற ஊரில் மலை வாழ் மக்களுடன் தங்கியிருந்தோம். அவர்கள் பயன்படுத்திய மூங்கில் ஏணியை பார்த்த போது தான் கண் ஏணி என்றால் என்ன என்பது எனக்குப் புரிந்தது. கணுக்களோடு (கண்களோடு) கூடிய ஒரு பெரிய மூங்கிலை இரண்டாகப் பிளந்து மாற்றிப் போட்டுக் கணுவிலிருந்து கிளைத்திருந்த மூங்கில் முள் அல்லது முளையை ஏணிப் படியாக இணைத்துச் செய்தது தான் கண் ஏணி. நடுவில் தனிச் சட்டம் வைக்காமல் முளை (வளர்ந்து பெரிதாகி வலிமை பெற்றது) களையே படிகளாகக் கொண்டது.

பிழா என்பது வட்டமான மூங்கில் சுளகு அல்லது தட்டு. எங்கள் ஊரில் பிழாச் சுளகு என்போம். இச்சொல் சங்க இலக்கியத்தில் எங்கோ வருகிறது. சங்க இலக்கியத்தில் 'கொட்டம்' எனப்படுவதை எங்கள் ஊரில் கொட்டப்பெட்டி என்போம். பழைய பனங்குடை எங்கள் ஊரில் இப்பொழுது பதநீர் குடிக்கப்பயன்படும் பனை ஓலைப்பட்டைக்குரிய அக்காலச் சொல்.

இப்படிச் சொற்களில் மூழ்கித் திளைத்துக் கொண்டேயிருக்கலாம். மொழியை வளப்படுத்தும் வழிகளுள் பழஞ்சொற் புதையலை அகழ்ந்தெடுத்தலும் ஒன்று.

சேமச் செப்பு வெப்பத்தைச் சேமிக்கும் வெந்நீர்க்குடுவை (Thermos Flask). நெடுநல்வாடையில் வருகிறது என நினைக்கிறேன்.

சொற்களுள் நல்ல சொற்கள் தீய சொற்கள் என்பது இல்லை என்பது உண்மையே. சொல்சுத்தம் என்பது சொல்தூய்மையைக் குறிக்கும் தொடரன்று. சொல் வேறு, செயல் வேறாய் நடப்பவர்கள்- சொன்னது போல் செய்யாதவர்களைக் குறிக்கவே அது பயன்படுத்தப்படுகிறது.

இன்று வடசொற்களாய்க் கருதப்படும் பல சொற்கள் தமிழ்ச் சொற்களாகவோ அல்லது தமிழ்வேர் கொண்டனவாகவோ இருப்பதைப் பாவணர், அருளி முதலியோர் எடுத்துக்காட்டுகின்றனர். சொல் ஆய்வுக்குள் நுழைவதே ஒரு சுவையான வேலை. படைப்புலகில் இருந்து கொண்டும் மொழிப்புலத்துள் உள்ளம் செலுத்துவது இன்றைய தமிழ் எழுத்தாளர் பலரிடம் இல்லாதது. உங்களால் நாஞ்சில் நாட்டின் வழக்குச் சொற்கள் பலவற்றைத் தொகுக்க முடிந்தால் அது மிகச் சிறந்த பணியாக இருக்கும். ஓய்வு நேரப் பணியாக நீங்கள் அதைக் கொள்ளலாமே.!

ஆண்மனப்புற்று என்ற கட்டுரையையும் அதன் எதிர்வினை, மறுவினையையும் படித்தேன். எதிர்வினையாளர் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆண்களுக்குப் பெண்களின் பாலியல் உறுப்புகளில் கவனம் செல்வது இயற்கையே. அது பிறழ்ச்சி நிலையாகப் (வக்கிரமாக) போவது தான் வருந்தத் தக்கது. பாலியல் உறுப்புகளின் மீது அவனுக்கு வெறுப்போ காழ்ப்போ வன்மமோ இருப்பதாகக் கூற முடியாது. அவன் உள்ளத்தில் வேறு காரணங்களால் வெறுப்பு அல்லது வன்மம் ஏற்பட்ட பிறகு அவன் பெண்ணைத் துன்புறுத்த நினைக்கையில் பாலுறுப்பின் மீது அவன் சினத்தைக் காட்டுகிறான். நீங்கள் சொல்லும் ஆண்மனப் புற்றினைப் பற்றி நான் இப்படி நினைக்கிறேன். தனக்கு எதிர்ப்பில்லை, தண்டனை இல்லை அதிகாரம் தன்கையில் இருக்கிறது என்ற சூழ்நிலை பொதுநிலை (சராசரி)யான ஓர் ஆண்மகனுக்கு ஏற்படும் பொழுது அவன் பாலியல் குற்றங்களை இழைக்கின்றான். தன் பாலுணர்ச்சியை இயல்பு நிலையில் தணித்துக் கொள்ள முடியாத பொழுது அதை வன்முறை மூலம் தணித்துக் கொள்ளப் பார்க்கிறான். இராமன் சூர்ப்பநகைக்கு இழைத்த கொடுமைக்கு எந்தச் சப்பைக் கட்டும் கட்ட முடியாது. அது மிக மிக அருவருக்கத் தக்க அவன் மனப்புற்றையே வெளிப்படுத்துகிறது என்று தான் நான் கூறுவேன்.

ஆண்கள் இப்படி பிறழ்ச்சியுடையராக வளர்வதற்குக் காரணம் சரியான கல்வி இன்மையே. நாம் உயர்நிலைக்கலவி என்று பீற்றிக் கொள்ளும் எந்தக் கல்வியும் மாந்தனை மாந்தனாக உருவாக்குவதில்லை. அன்பற்றவனாகவே அவனை உருவாக்குகின்றது. அறிவுக்குத் (அறிவியல் வளர்ச்சிக்கு) தேவையற்ற முதன்மை கொடுத்து அன்பைப் புறக்கணித்து விட்டது. அதன் விளைவே குமுகாயத் தீமைகள்.

கல்வியின் முதற்பணி அன்பையும் மாந்தநேயத்தையும் உருவாக்குவதாகத்தான் இருக்க வேண்டும். இதைச் செய்யாத வரை ஆண்களின் மனப்புற்று வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.

அழகைப் பற்றிய உங்கள் எண்ணங்களோடும் எனக்கு உடன்பாடே. உடலழகென்பது பார்வையைப் பொறுத்தது. மரபுசார்ந்த பழக்கங்களுடனும் தொடர்புடையது. ஓரினத்தவர் அழகெனப் பாராட்டுவது மற்றோரினத்தினர்க்கு உடன்பாடாக இருப்பதில்லை. “வெள்ளை வெறுஞ் சொள்ளை, கருப்புக் கட்டி வயிரம் “ என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். வெறும் சிவப்புத் தோலால் மட்டும் அழகு வந்துவிடுவதில்லை. அன்போடு பார்த்தால் எல்லாம் அழகே ; எல்லோரும் அழகே. காக்கையும் ஆந்தையும் எவ்வளவு அழகானவை.! அழகைப் பற்றிய தவறான எண்ணமே அவை அழகில்லை என்று கூறக் காரணமாகின்றது. சார்புநிலைக்கு ஆட்படாமல் உள்ளதை உள்ளபடி பார்க்கக் கற்றுக் கொண்டால் அழகு பற்றிய மனக்கோணலுக்கு இடம் ஏற்படாது. இக்கருத்தை நன்றாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.

மற்றக் கட்டுரைகளில் உங்கள் இலக்கிய நண்பர்கள் பற்றியும் அவர்களோடு உங்கட்கிருந்த தொடர்பு பற்றியும் கூறியுள்ளீர்கள். நல்ல இலக்கியச் சூழல், நட்பு உங்களுக்கிருந்திருக்கின்றது. படைப்பாளர்களிடையே இத்தகைய உறவு மிக மிக இன்றியமையாதது.

நீங்கள் குறித்துள்ள பலரின் எழுத்துக்களைப் பெரிதும் கேள்வியுற்றிருக்கிறேன். அவர்களின் எழுத்துக்களைப் பெரிதும் படித்ததில்லை. இலக்கிய உலகுக்குள் நான் அடியெடுத்து வைத்த பொழுதே மொழி உணர்வாளனாகத் தான் அடி எடுத்து வைத்தேன். பெரியாரின் பகுத்தறிவு எண்ணங்களும் பாரதிதாசனின் தமிழுணர்வுப் பாடல்களுமே என் தொடக்கத் காலத்தை உருவாக்கியிருந்தன. இலக்கியம் படைக்கும் ஆர்வம் மிகுதியாக இருந்தும் மொழிக்காப்பு, மொழி உரிமை பற்றிய எண்ணங்களே என்னை மிகுதியும் ஆட்கொண்டிருந்தன. அதனால் தான் பொதுவான இக்காலத் தமிழ் இலக்கிய உலகத்துக்குள் நான் நுழையாதிருந்து விட்டேன்.

பெரும்பாலான இலக்கியப் படைப்பாளர்கள் தேவையான அடிப்படை மொழியுணர்வு- மரபு வழியான பண்பாட்டுணர்வு இல்லாதவர்களாகவும் புரிந்து கொள்ளாமையின் விளைவாக அவற்றை எதிர்ப்பவர்களாகவும் இருந்தமையால் இலக்கிய உறவுகளை வளர்ந்துக் கொள்வதில் நான் ஈடுபாடு காட்டவில்லை.

நீங்கள் அப்படியில்லாமல் நல்ல இலக்கியத் தொடர்புடன் இருந்திருக்கிறீர்கள். மாந்தர் உறவுகளிலும் திளைத்திருக்கின்றீர்கள். கருத்தளவில் வேறாகும் மாந்தர் பலர் எனினும் நட்பு அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் விலகியிருந்தாலும் குறுக்குச்சுவர் எதுவும் கட்டிக் கொண்டதில்லை. தீமைகளைக் கடுமையாகச் சுட்டிக் காட்டினாலும் யார் மீதும் காழ்ப்புக் கொண்டதில்லை. நடுவுநிலை பிறழ்ந்து நின்றுதில்லை.

நீங்கள் கூறியிருக்கும் “பிறப்பால் வளர்ப்பால் பயிற்சியால் யாவர்க்கும் தனித் தனிப் பண்பாட்டு அடையாளாங்கள் அமைந்து விடுகின்றன. அவர்தம் சமய நெறிகளும் உணவு பழக்க வழக்கங்களும் மொழியும் மற்றவர் நலனின் குறுக்கிடாதவரை அவை காழ்ப்புக்கும் தாக்குதலுக்கும் உரியன் அல்ல” என்ற கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன்படுபவன் நான். ஆனால் ஒன்று. எவன் ஒருவன் தன்னை உயர்ந்தவனாகக் கருதிக் கொண்டு மற்றொரு மாந்தனைத் தாழ்வாக நினைக்கின்றானோ, தன் தன்னலத்தால் மற்றவன் நலத்துக்கே குறுக்கே நிற்கின்றானோ அவனை என்னால் மாந்தனாக மதிக்க முடிவதில்லை. மாந்த நேயம் இன்மையைப் போல் மிகப் பெருந்தீனம் உலகில் வேறில்லை. அதே பொழுது மாந்தநேயம் அற்றவன் பால் அன்பு செலுத்துவதும் மாந்த நேயம் ஆகாது.

நீளமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கின்றேன். பல மடல்கள் இப்படித்தான் நீண்டுகொண்டு போய் விடுகின்றன.

இருந்தாலும் மடல் எழுதுவதென்பது எனக்கு மகிழ்ச்சியானதொரு வேலை.

வரவர நேரந்தான் கிடைப்பதில்லை. படைப்பிலக்கியத்துக்குள் நுழையவே முடியாதபடி கட்டுரைகள் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டன. அவ்வப் பொழுதைய சூழ்நிலைக்கு அவை தேவையாகவும் இருக்கின்றன.

முத்துக்குமரன் அவர்கள் இல்லத்தில் தெளிதமிழ் இதழ்கள் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். அவற்றில் என் பாடலும் ஆசிரியவுரையும் பார்க்கலாம்.

உங்கள் கட்டுரைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. என் மனைவிக்கும் அவ்வாறே. சில செய்திகள் நான் எழுதுவது போலவே உள்ளன என்பது அவர் கருத்து.

தமிழினியில் இடையிடையே என் கட்டுரைகள் வருகின்றன. படித்துப் பாருங்கள்.

அன்புடன்
தங்கப்பா
புதுவை.