...
 
 
கடித இலக்கியம்
நாஞ்சில் நாடன்
 
 
ஜெயமோகன்
நாகர்கோவில்
03.02.2006

அன்புள்ள நாஞ்சில் நாடன்

இத்துடன் சிரவண பெலகொளா குறித்து ஓம்சக்தி இதழில் வெளிவந்த கட்டுரை மற்றும் சில தகவல்களை அனுப்பியுள்ளேன். நீங்கள் எங்களுடன் வர ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி. இது ஒரு நல்ல பயணமாக இருக்குமென எண்ணுகிறேன். பொதுவாக எனக்கு பயணங்கள் மீது விடாய் உண்டு. பயணத்தை தொன்றுமுதலே அகவய நோக்குக்கு இன்றியமையாத ஒன்றாக எண்ணி முன்வைத்துள்ளனர் நம் முன்னோர். அதற்கான காரணங்கள் நம் மரபில் பலவாறாகச் சொல்லப்பட்டுள்ளன. ஒரு புது இடத்தை அல்லது ஒரு புதுப் பொருளை நாம் நோக்கும்போது நமக்கு ஏற்படுவது இப்புடவியை(பிரபஞ்சத்தை) முதன்முதலாக நோக்கும் உள்ளத்துளிக்கு ஏற்படும் பெருவியப்பே என்கின்றது பௌத்த மரபு. அதை அவர்கள் ’அந்தகரண விருத்தி’ என்று சொல்கிறார்கள்.

அப்போது நம்முள் மிக ஆழத்தில் உறையும் ஒன்று நடுக்குறுகிறது என்கிறார்கள். உடனே நம் அகத்துள் நிரப்பியுள்ள ஆணவம் அப்பொருளை அடையாளம் காணவும், அடையாளப்படுத்தவும் தொடங்கிவிடுகிறது. ‘இதைபோன்ற அது’, ‘இது அதற்கு நிகரானது’, ‘இது அதன் நீட்சி, என நாம் எண்ண தொடங்குகிறோம். படிப்படியாக அதை நாம் முற்றாக அடையாளப்படுத்துகிறோம். இது மொழியிலேயே நிகழ்கிறது. ஆகவே இதை ‘சப்தாகரண விருத்தி’ என்கின்றனர்.

அதன் பின் ஒருபோதும் நாம் முதலில் அடைந்த அந்த வியப்பையும் உவகையையும் அடைய இயலாது. அதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றாகவே அறிகிறோம். இது ‘ததாகரண விருத்தி’ எனப்படுகிறது.

மேலான கலை, இலக்கியங்கள் இந்த அடையாளப்படுத்தலை நிறுத்திவைத்து மீண்டும் அதே கண்டடைதலின் உவகையை அளிக்கும் என்பது இந்திய அழகியல் கொள்கை. ஆகவே நாம் நன்கறிந்ததையே கவிதையில் கண்டு வியந்து மகிழ்கிறோம்.

நாம் அன்றாடம் காண்பவை நம் ஆணவத்தால் போர்த்தப்பட்டு நம்மிடமிருந்து தங்களை மறைந்துக் கொண்டுள்ளன. புதிய இடம் அத்திரை இல்லாமல் சற்று நேரம் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அத்தருணங்களில் நாம் நம் ஆணவம் அழிந்து நிற்கும் சில கணங்களை அடைகிறோம். பயணம் இதன் பொருட்டே.

இவ்வருடம் முழுக்க நான் சற்று ஊக்கத்துடன் நான் நடுவே விட்டுவிட்ட ஊழ்க(யோக) பயிற்சிகளை செய்துவருகிறேன். நம் மரபில் பயணம் அதன் ஒரு பகுதியாகச் சொல்லப்பட்டுள்ளது. ஊழ்கத்தில் இருக்கையில் சூழ்ந்துள்ள பொருட்கள் படிமங்களாக நம்முள் வந்தபடியே இருக்கும். பழகிய பொருட்கள் காமகுரோதங்களால் அடையாளப்படுத்தப்பட்டவை என்கின்றன யோக நூல்கள். பயணம் காட்சிகளை செதுக்கி அகப்படிமங்களை புத்தம்புதிதாக ஆக்குகிறது.

ஆகவே எப்போதும் நான் தனியாகவே செல்வது வழக்கம். குறைவாகவே பிறருடன் சென்றுள்ளேன். இம்முறை உள்ளத்துக்கு உகந்த நண்பர்களுடன் . இதுவும் மேலான ஓர் நிகழ்வாக இருக்கும் என நம்புகி றேன். நான் பயணங்களில் சில நெறிகளையும் சில உளநிலைகளையும் பேணுவதுண்டு. அவற்றை சொல்லலாமெனப் பட்டது. ஆகவே தான் இ க்கடிதம்.

என்னைப் பொறுத்தவரை பயணம் என்பது பயணம் என்னும் அனுபவத்துக்காகவேயாகும். பயணத்தில் பெறும் எல்லா அனுபவங்களும் அதன் கனிகளே, வசதிகள், சிக்கல்கள், துன்பங்கள், உவகைகள் அனைத்தும் நிரம்பியதே பயணம். சொல்லப்போனால் நாம் நமக்கு வசதியாக ஆக்கிவைத்துள்ள நம் சூழலில் இருந்து தப்பித்தலே பயணம் என்பது. ஆகவே வசதியான பயணம் என்பதே பிழை என்று எண்ணுகிறேன். பயணத்தை வசதியாக ஆக்க நாம் முயலலாம். ஆனால் வசதிகளை பயணத்துக்கான முன்விதிகளாக கொள்வதோ, வசதிகள் இன்மைக்காக மனம் வருந்துவதோ பயணம் என்னும் மனநிலைக்கே எதிரானதென்பது என் உறுதியான கொள்கையாகும்.

ஆகவே பயணத்தில் ஒருபோதும் வசதிக்குறைவுக்காக மனக்குறை கொள்வது கூடாது. தேவைகளை மட்டுமே சொல்லலாம். எக்காரணத்தாலும் வசதிக்குறைவுகள் குறித்து பேசுவதோ, கருத்து பகிர்வதோ கூடாது. கூட வருபவர் அந்த எண்ணமே இல்லாமலிருக்கலாம். ஒரு சொல் சட்டென்று இன்னொருவரின் மொத்த மனநிலையையே குலைந்துவிடும். ஒருவருடைய மனநிலை அனைவருக்கும் தொற்றும்படி நடத்தல் கூடாது.

என் அனுபவத்தில் ஒன்று அறிந்துள்ளேன். நான் மிகமிக மகிழ்ந்து கண்ட பல முக்கியமான இடங்களுக்கு நான் வாழ்வில் மீண்டும் சென்றதே இல்லை., பெரும்பாலும் செல்ல முடிவதேயில்லை. மிக அருகே கூட இருக்கும். ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் நாம் கற்பனைசெய்யக்கூடுவதைவிட மேலானது. எல்லா பயண அனுபவங்களும் வாழ்நாளில் ஒரேஒரு முறை மட்டும் கிடைப்பவையே.

ஆகவே ஒருபோதும் மனநிலைகளால் இடங்கள் மறைக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு இடத்திலும் நம் அகமனம் உவகையுடனும் ஊக்கத்துடனும் இருப்பதற்கு நம்மாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பயணத்தில் முன்னரே இடங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளையும் கற்பனைகளையும் கொண்டிருப்பது பயணத்தை சீர்குலைக்கும் என்பது என் அனுபவம். எந்த இடம் எப்படி இருக்கும் என நாம் அறியமாட்டோம். ஓர் இடம் நாம் எதிர்பார்த்ததை விட மேலாக மனதைக் கவரலாம். இன்னொரு இடம் ஏமாற்றம் அளிக்கலாம். ஓர் இடத்தில் நாம் உற்சாகமான மனநிலையில் செல்லலாம். இன்னொரு இடத்தில் சலிப்புற்ற மனநிலையில் செல்லலாம். பொதுவாக பயணங்களில் நாம் எதை அடைகிறோம் என்று பயணம் முடிந்த பின்னரே சொல்ல முடியும். ஓர் கால இடைவெளிக்குப் பின்னர் எண்ணிப்பார்க்கையில் நாம் கவனித்தேயிராத விஷயங்கள் நம்முள் சென்றிருப்பதை உணர முடியும். நாம் ஓர் வசதிக்குறைவுக்காக வருந்திய இடத்தில் நம் ஆழ்மனம் அரிய நகர்வு ஒன்றை அடைந்திருக்கும்.

ஆகவே இடங்களைப் பற்றிய முன் கணிப்பும் ஏமாற்றமும் அடைதலென்பது நல்ல பயணிக்குரிய குணமேயல்ல. அந்த இடம் ஏற்கனவே அங்கு உள்ளது. நாம்தான் அங்கு செல்கிறோம். அந்த இடம் நாம் நினைப்பதுபோலிருக்க வேண்டுமென எதிர்பார்க்க நமக்கு உரிமையில்லை. ஒருபோதும் அத்தகைய எண்ணங்களை வளர்க்கக் கூடாது. அப்படி எண்ணம் உருவானாலும் மறந்தும் அதை வெளிப்படுத்தக்கூடாது. அவ்வெண்ணத்தைக் கூறுவதுவழியாக நம்மருகே அரிய அனுபவம் ஒன்றில் திளைத்திருக்கும் ஒருவரை நாம் திசை திருப்பிவிடக்கூடும். அந்தந்த இடத்தை அப்படியே ஏற்கும் மனநிலையில் இருக்க வேண்டும்.

பயணமும் மௌனமும் ஒன்றோடொன்று பிரிக்க இயலாதவை என்பது என் எண்ணம். என் பயணங்களில் நான் மாதக்கணக்கில் பேசியதேயில்லை. சேர்ந்து போகும் போது ஒன்று செய்யலாம். காரில், விடுதி அறைகளில்,உணவு உண்ணும் இடங்களில் இயல்பாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால் இறங்கிக் காணும் இடங்களில் எங்கும் தேவையான மிகக்குறைந்த அளவு தகவல்களுக்கு மேல் எதையுமே பேசாமலிருக்கலாம். முழுமுற்றான மௌனத்துடன் தான் நாம் வரலாற்று இடங்கள் முன் நிற்க வேண்டும்.

பயணத்தில் கசப்பையோ துன்பத்தையோ அளிக்கும் ஏதேனும் நடந்தால் அதை உடனே உதறி விட்டு பயணத்தில் ஆழும் மனநிலையில் இருக்க வேண்டும். அதைப் பற்றி பேசுவது விவாதிப்பது புலம்புவது கூடாது.

பயணத்தில் ஊருடனான தொடர்பை முற்றாக விட்டுவிடுவது அளிக்கும் விடுதலை மிக மிக முக்கியமானது. நாம் தினமும் செய்யும் வணிகத்தையோ தொழிலையோ குடும்ப கவலைகளையோ உறவுகளையோ கூடவே கொண்டு போகும்போது நாம் உண்மையில் பயணமே செய்வதில்லை. சமீபகாலமாக செல்பேசி அத்தகைய விடுதலையை அளிக்காத ஒன்றாக ஆகியுள்ளது. செல்பேசியை பெரும்பாலும் ‘சைலன்ஸ் மோட்’டில் வைத்து விடலாம் என்றும் தேவையான தகவல்களை மட்டுமே நமக்கு அளிக்கும்படி வீட்டில் சொல்லிவிடலாம் என்றும் எண்ணுகிறேன்.

சிலர் சேர்ந்து செல்லும் போது ஒருவரோடொருவர் விவாதங்களில் ஈடுபடலாகாது. எத்தனை உயர்ந்த விஷயமானாலும் விவாதம் ஆணவத்தையே உசுப்புகிறது. சிறிய மனக்கசப்போ விலகலோ உருவாகலாம். ஒரு சிறிய மனச்சீண்டல் ஓர் முக்கியமான இடத்தை நம் கண்ணிலிருந்தே மறைந்து விடக்கூடும். எதைக் குறித்தும் கடுமையான கருத்துக்களை சொல்லாமலிருப்பதும் எக்கருத்தையும் எவருமே மறுத்துப் பேசாமலிருப்பதும் இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். இதை நித்யா ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

போகுமிடங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை நான் விரும்புவதில்லை. சில சமயம் அது தேவையாக ஆகிறது. அது கண்டிப்பாக நம் மனநிலையை சீர்குலைக்கிறது. வேடிக்கை பார்ப்பவர்களாக ஆக்கி நாம் அவ்விடங்களில் ஈடுபடுவதை மறைக்கிறது. அதை தவிர்க்கலாம் என்று எண்ணுகிறேன். ஒருவர் விரும்பி ஃபோட்டோ எடுத்தால் தானே அதை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

எனக்கு நானே இவ்விஷயங்களை தெளிவுபடுத்தும்பொருட்டே இதை எழுதினேன். பிரதி எடுத்து பயணம் செய்யும் பிற மூவருக்கும் அனுப்பி வைக்கலாமே என்று பட்டது. ஆகவே தான் இக்கடிதம். எது எப்படி இருந்தாலும் ஒருவரோடொருவர் அன்பில்லாத நால்வர் சேர்ந்து பயணம் செய்தல் இயலாது. நம் பொது அன்பு நம்மை இணைக்கும் சரடு. இந்நெறிகள் ஒரு குறிப்பிட்ட மனநிலையை பயணம்செய்யும் காலம் முழுக்க நீடிக்க வைக்கும் பொருட்டு மட்டுமே.

உங்கள் கருத்தை நாடுகிறேன்.

அன்புடன்

ஜெயமோகன்

03/02/06

குறிப்பு : உடல்நிலை சரியில்லாமற் போனதனால் இந்தப் பயணம் என்னால் மேற்கொள்ள முடியாமற் போயிற்று - நாஞ்சில் நாடன்