நடனசாலை
 
 
மலையாள மூலம்: வி. திலீப்
தமிழில்: நிர்மால்யா
 

ரசிகர்கள் பல இயல்புகளைக் கொண்டவர்கள். சிலவேளை கடவுளுக்குக் கூட பிடிபடாது. அதைப் புரிந்து கொள்ளும் இடத்தில்தான் திரையரங்கு உரிமையாளனின் வெற்றி அடங்கி இருக்கிறது. நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் மாலைவேளை. இருப்பினும் தனது 'சுசிலா டாக்கீஸி'ல் முதல்காட்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் விற்றத் தீர்ந்து விடும் என்கிற தன்னம்பிக்கையில் பென்னி, ஃபிலிம் ஆப்ரேட்டர் அசோகனிடம் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான்.

அது கிராமப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு திரையரங்கு. ரசிகர்கள் தனியாகவும் கூட்டமாகவும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். பணிபுரியும் இடங்களில் இருந்து வந்தவர்கள் அதன் பேரிலும் மற்றவர்கள் ஏதோ காரணங்களாலும் வேர்வையில் நனைந்திருந்தார்கள். வியர்வை உலர்வதற்கு முன்பாக உள்ளே நுழைந்து, இருட்டில் ஒளிந்து கொள்ள பாதுகாப்பான இடம்தேடி அடிவைத்து நகர்ந்தார்கள். எனினும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. பனையோலை வேய்ந்த கூரை மீது பெருச்சாளிகள் பாய்ந்து திரிந்தன. மின்விசிறிகள் இரைந்தபடி சுழன்றுக் கொண்டிருந்தன. சந்தன நிறத்தாலான திரைச்சீலைகள் மீது உரிமையுடன் சிலந்திவலைகள் படர்ந்திருந்தன. அவை காட்சியின் தொல்லைத் தரும் சின்னமாகி விடவில்லை. இரவு முழுவதும் கண்விழித்துப் பணியாற்றிய தன்னை, நண்பகலில் போது தாட்சண்யமின்றி எதிர்த்துப் பேசிய காதலியினுடைய சொற்களின் வெம்மையில் உறக்கத்தைத் தொலைத்த திருடனும், ஏதோ காரணத்திற்காக உறக்கமிழந்த போலீஸ்காரனும் ரசிகர்களிடையே இருந்தார்கள். திருடனைப் பிடிப்பதற்கான கடமையும் அவனுக்கு இருந்தது. அரசியல் தொண்டனும் அவனது மனைவியும் சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தபோது அவர்களின் இருக்கைகளை அடையாளம் காட்ட இருட்டிலிருந்து ஒருத்தன் பென்டார்ச்சை ஒளிர வைத்தான். இருக்கையை அடையாளம் கண்ட பெண் அடுத்தவர்களுக்கு தெரியாமல் புன்னகைத்தாள்.

திரைச்சீலையில் ஒரு கதையின் ரகசியங்களின் சுருள் அவிழ்ந்தது. இருப்பினும், ரசிகர்களின் சிலர் அவ்வப்போது சிறுநீர் கழிப்பதற்காகவும் சிகரெட் புகைப்பதற்காகவும் வெற்றிலை மெல்லுவதற்காகவும் வெளியே வந்ததைப் போல காட்டிக் கொண்டார்கள். மீண்டும் உள்ளே நுழைந்து கதை எதுவரை எட்டியிருக்கிறது என்று உற்றுப் பார்த்தார்கள். சிலசமயம் இருக்கைகளில் அமிழ்ந்து அப்படியே உறைந்து போனார்கள். மனம் கவரும் திரைப்படும் அது. மனிதர்களுக்கிடையிலான உறவுகள் என்பதுதான் கருத்து உறவுகளின் ஏற்றத்தாழ்வுகள், சலமின்மை... 'ஹ' என்று போலீஸ்காரன் மூலமாக அவ்வப்போது ஆறுதல்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட அசாதாரண நிகழ்ச்சிப் போக்குகள். ஆனால் திருடனுக்கு, எப்போதோ எரிச்சல் மூண்டுவிட்டது. 'சினிமா கொஞ்சமும் நன்றாக இல்லை' என்று உரக்க தனது கருத்தை வெளிப்படுத்திவிட்டு பின் இருக்கையைத் திரும்பிப் பார்த்தான். அப்போது அண்டை வீட்டுக்காரனான விஜேஷிம் புது மணப்பெண்ணும் நெருக்கமாக அமர்ந்து சில தமாஷ்களைப் பகிர்ந்து கொள்வதைக் கவனித்தான். திருடனின் ஆத்திரம் இரட்டிப்பானது. நாசமாகப் போனவன், ஊர் வாயிலே விழறான் என்று எரிச்சலடைந்து அவசரமாக வெளியேறிய பிறகு ஒரு பீடித்துண்டை உதட்டுக்கிடையில் திணிப்பதைப் போல காட்டியபடி மீண்டும் இருக்கைக்குத் திரும்பினான்.

சிறிய ஆவலின் வெளிப்பாடுகளாகச் சிணுங்கத் தொடங்கிய மழை வெட்கத்தைத் துறந்து திரையரங்கின் மீது நிர்வாணமானது. புராஜக்டர் அறையில் ஒரு பீடியைப் பற்ற வைத்து பென்னி, அசோகனிடம் மீண்டும் பேச்கைத் தொடங்கினான். ‘சி’ கிளாஸ் தியேட்டர்கள் எதிர்கொள்ளும் வசூல் இழப்பைப் பற்றியோ, வேறு எதையோ நினைத்தபடி உரையாடலுக்கு இடையில் உணச்சிவசப்பட்டான்: ‘மனுஷனோட தகுதிக்குப் பொருந்தாத படத்தை ஓட்டி நான் பணக்காரன் ஆகணும்னு இல்லே. சம்பாத்தியம் முக்கியம்னு நெனைச்சிருந்தா ஏற்கனவே நான் இதை கல்யாண மண்டபமா மாத்தியிருப்பேன். பெத்தவங்க காலம்தொட்டு இருக்கும் சொத்து இது. நடிகர் சத்தியன் விளக்கு ஏத்தி திறப்பு விழாவைத் தொடங்கி வெச்சார். ‘குட்டிக் குப்பாயம்’ முதல் படம் அப்புறம் நம்ம எந்தப் படத்தைப் போட்டோம்! ஞாபகம் இருக்குதா, ‘மனசின் அக்கரே’, ‘அதுலெ யாரு கதாநாயகி?’ நம்மோட பழைய நடிகை ஷீலாம்மா; சத்தியன் வாத்தியாரோட கருத்தம்மா. நீயும் நானும் படுக்கையை எடுத்து வந்து தூங்குவோமே அசோகா, காலம்ங்ற விஷயம்’.

காலத்தைப் பற்றி கூடுதலாகச் சொல்ல அசோகனுக்கு ஞானம் போதவில்லை. ஆகவே, அவன் வேலையிலேயே முனைப்பாக இருந்தான். பல வருடங்களாக இந்த வேலையைச் செய்து வருகிறான். சதுர வடிவிலான குகை வாயிலில் இருந்து இருட்டின் வழியாக நெளிந்து செல்லும் ஒளி ஊற்று. கண்ணீரும் சிரிப்பும் உட்பட்ட வாழ்க்கை அதற்குள் அடங்கி இருக்கிறதா? வெண்தோற்றத்தின் மீது வழுக்கி விழும் காட்சிகளுக்கும் ரசிகர்களுக்குமிடையில் என்ன நிகழ்கிறது, சினிமாவா? தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஒருபோதும் அசோகனுக்குத் தோன்றவில்லை. கையில் கிடைக்கும் படத்தைத் திரையிடுவது. ஓரிடத்தில் அமர்ந்து முறையாக வேகவேகமாக ரோல்களை மாற்றுவது. அவ்வளவுதான் ஒரு பீடியிலிருந்து அடுத்த பீடிக்குத் தீயைப் பற்ற வைக்க நேரம் அனுமதிப்பதில்லை. உணர்ச்சியின் மெல்லிய நூலிழை அறுந்து போனால் ரசிகன் அமைதியிழப்பான். அவன் கூச்சலிடுவான். அமளிப்படுத்துவான். அவனது உணர்ச்சிப் போக்குகளை முந்தி நான் ஓடியாக வேண்டும். வேகம் வேகம், இருப்பினும் ஓரிரண்டு முறை அசோகன் யோசித்துப் பார்த்ததுண்டு: ‘இவர்கள் எல்லாம் எதற்காக இங்கே வருகிறார்கள்? அரிசி வாங்குவதற்கான காசை மிச்சம் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர் இந்த அரங்கிற்குள் இருப்பார்கள்? ஆனாலும், அடுத்தவர்களின் வாழ்க்கை ரகசியங்களைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறார்கள். வேடிக்கை. அடிக்கடி பென்னி அஞ்சுவதைப் போல நல்ல கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளிவராத காலம் வரட்டும். ஒருநாள் இந்தச் சதுர வடிவத்தின் வழியாகப் பாம்பைப் போல ஊர்ந்து வருவேன் நான். திரைசீலையில் கதறி விழுவேன். இவர்கள் அழுவார்களா? சிரிப்பார்களா? அப்போது வெட்டி நீக்கிய ஒரு பிலிம் சுருளை அசோகன் கண்ணெதிரில் விரித்தான். காதலனும் காதலியும் கடற்கரையில்.

திரைச்சீலைக்குக் கண்ணையும் மனதையும் ரசிகர்கள் தந்து விட்டார்கள். இல்லாமல் எப்படி? தனது கணவன் அடுத்தவளுடன் வெளியேறிய பிறகும் சொட்டுக் கண்ணீரைக் கூட பிள்ளைகளிடம் காட்டாமல் மாலை வழிபாட்டுக்குச் செல்லும் அவள், குடும்பப்பெண். ‘இந்தத் தாலி என் கழுத்தில் இருக்கும் வரை... (ஹே, அவளுடைய மனக்குமறல்! எல்லா ரசிகர்களும் ஒருசேர மூக்கைச் சிந்தி, இருக்கையில் துடைக்கிறார்கள்) திருடனுக்கு ஆத்திரம் பொங்கியது. என்னிடமா திருட்டுத்தனம்? அவன் கழுத்தை உயர்த்தித் திரைச்சீலையைப் பார்த்து பலமாக ஒருமுறை கூச்சலிட்டான். இருப்பினும் இருப்புக் கொள்ளாமல் துள்ளிக் குதித்து வெளியில் வந்தான்.

திறந்திருந்த கதவு வழியாக மழையினுடையதும் காற்றினுடையதுமான கலவைமணம் உள்ளே புகுந்தது. சற்று நேரம் வெளியே போனால் நன்றாக இருக்குமென்று விஜேஷ¨க்குத் தோன்றியது. கதையின் சிக்கலான இந்தத் திருப்பத்தில் தான் போக வேண்டுமாவென்று ஸ்ரீஜா பதறினாள். சிறுநீர் கழித்து விட்டு விரைந்து வருவதாகச் சொல்லி விஜேஷ் எழுந்தான். கணவனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகியின் கண்ணீரை நோக்கி முகத்தைத் திருப்பினாள் ஸ்ரீஜா. மாஜி காதலனை இனி எதற்காக இவள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்? அவளும் வெற்றியடையா வேண்டாமா? ‘பிள்ளைகள் உறங்கும் வீட்டில், இரவுவேளையில் கண்ணீர் உலர்ந்த தலையணையைக் கட்டியணைத்துப் படுத்துக்கிடக்கும் உன் மீது எனக்கு வெறுப்பு தோன்றுகிறது. ஸ்ரீஜா கதாநாயகியைப் பார்த்து உள்ளூர கறுவினாள்.

கழிப்பிடத்தை அடைந்த விஜேஷ் திருடனைக் கவனித்தான். செங்கல் சுவர் மீது சாய்ந்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் திருடன், பலே திருடன். திருடன் வெளிப்படுத்தும் பயங்கரமான அசுத்தத்துடன் ஒத்துப்போக முடியாமல் ஒருசில நிமிடங்கள் திகைத்து நின்ற விஜேஷ் தனது இருப்பை உணர்த்தினான். சற்று நேர அமைதிக்குப் பிறகு மௌனத்தின் நஞ்சுக்கொடியைப் போல திருடன் வெளியில் வந்தான். ‘குட்டிக் குப்பாயம்’ திரைப்படம் முதல் ரசிகர்கள் பல்வேறு காலங்களாக கழிக்கப்பட்ட சிறுநீரின் வரலாற்று நினைவுகளை எழுப்பும் நாற்றம் அப்போது அவனுடன் வந்தது. விஜேஷைப் பார்த்துச் சிரித்து விட்டு வேட்டியை மீண்டும் இடுப்பில் இறுக்கியபடி திருடன் நடந்தான். ‘அசிங்கம் புடிச்சவன்’ என்று பல்லைக் கடித்தபடி விஜேஷ் உள்ளே சென்றான்.

ஒவ்வொரு முறையும் திரையரங்கின் கதவு திறக்கும்போதெல்லாம் கூடத்தின் அழுக்குநீர் மழையுடன் சேர்ந்து உள்ளே பீச்சிக் கொண்டிருந்தது. ரசிகர்களில் சிலர் நன்றாகவே நனைந்தார்கள். ‘பென்னி... பென்னி...’ என்று அவர்கள் சற்று உரக்கக் கூப்பிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தபோதிலும் கதையிலிருந்து கவனம் சிதறுமென்று பயந்து மீண்டும் இருக்கையிலேயே ஒதுங்கி உட்கார்ந்தார்கள். திருடன் வெளியில் நின்ற அந்தக் காட்சியை உணர்ச்சியில்லாமல் கவனித்தான். மழையில் நனைந்த பெருச்சாளிகள் வரிசைவரிசையாக அமர்ந்திருப்பதாக திருடன் நினைத்துக் கொண்டான். தன்னால் இயன்றவரை கதவைச் சாத்த முற்படுவதைப் போல பாவனை காட்டி வராந்தாவின் ஒருமூலையில் ஒதுங்கி நின்றான். அப்படி நிற்கும் போது தனது காதலியை நினைத்துக் கொண்டான். அவளுக்காக எதையெல்லாம் திருடினேன் நான். அதற்கு ஈடாக தனது ஒட்டுமொத்த காதலையும் பெறுக்கித்தள்ளி விட்டு, அவள் எதையும் களவாடவில்லையெனக் கையை விரிக்க அவளால்... திருடனின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக்கண்ணீர் துளிர்த்தது. சிலசமயம் எல்லாமே அவளது நடிப்பாக இருக்கலாம் என்று தேற்றியவாறு கண்களைத் துடைத்துக் கொண்டான். ஓரிரண்டு முறை லேசாகத் தும்மினான்... திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அரசியல்தொண்டன் பலமுறை காதல்வயப்பட்டான். ‘கதாநாயகி தேவலை. ஆனால் உனக்கு ஈடாக மாட்டாள்.’ போன்ற வசனங்களை அவள் மனைவியை சீண்டியபடி சொல்லிக் கொண்டிருந்தான். ‘பிரேம் நசிரோட சினிமாவுலே கூட இல்லாத இந்த மாதிரியான பழைய வசனங்களைவிட உங்களோட வாய்நாற்றமே மேல்’ என்கிற எண்ணத்தை மனைவி வெளியில் சொல்லவில்லை. 'டாய்லெட்டுக்குப் போறீங்களா?'

'இப்பவா? இண்டர்வெல்ல போயிருக்கணும. இனி சினிமா முடியட்டும். இப்போது வெளியே போனால் கதையோட ஆவேசம் கொறைஞ்சிடும்' என்று அரசியல்வாதி பதிலளித்தான். ஆனால், அவனுக்கு மனைவி மீது இரக்கம் பிறந்தது. சிறுநீர் கழித்து விட்டு திரும்பி வரும் மனைவி மிகுந்த உற்சாகத்துடன் இருப்பாளென்று கருதினான்.

'நீ போயிட்டு வரலாமே. தெரிஞ்ச இடம்தானே. கதவைத் திறந்ததும் வலதுபக்கம. கட்டாயமா நான் கூட வரணும்னா வரேன்'.

அவன் சொல்லி முடிப்தற்குள் அவள்: ‘வேண்டாம் உட்காந்து பாருங்க. நான் சீக்கிரமா வந்திடறேன். அதற்குள் சினிமாவுல நடந்ததை என்கிட்டே சொன்னா போதும்.’

அவள் எழுந்ததும், இருட்டில் வழிகாட்டுவதற்காகப் பின்வரிசையிலிருந்து ஒரு பென்டார்ச்சின் மெல்லிய வெளிச்சம் அனுபவத்துடன் உடன்வந்தது. அந்த உதவும் மனப்பான்மைக்கு நன்றி தெரிவிப்பதற்காக இருட்டில் பற்களை வெளிக்காட்டி விட்டு அரசியல்வாதி திரைசீலையை நோக்கிப் பார்வையைத் திருப்பினான். மனைவி திரும்பி வருவதற்குள் திரைப்படம் தொடங்கிய போதே தானே கதைத்தலைவன் என்கிற எண்ணம் எழுந்த காரணத்தால், கதாநாயகனுக்கு வலுவான மானசீக ஆதரவை அறிவிக்க வேண்டுமென்று உறதிப்படுத்திக் கொண்டான். தற்போது அங்கொரு குடும்பக்காட்சி அதாவது குடும்ப உறுப்பினர்கள் உணவுமேசையின் சுற்றிலும் அமர்ந்து உரையாடியபடி உணவருந்திக் கொண்டிருந்தார்கள். பருப்பு, நெய், சாம்பார்... இப்படியாக முற்றிலும் அந்தஸ்து மிகுந்த உணவுவேளை.

‘அதனால நாம நம்ம சமுதாயத்தோட ஒட்டுமொத்த கலாச்சாரத்துக்கு பொருந்தாத எந்த சினிமாவையும் ஓட்டக் கூடாது அசோகா. எல்லாத்துக்கும் சில முறைகளும் மரியாதைகளும் இருக்குது. இருக்கணும் அதைத் தவறவிட்டா நம்ம சமூகம் சீரழியும்...

பென்னி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ‘இதையெல்லாம் கேட்கறதுக்கு நான் என்ன பண்ணினேன். நானா கலாச்சாரத்தைச் சீரழித்தேன்? என்கிற பதிலை விழுங்கியபடி அசோகன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ‘அசோகா, என்னோட தியேட்டர்ல படம் பார்த்து ஜனங்க கெட்டுப்போனா அதற்கான பாதிப் பொறுப்பு எனக்குத்தான். அதுல கொஞ்சம் உனக்கும் தருவேன். நிஜத்துல இருந்து முகத்தைத் திருப்பி நீ வேலை பார்த்தா நீ நல்ல தொழிலாளி ஆக மாட்டாய்.’ பென்னி ஆவேசத்தின் கிளை மீது ஏறிய போது, சட்டென்று வெளியே சென்று இருட்டுக்கு அப்பால் கர்ஜிக்கும் மழையை முஷ்டி மடக்கித் தாக்குவதைப் போல நடித்துக் காட்டினான் அசோகன்.

வராந்தாவின் வெறிச்சோடிய மூலையில் இருட்டுக் குகைக்குள் சுருண்டுப் படுத்திருந்த திருடன் கண்விழித்தான். திரையரங்கிற்கு வெளியில் மதில் மீது பூத்திருந்த ஊமத்தைப் பூக்கள் காற்று ஓயும்வரை தலைகவிழ்த்து உறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து இரண்டு காலடித் தொலைவில் அரைநிமிடம் திகைத்து நின்று, ஆடையை ஒழுங்குப்படுத்திக் கொள்ளாமலேயே மழையை நோக்கி மிகுந்த தைரியத்தோடு போகும் கிராமத்து வேசியைக் கண்டான். சிறுநீர் கழிப்பறையை விட்டு பம்மியவாறு வெளியே வந்த அவள் சென்ற வழியை ஒரு சாதாரணப் பார்வையாளனைப் போல பார்த்தான். பின்னர் வராந்தாவில் நின்றபடி மழையை நோக்கி நிம்மதியாகச் சிறுநீர் கழிக்கும் விஜேஷை கவனித்தான். பாவனைப் பதிவுகள் ஆர்ப்பரிக்கும் ஒரு திரைச்சீலையே விஜேஷின் முகம் என்ற திருடன் கற்பனை செய்து கொண்டான். காலடிகளைத் தொடர்ந்து வந்த வெளிச்சத்துக்குச் சற்று முன்பு தன்னை ஒப்படைத்த பெண்ணுடலை என்னவென்று அழைப்பது, ஒரு வசைப்பாடலை வாய்விட்டுப் பாடுவதைப் போல நடிக்க விரும்பியபோதிலும் ஏனோ பயந்து முழங்கால்களுக்குள் சுருண்டுக் கொண்டான் திருடன்.

தாமதமின்றி திரைப்படம் நிறைவடைந்ததற்கான ஒரு நீண்ட மணியோசை ஒலித்தது.

ஆட்டத்தைப்பார்த்து விட்டு வெளியேறிக் கொண்டிருந்த ரசிர்களின் கருத்துகளைப் கேட்பது பென்னியின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. அதற்காக திரையரங்கின் கதவின் அருகில் வந்து நின்றான் அவன். ‘மோசமில்லே. பார்க்கலாம்...? இதனைக் கடந்து புதிதாக எதையேனும் கேட்க முடிந்தால் எப்படியிருக்கும் என்று பென்னி ஆசைப்படுவதுண்டு. ரசிகர்களின் மனதில் உன்னதமான விழிப்புணர்வையும் பண்பாட்டு வெளிச்சத்தையும் நிறைத்தோம் என்ற உணரும் இடத்தில்தான் ஒரு திரையரங்கு உரிமையாளரின் திருப்தி...

ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தார்கள். பெய்து கொண்டிருந்த கனமழையில் தனியாகவும் கூட்டமாகவும் அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், பெரும்பாலனவர்கள் மௌனமாக இருந்தார்கள். அவர்களின் முகபாவனையைப் புரிந்து கொள்ள இயலாமல் பென்னி குழம்பினான். அவர்கள் அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒலிப்பெருக்கியின் அடைபட்ட தொண்டையிலிருந்து ஒரு திரைப்படப் பாடல் துண்டுத் துண்டாக வெளியே தெறிக்கத் தொடங்கியது. அப்போது திருடனின் அருகில் வந்து நின்றான் அரசியல்வாதி. வழிந்து கொண்டிருக்கும் வியர்வையைக் கடந்து மிகவும் நிம்மதியிழந்திருந்தான் அரசியல்வாதி. அவளது வெளிறிய பார்வையை நோக்கி தோளை உலுக்கிச் சிரித்தபடி திருடன் சொன்னான்: 'இன்னைக்கு நான் எதையும் திருடல'. ஆனால், எத்தனை முயற்சித்தும் சிரிப்பு அவனை விட்டு அகலாமல் இருப்பது ஏனென்று வியந்தபடி மழையை நோக்கிச் செல்லும் திருடனை கேட்டின் அருகில், பென்னியின் அதிசயிக்கும் கண்கள் தடுத்தன,

'நல்ல படம்' என்றான் திருடன்.

 
நிர்மால்யா (1963)

சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர். மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2010இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அக்காதெமி விருதைப் பெற்றவர். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். ஊட்டியில் வசிக்கிறார்.

வி.திலீப்

புதிய நூற்றாண்டு மலையாளப் புனைகதைக்கு அளித்த நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்களில் ஒருவர் வி.திலீப். திருச்சூர், புதுக்காடு செயிண்ட் ஆண்டனி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஸ்வர்க்கம், வம்ச காதகள் மூளும் டாக்கீஸ் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் தீயில் அலக்கிய வஸ்த்ரங்ஙள் என்ற நாவலும் வெளியாகியுள்ளன. சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் கே.ஏ.கொடுங்ஙல்லூர் அவார்ட், அங்கணம் விருது, நடுவட்டம் சத்யபால் விருது, பரத் முரளி விருது, கேரள பால சாகித்ய இன்ஸ்டிட்டியூட் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். காலடியில் வசிக்கிறார்.