ஒரு கரப்பானின் வாழ்வு:
வில் ஐஸ்னரின் சித்திர நாவல்கள்
கடவுளுடன் ஒரு ஒப்பந்தம்
A Contract with God
ஒரு உயிர்சக்தி
A Life Force
 
வரதராஜன் ராஜு
 

2005 காலத்தில் எனது சக அனலிஸ்ட் (பண்டகச் சந்தை முதலீட்டு ஆய்வாளர்) ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அமெரிக்க டாலர் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து விடுமென்றும் இனி உலகப் பொதுப் பணமாக யூரோ இருக்குமென்றும் அப்போது முதலீட்டு வட்டாரங்களில் இருந்து வந்த பிரபலமான ஆரூடத்தை அவர் புறங்கையால் ஒதுக்கினார். இது போன்ற கணிப்புகள் உலகில் ஊடுபாவாக ஓடிக்கொண்டிருக்கும் பல்வேறு காரணிகளைக் கணக்கிலெடுக்காது அடித்து விடப்படுபவை என்றார். அறிவார்ந்த பொருளாதார முன்னறிவிப்பாளர்கள் அதைத் தெரியாதவர்களா என்றே நினைத்தேன். முன்னறிவிப்பாளர்களின் சாபக்கேடு. 1929ல் அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ந்ததற்குப் பின்னான பத்து வருடங்கள் முதலாளித்துவப் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான காலம். சிக்கலான பொருளாதார வலைப்பின்னலின் சூட்சுமம் அறியாத எளியோர் மட்டுமல்லாது நிபுணர்களும் பெரும்பணம் படைத்தோரும் சேர்ந்தே வீழ்ந்தார்கள். இந்த சூட்சும வலைப்பின்னலின் கண்ணிகளாக இருக்கிறார்கள் வில் ஐஸ்னரின் (Will Eisner) பாத்திரங்கள்.

அமெரிக்க க்ராபிக் நாவல் இலக்கியத்தின் தோற்றுவாய்களில் ஒருவரான வில் ஐஸ்னரின் இந்தக்கதைகள் நிகழும் களம் ப்ரான்க்சிலுள்ள (நியூயார்க்) ட்ராப்சீ அவென்யூ. ட்ராப்சீ அவென்யூவின் நெருக்கமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் எளிய மனிதர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், தங்களது கனவுகளை பிள்ளைகள் வாழ நிர்பந்திக்கிறார்கள், உணவின்றித் துயருறுகிறார்கள், விரகத்தில் தகிக்கிறார்கள், துரோகம் செய்கிறார்கள், திருடுகிறார்கள், கடவுளிடம் முறையிடுகிறார்கள், பின் செத்துப்போகிறார்கள். சுந்தர ராமசாமியின் புளியமர ஜங்ஷன் போல ட்ராப்சீ அவென்யூ மனிதர்களின் அலகிலா விளையாடல்களுக்கு சாட்சியாயிருக்கிறது.

ஐஸ்னரின் முதல் நாவலான ’கடவுளிடம் ஒரு ஒப்பந்தம்’ கதையில் வரும் ஃப்ரிம் ஹெர்ஷ் சிறுவனாயிருக்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் ரஷியாவிலிருந்து அமெரிக்காவிற்கு தப்புவிக்கப்படுகிறான். வழியில் உடன் வரும் யூத குருவிடம் ’கடவுள் நீதியுள்ளவரா?’ என்று கேட்கிறான். ’கடவுளிடம் இல்லாத நீதி வேறெங்கிருக்கும்?’ என்கிறார் அவர். ’நான் நல்லவன் என்று அவருக்குத் தெரியுமா?’ என்ற அவனது கேள்விக்கு அவர் ’எல்லாம் அறிந்தவருக்கு இது தெரியாமலிருக்குமா?’ என்கிறார். அன்றிரவு அவன் ஒரு சிறிய பட்டைக் கல்லில் கடவுளுக்கும் அவனுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செதுக்குகிறான். பல வருடங்கள் கழித்து ஹெர்ஷ் தனது இளம் மகளைப் புதைத்து விட்டு வரும்போது மழை கணத்துப் பெய்கிறது. துக்கம் விசாரிப்பவர்கள் சென்றபின் ஹெர்ஷ் கடும் சினத்துடன் கடவுளிடம், ‘நீர் நமது ஒப்பந்தத்தை மீறி விட்டீர்’ என்று குற்றம் சாட்டுகிறான். ஒப்பந்தக்கல்லை வீசியெறிகிறான். பிறகு அடர்ந்த தாடியை நன்கு மழித்துக் கொள்கிறான். தான் வாழ்ந்து வந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை, யூதக் குருமார்கள் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பாண்டுகளை (கடன் பத்திரங்கள்) வங்கியில் அடமானம் வைத்து வாங்குகிறான். முதலாளியான பிறகு, குடியிருப்பு நிர்வாகியிடம் வாடகையை உயர்த்தும் படியும், சுடுதண்னீர் உபயோகத்தை குறைக்கும் படியும் சொல்கிறான். ’நேற்று வரை வாடகைக்கு இருந்தவன் இன்றைக்கு முதலாளி. இந்த யூதர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?’, என்று வியக்கிறான் நிர்வாகி. தனது யூதப் பின்புலத்தை கதைகளின் ஊடாக வெளிப்படுத்துவதில் ஐஸ்னருக்குத் தயக்கம் ஏதும் இல்லை. குறுகிய காலத்தில் நில வியாபாரப் பெரும் புள்ளியான ஹெர்ஷ் தன்னிடம் பாண்டுகளைக் கொடுத்து வைத்திருந்த யூத மதகுருக்களிடம் வட்டியுடன் அதைத் திருப்பிக் கொடுக்கிறான். நெகிழ்ந்து போன அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கிறான். கடவுளின் சட்டதிட்டங்களை நன்கறிந்த அவர்கள் அவனுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எழுதிக் கொடுக்கவேண்டுமென்பதே அது. அப்படிச் செய்தால் இலக்கம் 55, ட்ராப்சீ அவென்யூவில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பை அவர்களுக்கு எழுதிக்கொடுப்பதாக வாக்களிக்கிறான். எல்லா மதங்களுமே கடவுளுக்கும் மனிதனுக்குமான ஒப்பந்தம் தானே என்று சமாதானமடையும் அவர்கள் ஹெர்ஷ் கேட்டதை எழுதிக் கொடுக்கின்றனர். அகமகிழ்ந்த ஹெர்ஷ் புதிதாக வாழ முடிவு செய்கிறான். மணம் புரியவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், தானங்கள் செய்யவும் விரும்பிக் களி கொள்கிறான். அதீத உற்சாகத்தில் மாரடைத்துச் செத்துப்போகிறான். அன்றிரவு வெட்டுகிற மின்னலில் ட்ராப்சீ அவென்யூ தீப்பிழம்பாகிறது. எல்லாம் முடிந்தபிறகு, இலக்கம் 55, உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு மட்டும் அப்படியே இருக்கிறது. பிறகு அங்கு வரும் ஒரு சிறுவன் ஹெர்ஷ் தெருவில் விட்டெறிந்த ஒப்பந்தக்கல்லைக் கண்டெடுக்கிறான். ஹெர்ஷின் கையொப்பத்திற்குக் கீழ் தனது கையொப்பத்தை இடுகிறான். ஐஸ்னர் தந்து சொந்த மகளின் இறப்பிற்குப் பின் எழுதியது இது. ஒரு காட்சியில், அடர்ந்து பெய்யும் மழையை ’பத்தாயிரம் தேவதைகள் அழுவதன் கண்ணீர்தான்’ இப்படிக் கொட்டும் என்கிறார்.

1930களின் பொருளாதாரப் பெருமந்தக்காலத்தில் (Great Depression), வேலையற்றோரில் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கிடையிலான குறுகிய சந்துகளில் பிரபல பாடல்களைப் பாடிப் பிழைத்தனர். முகம் தெரியாத ரசிகர்கள் சன்னல்கள் வழியே விட்டெறியும் காசுதான் வருமானம். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு கிளர்ச்சியூட்டும் பொழுதுபோக்காகவும், சிறுவர்களுக்கு விளையாட்டாகவும், ஆண்களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாகவும் அமைந்தது அப்பிழைப்பு. எடி, அப்படி ஒருபோது பாடிக்கொண்டிருக்கையில் மாடியிலிருந்து ஒரு துண்டுக் காகிதம் விழுகிறது. காகிதம் போட்ட முன்னாள் பாடகி அவனை மேலே அழைத்து விருந்து கொடுக்கிறாள். பசியாறிய அவனைப் புணர்ந்து களிக்கிறாள். தான் ஒரு காலத்தில் புகழ்பெற்ற பாடகியென்றும், குடிகாரனொருவனை மணந்து சீரழிந்ததாகவும், மீந்து போன தனது கனவை இவனை ஒரு பெரும் பாடகனாக்குவதன் மூலம் மீட்கப் போவதாகவும் சொல்கிறாள். எடி நம்ப முடியாதவனாய் புதிய ஆடைகள் வாங்க (அப்போதுதான் பாடகனுக்கு மதிப்பாயிருக்கும்!) அவள் கொடுத்த பணத்தில் சாராயம் வாங்கிப் போய் வீட்டில் குடிக்கிறான். பின் வரும் சண்டையில் கர்ப்பிணி மனைவி பாட்டிலை அவனது மண்டையில் போட்டுடைக்கிறாள். போதை தெளிந்த மறுநாள் பாரில் கடன் வாங்கிக் குடிக்கும் எடி, தனது அதிர்ஷ்டத்தை ஊற்றிக் கொடுப்பவனிடம் சொல்கிறான். கடைசியில் அவன் அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்க இவன் முழிக்கிறான். தெருப் பாடகர்கள் தாங்கள் ஒரு தரம் பாடிய தெருவில் மீண்டும் பாடுவதில்லை. ப்ரான்க்சின் நூற்றுக்கணக்கான சிறு சந்துகளில் அவள் எந்தச்சந்தில் இருக்கிறாள்?

கான்கிரீட் கடலில் நங்கூரமிட்டிருக்கும் ஒரு பயணிகள் கப்பல் போன்றது ஒரு அடுக்குமாடிகுடியிருப்பு என்கிறார் ஐஸ்னர். அதன் கேப்டன் ’சூப்பர்’ (நிர்வாகி) என்று அழைக்கப்படுகிறான். ஸ்கக்ஸ், இலக்கம் 55, ட்ராப்சீ அவெனியூவின் சூப்பர். சுடுதண்ணீர் வராததால் முறையிடும் ஒரு வீட்டுக்குப் போகும் ஸ்கக்ஸ் அங்கே அரைகுறையாய் குளித்த கோலத்தில் ஒரு சிறுமியைப் பார்க்கிறான். நிர்வாணப் படங்கள் சூழ்ந்த தனது அறைக்குத் திரும்பும் ஸ்கக்ஸ் ஒரு பியரைக் குடித்தவாறே காமக் கனவில் மூழ்குகையில் கதவு திறக்கிறது. அதே சிறுமி. சரளமாக உள்ளே நுழையும் அவள் சுற்றிலும் உள்ள நிர்வாணப் படங்களைக் கண்ட பின்பு கதவைச் சாத்துகிறாள். காசு கொடுத்தால் தனது உறுப்பைக் காட்டுவேன் என்கிறாள். காசு கைமாறுகிறது. நாளையும் வந்தால் காசு தருகிறேன் என்கிறான். அவள் அவனது நாய்க்கு மிட்டாய் கொடுக்கிறாள். அவன் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று பார்க்கும் இடைவெளியில் பணப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். நாய் விஷமிடப்பட்டிருகிறது. வெறி கொண்ட ஸ்கக்ஸ், கையில் துப்பாக்கியோடு துரத்தி அவளைச் சந்தில் வைத்துப் பிடிக்கிறான். கூச்சல் கேட்டுக் குடியிருப்பவர்கள் எட்டிப் பார்த்துச் சத்தம் போடுகிறார்கள். விட்டுவிட்டு அறை திரும்பும் ஸ்கக்ஸ் செத்துக் கிடக்கும் நாயைப் பார்த்துக் கதறுகிறான். கதவு தட்டப்படுகிறது. போலீஸ். ஸ்கக்ஸ், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறான். அமளி ஓய்ந்த பின் அந்தச் சிறுமி படியில் அமர்ந்து காசுகளை எண்ணுகிறாள். ஐஸ்னரின் கதைப் பரப்பு முழுதும் ஊழ் வந்து உறுத்து ஊட்டும் மனிதர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள்.

 
 

இந்தக் கதைகளில் வரும் வில்லி என்ற பாத்திரத்துக்கும் தனது சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறது என்கிறார் ஐஸ்னர். ’குக்கலேன்’ என்ற கதையில் வரும் வில்லி கோடை விடுமுறை சென்ற இடத்தில் ஒரு மணமான மூத்த பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான். அப்போது அங்கே வரும் அவளது கணவன் அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கிறான். பதினைந்தே வயதான வில்லி முன் அவளுடன் உறவு கொள்கிறான். மற்றொரு கதையான, ’ஒரு உயிர்சக்தியில்’ வரும் வில்லி தனது நண்பனுடன் கம்யூனிஸ்ட்களின் ரகசியக்கூட்டத்தில் கலந்து கொள்கிறான். அதற்காகவே ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் வோஸ்ட்ரோவிடம் கூட்டம் முடிந்ததும், ’ரஷ்யாவில் பாலியல் சுதந்திரம் உண்டுதானே?’ என்று கேட்கிறான் வில்லி. நண்பனுடன் சேர்ந்து போராட்டத்திற்கான தட்டிகளைத் தயாரிக்கும் போது வரும் வில்லியின் தந்தை அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார். ’வீடா, போராட்டமா?’ என்று முடிவு செய்யச் சொல்கிறான் நண்பன். ஐஸ்னர் வில்லியை வீட்டிலேயே இருக்க வைக்கிறார்.

வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்ட மேன்ஹாட்டன், ப்ரான்க்சின் எளிய மனிதர்கள் அடைய விரும்பும் ஒரு கனவு. துன்பத்திலிருந்து விடுதலை. ஜேக்கபின் மகன் படித்து மருத்துவராகித் தப்பித்துவிடுகிறான். ஆசிரியரான மகள் பங்குச்சந்தையில் தனது செல்வத்தை இழந்த ஷாஃப்ட்ஸ்பரியைக் காதலிக்கிறாள். இதற்கிடையில், ஜெர்மனியிலிருந்து வரும் கடிதம் வழி தனது பழைய காதலி பிரச்சினையில் இருப்பதை அறியும் ஜேக்கப், பெரும்பணம் செலவழித்து அவளை அங்கிருந்து மீட்டுக் கொண்டுவருகிறார். அவள் பொருட்டு தனது அறுபதாம் வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கிறார். ஷாஃப்ட்ஸ்பரி தான் வேலை பார்க்கும் பங்குத்தரகு நிறுவனத்தில் பேசி மூழ்கவிருக்கும் ஒரு மரப்பலகைக் கடையை மீட்டுத் தர, ஜேக்கப் சட்டென்று முதலாளியாகிவிடுகிறார். தான் குடிவைத்திருக்கும் காதலியை மணக்கவிருக்கும் தருணத்தில், அவள் ஜெர்மனியிலிருந்து தப்பி பாலஸ்தீனம் சென்ற தனது மகளிடம் செல்ல விரும்புகிறாள். சோர்வுடன் வீடு திரும்பும் ஜேக்கப்பிடம் மனைவி ரிஃப்கா, வீடு முழுதும் கரப்பான்கள் திரிவதாகவும் நிர்வாகியிடம் பேசி பூச்சிமருந்தடிக்க வேண்டுமென்றும் சொல்கிறாள். ஜேக்கப் தனது காலடியில் வரும் ஒரு கரப்பானை பிடித்து சன்னல் வழியாகத் தெருவில் போடுகிறார். ஒரு கரப்பானைக் காப்பாற்றிவிட்டார்.

ஒரு க்ராபிக் நாவல் துல்லியமான சித்திரங்களைக் கோருவதில்லை. சித்திரங்கள் படைப்பாளியின், உண்மையில் படைப்பின் உணர்வு நிலைகளைக் வாசகனுக்குக் கடத்த முடிவதே முக்கியம். தனது சரளமான, சற்றே கிறுக்கல் தன்மை கொண்ட சித்திரங்கள் வழியே அக்காலத்திய ப்ரான்க்சின் நெருக்கமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நம்மை உலவ விடுகிறார் ஐஸ்னர். பாத்திரங்களின் உணர்வுகளை நம்மிடம் கடத்துவதில் அவை தவறுவதில்லை. ’கடவுளுடன் ஒரு ஒப்பந்தத்தில்’, கணத்த துயரத்தோடு நிற்கும் ஃப்ரிம் ஹெர்ஷ், தோளைத் தழுவும் தனது தோழியின் கையை இரண்டே விரல் கொண்டு விலக்கும் சித்திரம், முப்பது ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் தனது முன்னாள் காதலியுடன் ஜேக்கப் கலக்கையில், அவர்கள் இளம் வயதில் மரங்களுக்கிடையில் கலவிகொள்ளும் சித்திரம், ஒரு பறவைப் பார்வையில் ப்ரான்க்சின் சிறிய குடியிருப்புகளுக்குத் தூரே தெரியும் மேன்ஹாட்டனின் வானுயர்ந்த கட்டடங்கள் என்று சித்திரங்கள் கதையாடலில் முதன்மையான பங்காற்றுகின்றன.

கரப்பான்கள் பல மில்லியன் வருடங்களாக பூமியில் இருந்து வந்திருக்கின்றன. அதே காலகட்டத்தில் பல உயிர்கள் பூமியில் தோன்றி மறைந்து விட்டன. அவற்றில் மனிதன் மட்டுமே தளராது தன்னைப் பெருக்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்கிறார் ஐஸ்னர். ஆக, மனிதர்கள் கரப்பான்களுக்கு இணையான உயிர்சக்திதான் போல.