பரவசங்களின் திரையாடல்
Blue Is The Warmest Color
 
 
கோகுல் பிரசாத்
 

சம்பவங்களின் கோர்வையாக நெய்யப்படும் திரைப்படங்களில் இருந்து விலகி, முற்றிலும் உணர்ச்சிக் குவியல்களின் தொகுப்பாக எரிந்து கனியும் இத்திரைப்படம் 2013ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதினை வென்றது. வெறுமனே பாலியல் கிளர்ச்சியை தூண்டும் படமாகவோ பார்வையாளனை அதிர்ச்சிக்கும் அருவெறுப்புக்கும் உள்ளாக்கும் படமாகவோ அல்லாமல் அழகியலின் உச்சபட்ச சாத்தியங்களை திரை மொழியில் உள்ளடக்கியிருக்கிறது இப்படம். இதன் மையக்கருவும் படமாக்கல் முறைமையும் Pornography அல்லது Erotic வகைமைகளுக்குள் அடங்காது தனித்து நிற்கிறது. தற்பால் ஈர்ப்புள்ளவர்களை பற்றிய திரைப்படங்களின் கூறல் முறை, மையக் கதாபாத்திரங்களின் மனநிலைகளை அவர்களுக்கிடையேயான உடலுறவுக் காட்சிகள் அளவுக்கு தீவிரமாக கையாள்வதில்லை. அவை பெரும்பாலும் சமூகப் புறக்கணிப்புகள் மற்றும் ஒவ்வாமைகளை சுட்டிக் கட்டுகின்றன அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களின் அரசியல் செயற்பாட்டினை விவரிக்கின்றன. (Milk மற்றும் The Normal Heart). Stranger by the Lake போல பிறப்புறுப்புகளை காட்டுவதையே பிரதான நோக்கமாகக் கொண்ட சவலையான படங்களும் அதீத கவனம் பெறுவதுண்டு.

ஜூலி மரோவின் சித்திர நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இப்படம், இரு பெண்களுக்கிடையேயான (எம்மா - அடெல்) உறவின் கொந்தளிப்பையும் காதலையும் உரத்துச் சொல்கிறது. 179 நிமிடங்கள் ஓடும் படத்தில் பதின்பருவத்து பெண்ணின் பாலியல் விழித்தெழலும் தடுமாற்றங்களும் காவியத்தன்மையுடனும் தீவிரத்துடனும் திரண்டெழுகின்றன. உடல்கள் ஒன்றை ஒன்று அறியும் பேராவலுடன் கிளர்ந்து மோகிக்கின்றன. சீறும் மூச்சொலிகளின் வெம்மை திரையில் படர்ந்து வெளியேற வழியின்றி திகைத்து சுழன்றடிக்கிறது. கரங்களின் தழுவல் நீண்டு நீண்டு மேகங்களற்ற நீல வானத்தின் பெருவெளியை தொட்டு முடிவின்மையின் அபத்தங்களை உணர்ந்து தடுமாறுகின்றன. தீண்டலின் சுவையை நமது கண்கள் உணர்ந்து திடுக்கிடுகின்றன. எத்தனை எத்தனை அருகாமை காட்சிகள்!! திரைக்கும் பார்வையாளனுக்கும் இடையேயான எல்லைகள் நழுவி காலப்பருக்கள் உதிர்ந்து அந்தரங்கத்தில் நடனமாடுகின்றன. ஸ்பரிசத்தின் மென்மையும் நுகர்வின் திளைப்பும் நம்மை பரவசத்திற்குள்ளாக்குகின்றன. பேரின்பத்தின் பிரம்மாண்ட வாயிலில் அலைவுருகிறோம். திறப்பிற்கு அப்பால் காத்திருப்பவை எல்லாம் நம்மை மூழ்கடிக்க வல்லவை. நாம் அடெலை காதலிக்கத் துவங்குகிறோம்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் புதிய போக்குகளுடைய நுனியும் வேரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக முயங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இடதுசாரிக் கட்சியினது பாடல் பின்னணியில் ஒலிக்க, வெவ்வேறு இனக்குழுக்களை சார்ந்த மாணவர்கள் நடத்தும் பேரணியிலும் ஒருபால் விருப்பமுள்ளவர்களின் உரிமைக் கோரல் போராட்டத்திலும் (LGBT Pride March) தான் எத்தனை துள்ளல்! திகட்டாத இளமையின் தினவு பெரும் உற்சாகத்துடன் பீறிடுகிறது. பன்மை கலாச்சாரத்தின் காயங்களற்ற மோதல். வண்ணக்கலவைகளின் பேயாட்டம். கண்டதும் காதல் குறித்த இலக்கியப் பாடங்கள் வகுப்பறைகளில் நடத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியையாக பணி புரிய விரும்பும் அடெல், எம்மாவை கண்டதும் காதல் கொள்கிறாள். வாழ்க்கையின் மீது படிந்திருக்கும் விலக்கவே முடியாத துயரத்தின் இருப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. சார்த்தர் மேற்கோள் காட்டப்படுகிறார். நீல நிற உடைகளையே விரும்பி அணியும் அடெல், பிரிவின் துயரம் மறக்க கடலின் அரவணைப்பையே நாடுகிறாள். நீல திரைச்சீலைகள் காமத்தின் மௌன சாட்சியாகின்றன.

உயர்வர்க்கத்தை சேர்ந்தவளான எம்மா, எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்பவளாக பக்குவப்பட்டவளாக இருக்கிறாள். எம்மாவின் தற்பால் ஈர்ப்பு குறித்து அவளது பெற்றோரும் நண்பர்களும் அறிந்தே இருக்கின்றனர். மாறாக, மத்திய வர்க்கத்து அடெல் தத்தளிப்புகளுடனும் இன்னதென்று பிரித்தறிய இயலாத குழப்பங்களுடனும் சோர்ந்து போகிறாள். உடைந்து அழுகிறாள். அடெலின் பெற்றோர், எம்மாவை தங்களது மகளின் தோழி என்று மட்டுமே அறிகிறார்கள். அதற்கு அப்பால் சிந்திக்கத் துணியும் மனப்போக்கு அற்றவர்களாக இருக்கிறார்கள். நட்பு வட்டாரங்களில், தன்னை ஒரு லெஸ்பியனாக அடையாளப்படுத்துவதை அறவே விரும்பாதவளாக இருக்கிறாள். பயங்களும் தயக்கங்களும் அவளுள் பாரமாகின்றன. அவளது பாலியல் அடையாளம் நண்பர்களால் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அடெலின் தேவையை அவளே அறிந்திருப்பதில்லை. தனது பாலுணர்வெழுச்சியின் திசைமாற்றங்களை ஊசலாட்டங்களை (Identity Crisis) காம விருப்புகளின் தடங்களை பின்தொடர்கையிலேயே தொலைந்து போகிறாள். அடெலின் இத்தெளிவின்மையே உறவுச் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது.

காதலின் தொடக்க நாட்கள் பேரன்புடன் நுரைத்து நிரம்பித் ததும்புகின்றன. அடெலும் எம்மாவும் வெட்கமும் காதலுமாக சாலைகளில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மகிழ்ச்சி அன்றி வேறு எதையும் அறியாத அதன் பருவங்களை, காதலர்தம் மனநிலைகளை இத்தனை கொண்டாட்டங்களுடன் பதிவு செய்த படம் சமீபத்தில் பிறிதில்லை. நடன அசைவுகளின் லயம். சிகரத்தின் உச்சியில் பரவி விளையாடத் துவங்கும் அதிகாலை ஒளியின் கன்னிமை. இருவருக்கும் இடையேயான உறவுச் சமநிலையில் முகிழ்க்கும், பார்வைகள் இடறி வெவ்வேறு உணர்வுகள் மேலெழும்பும் அபூர்வ கணங்கள் உட்பட, எந்தவொரு தருணத்தையும் இயக்குநர் தவறவிடுவதில்லை. ஒரு தேர்ந்த இலக்கிய ஆசிரியனை போல நிதானமாகவும் நுட்பமாகவும் பெண் - பெண் உறவினை காட்சிப்படுத்துகிறார். பாலியல் மீறல்கள் ஒழுக்கம் சார்ந்ததாக பாவிக்கப்படாமல் உறவு சார்ந்ததாக வாழ்வின் சஞ்சலங்களாக மட்டும் கருதப்படுகின்றன.

உரையாடல்கள் வழியாகவும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவும் இயக்குநர் Abdellatif Kechiche கட்டமைக்கும் புறச்சூழல் நேர்த்தியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது. பொதுவாக இவ்வகைப் படங்களில் கனன்று கொண்டிருக்கும் பிரச்சார உத்திகள் எதுவும் இப்படத்தில் இல்லை. கதாபாத்திரங்களின் ரசனையுலகமும் கதைப்போக்கில் பெரும் பங்கு வகிக்கிறது. கலை - தத்துவ ஈடுபாடு அவர்களது இயல்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இயக்குநரின் ஆழ்மனம் சார்ந்த அகவயப்பார்வை அடெலின் தனிமையையும் பாலுணர்வின் தத்தளிப்புகளையும் இயல்பாக அரவணைத்துச் செல்கிறது. காமத்தின் சரிவுகளை, நீர் நோக்கி பாயும் வேரினது இயல்பான பயணம் போல சித்தரிக்கையில் அப்தலடிப் கெசிச் இயக்குநர் எனும் படிநிலையில் இருந்து படைப்பாளியாக (Auteur) உயர்கிறார்.

படத்தின் மூலமான சித்திர நாவலில், எம்மாவுடனான பிரிவிற்கு பின்னர், அடெல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போகிறாள். இத்திரைப்படத்திலோ உணர்வுகளுடனான சமரில் உறவின் எல்லைகளை அடெல் அறிந்து கொண்டு தனது பயணத்தை தொடர்கிறாள். Adele Exarchopoulos (அடெல்) & Lea Seydoux (எம்மா) ஆகியோரது நடிப்பு, இயக்குநரின் பங்களிப்பிற்கு நிகரானதாக கருதப்பட்டதனாலேயே, கான் விழாவில் தங்கப்பனை விருது மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இலக்கியமும் திரைப்படமும் எதிரெதிர் துருவங்கள் எனும் போதிலும் விமர்சன தளத்தில் இவ்விரண்டுக்குமான ஒப்பீடுகள் எப்போதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. காமச் செயல்பாடுகளின் காட்சித் துணுக்குகளில் இலக்கிய விவரணைகள் கோரும் வாசகனின் கற்பனைக்கு இடமில்லை எனினும், பிம்பங்களின் நேரடித் தாக்கத்தின் முன் வரிகளின் போதாமை வெளிப்படையானது. அதுவும் உடல்களை காட்டிலும் உணர்வெழுச்சிகள் பிரதான நோக்கமாக உக்கிரம் கொள்ளும் திரைப்படங்களின் முன் இலக்கியப் படைப்பு ஒரு படி கீழிறங்குகிறது. Blue is the Warmest Color அத்தகைய அனுபவத்தினை சமரசமின்றி பார்வையாளனுக்கு கடத்தும் காட்சிப்பிரதி.