பரிமாணங்கள்
ஆலிஸ் மன்றோ
 
 
நர்மதா குப்புசாமி
ஓவியம்: அனந்தபத்மநாபன்
 

டோரி மூன்று பேருந்துகளைப் பிடிக்கவேண்டியிருந்தது. கின் கார்டினுக்கு ஒன்று, அங்கிருந்து லண்டனுக்கு, மீண்டும் அங்கிருந்து நகர பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு அவள் பயணத்தைத் தொடங்கினாள். இடையிடையே பேருந்துகளுக்காக காத்திருந்ததால் அந்த நூறு மைல்களைக் கடக்க மதியம் இரண்டு மணியாகிவிட்டது. பேருந்துகளிலோ, பேருந்து நிலையங்களிலோ உட்கார்ந்தே இருப்பதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் அவளது தினசரி அலுவல் உட்காரும் வகைமையைச் சார்ந்ததில்லை.

அவளோடு வேலைசெய்யும் எவருக்குமே நடந்தது எதுவும் தெரியாது. தெரிந்தால் அவளை வேலையில் தொடர விடமாட்டார்கள். அவளது படம் செய்தித்தாளில் வந்திருந்தது. அவள் மூன்று குழந்தைகளுடன் இருக்கும்படியாக அவன் எடுத்த படத்தை செய்தித் தாளில் பிரசுரித்திருந்தனர் கைக்குழந்தை டிமிட்ரியை அவள் தூக்கிக் கொண்டிருக்க பார்பரா ஆனும், ஷாஷாவும் இருபுறம் நிற்கும் புகைப்படம். அப்போது அவளது கூந்தல் நீளமாக, அலைஅலையாக, பளபளப்பாக இயல்பான சுருளாக, இயல்பான நிறத்தில் அவனுக்குப் பிடித்தமான வகையில் இருந்தது.

அவளது முகம் நாணத்துடன் மிருதுவாக இருந்தது. அவளது இயல்பை விட அவன் அவள் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவானோ அப்படியான மென்மையா பாவத்தில்.

அதற்கு பிறகு அவள் தனது கூந்தலை கத்தரித்து, நிறத்தை வெளுக்கச்செய்து, ஸ்பைக் வைத்துக்கொண்டாள். நிறைய எடையை இழந்திருக்கிறாள். மேலும் அவள் தற்போது ஃப்ளூவர் என்ற அவளது இரண்டாவது பெயரால் அழைக்கப்படுகிறாள் . மேலும் அவர்கள் அவளுக்காக வேலை பார்த்து வைத்த இடம் அவள் வழக்கமாக வசித்த இடத்திலிருந்து கணிசமான தொலைவில் இருந்தது.

இப்படி அவள் பயணம் செய்வது இது மூன்றாம் முறை. முதல் இரண்டு முறையும் அவன், அவளை பார்க்க மறுத்துவிட்டான். இதேபோல மறுபடியும் அவன் செய்தால் அவனைப் பார்க்க முயற்சி செய்வதையே அவள் கைவிட்டுவிடுவாள். அவன் அவளைப் பார்த்தால் கூட மீண்டும் சில நாட்களுக்கு அவனை சந்திக்கப் போவதில்லை. அவள் வெளியூருக்கும் போகப்போவதில்லை. உண்மையில் தான் என்ன செய்யப்போகிறோம் என்றே அவளுக்குத் தெரியவில்லை.

முதல் பேருந்தில் அவளுக்கு அதிக சிரமமிருக்கவில்லை. போகும் வழியில் இயற்கைக் காட்சிகளை பார்த்துக்கொண்டே சென்றாள். அவள் கடற்கரையோர ஊரில் வளர்ந்தவள். அங்கே வசந்தகாலம் என்ற பருவம் உண்டு ஆனால் இங்கே குளிர்காலத்திலிருந்து நேரிடையாக கோடைக்காலம் வந்துவிடுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு இங்கே பனிக்காலம், இப்போதோ கொளுத்துகிறது. வயல்களில் பளபளக்கும் நீர்த் திட்டுகள் தெரிகின்றன. மொட்டை கிளைகளின் வழியாக வெயில் இறங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது பேருந்தில் அவளுக்கு நடுக்கமாக இருந்தது. அருகிலிருக்கும் பெண்களில் தான் செல்லும் அதே இடத்துக்குச் செல்பவர்கள் யார் என்று யூகிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அவர்கள் தனியாகச் செல்லும் பெண்கள். கொஞ்சம் சிரத்தையுடன் உடையணிந்து இருப்பார்கள், ஒருவேளை தேவாலயத்துக்கு செல்பவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்ள நினைத்திருக்கலாம். வயதானவர்கள், கட்டுப்பாடான தேவாலயத்திற்குச் செல்வது போல, அங்கே அனுமதிக்கப்படும் பாவாடை, காலுறைகள், குறிப்பிட்ட விதமான தொப்பியுடனும், இளவயது பெண்கள் நவீன திருச்சபையை சார்ந்தவர்கள் போலவும் இருந்தனர். அங்கே பேன்ட், சூட், பளிச்சென்ற ஸ்கார்ஃப், காதணிகள், புடைத்த சிகையலங்காரம் ஆகியவைகளுக்கு அனுமதியுண்டு. உற்று நோக்கினால் பேன்ட் சட்டை அணிந்திருந்த பெண்களும் மற்ற பெண்களைப் போல வயதானவர்களாகவே இருந்தனர்.

டோரி எந்த வகைமையிலும் பொருந்தாதவளாக இருந்தாள். இந்த ஒன்றரை வருடங்களாக அவள் வேலை பார்த்துவந்தாலும் தனக்காக ஒரு சின்ன துண்டு புதுத்துணி கூட வாங்கிக் கொள்ளவில்லை. தனது சீருடை சட்டையையும் ஜீன்ஸையுமே எங்கும் அணிந்து சென்றாள். இதற்குமுன் அவன் அனுமதித்ததில்லை என்பதால் ஒப்பனை செய்து கொள்ளும் பழக்கத்தையே அவள் விட்டுவிட்டிருந்தாள், இப்போது முடிந்தாலும் அவள் செய்து கொள்வதில்லை. சோளத்தட்டை நிறத்திலிருந்த ஸ்பைக் அவளது எலும்பு துருத்திய முகத்துக்கு பொருத்தமாயில்லை, ஆனால் அதைப் பற்றி கவலையில்லை.

மூன்றாவது பேருந்தில் அவளுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது, விளம்பரப் பலகைகளை படிப்பதன் மூலம் தன்னை அமைதிப் படுத்திக் கொண்டாள் - விளம்பரம், தெருப்பெயர் கொண்ட பலகைகள் இரண்டையுமே. தன் மனதை விழிப்புடன் வைத்துக்கொள்ள அவள் ஒரு குறிப்பிட்ட தந்திரத்தை தேர்ந்தெடுத்திருந்தாள். கண்ணில் படும் எல்லா வார்த்தைகளிலுள்ள எழுத்துக்களிலிருந்து எத்தனை புது வார்த்தைகளை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்தல். "COFFEE" என்ற வார்த்தையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் , அதிலிருந்து 'fee', பிறகு 'foe' , 'off', 'of', அதே போல 'SHOP' என்ற வார்த்தையிலிருந்து 'sop', 'so' அப்புறம் - ம்..ம் ஒரு நிமிடம் - 'posh' இப்படியான வார்த்தைகள். பொதுவாக நகரத்திலிருந்து வெளியே செல்லும் வழியில் சுவரொட்டிகள், பிரமாண்டமான கடைகள், கார் நிறுத்தங்கள் மேலும் விளம்பரத்திற்காக மேல்தளங்களில் கட்டிய அசைந்தாடும் பலூன்களில் கூட வார்த்தைகளுக்கு பஞ்சமேயில்லை.

டோரி தன்னுடைய கடந்த இரு முயற்சிகளைப் பற்றி திருமதி. ஸேண்டிடம் கூட சொல்லவில்லை. இந்த முறையும் அநேகமாக சொல்லப் போவதில்லை. திங்கள்கிழமை மாலைகளில் அவளைச் சந்திக்கும் திருமதி.ஸேண்ட்ஸ் அவள் மீண்டு வரவேண்டும் என்பாள். ஆனால் அதற்கு சிறிது காலம் பிடிக்கும் , எதையும் அவசரப் படுத்தக் கூடாது என்றும் அவள் சொல்வதுண்டு. டோரி நன்றாக தேறி வருவதாகவும், மெல்ல தன்னுடைய பலத்தை அடைந்து வருவதாகவும் சொன்னாள்.

"இந்த வார்த்தைகளை ஏற்கனவே நிறைய முறை பேசி சாகடித்தாகிவிட்டது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உண்மை அதுதான்" என்றாள்.

- சாவு - என்று அவள் வாயாலேயே சொன்னதைக் கேட்டு அவளுக்கே சங்கோஜமாக இருந்தது என்றாலும் மன்னிப்பு கேட்டு அதை மேலும் இரசாபாசமாக்கவில்லை.

டோரிக்கு பதினாறு வயதாக இருக்கும் போது - அது ஏழு வருடத்திற்கு முன்பு - பள்ளி முடிந்ததும் அவள் தினமும் மருத்துவமனையில் இருந்த தன் தாயை பார்க்கச் செல்வாள். அவள் அம்மா முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தேறிக்கொண்டு வந்தாள். அது தீவிரமானது என்று சொன்னாலும் அப்படி ஒன்றும் ஆபத்தானது இல்லை என்றார்கள். மருத்துவமனையின் கடைநிலை ஊழியனாக இருந்தவன் லாயிட். அவனுக்கும் டோரியின் தாய்க்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும் பழைய ஹிப்பிகள் என்பது மட்டுமே. இருந்தாலும் உண்மையில் லாயிட், டோரியின் அம்மாவைவிட சில வருடங்கள்தான் இளையவன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து அவர்களிருவரும் கலந்துகொண்ட இசை கச்சேரிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள், அவர்களறிந்த ஒழுங்கீனமாக மனிதர்கள், அவர்களை தடம்புரளச் செய்த போதை பழக்கம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

நோயாளிகளுக்கு மத்தியில் லாயிட் மிகவும் பிரபலமானவன். காரணம் அவனுடைய நகைச்சுவையும், நம்பிக்கையளிக்கும் உறுதியான பாணியும். கட்டையாக, அகன்ற தோள்களுடன் சில சமயம் டாக்டர் என்று எண்ணத் தோன்றுகிற அளவுக்கு அதிகார தோரணையுடன் இருப்பான். (அதற்காக அவன் சந்தோஷப் பட்டதில்லை - பெரும்பாலான மருந்துகள் போலி, அநேக மருத்துவர்கள் முட்டாள்கள் என்பது அவன் கருத்து ) அவனுக்கு மென்மையான சிவந்த தோல், மிருதுவான தலைமுடி ,பெரிய விழிகள்.

லிஃப்டில் டோரியை முத்தமிடுகையில் அவள் பாலைவனத்தில் இருக்கும் மலர் என்றான். பின்பு தனக்குத்தானே சிரித்துக்கொண்டு "உண்மைதானா அது?" என்றான்.

"நீங்கள் கவிஞர், உங்களுக்குத் தெரியாதா?" என்றாள் கனிவாக.

ஒரிரவு டோரியின் அம்மா திடீரென இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்து போனாள். டோரியின் அம்மாவினுடைய ஏராளமான தோழிகளுள் யாரேனும் ஒருவர் டோரியை வைத்து பராமரித்திருக்க முடியும். ஆனால் அவர்களில் டோரி தேர்வு செய்தது புதிய நண்பனான லாயிடைத்தான். அடுத்து வந்த தனது பிறந்தநாளில் டோரி கர்ப்பமாக இருந்தாள், பிறகு திருமணம் செய்து கொண்டாள். லாயிடுக்கு ஏற்கனவே குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது,இந்நேரம் வளர்ந்திருக்க வேண்டும், ஆனால் அவனுக்கு அதுவரை திருமணம் என்று ஒன்று ஆகியிருக்கவில்லை. வாழ்க்கையை பற்றிய அவனது சித்தாந்தம் வயதானதால் மாறியிருக்கிறது. இப்போது அவனுக்கு திருமணம், வாழ்க்கை, குழந்தை பெற்று கொள்ளுதல் எல்லாவற்றிலும் நம்பிக்கை வந்திருக்கிறது. ஷெல்ட் தீபகற்பத்தில் அவனும் டோரியும் குடும்பம் நடத்தினர் - எல்லா இடங்களிலும் நெரிசல், பழைய நண்பர்கள், பழைய வாழ்க்கை, பழைய காதலர்கள். விரைவில் அவனும் டோரியும் நகரத்தை விட்டு ஒதுக்குபுறமான ஒரு சிற்றூரை வரைபடத்திலிருந்து கண்டுபிடித்து அங்குப் புலம் பெயர்ந்தனர். ஊருக்குள் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்தனர். லாயிட் ஒரு ஐஸ்கிராம் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்தான். அவர்கள் தோட்டம் பயிரிட்டனர். லாயிடுக்கு தச்சுவேலை, மரஅடுப்பை பராமரித்தல், பழைய காரை சீர்செய்தல் தோட்டவேலை ஆகிய அனைத்தும் அத்துப்படி.

ஷாஷா பிறந்தான்.


"மிகவும் இயல்பானதுதான்" என்றாள் திருமதி ஸேண்ட்ஸ்.

"அப்படியா?" என்றாள் டோரி. டோரி எப்போதும் நேரான முதுகு கொண்ட நாற்காலியில்தான் அமர்வாள், பூவேலை செய்த குஷன் சோபாவில் உட்காரமாட்டாள். திருமதி ஸேண்ட்ஸ் தனது நாற்காலியை மேசையின் ஒரு பக்கமாக நகர்த்திக் கொள்வாள் அப்போதுதான் இருவருக்குமிடையே எந்தத் தடையுமில்லாமல் பேச வசதியாயிருக்கும்.

"நீ இப்படித்தான் செய்வாய் என கணித்திருந்தேன். உன் இடத்தில் நான் இருந்திருந்தால் கூட இதைத்தான் செய்திருப்பேன்." என்றாள்.

திருமதி. ஸேண்ட்ஸ் முன்பு இப்படி சொல்லியிருக்க மாட்டாள். ஒரு வருடத்திற்கு முன்பு இதுபோன்ற ஒரு யோசனையை சொல்லியிருந்தால் டோரி எப்படி ஆர்பாட்டம் செய்திருப்பாள் என்று அறிந்திருந்தாள், அவள் நிலைமையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள் எனற எச்சரிக்கை உணர்வுடன் செயல் பட்டாள். இப்போது டோரி அதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அவளுக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் இப்போது டோரியால் புரிந்துகொள்ளவும் முடியும்.

திருமதி ஸேண்ட்ஸ் ஒரு சிலரைப் போல் இருந்ததில்லை. அவள் கலகலப்பானவளோ, கச்சிதமான உடல் கொண்டவளோ, அழகானவளோ இல்லை. அதிக வயது என்று கூறமுடியாது. ஏறக்குறைய டோரியின் அம்மா வயதிருக்கலாம் என்றாலும் அவள் ஒரு ஹிப்பியாக இருந்திருப்பாள் என்று சொல்லவே முடியாது. வெளுத்திருந்த கேசத்தை கத்தரித்திருந்தாள். வலது கண்ணத்தில் ஒரு மச்சம் இருந்தது. தட்டையான காலணிகளையும், தளர்வான கால்சட்டையும் பூப்போட்ட மேல்சட்டையும் அணிந்திருந்தாள். அவை ராஸ்பெர்ரி அல்லது , பசுமஞ்சள் நிறத்தில் இருந்தாலும் கூட, உடையணிவதில் ஆர்வம் உள்ளவளாகத் தோன்றாது. இதையெல்லாம் போட்டுக்கொண்டால்தான் நீ அழகாக இருப்பாய் என்று யாரோ சொல்லிக் கொடுத்து, அதற்கு கர்மசிரத்தையாக கீழ்படிந்து கடைக்குச் சென்று வாங்கிவந்து போட்டுக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். அவளது பெரிய, கனிவான, சமரசமற்ற கடுந்தன்மை அனைத்து நக்கல்தொனியையும், அவமானங்களையும் அந்த உடையிலிருந்து துடைத்து எறிந்து விடும்.

"முதல் இரண்டு முறையும் நான் அவரைப் பார்க்கமுடியவில்லை. அவர் வெளியே வரவேயில்லை." என்றாள் டோரி.

"ஆனால் இம்முறை வந்தானா?"

"ஆம். ஆனால் எனக்கு அடையாளமே தெரியவில்லை"

"வயதானவன் போலிருந்தானா?"

"அப்படித்தான் நினைக்கிறேன். கொஞ்சம் எடை குறைந்திருப்பதாகத் தோன்றியது. அவர் அணிந்திருந்த உடை சீருடை போலிருந்தது. அது மாதிரியான உடைகளை அணிந்து அவரை நான் கண்டதில்லை."

"அவன் ஒருகாலத்தில் மருத்துவமனை ஊழியன்தானே?"

"ஆனால் இது வேறு மாதிரி இருந்தது"

"அவன் யாரோ அந்நியனைப் போல உனக்குத் தோன்றியதா?"

"இல்லை" என்ன மாறுதல் என்று யோசிக்க முனைகையில் டோரி தன் மேலுதட்டைக் கடித்துக்கொண்டாள். மிகவும் அழுத்தமாக இருந்தான். அவனை அவ்வளவு அழுத்தமாக அவள் அதற்கு முன் பார்த்ததேயில்லை. அவளுக்கு எதிரே உட்காரலாம் என்பதைக் கூட அவன் உணர்ந்தாகத் தெரியவில்லை. அவள் அவனிடம் பேசிய முதல் வார்த்தையே "உட்கார மாட்டீர்களா?" என்றுதான். "பரவாயில்லை" என்றான் அவன்.

"அவர் ஒரு வெற்றிடம் போலத் தோன்றினார். அவருக்கு மருந்து செலுத்தியிருப்பார்களோ எனச் சந்தேகமாயிருந்தது" என்றாள் அவள்.

"இருக்கலாம். ஒரு வேளை அவனைச் சமநிலையில் வைப்பதற்காகக் கொடுத்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக சொல்லமுடியவில்லை. பேசினாயா அவனோடு?"

டோரி அவனிடம் சில சாதாரண முட்டாள்தனமான கேள்விகளை கேட்டிருந்தாள். அதை உரையாடல் என்று சொல்லலாமா என்று குழப்பமாக இருந்தது. அவன் எப்படி இருக்கிறான்? (நன்றாக ) சரியாக சாப்பிடுகிறானா ? ( அப்படித்தான் நினைக்கிறேன்) நடக்கவேண்டும் என்று நினைத்தால் அனுமதியுண்டா? (ஆம் . மேற்பார்வையின் கீழ். அதை இடம் என்று நினைத்துக் கொண்டால் இடம். அதை நடை என்று நினைத்துக்கொண்டால் நடை. )

"உங்களுக்கு சுத்தமான வெளிக்காற்று தேவை" என்றாள்.

"உண்மைதான்" என்றான்

அவனுக்கு யாராவது நண்பர்கள் கிடைத்தார்களா என்று கேட்டாள். பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் கேட்பதை போல. குழந்தை முதன்முறையாக பள்ளிக்கு சென்றால் கேட்போமே அது போல.

"ஆம், ஆம்"

திருமதி ஸேண்ட்ஸ் காகித கைக்குட்டைகள் அடங்கிய பெட்டியை டோரியிடம் நீட்டினாள். டோரிக்கு அது தேவையிருக்கவில்லை. அவளது கண்கள் வறண்டு இருந்தன. பிரச்சனை வயிற்றின் அடியில் இருந்தது. அந்தக் கொந்தளிப்பு.

திருமதி ஸேண்ட்ஸ் காத்திருந்தாள் வெறுமனே, தான் செய்வதற்கு எதுவுமில்லை என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

அடுத்து டோரி என்ன கேட்க போகிறாள் என்பதை உணர்ந்து கொண்டது போல லாயிட், மனநலமருத்துவர்கள் அவ்வப்போது வந்து போவதை அவளிடம் சொன்னான்.

"அவர் தன் நேரத்தை வீணடிக்கிறார் என்று சொன்னேன். அவருக்கு தெரிந்ததை விட எனக்கு நன்றாகவே தெரியும்" என்றான் லாயிட்.

அந்தத் தருணத்தில் மட்டும்தான் அவனை பழைய லாயிட் போல டோரிக்குத் தோன்றியது.

அந்தச் சந்திப்பு முழுதும் அவளது இதயம் அதிர்ந்து கொண்டேயிருந்தது. தான் மயக்கமடைந்து விடுவோம் அல்லது இறந்து விடுவோம் என்று பயந்தாள். அவனைப் பார்க்கவே அத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. இத்தனை ஒல்லியான, வெளிறிய, வித்தியாசமாக விரைத்த, இயந்திரத்தனமாக அதே நேரம் தட்டுதடுமாறி நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை காண்பதற்கே அவளால் முடியவில்லை.

இதைப் பற்றியெல்லாம் அவள் திருமதி.ஸேண்ட்ஸிடம் எதுவும் கூறவில்லை. திருமதி.ஸேண்ட்ஸ் அவளுக்கு யாரிடம் பயம்? என்று - சாதுரியமாக- கேட்டிருக்கக் கூடும். அவளிடமா? அவனிடமா? ஆனால் அவள் பயப்படவில்லை.

ஷாஷாவுக்கு ஒன்றரை வயதாகியிருந்த போது பார்பரா ஆன் பிறந்தாள். பார்பரா ஆன் இரண்டு வயதாயிருக்கும் போது டிமிட்ரி பிறந்தான். ஷாஷாவுக்கு இருவரும் சேர்ந்தே பெயர் வைத்தர்கள். அதற்குபிறகு அவர்கள் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள், அவன் ஆண் குழந்தைக்கு பெயர் வைப்பது என்றும் அவள் பெண் குழந்தைக்கு பெயர் வைப்பது என்றும்.

வயிற்றுக் கடுப்பு முதன்முதல் வந்தது டிமிட்ரிக்குத்தான். அவனுக்கு பால் பற்றாகுறையாக இருப்பதாக டோரி எண்ணினாள். தன்னுடைய பால் அத்தனை சத்துள்ளதாக இல்லையா அல்லது நிரம்ப செறிவானதாக இருக்கிறதா? எதுவோ ஒன்று ஆகமொத்தம் சரியில்லை. லா லிச் லீகிலிருந்து ஒரு பெண்ணை லாயிட் வரவழைத்து அவளிடம் பேசச் செய்தான். அவள், என்ன ஆனாலும் சரி நீ அவனுக்கு செயற்கை பால் கொடுக்கக் கூடாது என்று சொன்னாள். அது கத்தியின் கூர்முனை போன்றது எனவும் கூடிய விரைவில் அவன் ஒட்டுமொத்தமாக தாய்பாலையே நிராகரித்து விடுவான் என்றாள் அவள். அது மிகப்பெரிய கஷ்டம் போல் அவள் பேசினாள்.

டோரி ஏற்கனவே அவனுக்கு புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விட்டாள் என்பது அவளுக்கு தெரியாது. மேலும் அதைத்தான் அவன் விரும்பினான் என்பதும் உண்மை. தாய்ப்பாலை அவன் மெல்ல மெல்ல ஒதுக்கி விட்டான். அடுத்த மூன்று மாதத்திற்குள் அவன் முழுக்க முழுக்க புட்டிபாலையே சார்ந்து இருக்கத் துவங்கிவிட்டான். அதற்கு மேல் லாயிடிடம் மறைக்கமுடியவில்லை. தன்னிடம் பால் வற்றிவிட்டதால் புட்டிபால் கொடுக்க ஆரம்பித்துவிட்டதைச் சொன்னாள். லாயிட் அதீத பதற்றத்துடன் அவளது மார்பகங்களை ஒன்றன் பின் ஒன்றாக பிழிந்து நீர்த்துப்போன இரண்டு சொட்டு பாலை வெற்றிகரமாக எடுத்தான். அவளை பித்தலாட்டக்காரி என்றான். அவர்கள் சண்டையிட்டனர். அவளுடைய அம்மாவைப் போலவே அவளும் வேசி என்றான்.

எல்லா ஹிப்பிகளுமே வேசிகள்தான் என்றான்.

விரைவில் அவர்கள் சமரசமாயினர். ஆனாலும் டிமிட்ரிக்கு சளிப் பிடிக்கும் போது, செல்லப்பிராணிகளான முயல்களைக் கண்டு பயப்படும்போது, அல்லது அவனுடைய அண்ணனும், அக்காவும் தானாகவே நடக்க ஆரம்பித்த வயதில் இவன் நாற்காலியிலேயே தொத்திக் கொண்டிருக்கும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்காததைக் குற்றம் சாட்டினான்.

டோரி முதன் முறையாக திருமதி.ஸேண்ட்ஸின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த பெண் அவளிடம் ஒரு அறிவிப்பு தாளினைக் கொடுத்தாள். அதன் மேல் பக்கத்தில் ஒரு தங்கச்சிலுவையும், தங்கநிறமும் அடர் சிவப்பு வண்ணமும் கொண்ட எழுத்துக்களில் , "உங்கள் துக்கம் தாங்கமுடியாததாக இருக்கையில்" என்றிருந்தது. உள்பக்கத்தில் உறுத்தாத வண்ணத்தில் ஏசுநாதரின் படமும் சில அச்சிட்ட தாள்களும் இருந்தன. அதை டோரி படிக்கவில்லை.

மேசையின் முன்னே நாற்காலியில் இருந்தவள், அச்சிட்ட காகிதத்தை பற்றியபடியே நடுங்க ஆரம்பித்தாள். திருமதி ஸேண்ட்ஸிற்கு அவளது கரங்களிலிருந்து அதைப் பிடுங்க வேண்டியிருந்தது.

"யாராவது உனக்கு இதைக் கொடுத்தார்களா?"

"அவள்தான்" டோரி மூடியிருந்த கதவை நோக்கி தலையை அசைத்தாள்.

"உனக்கு இது வேண்டாமா?"

"நாம் கீழே விழுந்திருக்கும் போதுதான் எல்லோரும் நம்மை வளைக்கப் பார்க்கிறார்கள்." என்றாள் டோரி. அவளுடைய அம்மா மருத்துவமனையில் இருந்தபோது இதே மாதிரியான செய்திகளுடன் வருபவர்களை பார்த்து அவள் அம்மாவும் இதையேதான் சொன்னாள் என்பதை பிறகு அவள் உணர்ந்தாள். "நாம் முழங்கால் போட்டு வணங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்"

திருமதி.ஸேண்ட்ஸ் பெருமூச்செறிந்தாள்.

"ம்ம், அதுவொன்றும் அவ்வளவு எளிதானதல்ல, நிச்சயமாக."

"சாத்தியமுமில்லை." என்றாள் டோரி.

"ஆம்."

 

அந்நாட்களில் அவர்கள் லாயிடைப் பற்றி பேசவேயில்லை. டோரி அவனைப் பற்றி நினைக்கவேயில்லை, அப்படியே நினைக்க நேர்ந்தாலும் அவனை ஏதோ இயற்கையின் பயங்கர விபத்து போல உணர்வாள்.

"அந்தக் காகிதத்தில் இருப்பதெல்லாம் உண்மை என்று நம்பினாலும் அதை வேறுமாதிரிதான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது" என்றாள். - அவள் சொல்ல நினைத்தது, -- இதுபோன்ற நம்பிக்கைகள் நமக்கு வசதியாக இருக்கிறது ஏனெனில் அப்போதாவது லாயிட் நரகத்தில் எரிக்கப்படுவான், அல்லது அதைப்போன்ற தண்டனை கிடைக்கும் என்று நம்பலாம் என்று -- ஆனால் அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை, ஏனெனில் அதைப் பற்றி பேசுவது கூட அத்தனை முட்டாள்தனமாக தோன்றியது. வழக்கம்போல் வாய் திக்கியதால் வேறு, அடிவயிற்றில் சுத்தியால் அடித்ததைப் போல இருந்தது.

லாயிட் தனது மூன்று குழந்தைகளும் வீட்டிலியே கல்வி கற்க வேண்டுமென நினைத்தான். அது மதத்திற்கோ , டைனசர்களுக்கோ குகைமனிதர்களுக்கோ அல்லது குரங்குகளுக்கோ எதிரானது என்ற காரணத்தினாலல்ல. குழந்தைகள் பெற்றோர்களுக்கு அருகிலேயே இருக்கவேண்டும், திடுதிப்பென்று தூக்கி போட்டது போல் வெளிஉலகிற்கு அறிமுகமாகாமல் மெதுவாகவும், கவனமாகவும் அறிமுகமாக வேண்டும் என்பதே. "அவர்கள் என் குழந்தைகள்; கல்வித்துறையின் குழந்தைகள் கிடையாது. நமது குழந்தைகள்" என்றான்.

இதை எப்படி கையாள்வது என்று டோரிக்குத் தெரியவில்லை ஆனால் கல்வித்துறையின் வழிமுறைகளையும், பாடத்திட்டங்களையும் அருகிலிருந்த பள்ளியிலிருந்து பெற்றுக் கொள்ளமுடிந்தது. ஷாஷா மிக புத்திசாலியான குழந்தை. அவன் தானாகவே படிக்கக் கற்றுக்கொண்டான். மற்ற இருவரும் கற்று கொள்ள முடியாத அளவுக்கு இன்னமும் மிகச்சிறிய குழந்தைகளாக இருந்தனர். மாலைநேரங்களில் லாயிட் ஷாஷாவுக்கு, புவியியலையும், சூரியகுடும்பம் பற்றியும், விலங்குகளின் குளிர்கால உறக்கம் பற்றியும், கார் எப்படி ஓடுகிறது என்பதை பற்றியும் ஒவ்வொரு பாடமாக கேள்விகள் கேட்பதன் மூலம் கற்றுக் கொடுத்தான். கூடிய சீக்கிரத்தில் ஷாஷா பள்ளி பாடத்திட்டத்தைக் காட்டிலும் முன்னேறிவிட்டான் என்றாலும் டோரி பாடத்திட்டத்தின் பயிற்சிகளையும் உரிய காலத்தில் அவனைச் செய்ய வைத்தாள் . முறைப்படி செய்வதுதானே சரியாக இருக்கும்.

அதே ஊரிலேயே வீட்டில் குழந்தைகளைப் படிக்கவைக்கும் இன்னொரு தாய் இருந்தாள். அவள் பெயர் மேகி, அவளிடம் சிறிய வேன் இருந்தது. லாயிடுக்கு வேலைக்குச் செல்ல கார் தேவையாக இருந்தது மேலும் டோரிக்கு கார்ஓட்டத் தெரியாது எனவே வாரத்துக்கு ஒருமுறை நிறைவு செய்த பயிற்சி பாடங்களை கொடுத்துவிட்டு புதிய பாடங்களை பள்ளியிலிருந்து பெற்று வர மேகி அவளுக்கு உதவியாக இருந்தாள். குழந்தைகளையும் அவர்கள் கூட்டிச்சென்றனர். மேகிக்கு இரண்டு மகன்கள். பெரியவனுக்கு நிறைய ஒவ்வாமைகள் இருந்தன எனவே அவன் என்னென்ன சாப்பிடுகிறான் என்பதைக் கவனித்துக் கொண்டேயிருப்பாள். அதற்காகவே அவனை வீட்டிலேயே படிப்பித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் இளையவனையும் வீட்டிலேயே வைத்துக் கொண்டாள். அவனும் அவன் அண்ணனுடனேயே வீட்டிலிருக்க விரும்பினான், அவனுக்கும் மூச்சிறைப்பு இருந்தது.

அவர்களோடு தனது மூன்று ஆரோக்கியமான குழந்தைகளையும் ஒப்பிட்டு அந்நாட்களில் டோரி எவ்வளவு பெருமைபட்டுக் கொள்வாள் ! இளவயதிலேயே பிள்ளைகளைப் பெற்றதால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பான் லாயிட், ஆனால் மேகி தன் மெனோபாஸ் காலம் வரை காத்துக்கொண்டிருந்தாள் என்பான். மேகி மிகவும் வயதானவள் என்பதுபோல அவன் மிகைப்படுத்திக் கூறினான், அவள் காத்திருந்தாள் என்பது உண்மைதான். அவள் ஒரு கண்பரிசோதகர். அவளும் அவளுடைய கணவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இருந்தனர். அவள் தொழிலை விட்டு வரும் வரையிலும், ஊரில் ஒரு வீடு சொந்தமாக வாங்கும் வரையிலும் அவர்கள் மணமுடித்துக் கொள்ளவில்லை.

மேகியின் தலைமுடி பாதி வெளுத்திருந்தது, தலையை ஒட்டி கூந்தலை வெட்டியிருந்தாள். உயரமாக, தட்டையான மார்பகங்களுடன், குதுகலமானவளாக, உறுதியானவளாக இருந்தாள். லாயிட் அவளை லெஸ்ஸி (லெஸ்பியன்) என்று அழைப்பான், அவள் முதுகுக்குப்பின்னால் மட்டும்தான். தொலைபேசியில் அவளோடு கிண்டலடித்துக்கொண்டே தொலைபேசியின் வாயை மூடியபடி ‘அந்த லெஸ்ஸிதான் ‘ என்பான் டோரியிடம். அது டோரிக்கு ஒன்றும் புதிதல்ல அவன் நிறைய பெண்களை அப்படித்தான் அழைத்தான். ஆனால் இது அளவுக்கதிகமாகி மேகியுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவதைப் போலத் தோன்றியது. அது ஒரு இடைஞ்சலாக அல்லது நேரவிரயமாகத் தோன்றியது.

"அந்தக் கிழவியோடு பேசவேண்டுமா? ஆமாம், இங்கேதான் வந்திருந்தாள், என் கால்சராயையெல்லாம் தோய்த்துவிட்டுப் போனாள். பார்த்தாயா, இப்போது ஒரே ஒரு சராய்தான் என்கிட்டே இருக்கு. அவளுக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமென்றுதான் செய்யவைத்தேன்."

பள்ளியிலிருந்து பயிற்சித்தாள்களை பெற்றுக்கொண்ட பிறகு டோரியும், மேகியும் காய்கறிகள் வாங்கச் செல்வது வழக்கமாக இருந்தது. சில நேரங்களில் டிம் ஹார்ட்டனில் காபி சாப்பிட்டுவிட்டு குழந்தைகளை 'ரிவர்சைட்' பூங்காவிற்கு கூட்டிச் செல்வதுமுண்டு. அவர்கள் விசிப்பலகையில் அமர்ந்து கொள்ள, ஷாஷாவும், மேகியின் இரண்டு மகன்களும் சறுக்குமரத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். பார்பரா ஊஞ்சலில் ஆடுவாள், டிமிட்ரி மணற்பெட்டிகளில் விளையாடுவான். குளிராக இருக்கும் போது அவர்கள் வேனிலேயே உட்கார்ந்து கொள்வதும் உண்டு. பொதுவாக அவர்கள் குழந்தைகளைப் பற்றியோ, சமையலைப் பற்றியோ பேசினர். மேகி கண்பரிசோதகராக ஆவதற்கு முன் ஐரோப்பாவை சுற்றிலும் ட்ரெக்கிங் செய்திருக்கிறாள் என்பதை டோரியும், திருமணமாகும் போது டோரி எத்தனை சிறிய பெண்ணாக இருந்தாள் என்பதை மேகியும் அறிந்து கொண்டனர். அதே போல் டோரி எத்தனை எளிதாக கர்பம் தரித்தாள், மேகி எத்தனை சிரமப்பட்டாள் என்பதையும் கூட, லாயிட் டோரி மீது சந்தேகப்பட்டு அவள் கருத்தடை மாத்திரை இரகசியமாக உபயோகிக்கிறாளா என்று மேசையறைகளிலும், அலங்கார மேசையிலும் சோதனையிட்டதை பற்றியும் கூட பேசியிருக்கின்றனர்.

"நீ அப்படிச் செய்தாயா?" என்று மேகி கேட்டாள்.

டோரி அதிர்ந்து போய், அப்படி செய்யத் தான் துணிந்தது இல்லை என்றாள்.

"அவரிடம் சொல்லாமல் அப்படிச் செய்வது நல்லதல்ல என்று தெரியும். அப்படியிருக்கையில் அவர் சந்தேகப்பட்டு தேடியது விசித்திரமாக இருந்தது."

"ஓ" என்றாள் மேகி.

ஒருமுறை மேகி, "எல்லாம் சரியாக இருக்கிறதா? உன் திருமண வாழ்வைப் பற்றி கேட்கிறேன். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?" என்று கேட்டாள்.

தயக்கமேயில்லாமல் "ஆம்" என்றாள் டோரி. அதற்குபிறகு கவனமாக பேசினாள். அவளுக்கு பழகிப் போன சிலவிஷயங்கள் மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாதது என்று டோரி புரிந்து கொண்டாள். லாயிட் சில விஷயங்களை வேறுமாதிரியாக புரிந்துகொள்வான். ஆனால் அதுதான் அவனது இயல்பு. அவனை முதன்முதலாக மருத்துவமனையில் சந்தித்தபோதே அவன் அப்படித்தான் இருந்தான். அங்கிருந்த தலைமைச் செவிலி ஒரு கறார் பேர்வழி , எனவே மிட்ச்செல் என்ற அவளது பெயரை, மிஸஸ். பிட்ச்-அவுட்-ஆஃப்-ஹெல் என்பான். அவன் மிகவேகமாக அதைச் சொல்வதால் யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. அவள் சிலருக்கு சலுகைக் கொடுப்பதாக அவன் நினைத்தான் ஆனால் அவள், அவனுக்கு எந்தச் சலுகையும் காட்டியதில்லை. இப்போதும் ஐஸ்கிராம் தொழிற்சாலையில் யாரோ ஒருவரை நையாண்டி செய்வான். அவரை ஸக்-ஸிடிக்-லூவி என்று அழைப்பான். அந்த மனிதனின் உண்மையான பெயர் டோரிக்குத் தெரியாது. ஆனால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களையும் அவன் விட்டுவைப்பதில்லை என டோரிக்குப் புரிந்தது.

இந்த ஆட்களெல்லாம் லாயிட் சொல்லுமளவுக்கு மோசமானவர்கள் இல்லை என்பது டோரிக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும். ஆனால் அவனோடு முரண்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒருவேளை ஆண்களுக்கு அவர்கள் சிரிப்பதற்கான விஷயம் வேண்டியிருப்பதைப் போலவே எதிரிகளும் தேவை போல. சிலசமயம் லாயிட் எதிரிகளைக் கூட நகைச்சுவையாக சொல்வதுண்டு , தனக்குத்தானே சிரித்துக் கொள்வதை போல. அவளாக சிரிக்க ஆரம்பிக்காத பட்சத்தில் அவனோடு சேர்ந்து சிரிக்கலாம்.

மேகி விஷயத்தில் அவன் அப்படிச் செய்யமாட்டான் என்று அவள் நம்பினாள். சிலசமயம் அப்படிப்பட்ட சூழல் வந்துவிடுமோ என்று அஞ்சுவாள். அவளோடு சேர்ந்து பள்ளிக்கும் , காய்கறி கடைகளுக்கும் செல்ல அவன் தடைசொன்னால் அவளுக்கு அது மிகுந்த அசௌகரியமாகி விடும். அதைவிட அவமானமாகி விடும். மேகியிடம் அதை விளக்குவதற்காக முட்டாள்தனமான பொய்களை சொல்ல வேண்டிவரும். ஆனால் மேகி கண்டுபிடித்து விடுவாள். குறைந்தபட்சம் டோரி பொய் சொல்கிறாள் என்று தெரிந்துவிடும், அவள் அதை மேலும் பெரிதாக்கி, உண்மையில் டோரி இருக்கும் சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். மேகி சிறிதும் முட்டாள்தனமில்லாது விஷயங்களை கூர்மையாக புரிந்து கொள்ளக் கூடியவள்.

எப்படியிருந்தாலும் மேகி என்ன நினைப்பாள் என்பது பற்றி டோரி எதற்காக கவலை படவேண்டும்? மேகி மூன்றாம் மனுஷி. சொல்லப்போனால் அவளுக்கு இணக்கமானவளும் அல்ல. லாயிடும், குழந்தைகளும்தான் முக்கியம். லாயிட் அதைத்தான் சொன்னான், அவன் சொல்வது சரிதான். அவர்களுக்குள்ளான நியாயம், உறவு, மற்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடியதல்ல. அது அவர்களது வேலையுமல்ல. டோரி தன்னளவில் விசுவாசமாக இருக்கும் வரையில் எல்லாமே சரியாகவே இருக்கும்.

மெல்ல மெல்ல நிலைமை மோசமாகியது. நேரிடையாக இல்லாவிட்டாலும் நிறைய கருத்துபேதங்கள் உண்டாயின. மேகியின் பையன்களின் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவுக்கு மேகிதான் காரணம் என்பது லாயிடின் கருத்து. எப்போதுமே அம்மாக்களின் தவறுதான் காரணம் என்றான் அவன். மருத்துவமனையில் அம்மாக்களின் குறிப்பாக அதிகம் படித்த மேதாவிகளின் அதீத கட்டுப்பாடுகளை தான் வழக்கமாக பார்த்திருப்பதாகக் கூறினான்

"சில சமயம் குழந்தைகள் பிறக்கும்போதே மெல்ல மெல்ல நிலைமை மோசமாகியது. நேரிடையாக இல்லாவிட்டாலும் நிறைய கருத்துபேதங்கள் உண்டாயின. மேகியின் பையன்களின் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவுக்கு மேகிதான் காரணம் என்பது லாயிடின் கருத்து. எப்போதுமே அம்மாக்களின் தவறுதான் காரணம்" என்றான் அவன். மருத்துவமனையில் அம்மாக்களின் குறிப்பாக அதிகம் படித்த மேதாவிகளின் அதீத கட்டுப்பாடுகளை தான் வழக்கமாக பார்த்திருப்பதாகக் கூறினான்

"சில சமயம் குழந்தைகள் பிறக்கும்போதே கோளாறுகளுடன் பிறப்பதுண்டு. அதற்கு அம்மாக்கள்தான் காரணம் என்று நீங்கள் சொல்லமுடியாது." என்று டோரி யோசிக்காமல் சொல்லிவிட்டாள்..

"ஓ, நான் சொல்லக்கூடாதா?"

"நீங்கள் சொல்லக்கூடாது என்றில்லை, சொல்லமுடியாது என்றேன். அவர்கள் பிறக்கும்போதே அப்படி இருக்கிறார்கள்-----"

"எப்போதிலிருந்து நீ இப்படி மருத்துவ நிபுணரானாய்?"

"நான் அப்படிச் சொல்லவில்லை"

"அதைத்தான் நானும் சொல்கிறேன்."

நிலைமை மேலும் மோசமாகியது. அவளும் மேகியும் காரில் போகும்போது என்ன பேசினார்கள் என்று கேட்டான்.

"எனக்கு எதுவும் தெரியாது. உண்மையில் ஒன்றும் பேசவில்லை."

"வேடிக்கைதான். இரண்டு பெண்கள் கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள். ஆனால் எதுவும் பேசவில்லை என்பதை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். அவள் நம்மை பிரிக்கப் பார்க்கிறாள்."

"யார்? மேகியா?"

"அவளை மாதிரியான பெண்களை எனக்குத் தெரியும்."

"என்ன மாதிரியான?"

"அவளை மாதிரியான"

"முட்டாள்தனமாக பேசாதீர்கள்"

"ஜாக்கிரதையாக பேசு. என்னை முட்டாள் என்று சொல்லாதே."

"நம்மை பிரிப்பதனால் மேகிக்கு என்ன பிரயோஜனம்?"

"அது எனக்கு எப்படி தெரியும்? வேண்டுமென்றே கூட செய்யலாம். நான் எப்படிப் பட்ட வேசிமகன் என்று உன்னை புலம்ப வைத்து , கதற வைப்பாள். நீ காத்திருந்து பார். பார்க்கத்தானே போகிறாய்."

அவன் சொன்னதுபோலவே ஒருநாள் நடந்தது. குறைந்தபட்சம் லாயிடு அப்படித்தான் நினைத்திருக்கக் கூடும். ஒரு நள்ளிரவு பத்துமணிக்கு அவள் மேகியின் சமையலறையில் நின்று கொண்டிருந்தாள். கண்ணீரைத் துடைத்தபடி மூலிகைத் தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். அவள் கதவைத் தட்டியபோது மேகியின் கணவர் "என்ன இம்சை இது?" என்று சொன்னதை வாசலிலிருந்து கேட்டாள். அவள் யாரென்று அவருக்குத் தெரியவில்லை. இறுகிய உதடுகளுடன் புருவத்தை உயர்திதி பார்த்தவரிடம் "தொந்தரவுக்கு மன்னிக்கவும் " என்றாள். சில விநாடிகளில் மேகி உள்ளிருந்து வந்தாள்.

டோரி இருளில் அத்தனை தொலைவு நடந்தே வந்திருந்தாள், அவளும் லாயிடும் இருக்கும் வீட்டுக்கு அருகிலிருக்கும் சரளைப் பாதை வழியாக முதலிலும், பிறகு பிரதானசாலையிலுமாக வந்திருந்தாள். ஒவ்வொருமுறை கார் வந்தபோதும் இடித்துக்கொள்ள நேர்ந்து பிறகு ஒரளவிற்கு சுதாரித்துக் கொண்டு நடந்தாள். கடந்துபோன கார்களை எல்லாம் உற்றுபார்த்தாள், எதிலாவது ஒன்றில் லாயிட் வரக்கூடும் என்று. அவன் தனது பைத்தியகாரத்தனத்திலிருந்து விடுபடும் வரையிலாவது அவளைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று விரும்பினாள். மற்ற சமயங்களில் அவளாகவே அவனது பைத்தியகாரத்தனத்திலிருந்து விடுபட வைக்கமுடிந்தது. அழுதோ, கத்தியோ, சிலசமயம் தரையில் தலையை மோதி, "அது உண்மையில்லை, அது உண்மையில்லை, அது உண்மையில்லை," என்று மீண்டும் மீண்டும் ஜபித்தோ அவனை பயமுறுத்தி வழிக்குக் கொண்டுவருவாள். கடைசியாக அவன் இறங்கிவருவான். "ஓ.கே. ஓ.கே. உன்னை நான் நம்புகிறேன் ஹனி, அமைதியாயிரு. குழந்தைகளை நினைத்துப் பார். நான் உன்னை நம்புகிறேன். உண்மையாக. தயவுசெய்து நிறுத்து. "

ஆனால் இன்றிரவு அவள் சட்டென்று வாரிசுருட்டிக்கொண்டு எழுந்தாள் ஏதோ நாட்டியமாடச் செல்பவளைப் போல. அவளது மேல் கோட்டை அணிந்துகொண்டு வாசலைத் தாண்டி நடந்தாள், பின்னால் அவன் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். "போகாதே, உன்னை எச்சரிக்கிறேன்."

மேகியின் கணவன் நிலைமையைப் புரிந்து கொண்டு நேராக தனது அறைக்குச் சென்றுவிட்டான். டோரி "மன்னிக்கவும், மன்னிக்கவும், இந்த நடுராத்திரியில் உன் வீட்டுக்கு அத்துமீறி நுழைந்ததற்கு." என்றாள்.

"ஓ, போதும், நிறுத்து." என்ற மேகி, இயந்திரத்தனமாக "ஒயின் ஒரு கிளாஸ் குடிக்கிறாயா?" கேட்டாள்.

"நான் குடிப்பதில்லை "

"அப்படியென்றால் புதிதாக ஆரம்பிக்கவேண்டாம். உனக்கு கொஞ்சம் தேநீர் எடுத்து வருகிறேன். ராஸ்பெர்ரி - காமோமைல் கலந்தது. அது மிகவும் புத்துணர்வாக இருக்கும். குழந்தைகள் பிரச்சனை எதுவுமில்லையே "

"இல்லை "

மேகி அவளது மேல்கோட்டை வாங்கிக் கொண்டு கீளினெக்ஸ் கத்தைகளை அவளிடம் நீட்டினாள். "இப்போது எதுவும் நீ சொல்லத் தேவையில்லை. முதலில் ஓய்வெடு "

ஓரளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்ட போதும் அவள் முழுவதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் பிரச்சனையின் அடிப்படைக்கு தானே காரணம் என்று மட்டும் சொன்னாள். லாயிடைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. அவனோடு அவளது உறவு எவ்வளவு வேண்டுமானாலும் சீர்கெட்டு இருந்த போதிலும் இந்த உலகில் அவளுக்கு நெருக்கமான ஒரே நபர் அவன்தான். நம்பிக்கை துரோகி போல யாரிடமாவது அவனைப் பற்றி அவள் உள்ளபடி சொன்னால் எல்லாமே நாசமாகிவிடும் என்று உணர்ந்தாள்.

லாயிடும் அவளும் ஒரு பழைய வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக்கொண்டதாகவும் அவள் மிகக் களைப்படைந்து வெளியே செல்ல விரும்பியதாகவும் சொன்னாள். ஆனால் அவள் இதிலிருந்து மீண்டுவிடுவாள் என்று சொன்னாள். அவர்கள் சரியாகிவிடுவார்கள்.

"எல்லா தம்பதிகளுக்கும் சிலசமயங்களில் இப்படி நடப்பதுண்டு" என்றாள் மேகி.

தொலைபேசி அடித்தது. மேகி எடுத்தாள்.

"ஆம். அவள் நன்றாக இருக்கிறாள். சமாதானப்படுத்திக் கொள்வதற்காக சும்மா கொஞ்சம் வெளியே வரவிரும்பினாள். நல்லது. ஓ.கே. காலையில் அவளை வீட்டிற்கு கொண்டுவந்து விடுகிறேன். ஒன்றும் சிரமமில்லை. ஓ.கே. குட்நைட்."

"அவன்தான். கேட்டிருப்பாய் என்று நினைக்கிறேன்." என்றாள்.

"எப்படி பேசினார்? சகஜமாக இருந்தாரா? "

மேகி சிரித்தாள். "அவன் சகஜமாக இருக்கும் போது எப்படி பேசுவான் என்று எனக்குத் தெரியாதே. இல்லையா? குடித்தது மாதிரி தோன்றவில்லை."

"அவரும் குடிக்கமாட்டார். வீட்டில் காபிகூட குடிப்பது கிடையாது"

"கொஞ்சம் டோஸ்ட் வேண்டுமா?"

அதிகாலையில் மேகி அவளை வீட்டிற்கு கூட்டிச் சென்றாள். மேகியின் கணவன் இன்னமும் வேலைக்கு கிளம்பவில்லை. பையன்களுடன் அவர் இருந்து கொண்டார்.

மேகி திரும்ப வேண்டிய அவசரத்தில் இருந்ததால் அவளை இறக்கிவிட்டு வெறுமனே "பை, பை" என்றாள். மினி வேனைத் திருப்பிக்கொண்டே, "ஏதாவது பேசவேண்டியிருந்தால் தொலைபேசியில் கூப்பிடு" என்றாள்.

அது முன்வசந்தகாலத்தின் குளிர்ந்த காலைப் பொழுது, மைதானத்தில் இன்னமும் பனி உறைந்திருந்தது. ஆனால் லாயிட் மேல்சட்டைகூட போடாமல் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்.

"குட் மார்னிங் " ஏளனம் தொனித்த கனிவான குரலில் உரக்கச் சொன்னான். அவள் அவனது நையாண்டியை கவனிக்காதது போன்ற பாவனையில் குட் மார்னிங் என்றாள்.

படிக்கட்டில் ஏற அவளுக்கு வழிவிடாதபடி நகராமல் உட்கார்ந்திருந்தான்.

" நீ உள்ளே போகமுடியாது " என்றான்.

அதை சகஜமாக எடுத்துக்கொள்ள தீர்மானித்தாள்.

" நான் கெஞ்சிக் கேட்டால் கூடவா? தயவுசெய்து, "

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆனால் பதில் எதுவும் கூறவில்லை. உதடுகளைப் பிரிக்காமல் புன்னகைத்தான்.

" லாயிட்? என்றாள் அவள். "லாயிட்?" என்றாள் மீண்டும்.

" நீ உள்ளே போகாமல் இருப்பது நல்லது"

" நான் அவளிடம் எதுவும் சொல்லவில்லை லாயிட். நான் வெளியே போனதற்கு மன்னித்துவிடுங்கள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்தேன் அவ்வளவுதான். "

" உள்ளே போகாமல் இருப்பது நல்லது "

" என்ன ஆச்சு உங்களுக்கு ? குழந்தைகள் எங்கே?"

அவன் தலையை உதறினான். அவன் கேட்க விரும்பாததை அவள் சொல்லிவிட்டதைப் போல. கொஞ்சம் லேசான முரட்டுத்தனத்துடன். "அடச் ச்சை" என்பது போல.

"லாயிட். குழந்தைகள் எங்கே? "

அவன் லேசாக நகர்ந்து அவள் உள்ளே போக வேண்டுமென்றால் போகலாம் என்பது போல வழிவிட்டான்.

டிமிட்ரி அப்படியே தொட்டிலில் சாய்வாகக் கிடந்தான். பார்பரா ஆன் அவளது படுக்கைக்கு அருகில் எழுந்து ஓட எத்தனித்திருபதை போல அல்லது யாரோ இழுத்ததைப் போல தரையில் கிடந்தாள். ஷாஷா சமையலறை வாசலில் - அவன் தப்பிக்க நினைத்திருக்கிறான். அவன் மட்டும்தான் கழுத்தில் காயங்களுடன் இருந்தான். மற்றவர்களுக்கு தலையனையே போதுமானதாக இருந்திருக்கிறது.

"நேற்றிரவு ஃபோன் செய்தேனே அப்போதே எல்லாம் முடிந்து விட்டது" என்றான்.

"நீயேதான் எல்லாவற்றையும் வரவழைத்துக்கொண்டாய் " என்றான்.

அவன் மனநலமில்லாதவன் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. அவனை சட்டப்படி தண்டிக்க முடியாது. அவன் சட்டத்துக்கு புறம்பான பைத்தியம் - பாதுகாப்பான காப்கத்தில் அடைக்கப்பட வேண்டியவன்.

டோரி வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து யாரோ அவள் வயிற்றை கிழித்துவிட்டதை போல கைகளை வயிற்றில் அழுத்திக் கொண்டு தன்னையே மொத்தமாக பிடித்துக்கொண்டு தோட்டத்தை தட்டுதடுமாறி சுற்றினாள். இந்தக் காட்சியைத்தான் திரும்பி வந்த மேகி கண்டாள். அவளுக்கு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று உள்ளுணர்வு சொன்னது. எனவே சாலையிலிருந்து மினிவேனை திருப்பிக் கொண்டு வந்திருந்தாள். முதலில் டோரியை அந்த நிலையில் பார்த்தபோது அவள் கணவன் அடித்திருக்கிறானோ அல்லது வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறானோ என்றுதான் தோன்றியது. டோரி எழுப்பிய சப்தத்திலிருந்து எதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் படிக்கட்டில் அசையாது உட்கார்ந்திருந்த லாயிட் அவளை நோக்கி ஆதுரத்துடன் நகர்ந்தான். எதுவும் பேசாமல் மேகி வீட்டிற்குள் நுழைந்தாள், என்ன நடந்திருக்கும் என்று ஊகித்திருந்தாளோ அதைக் கண்டாள். போலீசுக்கு தொலைபேசி செய்தாள்.

முதலில் கையில் கிடைத்ததையெல்லாம் டோரி வாய்க்குள் திணித்துக்கொண்டிருந்தாள். தெருவில் கிடந்த குப்பை, புற்கள். மருத்துவமனையில் சேர்த்த பிறகும் படுக்கை விரிப்பை, டவல்களை, தனது ஆடையையே கூட கிழித்து வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள். அவளது பீறிட்ட அலறலை மட்டுமல்ல அவளது மண்டைக்குள் இருந்த காட்சியையும் அடக்க முயற்சிப்பதை போல இருந்தது அது. அவளை அமைதிப்படுத்த ஏதோ மருந்து அவ்வப்போது தரப்பட்டது. உண்மையில் அவள் முழுஉணர்வையும் இழக்காவிட்டாலும் சிறிது அமைதியடைய அது கொஞ்சம் உதவியது. அவள் தாக்குபிடித்து விடுவாள் என்று இப்போது கூறினார்கள்.அவள் மருத்துவமனையிலிருந்து வெளிவந்தபோது சமூகஆர்வலர் ஒருவர் அவளை இந்தப் புதிய இடத்துக்கு அழைத்துவந்தார், திருமதி ஸேண்ட்ஸ் பொறுப்பெடுத்துக் கொண்டாள், அவள் வசிக்க ஒரு இடத்தையும், வேலையையும் பார்த்து வைத்தாள். வாரத்திற்கு ஒரு முறை அவளோடு பேசும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டாள். மேகி அவளை பார்க்க வந்திருந்திருக்கலாம், ஆனால் டோரி சந்திக்கவே விரும்பாத ஒரே நபர் அவள்தான். அந்த உணர்வு இயல்பானதுதான் - அது ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது என்றாள் திருமதி ஸேண்ட்ஸ். மேகி அதைப் புரிந்து கொள்வாள் என்றாள்.

டோரி, லாயிடை சந்திக்கச் செல்வது அவளுடைய விருப்பம் எனறாள் திருமதி.ஸேண்ட்ஸ். "சம்மதிப்பதற்கோ மறுப்பதற்கு தனக்கு உரிமையில்லை என்றாள். அவனை சந்திப்பது உனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா? இல்லையா?"

"எனக்குத் தெரியவில்லை."

தான் பார்ப்பது உண்மையாகவே அவனைத்தானா என்று தெரியவில்லை என்பதை டோரியால் அவளிடம் விளக்க முடியவில்லை. ஏறக்குறைய அவனது பேயுருவைப் பார்ப்பது போல இருந்தது. மிகவும் வெளிறி இருந்தான். வெளுத்துப்போன தளர்வான ஆடைகள். காலில் சப்தமேற்படுத்தாத ஷுக்கள் - செருப்புகளாக இருக்கலாம். அவனுடைய அந்த அடர்த்தியான, அலை அலையான தேன் நிற கேசம் கொஞ்சம் கொட்டிவிட்டிருப்பதைப்போலத் தெரிந்தது. அவள் வழக்கமாக தலைவைத்து சாய்ந்து கொள்ளும் வளமான தோள்கள் ஒடுங்கியிருந்தன.

போலீஸிடம் பிறகு அவன் என்ன சொல்லியிருந்தான்? அது கூட செய்திதாள்களில் கொட்டை எழுத்துக்களில் வந்திருந்தன. - "துன்பத்திலிருந்து அவர்களை காப்பற்றவே இதைச் செய்தேன்."

"என்ன துன்பம்?"

"அவர்களது அம்மா அவர்களைவிட்டு ஓடிவிட்டாள் என்பதை அறிந்து கொள்ளும் துன்பம்" என்றான் அவன்.

அதுதான் டோரியின் மூளையில் பற்றியெறிந்து கொண்டிருந்தது. அவனைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது கூட இந்த வார்த்தைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அவள் இருந்தாள். உண்மையில் என்ன நடந்தது என்பதை அவன் பார்த்து ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும்.

 

"எதிர்த்து பேசுவதை நிறுத்து அல்லது வீட்டைவிட்டுவெளியே போ என்று நீங்கள் சொன்னீர்கள். அதனால்தான் நான் சென்றேன்."

"மேகி வீட்டுக்கு நான் ஒரே ஒரு நாளிரவுதான் போனேன். திரும்பி வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இருந்தேன். மற்றபடி நான் ஓடிப்போகவில்லை."

அந்த வாக்குவாதம் எப்படி ஆரம்பித்தது என்று அவளுக்கு நன்றாக நினைவிலிருந்தது. அவள் லேசாக நசங்கிய டப்பாவிலிருந்த ஸ்பாஹெட்டியை வாங்கியிருந்தாள். ஏனெனில் அது தள்ளுபடியில் கிடைத்ததால். தன்னுடைய சிக்கனத்துக்காக தானே மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். ஏதோ புத்திசாலித்தனமாக செய்து விட்டதாக நினைத்துக் கொண்டாள். ஆனால் அவன் அதைப் பற்றி கேள்வி கேட்டு துளைக்கத் துவங்கியபோது அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த நசுங்கலை தான் கவனியாததுப் போல பாசாங்கு செய்வதே மேல் என்று எண்ணினாள்.

யாராயிருந்தாலும் கவனித்திருப்பார்கள் என்றான் அவன். நாமெல்லோருமே விஷம் சாப்பிட்டிருப்போம். அவளுக்கு என்ன ஆயிற்று? அல்லது அதுதான் அவளது நோக்கமா? குழந்தைகளுக்கோ அவனுக்கோ விஷம் வைக்கத் திட்டமிடுகிறாளா?

"பைத்தியம் போல் பேசாதீர்கள்" என்றாள் அவள்.

தானொன்றும் பைத்தியமில்லை, தன் குடும்பத்துக்கே விஷத்தை வாங்கி வந்திருக்கும் அவள்தான் பைத்தியம் என்றான் அவன்.

முன்னறையின் வாசலிலிருந்து குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தன. அதுதான் அவர்களை உயிருடன் அவள் கடைசியாகப் பார்த்தது.

ஆக அவளா அப்படி நினைத்தாள்? - கடைசியில் யார் பைத்தியம் போல் நடந்தது? என்று அவனுக்கு அவள் புரியவைக்க வேண்டும்.

அவள் மூளைக்குள் என்ன ஓடிக் கொண்டு இருக்கிறது என்று உணர்ந்தபோது அவள் பேருந்தைவிட்டு கீழே இறங்கியிருக்கக் கூடும். வாசலில் இறங்கி மற்ற பெண்களைப் போலவே சிரமப்பட்டு வாசலை நோக்கி நடந்திருக்கலாம் அல்லது மனம் மாறிச் சாலையைக் கடந்து நகரத்துக்குத் திரும்பி செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கலாம். சிலர் அப்படிச் செய்வதுண்டு. அவர்கள் சந்திப்பதற்கு வந்து பிறகு வேண்டாம் என்று சென்றுவிடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் அப்படிச் செய்வதுண்டு.

ஆனால் போய் பார்த்ததும் நல்லதாக ஆயிற்று, விசித்திதிரமானவனாக, எதற்கும் பிரயோஜனமற்றவனாக, எதற்காகவும் குறைகூறக் கூட லாயக்கற்றவனாக இருந்தான். ஒரு மனிதனாகவே இல்லை. கனவிலிருந்து எழுந்து வந்த ஒரு பாத்திரம் போலக் காணப்பட்டான்.

அவளுக்கும் கனவுகள் வருவதுண்டு. ஒரு கனவில் விழுந்து கிடக்கும் குழந்தைகளைக் கண்டதும் அவள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவருகிறாள், லாயிட் அவனுக்கே உரித்தான இலகுவான பாணியில் சிரிக்க ஆரம்பிக்கிறான், அவளுக்கு பின்னாலிருந்து ஷாஷா சிரிப்பதை கேட்கிறாள், அவளை ஏமாற்ற அவர்கள் கச்சிதமாக செய்த பகடி அது.

"அவனைச் சந்திப்பதால் நான் நிம்மதியடைந்தேனா இல்லையா என்று நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? சென்ற முறைதானே கேட்டீர்கள்?"

"ஆம், கேட்டேன் " என்றாள் திருமதி.ஸேண்ட்ஸ்.

"அதைப் பற்றி யோசிக்க வேண்டும். "

"ம் "

"அது எனக்கு நிம்மதியளிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். அதனால்தான் மறுபடியும் போகவில்லை."

திருமதி.ஸேண்ட்ஸ் என்ன நினைத்தாள் என்று சொல்வது கடினமாக இருந்தது, ஆனால் அவளது தலையசைப்பு ஒருவிதமான திருப்தியையும், சம்மதத்தையும் தருவது போலிருந்தது..

எனவே டோரி மறுபடியும் போகவேண்டும் என்று முடிவு செய்தபோது அதைப் பற்றி அவளிடம் சொல்லாமல் இருப்பதே மேல் என்று தீர்மானித்தாள். அவளுக்கு நடப்பதையெல்லாம்- அது எவ்வளவு சின்ன சம்பவமாக இருப்பினும்- சொல்லி பழகிவிட்டதனால் அவள் திருமதி.ஸேண்ட்ஸின் சந்திப்பைத் தொலைபேசி செய்து ரத்து செய்யவேண்டியிருந்தது. விடுமுறைக்கு வெளியூர் செல்லவிருப்பதாகச் சொன்னாள். அது கோடை ஆரம்பித்துவிட்ட சமயம். விடுமுறைகளைத் துய்த்துக்கொள்வது இயல்பானதுதான். என்றாலும் தோழியுடன் செல்வதாகக் கூறினாள்.

"சென்றவாரம் நீ அணிந்திருந்த மேல்சட்டையை போடவில்லையா? "

"அது சென்றவாரம் இல்லை "

"இல்லையா? "

"அது மூன்றுவாரத்துக்கு முன்பு. இப்போது பருவநிலை வெப்பமாக இருக்கிறது. இது மிதமாக இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. மேல்சட்டையே அவசியமேயில்லை."

அவளது பயணத்தைப் பற்றி கேட்டான். மில்ட்மேயிலிருந்து வர என்னென்ன பேருந்துகள் பிடிக்கவேண்டியிருந்தது என்று கேட்டான்.

அவள் அங்கே தற்போது வசிக்கவேயில்லை என்று சொன்னாள். அவள் எங்கே வசிக்கிறாள் என்பதையும் மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருப்பதையும் சொன்னாள்.

"அது ரொம்ப கடினமாயிற்றே உனக்கு? பெரிய நகரங்களில் வாழ உனக்கு பிடித்திருக்கிறதா?"

"வேலைக்குப்போக சுலபமாக இருக்கிறது"

“ ஓ.. நீ இப்போது வேலைக்கு போகிறாயா? “

சென்றமுறை அவனிடம் அவள் வேலைக்குச் செல்வது, வசிக்குமிடம், எங்கே வேலை செய்கிறாள் என்பதையெல்லாம் சொல்லியிருந்தாள்.

“ ஒரு மோட்டலில் அறைசுத்தம் செய்கிறேன். நான் சொன்னேனே“ என்றாள்.

“ ஆம், ஆம். எனக்கு மறந்து விட்டது. மன்னித்துக்கொள். எப்போதாவது பள்ளிக்கு திரும்பவும் செல்ல விரும்பினாயா? இரவு பள்ளி ?“

அதைப் பற்றி யோசித்திருக்கிறாள் ஆனால் எதையும் தீர்மானிக்கவில்லை என்றாள்.

என்ன வேலை செய்கிறோம் என்பதை பற்றியே தனக்கு அக்கறையில்லை என்றாள்.

அதற்குபிறகு என்ன பேசுவது என்று இருவராலும் யோசிக்கமுடியாததை போலத் தோன்றிற்று.

அவன் பெருமூச்செறிந்தபடி , “மன்னித்துவிடு, உரையாடும் பழக்கமே எனக்கு விட்டுப் போய்விட்டது “ என்றான்.

"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நாள் முழுக்க? "

"வாசிக்கிறேன். அது ஒரு விதமான தவம். இயல்பான தவம்."

"ஓ "

"நீ இங்கே வருவதற்காக உன்னைப் பாராட்டுகிறேன். இது மிகப் பெரிய விஷயம் எனக்கு. ஆனால் கட்டாயம் வரவேண்டுமென்பதில்லை. அதாவது எப்போது உன்னால் முடிகிறதோ அப்போது வரலாம். எப்போது முடிகிறதோ அப்போது. வேறு ஏதாவது வேலையிருந்தால் அல்லது உனக்கு பிடிக்கவில்லை என்றால் - நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீ வருவதே அதாவது ஒரேஒரு முறை வந்தாலும் கூட அது எனக்கு போனஸ்தான். நான் சொல்வது உனக்கு புரிகிறது அல்லவா? "

அவள் புரிகிறது என்றாள். அப்படித்தான் தோன்றியது.

அவள் வாழ்க்கையில் அவன் குறுக்கிட விரும்பவில்லை என்றான்.

"நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை" என்றாள்

"இவ்வளவுதானா ? நீ வேறு ஏதோ சொல்லப் போகிறாய் என்று நினைத்தேன்."

உண்மையில் வாழ்க்கை என்றால் என்ன? என்றுதான் ஏறக்குறைய சொல்ல வந்தாள்.

ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை.

" சரி " என்றாள்..

மூன்று வாரங்கள் கழித்து அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. திருமதி. ஸேண்ட்ஸ்தான். அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் இல்லாது அவளே லைனில் வந்தாள்.

" ஓ டோரி. நீ இன்னும் உன் விடுமுறையிலிருந்து திரும்பியிருக்க மாட்டாய் என்று நினைத்தேன். வந்து விட்டாயா?"

"ஆம் " என்றாள் டோரி, எங்கே சென்றிருந்ததாகக் கூறலாம் என்று யோசித்தவாறே.

"ஆனால் நீ இன்னொரு அப்பாயின்ட்மென்டு ஏற்பாடு செய்து கொள்ளவில்லையா? "

"இல்லை. இன்னும் இல்லை"

"அப்போ சரி. சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன். நீ நன்றாக இருக்கிறாய் அல்லவா?"

" நன்றாக இருக்கிறேன்."

"நல்லது. நல்லது. உனக்கு என்ன தேவையாயிருந்தாலும் நானிருக்கிறேன் என்று தெரியுமல்லவா ? எப்போது வேண்டுமானாலும் வந்து பேசலாம்."/p>

"சரி "

" கவனமாக இரு "

அவள் லாயிடைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவனை சென்று பார்ப்பது தொடர்கிறதா என்று கேட்கவில்லை. நல்லதுதான். உண்மையில் அவனைச் சென்று பார்ப்பதை பற்றி அவள் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் திருமதி.ஸேண்ட்ஸ் என்ன நடக்கிறது என்பதை ஊகிப்பதில் மிகத் திறமைசாலி. அவளது கேள்விக்கு பதில் வராது என்று தெரிந்து கொண்டால் அதை கேட்காமலே இருந்துவிடும் அளவுக்கு புத்திசாலி. கேட்டிருந்தால் என்ன சொல்வது என்று டோரிக்கு தெரிந்திருக்காது. முதலில் சொன்னபடி பொய்யே சொல்வதா அல்லது உண்மையை சொல்வதா? அவள் வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பிரச்சனையில்லை என்று அவன் சொன்னதற்கு அடுத்த ஞாயிறன்றே அவள் மீண்டும் சென்றிருந்தாள்.

அவனுக்குச் சளி பிடித்திருந்தது. எப்படி என்று அவனுக்கே தெரியவில்லை.

கடைசியாகப் பார்க்கச் சென்றிருந்த போது சளி கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கொண்டே வருவதாக சொன்னான், அதனால்தான் சென்றமுறை உம்மணாமூஞ்சியாக இருந்ததாகச் சொன்னான்.

உம்மணாமூஞ்சி. இதுபோன்ற வார்த்தைகளை யாரேனும் உபயோகிப்பதை அவள் கேள்விபட்டதேயில்லை. அவளுக்கு அது மிக விசித்திரமாக தோன்றியது. ஆனால் அவனுக்கு இதுபோல பேசுவது எப்போதுமே வழக்கம். இப்போது உணர்வதைப் போல ஒரு காலத்தில் அவள் விசித்திரமாக அதை எண்ணியதில்லை.

"நான் உனக்கு அந்நியனைப் போல தோன்றுகின்றேனா?" என்றான் அவன்.

"ஆம், நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள். நானும் அப்படி தோன்றுகின்றேனா?" என்றாள் கவனமாக.

"நீ அழகாக இருக்கிறாய். " என்றான் துயரத்துடன்.

அவளுக்குள் எதுவோ ஒன்று கரைவது போலிருந்தது. ஆனால் அவள் அதை மறுதலித்தாள்.

"வித்தியாசமாக உணர்கிறாயா? வேறு யாரோ போல தோன்றுகிறதா? " என்றான் அவன்

அவளுக்குத் தெரியவில்லை என்றாள். "உங்களுக்கு? "

"ஒட்டு மொத்தமாக" என்றான்.

ஒரு வாரம் கழித்து ஒரு பெரிய உறை ஒன்று அவளுக்கு வந்தது. அது அவளது மோட்டல் விலாசமிட்ட கடிதம். அதில் இரண்டு பக்கமும் எழுதப்பட்ட தாள்கள் நிறைய இருந்தன. முதலில் அது அவனிடமிருந்து வந்திருக்குமென்று அவள் நினைக்கவில்லை. சிறையில் இருப்பவர்களுக்கு கடிதம் எழுத அனுமதியிருக்காது என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் உண்மையில் அவன் வேறுவிதமான கைதி. அவன் குற்றவாளியல்ல, குற்றம் புரிந்த பைத்தியம்.

அந்தக் கடிதத்தில் தேதி எதும் குறிப்பிடப்படவில்லை, குறைந்தபட்சம் ஒரு "அன்புள்ள டோரி " கூட இல்லை. ஏதோ மத சம்பந்தமான அழைப்பிதழைப் போல நேரடியாக அவளோடு பேசுவது போன்று துவங்கியது.

மனிதர்கள் தீர்வுக்காக எல்லா இடங்களிலும் அலைகிறார்கள். அவர்களது மனங்கள் செல்லரித்து போயிருக்கின்றன. அவர்களை நிறைய விஷயங்கள் இடித்து காயப்படுத்திக் கொண்டுள்ளன. அந்தக் காயங்களையும் வலியையும் நீ அவர்களது முகங்களில் காணலாம். அவர்கள் அவஸ்தையில் இருக்கிறார்கள். அங்குமிங்கும் அலைகிறார்கள். அவர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு முடிதிருத்தகத்திற்குச் சென்று தங்கள் முடியை வெட்டிக்கொண்டு, தங்கள் வாழ்க்கைக்கு சம்பாதித்துக் கொண்டு அல்லது பொதுநல காசோலைகளை பெற்று வாழ்கிறார்கள். ஏழைகள் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. பணக்காரர்களோ தங்கள் பணத்தை செலவழிக்க சிறந்த வழிவகைகளை கண்டு பிடிக்கிறார்கள். அதுவும் ஒரு வேலைதான். அவர்கள் வெந்நீருக்கும் , குளிர்ந்த நீருக்கும் தங்கக் குழாய் வைத்த சிறந்தவீடுகளை கட்ட வேண்டும். அவர்களது ஆடி கார்களையும், விசித்திரமான டூத்பிரஷ்களையும் காப்பாற்றுவதற்காக சாத்தியமான அனைத்து திட்டங்களையும் தீட்டி, கொள்ளைகளைத் தடுக்க திருடர்களைக் காட்டிக் கொடுக்கும் அலாரங்களைப் பொருத்தி இங்கே எல்லா பணக்காரரும், ஏழையும் மனதில் அமைதியுடன் இல்லை. பணக்காரர் என்று எழுதுவதற்கு பதில் பக்கத்துவீட்டுக்காரர் என்று எழுதிவிட்டேன். இங்கே எனக்கு யார் பக்கத்துவீட்டில் இருக்கிறார்கள். எல்லை மீறிய குழப்பத்தில் இருக்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களது உடைமைகள் என்னவென்று தெரியும் அவர்கள் எதையும் வாங்கவோ சமைக்கவோ தேவையில்லை. அல்லது எதையும் தேர்ந்தெடுக்கவோ தேவையில்லை. அவர்களது விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டவை.

எங்களுக்கு இங்கே கிடைக்கக் கூடியவை எல்லாமே எங்களது சொந்த மனதிலிருந்து கிடைப்பவை மட்டுமே.

துவக்கத்தில் என் மனதில் இருந்ததெல்லாம் பிரளயம்தான். அங்கே முடிவில்லாத புயல், அதிலிருந்து விடுபட நான் என் தலையை சிமெண்ட் தரையில் மோதிக்கொள்வேன். என் துன்பத்தையும் வாழ்க்கையும் முடித்து கொள்வதற்காக. தண்டனைகள் அளந்து கொடுக்கப்படுகின்றன. நான் காற்றுபிடுங்கப்பட்டு, கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன், என் ரத்தக்குழாய்களில் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. நான் அவர்களைக் குறைகூறவில்லை ஏனெனில் அதில் எவ்வித இலாபமும் இல்லை என்று கற்றுக்கொண்டேன். இதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. நிஜவாழ்க்கையில் மனிதர்கள் குடித்துவிட்டு தங்களது வலிமிகுந்த எண்ணங்களிலிருந்து விடுபட குற்றம் புரிகிறார்கள். அவ்வப்போது அவர்கள் இழுத்துவரப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அதிலிருந்து வெளியேவர அவர்களுக்கு அதிக அவகாசம் ஆவதில்லை. அது என்ன வழி? அது முழுபைத்தியமாவது அல்லது அமைதியடைவது.

அமைதி. நான் அமைதியடைந்துவிட்டேன் இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீ , இறைவன் ஜீஸஸ் அல்லது புத்தரை பற்றி நான் ஏதோ சொல்லப்போவதாகவோ, நான் ஏதோ மதமாற்றம் அடைந்து விட்டதாகவோ நினைக்கக் கூடும் என்று ஊகிக்கிறேன். இல்லை. நான் கண்மூடித்தனமாக எந்தக் குறிப்பிட்ட சக்தியாலும் ஆக்ரமிக்கப்படவில்லை. அதெல்லாம் என்னவென்றே எனக்குத் தெரியாது. நான் அறிந்ததெல்லாம் என்னை மட்டும்தான். தன்னை அறிதல் என்பது எதிலோ வரும். அநேகமாக பைபிளில் இருக்கும் ஒரு கட்டளை, அந்த விதத்தில் நான் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருக்கலாம். மேலும் உங்களுக்கு விசுவாசமாயிருங்கள் - இதையும் நான் பைபிளிலிருந்து கற்றிருக்கலாம். அது எந்தப் பகுதிக்கு என்று சொல்லவில்லை - நல்லதற்கா அல்லது கெட்டதற்கா - விசுவாசமாக இருக்க வேண்டும் அவ்வளவே. அது நல்லொழுக்கத்திற்கான வழிகாட்டியாக குறிப்பிடப்படவில்லை. மேலும் தன்னை அறிதல் என்பது நாமறிந்ததைப் போல நடத்தை ஒழுக்கம் சம்பந்தப்பட்டதும் இல்லை. ஆனால் நடத்தையைக் குறித்து எனக்கு கவலையில்லை ஏனெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று கணிப்பதற்கு முடியாத நபர் என்று மிகச்சரியாக கணிக்கப்பட்டிருக்கிறேன். எனவேதான் நான் இங்கிருக்கிறேன்.

மீண்டும் 'தன்னை அறிதல்' க்கு வருவோம். நான் என்னை அறிவேன் என்பதை துல்லியமாகத் தன்னடக்கத்துடன் சொல்வேன். நான் எந்தளவுக்கு மோசமானவற்றைச் செய்யக்கூடியவன் என்பதும் தெரியும். மேலும் அதைச் செய்துவிட்டவன் என்பதும் தெரியும். உலகத்தால் நான் கொடூரமானவன் என்று கணிக்கப்பட்டிருக்கிறேன் அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குண்டுமழைப் பொழிபவர்களை அல்லது நகரத்தைக் கொளுத்துபவர்களை அல்லது பட்டினி போட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொல்பவர்களைக் கூட பொதுவாக கொடூரமானவர்கள் என்று கூறுவதில்லை மாறாக அவர்களுக்கு பதக்கங்களும் கௌரவங்களும் குவிகின்றன. எண்ணிக்கை குறைவான குற்றம் புரிவதையே அதிர்ச்சியாகவும், தீமையாகவும் கருதுகின்றனர். இதை ஒரு சமாதானமாகக் கூறவில்லை. ஒரு அவதானிப்பாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

எனக்குள் இருப்பதாக நான் அறிவது என் சொந்த தீய எண்ணங்களை. அதுதான் என் நிம்மதிக்கான இரகசியம். அதாவது எனது குறைபாட்டை நான் அறிந்திருப்பது. அது மற்றவர்களது குறையைக் காட்டிலும் மோசமானதாக இருக்கலாம் ஆனால் அதைப்பற்றி உண்மையில் நான் யோசிக்கவோ, கவலைப்படவோ தேவையில்லை. எந்த சாக்குபோக்கும் சொல்லமாட்டேன். நான் அமைதியாக இருக்கிறேன். நான் கொளரமானவனா? உலகம் அப்படிச் சொல்கிறது, அதனால் அதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் உலகம் உண்மையில் எனக்கு ஒரு பொருட்டேயில்லை என்று சொல்வேன். நான் என்னுடையவன். எந்தவிதத்திலும் நான் மற்றவரைப் போலில்லை. நான் பைத்தியகாரத்தனமாக இருந்ததாக சொல்லலாம் ஆனால் அதற்கு என்ன அர்த்தம்? பைத்தியம். புத்திசுவாதீனம். நான் நான்தான். நான் என்னை மாற்றிக்கொள்ள முடியாது இனி என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியாது.

டோரி இதுவரை நீ படித்துக்கொண்டிருந்தால் , உன்னிடம் சொல்வதற்கு விசேஷமான செய்தி ஒன்று உள்ளது. ஆனால் அதை எழுத முடியவில்லை. நீ மீண்டும் இங்கே வருவதாயிருந்தால் ஒருவேளை உன்னிடம் நான் அதைக் கூறுவேன். நான் இதயமற்றவன் என்று நினைக்காதே. நடந்தவற்றை என்னால் மாற்றக்கூடியதாயிருந்தால் அதைச்செய்வேன் ஆனால் அது முடியாது.

இக்கடிதத்தை என் ஞாபகத்தில் இருந்த நீ வேலைசெய்யும் இடத்தின் விலாசத்திற்கு அனுப்புகிறேன். அந்த ஊரின் பெயர் என் நினைவில் இருக்கிறது எனவே என் மூளை சரியாகத்தான் வேலை செய்கிறது.

அடுத்தமுறை அவர்கள் சந்திக்கும்போது இந்தக் கடிதத்தைப் பற்றி விவாதிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அந்தக் கடிதத்தை பலமுறை படித்தாள். அவளால் எதைப் பற்றியும் சிந்திக்கமுடியவில்லை. அவள் விரும்பியதெல்லாம் அதில் தன்னால் சொல்லமுடியாமல் போன விஷயம் என்று அவன் எதைக் குறிப்பிட்டுள்ளானோ அந்த விஷயத்தை பற்றி பேசவேண்டுமென்பதுதான். ஆனால் மறுமுறை அவனைச் சந்தித்தபோது அப்படி ஒரு கடிதமே எழுதவில்லை என்பதை போல அவன் நடந்து கொண்டான். ஏதாவது பேசவேண்டுமென்பதற்காக கடந்தவாரம் மோட்டலுக்கு வந்திருந்த பிரபல நாட்டுபுறப்பாடகியைப் பற்றி பேசினாள். அவளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்தப் பாடகியைப் பற்றி அவன் அதிக தகவல்களைச் சொன்னான். அவன் தொலைக்காட்சி பார்க்கிறான் என்று புரிந்தது. மேலும் சில நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறான். செய்திகளையும் தொடர்ந்து கேட்கிறான். அதனால் அவளால் நிறுத்த முடியாத அளவுக்கு அவர்கள் பேச்சைத் தொடரமுடிந்தது.

"நேரில் மட்டுமே சொல்ல முடியும் என்று நீங்கள் சொன்ன அந்த விஷயம் என்ன?"

அவள் கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்றான் அவன். அதைப் பற்றி விவாதிக்க நாம் தயாராக இருக்கின்றோமா என்று தெரியவில்லை என்றான்.

உண்மையில் தன்னால் சமாளிக்க முடியாத, தாங்கிக்கொள்ள முடியாத விஷயமாக அது இருக்குமோ என்று அவள் பயந்தாள். இன்னமும் நான் உன்னை காதலிக்கிறேன் என்பது மாதிரியான விஷயமாக இருந்தால்.. “காதல்” என்ற வார்த்தையை அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

"சரி " என்றாள் அவள். "ஒரு வேளை நாம் தயாராக இல்லைதான் போல" என்றாள்.

பிறகு சொன்னாள், "இருந்தாலும் நீங்கள் சொல்வதே நல்லது. ஒரு வேளை இங்கிருந்து போனபிறகு என்னை கார் மோதி நான் இறந்து போனால் அப்புறம் மீண்டும் நீங்கள் சொல்லவே முடியாமல் ஆகிவிடலாம். "

"உண்மைதான், " என்றான் அவன்.

"அப்படி என்றால் என்ன விஷயம் அது? "

"அடுத்தமுறை. அடுத்தமுறை. என்னால் பேசக்கூடிய வேறொரு சந்தர்பத்தில். சொல்லவேண்டுமென்று தான் ஆசை ஆனால் எனக்கு பேச்சு வறண்டு விட்டது."

நீ சென்ற பிறகு உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் டோரி. உன்னை ஏமாற்றிவிட்டதற்காக வருந்துகிறேன். நீ எனக்கு எதிரே உட்கார்ந்து இருக்கும் போது நான் வழக்கத்தை விட அதிக உணர்ச்சிவசப்படுகிறேன். உன் முன்னால் உணர்ச்சி வசப்பட எனக்கு உரிமை இல்லை. என்னைவிட உனக்கு நிச்சயம் அதிக உரிமையுள்ளது. ஆனால் நீயே மிகவும் கட்டுபாட்டுடன் இருக்கிறாய். எனவே நான் முன்னால் சொன்ன விஷயத்தை மறைத்துவிட்டேன். ஏனெனில் பேசுவதை விட அதை உனக்கு எழுதிவிடலாம் என்று நான் தீர்மானித்துவிட்டேன்.

இப்போது நான் எங்கே துவங்கவேண்டும் ?

சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது.

அது ஒரு வழிதான், ஆனால் அதுதான் சரியானதென்றில்லை, ஏனெனில் நான் சொர்க்கம், நரகம் எதையும் நம்பவில்லை. என்னைப் பொருத்தவரை அது ஒரு அபத்த களஞ்சியம். எனவே அந்த விஷயத்தைப் பற்றி நான் பேசுவது விசித்திரமாயிருக்கலாம்.

நான் நேரடியாகவே சொல்கிறேன்: நான் குழந்தைகளைப் பார்த்தேன்.

நான் அவர்களைப் பார்த்துப் பேசினேன்.

இப்போது என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? இவனுக்கு சுத்தமாக மரை கழன்று விட்டது என்று நீ நினைக்கலாம் அல்லது இவன் கனவு கண்டிருப்பான், கனவுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நினைக்கலாம். ஆனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் எனக்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியும், அவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை ஏனெனில் உயிருடன் இருப்பது என்றால் அது ஒரு குறிப்பிட்ட பரிமாணத்திற்குள் இருப்பதாகப் பொருள், அவர்கள் அப்படியிருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. ஆனால் அவர்கள் இருக்கிறார்கள் அது வேறு ஒரு பரிமாணம் அல்லது எண்ணற்ற பரிமாணங்கள், ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அந்த இடத்திற்கு செல்லும் வழி எனக்குத் தெரியும். இதை அநேகமாக நானாகவேதான் சிந்தித்து சிந்தித்து , நான் சிந்தித்துதான் தீரவேண்டும் என்பது போல சிந்தித்து, தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட அவஸ்தைக்கும், தனிமைக்கும் பிறகு கருணை வழங்கப் பட்டது போல இந்த வெகுமதி எனக்குக் கிடைத்தது. உலகம் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதற்கு எனக்கு குறைந்தபட்சம் இதுவாவது கிடைத்தது.

நல்லது. இதுவரை கடிதத்தைக் கிழிக்காமல் படித்துக் கொண்டிருந்தால் நீ கட்டாயம் சில விஷயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை. அவர்கள் நலமாக இருக்கிறார்கள். உண்மையில் சந்தோஷமாகவும், புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த மோசமான நினைவும் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் முன்பிருந்ததைவிட சற்று பெரியவர்களாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அவர்கள் வெவ்வேறு தளங்களில் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆம். டிமிட்ரியைப் பார்த்தால் அவன் நன்றாக பேசக் கற்றுக்கொண்டு விட்டான் என்பதை அறிவாய். முன்னால் அவனால் அப்படி பேசமுடிந்ததில்லை. அவர்கள் ஒரு அறையில் இருப்பதை ஒரளவிற்கு என்னால் கணிக்க முடிகிறது. அது நம் வீடு போல இருக்கிறது ஆனால் பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது. அவர்கள் எப்படி தங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள் சிரித்துக் கொண்டே தங்களால் தங்களை கவனித்துக் கொள்ள முடியும் என்று சொன்னார்கள். ஷாஷாதான் அப்படிச் சொன்னான் என்று நினைக்கிறேன். சிலசமயம் அவர்கள் தனித்தனியாக பேசுவதில்லை அல்லது அவர்கள் குரல்களை என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்களது அடையாளங்கள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

தயவுசெய்து நான் பைத்தியம் என்று தீர்மானித்து விடாதே. அந்த பயத்தில் தான் நான் இதைப்பற்றி உன்னிடம் நேரில் சொல்ல விரும்பவில்லை. நான் ஒரு காலத்தில் பைத்தியமாகத்தான் இருந்தேன் ஆனால் இப்போது என் பைத்தியகாரத்தனத்தை எல்லாம் கரடி தன் மயிரை உதறிக் கொள்வதைப் போல உதறிவிட்டேன் என்னை நம்பு. அல்லது பாம்பு தன் சட்டையை உரிப்பது போல என்றும் சொல்லலாம். அப்படி செய்திருக்காவிட்டால் எனக்கு இப்படி ஷாஷாவையும், பார்பரா ஆனையும் டிமிட்ரியையும் மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்திருக்காது. உனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் என்னைவிட உனக்கு அதற்கான தகுதி அதிகம் இருக்கிறது. உனக்கு கடினமாக இருக்கலாம் ஏனெனில் நான் வாழும் உலகைவிட முற்றிலும் வேறுமாதிரியான உலகில் நீ வாழ்கிறாய். ஆனால் குறைந்தபட்சம் இந்தத் தகவலை உனக்கு சொல்கிறேன் - உண்மை - இதைச் சொல்வதனால் உன் மன பாரத்தைக் குறைக்க முடியும்.

இந்தக் கடிதத்தை திருமதி.ஸேண்ட்ஸ் படித்தால் என்ன நினைப்பாளோ என்று டோரி குழம்பினாள். திருமதி.ஸேண்ட்ஸ் கவனமாக இருப்பாள். பைத்தியக்காரத்தனத்தைப் பற்றி அதிகார தீர்மானம் எதையும் சொல்லாமல் அதே நேரம் கவனமாகவும் அன்புடனும் டோரியை அந்தத் திசையில் சிந்திக்க வைப்பாள். அல்லது திசைமாற்றாமல் அவளை அந்தக் குழப்பத்தைப் போக்கி டோரியே முழுவதும் தீர்மானிக்கும்படியாகச் செய்வாள். திருமதி.ஸேண்ஸுடன் பேசுவதன் மூலம் அவள் தன் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் உளறிக் கொட்டுவது முட்டாள்தனமான ஆபத்து.

அதனால்தான் டோரி அவள் பக்கமே போகப் போவதிவில்லை.

அவன் பைத்தியம் என்றுதான் டோரி முடிவு செய்தாள். அவன் எழுதிய கடிதத்தில் அவனுடைய பழைய ஜம்பப் பேச்சின் சாயல் தெரிந்தது. அவள் பதில் எழுதவில்லை. நாட்கள் கடந்தன. வாரங்கள் போயின. அவள் தனது அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளவில்லை இருந்தும் அவன் எழுதியவற்றை ஒரு இரகசியம் போல் மனதில் காத்தாள். அவ்வப்போது அவள் குளியலறையின் கண்ணாடியை சுத்தம் செய்யும் போதோ , போர்வையை இழுத்து விடும்போதோ நடுநடுவே அந்த உணர்வு வந்து போனது. ஏறக்குறைய இரண்டு வருடமாக, பொதுவாக மற்றவர்கள் மகிழ்ச்சியடையும் எந்த விஷயத்தையும் அவள் கவனித்ததில்லை. உதாரணமாக, நல்ல வானிலை, மலர்ந்த பூக்கள் அல்லது பேக்கரியின் இனிய மணம். சரியாகச் சொன்னால் இப்போதும் அவளிடம் இயல்பாக சந்தோஷப்படும் உணர்வு இல்லை. ஆனால் இப்போது அந்த உணர்வு நினைவுக்கு வந்தது. வானிலைக்கும், மலர்களுக்கும் அவற்றோடு எந்தத் தொடர்பும் இல்லை. அவன் கூறிய பரிமாணத்தில் குழந்தைகளைப் பற்றிய எண்ணம்தான் இப்படி இரகசியமாய் மேலெழும்பி வந்தது. முதன்முறையாக அவள் மனதில் வலியின்றி இலேசாக உணர்ந்தாள்.

அந்தச் சம்பவத்திற்குப்பிறகு குழந்தைகளைப் பற்றிய எந்தவொரு நினைவையும் உடனடியாக ஒதுக்கி வந்திருக்கிறாள், ஏதோ கழுத்தில் செருகிய கத்தியைப் பிடுங்குவதைப் போல. அவர்களது பெயரைக் கூட நினைக்க முடியாது அவளால். அவர்களது பெயரை எங்கேயாவது கேட்க நேர்ந்தால் காதுகளைப் பொத்திக் கொள்வாள். சொல்லப் போனால் குழந்தைகளின் குரல்கள், மோட்டல் நீச்சல் குளத்திலிருந்து கேட்கும் அவர்களது அலறல்கள், அடித்துக்கொள்ளும் கால்கள் எல்லாவற்றிற்கும் அவளது செவி கதவடைத்ததைப் போல அறைந்து சாத்திக்கொள்ளும்.இப்போது என்ன வித்தியாசம் என்றால் அது போன்ற ஆபத்து அவளைச்சுற்றி எங்கு நடந்தாலும் அங்கே சென்று உதவமுடிகிறது.

அதை யார் அவளுக்கு அளித்தது? நிச்சயம் திருமதி.ஸேண்ட்ஸ் இல்லை. மணிக்கணக்காக அங்கே காகிதக் கைக்குட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததால் எந்தப் பயனும் இல்லை.

லாயிட்தான் அதைக் கொடுத்தான். லாயிட், அந்த பயங்கர மனிதன். ஜெயிலில் தனியாக அடைக்கப்பட்டிருக்கும் பைத்தியக்காரன்.

அதை பைத்தியம் என்று சொல்லவேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் அவன் சொன்னதெல்லாம் - மற்றொரு பக்கத்துக்குச் சென்று வந்தது - உண்மையாக இருக்க வாய்ப்பில்லையா? இப்படிப்பட்ட காரியத்தைச் செய்த, இப்படிப்பட்டதொரு பயணத்தை மேற்கொண்ட ஒருவனின் மனத்தோற்றத்திற்கு எதுவும் பொருளிருக்காது என்று யாரால் சொல்லமுடியும்?

இந்தக் கருத்து அவளது மண்டைக்குள் ஊடுருவிச் சென்று நிலை கொண்டது.

அதனோடு மற்ற எவரையும் விட அவள் இப்போது இருக்க வேண்டியது லாயிடின் அருகில். வேறு எதற்கு அவள் இந்த உலகில் பயன்பட போகிறாள்? இதை அவள் யாரிடமோ சொல்வது போல தோன்றியது , அநேகமாக திருமதி.ஸேண்ஸிடமாக இருக்கலாம். அவன் சொல்வதை கேட்காமல் அவள் எதற்காக இங்கே இருக்கவேண்டும்?

"மன்னிக்கிறேன் " என்று நான் சொல்ல மாட்டேன், அவள் மனதிற்குள் திருமதி.ஸேண்ட்ஸிடம் பேசினாள். ஒருபோதும் நான் அப்படி சொல்லவும் மாட்டேன், செய்யவும் மாட்டேன்.

ஆனால் யோசித்துப் பார்த்தால் நடந்தவற்றில் அவனைப் போலவே நானும் ஒரு பகுதி அல்லவா? நடந்தவற்றை அறிந்தால் என்னுடன் இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். யாரும் நினைவுகூற விரும்பாத விஷயத்தை நினைவுபடுத்துவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்?

மாறு வேஷம் சாத்தியமில்லை. அந்த மஞ்சள் ஸ்பைக் பரிதாபமாக இருந்தது.

எனவே அவள் மீண்டும் பஸ்ஸில் பிரதான சாலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா இறந்த பிறகு அவள் உடன் தங்கியிருந்த அம்மாவின் தோழியிடம் பொய் சொல்லிவிட்டு லாயிடை சந்திக்க இரகசியமாய் செல்லும்இரவுகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன. அம்மாவின் அந்தத் தோழியின் பெயர் கூட அவளுக்கு நினைவில் இருந்தது - லோரி.

லாயிடைத் தவிர வேறு யார் குழந்தைகளின் பெயரையோ அல்லது அவர்களது கண்களின் நிறத்தையோ ஞாபகம் வைத்திருப்பார்கள்? திருமதி.ஸேண்ட்ஸ் அவர்களைப் பற்றி குறிப்பிட நேரும்போதெல்லாம் அவர்களை குழந்தைகள் என்று கூட அழைக்க மாட்டாள், "உன் குடும்பம் " என்று அவர்களை ஒரு குழுவாகக் குறிப்பிடுவாள்.

அந்த நாட்களில் லோரியிடம் பொய் சொல்லிவிட்டு லாயிடைச் சந்திக்கச் செல்லும்போது குற்றவுணர்வே அவளுக்கு இருந்ததில்லை, அது அவளது இலட்சியமாக, ஒரு சமர்ப்பித்தலாகவே தோன்றும். இந்த உலகில் அவள் பிறந்ததே அவனுடன் இருப்பதற்காகவும், அவனைப் புரிந்து கொள்வதற்காகவும்தான் என்று தோன்றும்.

இப்போது அப்படியில்லை. இப்போது எதுவும் பழைய விஷயம் போலில்லை.

அவள் ஓட்டுநர் இருக்கைக்கு எதிரில் இருந்த முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்தாள். முன் கண்ணாடி மூலம் அவளுக்கு தெளிவான காட்சி தெரிந்தது. அதனால்தான் பக்கவாட்டு சாலையிலிருந்து ஒரு பிக் - அப் ட்ரக் திடீரென்று வெளிப்பட்டதையும், வேகத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் ஞாயிற்று கிழமையின் காலியான பிரதான சாலையை சரேலென்று கடந்து, கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி சாக்கடைப் பள்ளத்தில் மோதிக் கவிழ்ந்ததை ஓட்டுநரைத் தவிர பார்த்த ஒரே பயணி அவள்தான். அதைவிட விசித்திரமானதையும் கண்டாள்: டிரக்கை ஓட்டிவந்த ஓட்டுநர் காற்றில் வீசியெறியப்பட்டு, மெதுவாகச் சுழல்வதுபோல பறந்தது அபத்தமாகவும் அழகாகவும் இருந்தது. அவன் சாலையின் மறுபுறம் சரளைக் கற்கள் பதித்த நடைபாதையின் விளிம்பில் விழுந்தான்.

ஓட்டுநர் ஏன் திடீரென்று பிரேக் போட்டு அனைவரையும் திடுக்கிடவைத்தார் என்று மற்ற பிரயாணிகளுக்குப் புரியவில்லை. எப்படி அவன் வெளியில் வந்து விழுந்தான் என்றுதான் முதலில் டோரி யோசித்தாள். அவன் சிறுவனா? இளைஞனா? தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக அவன் மயங்கியிருக்க வேண்டும். எப்படி அவன் டிரக்கிலிருந்து வெளியே காற்றில் நேர்த்தியாக பறந்து வந்தான்?

"நம் வண்டிக்கு முன்னாலேயே விழுந்துவிட்டான்." என்றார் ஓட்டுநர் பயணிகளிடம். அவர் உரத்த குரலில் தெளிவாக பேச முயற்சித்தாலும் அதிர்ச்சி கலந்த நடுக்கமும் ஆச்சரியமும் தெரிந்தது. "சாலைக்கு குறுக்காக வகுந்து கொண்டு வந்து, பள்ளத்துக்குள் விழுந்துவிட்டான். அவனுக்கு என்ன ஆயிற்று என்று கவனித்துவிட்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் கிளம்பிவிடலாம். அதுவரை யாரும் பேருந்திலிருந்து இறங்க வேண்டாம்."

அதைக் காதிலேயே வாங்காததைப் போல அல்லது உதவிசெய்ய தனக்கு சிறப்பு அதிகாரம் இருப்பதைப் போல டோரி அவருக்குப் பின்னாலேயே இறங்கினாள். அவர் அவளைத் தடுக்கவில்லை.

"ஷிட்" என்றபடியே சாலையைக் கடந்தார். அவர் குரலில் இப்போது பதட்டமில்லை ஆனால் கோபமும், ஆத்திரமும் மட்டுமேயிருந்தது. " உருப்படாதப் பயல், நம்பவே முடியலையே?"

அந்தச் சிறுவன் மல்லாக்க விழுந்து கிடந்தான், கைகளும் கால்களும் ஏதோ பனியில் மிதக்கும் தேவதூதனைப் போல விரிந்து கிடந்தது. ஆனால் அவனைச் சுற்றிலும் பனியில்லை சரளை கற்கள்தான் இறைந்து கிடந்தது. அவனது கண்கள் முழுவதுமாக மூடியிருக்கவில்லை. அவன் மிகச் சிறியவனாக இருந்தான். இன்னமும் முகச்சவரம் செய்து கொள்ளத்தேவையற்ற சிறுவன், உயரமாக மட்டும் வளர்ந்திருந்தான். அநேகமாக ஓட்டுநர் உரிமம் இருக்க வாய்ப்பில்லை.

ஓட்டுநர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

"தெற்கு பேஃபில்டு க்கு ஒரு மைல் தொலைவில், 21 இல், சாலையின் கிழக்குப் பகுதியில்."

அந்தச் சிறுவனின் தலையின் அடியிலிருந்து இளஞ்சிவப்பு நிற நுரை காதோரமாகத் துளிர்த்தது. அது இரத்தம் போலவே இல்லை, ஜாம் தயாரிக்கும் போது ஸ்ட்ராபெர்ரியில் இருந்து கிடைக்கும் வஸ்துவைப் போலிருந்தது.

டோரி அவனருகே குனிந்து கால்களை அகட்டி, உட்கார்ந்தாள். அவன் மார்பின் மீது கையை வைத்தாள். அது அசைவற்று இருந்தது. அவள் காதுகளை மார்பின் மீது வைத்தாள். அவனது சட்டையை யாரோ சமீபத்தில் இஸ்த்திரி போட்டிருக்கிறார்கள். அதன் மணம் வீசியது.

மூச்சில்லை.

ஆனால் அவனது வழவழப்பான கழுத்தில் விரல்களால் நாடித்துடிப்பை உணர்ந்தாள்.

அவளுக்கு சொல்லப்பட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. லாயிட்தான் அவளுக்கு அதைச் சொன்னது. அவனில்லாத நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதேனும் விபத்து நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என அவன் கூறியது. நாக்கை கவனிக்க வேண்டும். நாக்கு தொண்டைக்கு பின்னால் சிக்கிக் கொணடால் அது சுவாசத்தை அடைக்கும். அவள் அந்தச்சிறுவனின் நெற்றியில் கைகளை வைத்து மற்றொரு கையால் அவனது முகவாயின் அடியில் வைத்தாள். நெற்றியைக் கீழே அழுத்தி, முகவாயை மேலே அழுத்திக் காற்று அடைப்பை நீக்க வேண்டும். மிக லேசான உறுதியான உலுக்கல்.

அதன் பின்னும் அவனால் மூச்சு விட முடியவில்லை என்றால் அவள் வாயால் காற்றை ஊத வேண்டும்.

அவள் மூக்கை விரல்களால் அழுத்திக்கொண்டு, ஆழ்ந்த மூச்சை இழுத்து அவனது வாயோடு தன் உதடுகளை இறுக்கி, மூச்சை விட்டாள். இரண்டு மூச்சு விட்டு சோதிக்க வேண்டும். இரண்டு மூச்சு, பிறகு சோதித்தல்.

இன்னொரு ஆண் குரல் கேட்டது. ஓட்டுநரின் குரல் அல்ல. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நின்றிருந்தார். "இந்தப் போர்வையை அவனது தலைக்கடியில் வைக்கட்டுமா?" அவளுக்கு சட்டென்று ஒரு சில விஷயம் ஞாபகம் வந்தது. அடிபட்டவரை அசைக்கக் கூடாது. அப்போதுதான் முதுகெலும்பு சேதாரம் ஆகாமல் தடுக்கலாம். அவள் அவனது வாயை மூடி, இளஞ்சூடான தசையை அழுத்தினாள். காற்றை ஊதி மீண்டும் காத்திருந்தாள். மென்மையான ஈரக்காற்று அவளது முகத்தில் வீசியது.

ஓட்டுநர் ஏதோ சொன்னார், ஆனால் அவள் நிமிரவில்லை. இப்போது நிச்சயமாக அவள் முகத்தில் உணர்ந்தது அந்தச் சிறுவனின் மூச்சுதான். அவள் தனது கைகளை அவனது மார்பின் மீது பாவினாள், முதலில் அது துடிக்கிறதா என்றே உணர முடியவில்லை ஏனெனில் அவளது கரங்களே நடுங்கிக் கொண்டிருந்தன.

ஆம். ஆம்.

அது உண்மையான சுவாசம்தான். காற்றடைப்பு நீங்கிவிட்டிருக்கிறது. அவன் தானாகவே சுவாசித்தான். அவன் மூச்சுவிடுகிறான்.

"அதை அவன் மேல் போர்த்துங்கள்." போர்வையுடன் நின்றிருந்த ஆசாமியிடம் சொன்னாள். "அது அவனைச் சூடாக வைத்திருக்கும் "

"அவன் உயிருடன் இருக்கிறானா?" குனிந்து கேட்டார் ஓட்டுநர்.

அவள் ஆம் என தலையசைத்தாள். அவள் விரல்கள் மீண்டும் நாடித்துடிப்பை உறுதி செய்தன. அந்தப் பயங்கரமான இளஞ்சிவப்பு வஸ்து கசிவது நின்றுவிட்டிருந்தது. அது அப்படியொன்றும் அபாகரமானதாக இல்லாமல் இருக்கலாம். மூளையிலிருந்து வந்திருக்காது.

"உங்களுக்காக நான் பேருந்தை நிறுத்திவைக்க முடியாது. ஏற்கனவே குறித்த நேரத்தை விட தாமதமாகி விட்டது" என்றார் ஓட்டுநர்.

அந்த இருசக்கரவாகன ஆசாமி, "பரவாயில்லை. இனி நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றார்.

அமைதி, அமைதி என்று அவர்களிடம் சொல்ல விரும்பினாள் அவள். அந்தச் சிறுவனுக்கு புறத்தே இருந்த அனைத்து உலகமும் கவனத்தைக் குவித்து அவனது சுவாசம் இற்றுவிடாமல் தன் கடமையை செய்ய அவளுக்கு அமைதி தேவையாயிருந்தது.

இப்போது தயங்கிய ஆனால் நிதானமான சீறல், மார்பில் ஒரு இனிய ஒத்திசைவு. அப்படியே, அப்படியே.

"அவர் சொன்னது கேட்டதா? இந்த ஆள் இருந்து பார்த்துக் கொள்கிறாராம். ஆம்புலன்சும் முடிந்தவரை விரைவாக வந்து கொண்டிருக்கிறது" என்றார் ஓட்டுநர்.

"நீங்கள் போகலாம். நான் இவர்களுடன் ஊருக்குள் செல்கிறேன். நீங்கள் திரும்பி வரும்போது இன்றிரவு உங்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்கிறேன்."

அவர் குனிந்து அவள் சொல்வதை செவிமடுக்க வேண்டியிருந்தது. அவள் தன்போக்கில் தலையை உயர்த்தாமல் பேசினாள்.

"நிச்சயமாகத்தான் சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.

நிச்சயமாக.

"நீங்கள் லண்டனுக்கு போக வேண்டாமா?"

வேண்டாம்.

-------------------------------------------

ஆலிஸ் மன்றோ (1934)

கனடாவைச் சேர்ந்த ஆலிஸ் மன்றோ தற்கால இலக்கியச் சிறுகதையாசிரியர்களில் முதன்மையானவர். சர்வதேச மேன் புக்கர் விருதும் (2009 ) இலக்கியத்திற்கான நோபல் பரிசும் ( 2013 ) வென்றவர். பிரதானமாக சிறகதைகளை மட்டுமே எழுதுபவர் என்றாலும் அவை நெடுங்கதைகளாக, ஏறக்குறைய குறுநாவல்களாகவே இருப்பதுண்டு. 1968 ல் வெளிவந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான Dance of the Happy Shades க்குப் பிறகு பத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

இவரது ஒவ்வொரு சிறுகதையும் நவீன வாழ்வின், மனித மனங்களின் சிக்கல்களை, சிக்கலற்ற மொழியில் கவித்துவமாகக் காட்சிப் படுத்துபவை. வாசிப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும், மிகக்கூர்ந்த அவதானிப்புடன் கிரகித்துக் கொள்ள வேண்டிய எழுத்து இவருடையது. பலவித சூட்சுமத் தளங்களைப் பொதித்து வைத்திருக்கும் இவருடைய எழுத்து மொழிபெயர்ப்பதற்கு மிகவும் சவாலான ஒன்று.

இன்றைய இலக்கிய உலகின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான இவருடைய முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்

1. Lives of Girls and Women

2. Who do You Think You Are ?

3. Hateship, Friendship, Courtship, Loveship, Marriage.

4. Friend of my Youth

5. Too Much Happiness


நர்மதா குப்புசாமி

2006 லிருந்து மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டுவரும் இவர், சினுவா ஆச்சிபே, சீமமாண்டா அடீச்சி, நாடின் கார்டிமர், அன்டோனியா நெல்சன், ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ், ஆன்னி பீட்டி, இட்டாலோ கால்வினோ, எம்.டி.வி உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அவை காலச்சுவடு, உயிர்எழுத்து, மலைகள். காம், தினமணி, தீராநதி, கல்குதிரை ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. மேலும் ஆனந்தவிகடன், கல்கி மற்றும் செம்மலரில் இவர் எழுதிய கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன. ஆரணியில் வசிக்கும் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.