சீன மொழிக் கவிதைகள்
மூலம்: ஷூ திங்
ஆங்கிலம்: ஜுலியா லின்
 
 
தமிழில்: தி.இரா.மீனா
 

எண்பதுகளில் மிஸ்டி கவிதை இயக்கம் சீனாவின் தர்க்கத்திற்குரிய இலக்கிய தோற்றப்பாடுகளை உறுதிப் படுத்தியது.அவ்வியக்க கவிஞர்கள் சுய அடையாளத்தை மீட்பதிலும், நாகரிகத்தை மேம்படுத்துவதிலும் ஈடுபாடு காட்டினர். இந்த லட்சியத்தைக் காட்டும் வகையில், கவிதை மனதின் கண்ணாடி என்ற அடிப்படையில் மனிதாபிமானம் கலந்த தங்களுடைய படைப்புகளை தங்களுக்கான மொழி வளமையோடு அவர்கள் வெளிப் படுத்தினர்.

இந்த மிஸ்டி இயக்கத்தின் முன்னணி பெண் பிரதிநிதியாக ஷூ திங் விளங்கினார். 1952 ல் ப்யுஜியனில் பிறந்தார். 1979 ல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. மிகச் சிறந்த தேசியக் கவிஞர் விருதை 1981 மற்றும் 1983 ல் இரண்டு முறைகள் பெற்றிருக்கிறார். கவிதைகளில் வெளிப்படும் பளிங்குத் தெளிவும், வார்த்தை வலிமையும், இயல்பான தன்மையும் அவரை சமகால சிறந்த கவிஞராக காட்டுகிறது.

 
ஒரு தலைமுறையின் கூக்குரல்

என் இளமையின் இழப்பு
என் ஆத்மாவின் சிதைவு
எண்ணிகையற்ற தூக்கமில்லா இரவுகள்
என என் கசப்புகள் ஏராளம்
எனினும் என் துரதிர்ஷ்டம் என்று
புகார் சொல்ல மாட்டேன்
ஒன்றன் பின் ஒன்றாய் நான் தவறுகளை உடைத்திருக்கிறேன்
ஒன்றன் பின் ஒன்றாய் ஆன்மீகக் கட்டுகளைத் தளர்த்தி
இருக்கிறேன்
இவை இதயத்தில் பெரிய இடிபாடாய் இருப்பினும்
தொடுவானப் பரந்தவெளியை பார்த்தபடி
என்னால் எழ முடிந்தது
யாரும் எதற்காகவும் திரும்ப என்னைக் கீழே தள்ள முடியாது


நான் புரட்சிகரமான தியாகிகளுக்கான கல்லறையில் கிடந்தால்
கல்லிலுள்ள எழுத்துக்கள் பசுமையால் அழிக்கப்பட்டுவிடும்.
சிறைக் கம்பிகளின் பின்னால் வாழும் அனுபவம்
கிடைக்குமானால்
கையில் விலங்கோடு சட்டத்தின் இயல்பு பற்றி விவாதிப்பேன்.
கால வரம்பில்லாமல் குற்றத்திற்கு தண்டனை தரப்பட்டால்
நான் விகாரமாகியிருப்பேன்.
இதில் எது என்னுடையது என்றாலும்
அது என் துரதிர்ஷ்டம் மட்டும்தான்.
முழுவதுமான என் கண்ணீருக்கும் கோபத்திற்கும் பிறகு
மற்றவர்களை மன்னித்து விட்டேன்.
இப்போது அமைதியில் நான்.நீ என் ஜன்னல்களை
நடந்து கடக்கும் போது

 

இன்னமும் வெளிச்சம் இருப்பதால்
நீ என் ஜன்னல்களை நடந்து கடக்கும் போது
என்னை ஆசீர்வதிப்பாய்.

மீனவனின் கையில் இருக்கும் தூசு படிந்த லாந்தர் போல
இந்த கும்மிருட்டிலும்
வெளிச்சம் இருக்கிறது
என் சிறிய படகு அறை
சூறாவளியால் சுண்டி எறியப் பட்டதாக நீ நினைக்கலாம்
இன்னமும் வெளிச்சம் இருப்பதால்
இதுவரையில் நான் மூழ்கவில்லை.


வெளிச்சம் இருக்கிறது
தள்ளாடும் முதியவனாக கூன் முதுகோடு
பலவீனமான அசைவுகளோடு
திரைச்சீலையில் என் நிழல்
ஆனால் என் மனம் முதுமை அடையவில்லை
இன்னமும் வெளிச்சம் இருப்பதால்..


வெளிச்சம் இருக்கிறது
உணர்வுகளின் தீவிரத்தால்
எல்லா திசைகளில் இருந்தும் வாழ்த்துக்களை ஏற்கிறது
வெளிப்படையாகவோ அல்லது மறைந்தோ
உள்ள எல்லா அட்டூழியங்களையும் வெறிக்கிறது
கண்ணியமான செருக்கோடு
வெளிச்சம் இருப்பதால்...


ஒ.. எப்போது அது உன்னத தகுதியை அடைந்தது?
நீ என்னை புரிந்து கொள்ளத் தொடங்கியதிலிருந்து..


இன்னமும் வெளிச்சம் இருப்பதால்
நீ என் ஜன்னல்களை நடந்து கடக்கும் போது
என்னை ஆசீர்வதிப்பாய்.


பரிசு

என்கனவுகள் குளத்தினுடைய கனவுகள் போன்றது
அது வானத்திற்கு மட்டும் கண்ணாடியல்ல
சுற்றியிருக்கும் தாவரத்திற்கும் செடிகளுக்கும்
புத்துணர்வும் பரிசுத்தமும் தருவதாய்..
என்னையும் கழுவியதாய்...
மரவேர் நரம்புகளின் ஊடே
வழி ஏற்படுத்திக் கொள்கிறேன்
அவை வாடுகின்றன எனினும்
வாழ்வதற்காக நான் துடிப்பதால்
துக்கம் வெளிப்படுத்த மறுப்பேன்


என் சந்தோஷம் சூரியனுடையது போன்றது
குறுகிய பொழுதிலான என் வார்த்தைப் படைப்புகள்
குழந்தைகளின் கண்மணிகளை ஒளிரச் செய்யும்
ஒவ்வொரு நாற்று முளை விடும் பொழுதிலும்
பாடல் பாடுவேன்
நான் கலையுணர்வற்றவன் ஆனாலும் தாராளமானவன்
புரிந்து கொள்ள முடியாதவன்.


என்வலி பருவப் பறவைகளின் வலி போன்றது
அது வசந்தத்திற்குத்தான் புரியும்.
துன்பங்களையும் தோல்விகளையும் அனுபவித்த பிறகு
வெளிச்சமும் வாத்சல்யமும் நிறைந்த எதிர்காலத்தை
நோக்கி எப்போதும் பறந்தபடி..


இரத்தக் கசிவுடைய சிறகுகள்
எல்லா நேரங்களிலும்
அனைத்து ஆத்மாக்களுக்குள்ளும் ஊடுருவி
மிருதுவான வரிகளை எழுதும்.
என் உணர்வுகள் எல்லாமே
பூமியின் பரிசு.


தலைப்பில்லாதது

இலைகள் நிறைந்த சிறிய பாதையில்
நீ போவதைப் பார்த்து
மொட்டை மாடியிலிருந்து இறங்கினேன்
'இரு. போகிறாயா? வெகுதூரமா? பயப்படுகிறாயா?'
உன் முன்னால் வந்து நின்றேன்
நான் மௌனமாக உன் ஜாக்கெட் பொத்தானை நீவினேன் "ஆமாம், எனக்கு பயம்தான்
ஆனால் ஏனென்று உன்னிடம் சொல்ல மாட்டேன்"


நீ ஆற்றுப் படுகையில் உலவிக் கொண்டிருந்தாய்
இரவின் மென்மை நம்மை வழி நடத்தியது
இலவங்க மரத்தின் ஊடே
கை கோர்த்தபடி கரையில் நடந்தோம்
"உனக்கு மகிழ்ச்சியா?"
மேலே பார்த்தேன் நட்சத்திரங்கள் கும்பலாய் என்னைப்
நோக்கின
ஆமாம், எனக்கு மகிழ்ச்சிதான்
ஆனால் ஏனென்று உன்னிடம் சொல்ல மாட்டேன்.


நான் எழுதிய தடுமாற்றமான வரிகளை
நீ மேஜையின் மேல் வளைந்து பார்த்தாய்
வெட்கமாக என் கவிதைகளைப
நான் ரகசியமாய் பெருமூச்சு விட்டேன்
'ஆமாம், நான் காதலிக்கிறேன்
ஆனால் ஏனென்று உன்னிடம் சொல்ல மாட்டேன்'.