...

வங்கமொழி எழுத்தாளரான மகாஸ்வேதா தேவி எழுத்தாளரின் பணி எழுதுவது மட்டுமே என இருந்தவரல்ல. பழங்குடி மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஓயாத போராட்டங்களில் ஈடுபட்டவர். இறுதி நாள் வரை அதிகாரத்தைக் கண்டு அச்சமின்றி குரல் கொடுத்தவர். எளிய வாழ்க்கையை தன் ஆயுள் காலம் முழுதும் மேற்கொண்டவர். அவரது ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் பல்வேறு பிராத்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். உடல் நலமின்றி தொடர் சிகிச்சைகளில் இருந்த போதும் 90வது வயதில் சென்ற ஜுலை மாதத்தில் காலமானார்.

மகாஸ்வேதா தேவி 1994ல் அளித்த நேர்காணலின் சிறுபகுதியை மொழிபெயர்த்து வெளியிட்டு அவருக்கு கபாடபுரம் அஞ்சலி செலுத்துகிறது.

 
“நான் ஒரு பெண்; நான் எழுதுகிறேன்.
ஆனால் நான் பெண்களைப் பற்றி மட்டுமே எழுதுவதில்லை”
- மகாஸ்வேதா தேவி
தமிழில் : நவீன தச்சன்
 

பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களது சூழலிலிருந்து உள்ளொடுங்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பொறுத்தும் அது உண்மையா?

இல்லை. மாறானது. நான் என்னை முழுக்க ஈடுபடுத்திக் கொள்வேன். எனது படைப்பு எனது சூழலிலிருந்து தனித்து நிற்பது அல்ல.

மற்ற எழுத்தாளர்கள். விமர்சகர்கள், வாசகர்களை சந்திப்பதையோ கருத்தரங்குகளில் பங்கேற்பதையோ விரும்புவீர்களா? உங்கள் படைப்பை ஒரு பொது வெளியில் விவாதிக்கும் தேவையை உணர்வீர்களா அல்லது படைப்பே பேசிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவீர்களா?

கருத்தரங்கங்களைத் தவிர்க்க அதிக பட்சம் முயல்கிறேன். இருந்தாலும் சில சமயங்களில் அவற்றில் பங்கேற்கவும் செய்கிறேன். என்னை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களிடமும் பல ஆண்டுகளாக என் படைப்புகளை வாசித்திருப்பவர்களிடமும் மட்டுமே என்னால் எதிர்வினையாற்ற முடியும். பொதுவாக மக்கள் என்னுடைய ஒரு புத்தகத்தை வைத்தோ அல்லது ஒரே வகைமையிலான புத்தகத்தை வைத்தோதான் என்னை மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக, 'ஹஜார் சௌரசிர் மா' ( 1084 இன் தாய் ) வின் எழுத்தாளராக மட்டுமே அறிந்திருப்பவர்கள் என்னைப் 'போராளி' என்று அழைக்கிறார்கள்.

அது சரியல்லவே?.

என் படைப்புகள் தாமாகவே வெளிப்படுத்திக் கொள்ளட்டும் என்றே இறுதியாக நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அது என்னை வேதனைப்படுத்துகிறது. அபூர்வமாகவே சீரிய வாசகர்களைக் காண நேர்வதால், தனித்து விடப் பட்டதாகவே உணர்கிறேன். இப்போதெல்லாம் என்னைக் கவனமாக வாசித்திராத வாசகர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுக்க மறுத்து விடுகிறேன். ஒருவகையில் நினைக்கிறேன்.

உங்கள் அரசியல் சார்புகள் என்ன?

நான் ஒரு இடதுசாரி. ஆனால் எந்தக் கட்சியையும் சேர்ந்தவளல்ல; எனது அரசியல் நோக்கங்கள் என்ன என்பது என் படைப்புகளிலேயே வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன்.

எதிர்ப்பிலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எழுத்துகளுக்கு இதுபோல லேபிள் ஒட்டுதில் எனக்கு நம்பிக்கை இல்லை. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் - ஜோதிர்மயீ தேவி, ஆஷாபூர்ணாதேவி, ஷைலபாலாகோஷ்ஜயா போன்றவர்கள் - சமூகத்தில் பெண்ணின் நிலை பற்றி ஆய்ந்தார்கள்; அதை ஆவணப் படுத்தினார்கள். எதிரிப்பின் தேவையை உணர்த்தினார்கள். குறிப்பாக, ஆஷாபூர்ணா தேவி. அவரது வழியில் சமூகச் செயல்பாட்டாளர். ஆனால் அவருக்குக் கிடைத்த வெகுஜனப் பிரபலத்துக்குப் பின் அவருடைய ஆதார உணர்வைக் கண்டு பிடிக்க வேண்டியதாகி விட்டது. அவரது நாவல்கள் அதிகம் விற்பனை ஆனதால், அவை சினிமாவாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் மாற்றப்பட்டதால் அவர் மீது வெகுஜன எழுத்தாளர் என்று முத்திரை சார்த்தி விட்டார்கள். எனினும் வெகுஜன இலக்கியம் நல்ல இலக்கியம் ஆக முடியாது. என்னைப் பொறுத்தவரை, நான் உண்மைகளை முன்வைக்க விரும்புகிறேன்; என் கருத்துக்களைப் பரப்புவதை அல்ல.

இவை மகாஸ்வேதா தேவி 1994 இல் ஈனாக்ஷி சாட்டர்ஜிக்கு அளித்த நேர்காணலின் பகுதிகள்.

நன்றி : வேர்ட்ஸ்மித்ஸ் ( கதா, புது தில்லி )