...
இரு கவிதைத் தொகுப்புகள் மூலம் பரவலான கவனத்துக்கு வந்த கவிஞர்.குமரகுருபரன் கடந்த ஜுன் மாதம் 19 அன்று மாரடைப்பால் அகால மரணமடைந்தார். “மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” என்ற கவிதை தொகுப்பிற்காக 2015ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் கவிதை பரிசு, குமரகுருபரனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

குமரகுருபரனுக்கு கபாடபுரம் தன் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

 
குமரகுருபரன் கவிதைகள்

வலி பின்னுகிற ஊசி விற்கிறானாம்
ஒவ்வொரு வலிக்கும் ஒவ்வொரு அளவில்
கொண்டையில் துளை இல்லா ஊசி
தானாகவே தைக்கும்
யாரேனும் வலி வேண்டுவரோ என்றால்
வலி யாரை விடுகிறது என்கிறான்
வியாபார தந்திரி
ஊசி ஒன்றிலும் புதிய பளபளப்பு இல்லை
உன் முன்னோரின் வலி இன்னமும் ஒட்டியிருக்கிறது என்கிறான்
ஆணுக்கென தனி ஊசி
பெண்ணுக்கென தனி ஊசி
வேறு சாதியும் உண்டோ ஊசியில் என்றேன்
போடா ங்கோத்தா
சாதி தான் ஊசியே என்கிறான்
போடா பிராமணா என்றேசி
நெற்றிப் பொட்டில் சுட்டுவிட்டு
ஊசிகளை எடுத்து வந்திருக்கிறேன்
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ஊசி.

 
 

சூதென்பது
தன்னை இழத்தல்
இழத்தலுக்கு முன் அங்கே இரண்டு பேர்
இருந்திருக்கிறார்கள் தத்தம் பிம்பமென
கட்டம் ஒன்று அவர்களை
எதிரெதிர் ஆட வைத்திருக்கிறது.
விளையாட்டென அவர்கள் தத்தம்மை
கடக்க விரும்பி இருக்கக்கூடும்
விதிகள் அவ்வாறு இல்லை
அவர்கள் இனி அவ்வாறு இருக்க விரும்பாதவை அவை
யாரேனும் ஜெயித்தால் அது நிகழும்
யாரேனும் தோற்பினும்.

அதில் நாம் யார் என்பதில்
புதிய கதையை எழுதிக் கொள்கிறது காலம்.
தவிர,
காலத்தின் ஞாபகத்தில் தனித்தனியாகவே
பதிவுறுகிறார்கள் யாவரும்.
வரலாறு ஆகக் கொடுமையானது நட்பே
உன்னைச் சொல்லும்போது என்னை மறக்கும்.

 
 

நீள் வளர் தனிமையின் நெடி
முகிழ்த்தும் மழை ஒன்றின் வாசனை
பட்டுப் பட்டுத் தெறிக்கும் உன்மத்த நினைவுகளில்
மிகத் தூய்மையான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து
சாறு பிழிந்து ரசம் எடுத்து அருந்துகையில்
பட்டுப் பட்டுத் தெறிக்கும் ரசனை மனத்
துளிகளைத் தேனாக்கி மிக முற்றிய மது
ஒன்று தயார் ஆகியது பார்
அதை உடன் அருந்துவது யார் என்றொரு கேள்வியில்
இன்னமும் முற்றிக் கொண்டிருக்கிறது
நெடி.
நெடி பழையது
நெடி பழையது
மகரந்தத் தேன் பழையது
மனம் பழையது
புதிது என்று எதையும் கண்டறியாமல்
நெடி வளர் நீள் தனிமை
ஆகிறது மீண்டும் புதிதாய்.
மழை வருமோ.
ஆகினும் உடன் வருமோ,
எந்தரோ மகானு பாவலு.

நன்றி : குமரகுருபரன் முகநூல் பக்கம்.