...

தமிழின் மூத்த முன்னோடிக் கவிஞரான ஞானக்கூத்தன் சென்னையில் ஜுலை 27 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 78. அவருக்கு கபாடபுரத்தின் அஞ்சலி.

முன்னோடிக் கவிஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, முதல் கவிநூல் வரிசையில் காலச்சுவடு வெளியிட்ட அவரது ‘அன்று வேறு கிழமை’ தொகுப்புக்கு கவிஞர்.சுகுமாரன் எழுதிய முன்னுரையை கபாடபுரம் மீள் பிரசுரம் செய்கிறது.

 
அன்று வேறு கிழமை
- சுகுமாரன்
 

சந்தேகமில்லை; 1973 இல் 'இலக்கியச் சங்கம்' வெளியீடாக வந்த 'அன்று வேறு கிழமை' என்ற தொகுப்புத்தான் அன்றைய இலக்கியச் சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கவிதை நூல்; பரவலான கவனம் பெற்ற தொகுப்பும் அதுவே.

தமிழ்ப் புதுக்கவிதையின் ஆரம்ப காலத்தை மூன்று நிலைகளாகப் பகுக்கலாம். ந,பிச்சமூர்த்தி வழியாக 1930 - 40களில் நிகழ்ந்த தோற்றம். ( 1934 இல் அவர் எழுதிய 'காதல்' ஐப் புதிய கவிதை நோக்கின் முதல் உதாரணமாகக் கொள்ளலாம்). எழுத்து, நடை சிற்றேடுகளில் தெரிய வந்த 50 - 60 களின் அறிமுகம். எழுபதுகளில் புதுக் கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்த நிலைகளில் இரண்டாவதில் அறிமுகமாகி மூன்றாவதில் நிறுவப் பட்ட ஆளுமை ஞானக்கூத்தனுடையது.

அந்த கவியாளுமை கவனத்துக்குள்ளான தருணத்தில் புதிய கவிதைப் போக்கில் வேறு முக்கிய ஆளுமைகளும் அரங்கேறியிருந்தன. எழுத்து, நடை இதழ்கள் மூலம் ந. பிச்சமூர்த்தி, சி.மணி, பிரமிள் ( தருமு அருப் சிவராமு), பசுவய்யா, நகுலன், எஸ். வைதீஸ்வரன், க.நா.சுப்ரமண்யம் ஆகியோரது கவிதைகள் வெளியாகி விவாதிக்கப் பட்டன. புதுக் கவிதையின் எடுத்துக் காட்டுகளாகப் பேசப்பட்டன. அவை வெவ்வேறு கவிஞர்களின் வேறுபட்ட வெளிப் பாடுகள். எனினும் அவற்றை இரண்டு பொது இயல்புகளுக்குள் வகைப்படுத்தலாம். அவை நகர மத்தியதர வர்க்கத் தனி மனிதனின் உள் முகமான குரலைக் கொண்டிருந்தன. தமிழ்க் கவிதையில் அன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டிருந்த மரபுக்கு அந்நியமானவையாக இருந்தன. (எல்லாப் புது வடிவங்களும் முதலில் அந்நியமாகத்தான் தோன்றும் என்பதும் இலக்கிய நியதி.)

இந்தப் பின்புலத்தில்தான் ஞானக்கூத்தனின் கவிதைகள் அறிமுகமாயின. முன் சொன்னவர்களின் கவிதையாக்க முறையிலிருந்து அந்தக் கவிதைகளை வேறு படுத்திக் காட்டியதும் மேற்சொன்ன பொது இயல்புகள்தான். ஞானக்கூத்தனின் கவிதைகள் மத்திய தர வர்க்கப் பின்னணி கொண்ட சமூக மனிதனின் குரலாக வெளிப்பட்டன. உதாரணம்; 'தோழர் மோசிகீரனார்''.சில சமயங்களில் முழக்கமாகவும். உதாரணம்: 'சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா? / சரி/ சோடா புட்டி கள் உடைக்கலாம்/ வாடா.'

ஞானக்கூத்தனின் கவிதையாக்கமுறை அந்நியமானதாக இல்லை. சரியாகச் சொன்னால் யாப்பியல் மரபின் தொடர்ச்சியாகவே இருந்தது. 'அன்று வேறு கிழமை'' தொகுதியிலுள்ள பல முக்கியமான கவிதைகள் முறையான யாப்பு வடிவத்திலும் சிதைக்கப்பட்ட யாப்பு வடிவத்திலும் எழுதப்பட்டவை. ஆசிரியப்பா, அறுசீர் , எண்சீர் விருத்தங்கள், சிந்து ஆகிய மரபு வடிவங்களை அவர் அநாயாசமாகக் கையாண்டிருப்பதைக் காணலாம். விரிவான உதாரணங்களையே பார்க்கலாம்.

'காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்'

எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான் (நாய்) - ஆசிரியப்பா.

'ஞாயிறுதோறும் தலைமறை வாகும்

வேலை என்னும் ஒருபூதம் (விடுமுறை தரும் பூதம்) - அறுசீர் விருத்தம்.

''வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்

வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு ( பரிசில் வாழ்க்கை) - எண்சீர் விருத்தம்

தையற்காரன் புறக்கணித்த - புது

வெள்ளைத் துணியின் குப்பைகள்போல் (பட்டிப் பூ) -சிந்து.

மரபுக் கவிதைகளின் இலக்கண இறுக்கத்துக்கும் உரத்த தொனிக்கும் எதிராகவே தமிழில் புதுக் கவிதை உருவானது என்பது என் ஊகம். கவிதை சொல்லப்பட வேண்டியதல்ல; மௌனமான வாசித்து உணரப்பட வேண்டியது என்ற கருத்தைப் புதுக் கவிதை முன்னோடிகள் பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். கேட்டு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையை அச்சுத் தொழில் நுட்பம் இல்லாமலாக்கியதும் யாப்பைப் புறக்கணிக்கக் காரணம். மரபாளர்களின் கண்டனத்துக்குப் புதுக் கவிதை இலக்கானதும் இதனாலாக இருக்கலாம். இந்த முரண்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திய கவிதையாக்க முறை ஞானக்கூத்தனுடையது. மரபின் தொடர்ச்சியாகவும் புதிய உள்ளடக்கம் சார்ந்ததாகவும் நினைவில் நிற்கக் கூடியதாகவும் அமைந்தவை அவருடைய கவிதைகள். நான் எழுதிய கவிதையையே புத்தகத்தைப் பார்க்காமல் தவறில்லாமல் என்னால் திரும்பச் சொல்ல முடிவதில்லை. ஆனால் 'அன்று வேறு கிழமை' தொகுதி யிலுள்ள பல கவிதைகளை நினைவிலிருந்து என்னால் சொல்ல முடியும். இது மரபுக் கவிதையின் தவிர்க்கவியலாத கூறு. இந்தக் கூறுதான் ஞானக்கூத்தனைப் பலரும் பின் தொடரும் முன்னுதாரணமாக்கியது. எழுபதுகளில் எழுத வந்த பலரது ஆரம்பக் காலக் கவிதை முயற்சிகளில் வடிவம் சார்ந்து ஞானக்கூத்தனின் பாதிப்பு இருந்ததை எடுத்துக் காட்டுகளுடன் சொல்லலாம்.

'பேசும் பாரென் கிளியென்றான்

கூண்டைக் காட்டி வாலில்லை' - கல்யாண்ஜி


உனக்கென்ன கோவில் குளம் சாமி பூதம் - பாலகுமாரன்


வீடென்று எதனைச் சொல்வீர்

அதுவல்ல எனது வீடு - மாலன்


புறாக்கள் பறந்து செல்லும்

கழுத்திலே வைரத் தோடு - ஆத்மாநாம்.


இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிக்ழவது அல்ல; உணர்வுநிலையில் ஏற்படுவதென்றும் கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்தில் பிரதிபலிக்குமென்றும் கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்குமென்றும் கருதுகிறேன். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன் கவிதைகள் இருக்கும்.

நவீனத்துவக் கவிதையின் முக்கியக் கூறுகளில் ஒன்று - அது அடங்கிய குரலில் வெளிப்படுவது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இந்தக் கூறைக் காண்பது அரிது. அவரது கவிதைகள் எப்போதும் 'வெடிப்புறப் பேசு'பவை. அடங்கிய தொனியிலான கவிதைகள் அநேகமாக அவரிடம் இல்லை. அவரது கவிதைகள் காதலைக் கூட உரக்கவே சொல்கின்றன. இந்தத் தொகுதியிலுள்ள 'பவழமல்லி' ஓர் உதாரணம். நவீன காலத்தில் எழுதப்பட்ட நேர்த்தியான காதல் கவிதைகளில் 'பவழ மல்லி' யும் ஒன்று என்பது என் அனுமானம். அதன் இறுதி வரிகள் 'தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்/ தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?' என்ற உரத்த கேள்வியுடன் முடிகின்றன அவரல்லாத இன்னொரு சமகாலக் கவிஞர் இதே வரிகளைச் சிந்தித்திருப்பாரென்றால் இவ்வளவு உரக்கக் கேட்டிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. 'தோன்றுமோடி?' என்ற பகிரங்கத் தொனிக்குப் பதிலாகத் 'தோன்றுமா?''அல்லது 'தோன்றாதா?' என்ற அந்தரங்கத் தொனியில் முடிந்திருக்கக் கூடும். ஞானக்கூத்தன் கவிதைகள் வெளிவந்த காலத்தில் சந்தத்தில் சொல்லப்பட்டவை எப்படி நவீன கவிதை ஆகும்? என்ற சந்தேகமும் விமர்சனமும் எழுந்தது இந்த நவீனத்துவ ஒவ்வாமையால் கூட இருக்கலாம். ஞானக்கூத்தனின் கவிதைக் குரல் சமூக மனிதனின் குரலாக வெளிப்படுவதுதான் பகிரங்கத்தன்மைக்குக் காரணம்.

இதுதான் அவரை அவர் காலத்திய புதுக்கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்தியது. மரபுக்கு எதிரான கலகமாக உருவான புதுக் கவிதைக்குள் மரபின் வலுவுடன் கலகம் செய்தவராக அவரைச் சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் புகழ் பெற்ற கவிஞரான ஓ.என்.வி. குறூப் தனது கவிதைகளை இன்றும் மரபான வடிவில்தான் எழுதுகிறார். மிக நவீனமான சிக்கல்களையும் யாப்புக்குக் கட்டுப்பட்ட மொழியில்தான் அவரால் எழுத முடிகிறது. அந்தக் கவிதைகள் உடனடியாக மரபில் தொடர்ச்சியாகவே பழமையடைகின்றன. ஆனால் ஞானக்கூத்தனின் கவிதை நவீனமானதாகவே நிலைபெறுகிறது. தமிழ் தவிர வேறு மொழியில் இந்த அற்புதம் நிகழச் சாத்தியமில்லை.

பெரும்பான்மையான புதுக் கவிதைகள் காட்சித்தன்மை சார்ந்தவை. தாளில் அச்சிடப்படும் கவிதை வாசிப்பின்போது ஒலியாகப் புலனை அடைவதைக் காட்டிலும் காட்சியாகப் பதிவதுதான் தர்க்கபூர்வமானது. காட்சிகளை இணைக்கும் சொல்வைப்பு முறையே கவிதையில் உள்ளார்ந்த சந்தமாக உருமாறுகிறது. கலாப்ரியா, தேவதச்சன், முகுந்த் நாகராஜன், இசை போன்ற நேற்றைய, இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் ஒலியமைதியை விடக் காட்சி விரிவுகள்தாம் கவிதையை நிர்ணயிக்கின்றன. புதிய கவிதை என்ற நிலையில் ஞானக்கூத்தன் கவிதைகளும் காட்சி சார்ந்தவை; ஆனால் அதை விடவும் சொற்கள் மூலம் அவர் உருவாக்கும் ஒலித்தடமே அவற்றின் கவிதைத்தன்மையை வலுப்படுத்துகின்றன. 'அம்மாவின் பொய்கள்' , 'அன்று வேறு கிழமை'' ஆகியவற்றை அவற்றின் ஒலித்தடமில்லாமல் வாசிக்க இயலுமா என்று பாருங்கள்.

இலக்கியத்தில் ஆகி வந்த ஒரு வடிவம் அதன் காலம் கடந்த பின்னர் பயன்படுத்தப் படும்போது முந்தைய செறிவையும் தீவிரத்தையும் தக்கவைத்துக் கொள்வதில்லை. புதிய வடிவத்துடன் ஒப்பிடும்போது பழைய வடிவம் அங்கதத்தையும் எள்ளலையும் வெளிப்படுத்த மட்டுமே வலுக் கொண்டிருக்கிறது. தமிழில் மிகக் கடினமான செய்யுள் வடிவமான வெண்பா அதன் காலம் கடந்த பின்னர் அங்கதத்துக்கும் பகடிக்குமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. காளமேகப் புலவரின் பாடல்கள் வரலாற்று உதாரணம். புதுமைப்பித்தனின் சில கவிதைகள் நவீன கால உதாரணம். இது இலக்கியத்தின் இயக்க விதி. அறிந்தோ அறியாமலோ இந்த விதியை நவீன உணர்வுக்கு ஏற்ப மாற்றிக் கையாண்டிருக்கிறார் ஞானக்கூத்தன். அவரது கவிதைகள் அங்கத உணர்வும், எள்ளல்தன்மையும், பகடிக் கூர்மையும் கொண்டிருப்பதன் காரணம் தற்செயலானதல்ல. கவிதையின் தொடர் இயக்கத்தின் விளைவு.

'அன்று வேறு கிழமை' வெளிவந்த காலத்தில் எழுதப்பட்ட புதுக் கவிதைகள் முன்வைத்த வாழ்க்கைப் பார்வை ஏறத்தாழ ஒரே போன்றது. கவிஞர்களின் ஆளுமை சார்ந்து அதில் வேறுபாடுகள் இருந்தன. எனினும் வாழ்க்கையை ஒரு துன்பியல் நோக்கில் முன்வைத்தன. அதைக் குறித்துத் தத்துவக் கவலை கொண்டன. அவர்களில் சி.மணி விதிவிலக்கு. எள்ளலும் பகடியும் கேலியும் நிரம்பிய கவிதைகள் மூலம் வாழ்க்கையை ஓர் அபத்த தரிசனமாக வெளிப்படுத்தினார். அந்த தரிசனத்தை விரிவும் முழுமையுமாக்கியவை ஞானக்கூத்தன் கவிதைகள். பின் வரும் இரண்டு கவிதைகளை ஒப்பிடுவதன் மூலமாக இந்த அவதானிப்பை விளங்கிக் கொள்ளலாம்.

'என்ன செய்ததிந்தக் கையை

என்றேன். என்ன செய்வதென்றால்

என்றான் சாமி. கைக்கு வேலை

என்றிருந்தால் பிரச்னையில்லை

மற்ற நேரம் நடக்கும் போதும்

நிற்கும் போதும் இந்தக் கைகள்

உறுத்தல் வடிவத் தொல்லை

என்றேன். கையக் காலாக் கென்றான்.


தீர்வு ( சி.மணி)


திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.


பிரச்னை (ஞானக்கூத்தன்)

சி.மணியின் அபத்த தரிசனம் ஒரு சுட்டிக் காட்டலாக நின்று விட அதை இந்திய, மேற்கத்தியத் தத்துவக் கருத்துகளின் விரிவாக ஒரு தமிழ் மனப்புலத்தில் நிறுவினார் ஞானக்கூத்தன். அவரது அபத்த தரிசனம் எல்லாத் துறைகளையும் விமர்சனத்துக்கு உட்படுத்தியது. 'விட்டுப் போன நரி'யில் புராணத்தை, 'மஹ்ஹான் காந்தி மஹ்ஹானி'ல் வரலாற்றை, 'கால வழுவமைதி'யில் அரசியலை, 'விடுமுறை தரும் பூத'த்தில் மனிதனை உழைப்புக்கு அந்நியனாக்கும் தொழிலை, 'அன்று வேறு கிழமை'யில் சடங்கை, 'போராட்டத்தில் காதலை, 'அம்மாவின் பொய்க'ளில் உறவை, 'நாளில் வறுமையை¨ 'சமூக'த்தை, 'தமிழை' 'நாய்' கவிதையில் அபத்தத்தையும் சித்தரித்தார். இந்தச் சித்தரிப்புத்தான் அன்று அதிர்ச்சியைக் கொடுத்தது. பரவலான கவனத்தைக் கொடுத்தது.

வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் 'அன்று வேறு கிழமை' சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது. புதுப்புது அபத்தங்களைத் தரிசித்துக் கொண்டிருப்பதும் அதன் எதிர்வினையை இந்தக் கவிதைகளில் காணமுடிவதும்தான் காரணமாக இருக்குமோ?

நன்றி : அன்று வேறு கிழமை - முதல் கவி நூல் வரிசை - ஞானக்கூத்தன் - காலச்சுவடு பதிப்பகம்.